கீரை வகைகள், புதினாக்கீரை 2From மரபு விக்கிபுதினாக்கீரை பார்க்கச் சாதாரணமாய் இருந்தாலும் இதன் சுவையும், இதன் மருத்துவ குணமும் அளவிட முடியாத ஒன்று. ஒரு சிலருக்கு இதன் வாசனை பிடிக்காது. ஆனால் இதன் மருத்துவ குணம் தெரிந்தால் யாரும் இதை ஒதுக்க மாட்டார்கள். ரத்தம் சுத்திகரிப்புச் செய்வதோடு, முகத்தின் கரும்புள்ளிகள் மறைந்தும், எண்ணெய்ப் பசை குறைந்தும் போகும். வயிற்றில் ஏற்படும் வயிற்றுக் கோளாறு, வயிற்று உப்புசம் போன்றவை குறையும். வயிற்றுப் பிரச்னை இல்லாமல் மறையும். இதை உண்பது எப்படி என்று பார்க்கலாமா?
புதினாச் சாறு: புதினாவைச் சாறாகக் குடிக்கலாம். தேவையான பொருட்கள்: புதினா ஒரு கட்டு, எலுமிச்சம்பழம் ஒன்று, தேன் அல்லது சர்க்கரை, உப்பு ஒரு சிட்டிகை, இஞ்சி ஒரு துண்டு, ஓமம்(பிடித்தால்) ஒரு டேபிள் ஸ்பூன்.
புதினாவை நன்கு சுத்தம் செய்து ஓரளவு காம்போடு ஆய்ந்துகொண்டு ஓமம், இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவேண்டும். அத்துடன் நல்ல சுத்தமான தண்ணீர் எவ்வளவு தேவையோ அதைச் சேர்க்கவும். பின்னர் மெல்லிய துணி அல்லது வடிகட்டியில் வடிகட்டிக்கொண்டு சர்க்கரைஅல்லது தேன் சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து, தேவையானால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குடிக்கவும். புதினாப்பச்சடி:
தேவையான பொருட்கள்: தயிர் புளிக்காதது ஒரு கிண்ணம், உப்பு தேவைக்கேற்ப, புதினா ஒரு சின்னக் கட்டு, பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு. பச்சை மிளகாயையும் புதினாவையும் சுத்தம் செய்து நன்கு கழுவிவிட்டு அரைக்கவும். பின்னர் புளிக்காத தயிரில் அந்தக் கலவையை உப்போடு சேர்க்கவும். கடுகு தாளிக்கவும். காரமான மசாலா சாதம், தக்காளி சாதம் போன்றஉணவோடு சேர்த்துச் சாப்பிட உதவும்.
புதினாக் குழம்பு:
தேவையான பொருட்கள்: புதினா ஒரு கட்டு, புளி ஒரு எலுமிச்சை அளவு, உப்பு தேவையான அளவு, வறுக்க: மிளகாய் வற்றல் நான்கு அல்லது ஐந்து, மிளகு ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், கருகப்பிலை, துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன் தேவையானால் பெருங்காயம். அனைத்தையும் எண்ணெய் விட்டு வறுத்துக்கொண்டு அந்தச் சட்டியிலேயே புளியைச் சின்னச் சின்ன துண்டுகளாக்கி வறுத்துக்கொள்ளவும். புதினாவும் கறிவேப்பிலையும் பச்சையாகவே இருக்கவேண்டும். அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை தேவையான நீர் விட்டுக் கலந்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் வைத்துக் கடுகு தாளித்துக்கொண்டு அரைத்த விழுதைப் போட்டுக் கொதிக்க விடவும். சேர்ந்து வரும் நேரம் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டுக் கீழே இறக்கவும். சூடான சாதத்தோடு பரிமாறவும்.
புதினா சாம்பார்:
தேவையான பொருட்கள்: புதினா, தக்காளி, வெங்காயம், புளி, உப்பு, சாம்பார் பொடி, பச்சை மிளகாய் ஒன்று, கருகப்பிலை. துவரம்பருப்புக் குழைய வெந்தது ஒரு டேபிள் ஸ்பூன் அரைக்க: ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் தனியா, ஐந்து அல்லது ஆறு மிளகாய் வற்றல், ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, வெந்தயம் அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன். எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்துப் புதினாவோடு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
புளியைக் கரைத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கருகப்பிலை, கடுகு, உ.பருப்பு தாளித்துக்கொண்டு புளி ஜலத்தை ஊற்றி சாம்பார் பொடியைக் கொஞ்சமாய்ப் போட்டு உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும். புளி வாசனை போகக் கொதிக்கையில் அரைத்த விழுதையும், வெந்த துவரம் பருப்பையும் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் கீழே இறக்கிக் கொத்துமல்லி தூவிச் சூடான சாதத்தோடு பரிமாறவும்.
புதினா ரசம்:
புதினா ஒரு கட்டு, தக்காளித் தோல் நீக்கி வேக வைத்த சாறு ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் இரண்டு அல்லது மூன்று, மிளகுத் தூள் இரண்டு டீஸ்பூன், உப்பு, பெருங்காயம், ரசப் பொடி ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, துவரம்பருப்பு அல்லது பயத்தம்பருப்புக் கரைத்த நீர் ஒரு கிண்ணம், தாளிக்கக் கடுகு, சீரகம், நெய், கருகப்பிலை, கொத்துமல்லி.
புதினாக்கட்டை நன்கு சுத்தம் செய்துக் காய வைத்துப்பொடி செய்து வைத்துக்கொள்ளவும். தக்காளிச் சாறில் உப்பு, ரசப்பொடி, பெருங்காயம், மிளகுத்தூள் சேர்த்துக் கொண்டு கொதிக்கையில் பருப்பு நீர் சேர்த்துத் தேவையான அளவுக்கு விளாவவும். பின்னர் வாணலியில் நெய் விட்டுக் கடுகு, சீரகம் தாளித்துக்கொண்டு புதினாப் பொடியைப் போட்டுக்கொண்டு உடனே ரசத்தில் கொட்டவும். கருகப்பிலை, கொத்துமல்லியால் அலங்கரித்துக்கொண்டு சாப்பிடும்போது எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடவும்.
புதினா புலாவ் அல்லது சாதம்:
தேவையான பொருட்கள்: புதினா ஒரு பெரிய கட்டு, வெங்காயம் மூன்று அல்லது நான்கு, புலவு அரிசி இரண்டு கிண்ணம், காய்கள், பீன்ஸ், காரட், காலி ஃப்ளவர், பச்சைப் பட்டாணி அல்லது ஊற வைத்த பட்டாணி ஒரு கிண்ணம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த கலவை ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய் ஒரு மூடி, மிளகாய்த் தூள் தேவையானால் ஒரு டீஸ்பூன், ஒரு டீ ஸ்பூன் சர்க்கரை, உப்பு தேவையான அளவு. தாளிக்கப் பச்சை மிளகாய் கீறியது இரண்டு, இலவங்கப் பட்டை, பெரிய ஏலக்காய் இரண்டு, கிராம்பு இரண்டு. தாளிக்க எண்ணெய் அல்லது நெய். மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
தேங்காயோடு ஒரு வெங்காயம், புதினா சேர்த்து நன்கு அரைக்கவும். நீர் சேர்க்க வேண்டாம்..
வாணலி அல்லது பிரஷர் பான் போன்ற அகலமான பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் விட்டு ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கரைய விடவும். சர்க்கரை கரைந்ததும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதையும், வெங்காயம், தேங்காய் சேர்த்தப் புதினா விழுதையும் போட்டு வதக்கவும், சற்று நேரம் வதக்கியதும், நறுக்கி வைத்த காய்களைப் போட்டு வதக்கவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். புலவு அரிசியைக் கழுவி வடிகட்டி இதில் சேர்த்துக் காய்கள், அரைத்த விழுதோடு நன்கு கலக்கும் வரை வறுக்கவும். தேவையான உப்புச் சேர்த்துக் கொண்டு அரிசிக்குத் தேவையான அளவு நீர் சேர்க்கவும். அரிசி வேகும் வரையில் வைத்திருக்கவும். நன்கு பொல பொலவென அரிசி வெந்து தயாரானதும் அடுப்பை அணைத்து விட்டுத் தேவையானால் பிரெட்டை நறுக்கி எண்ணெயில் பொரித்துச் சேர்க்கவும்.
வெங்காயப் பச்சடியுடன் கலந்து சாப்பிடவும்.
வெங்காயப் பச்சடி: வெங்காயம் பொடிப்பொடியாகத் துருவியது ஒரு கிண்ணம், உப்பு தேவையான அளவு, நல்ல புளிக்காத தயிர் இரண்டு கிண்ணம். எல்லாவற்றையும் தயிரில் கலந்து வேண்டுமானால் கொத்துமல்லித் தழை தூவவும். புதினா ரைஸோடு சாப்பிடச் சரியான ஜோடி.
--Geetha Sambasivam 08:44, 1 ஜூன் 2011 (UTC) |