வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கதையே கவிதையாய்! 4.

From மரபு விக்கி

Jump to: navigation, search

கதையே கவிதையாய்!


                                                                                                
GibranFrame.jpg


1883 ஆண்டில் பிறந்த கலீல் கிப்ரான் ஒரு கவிஞன் மட்டுமல்ல, தத்துவ ஞானி மற்றும் நல்ல ஓவியனும்கூட. தன் கவிதைகளுக்குத் தானே ஓவியமும் தீட்டிவிடுவான் இக்கவி. இக்கவிஞனின் படைப்புக்கள் 20 க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த நகரங்கள் அனைத்திலும் இவன் படைப்புக்கள் காட்சியாக்கப்பட்டுள்ளன.


முத்து


ஒரு சிப்பி தன் அருகில் இருந்த இன்னொரு சிப்பியிடம், “ நான் அதிகமான வலியை சுமந்து கொண்டிருக்கிறேன், அது கனமாகவும், உருண்டையாகவும் என்னை மனத் துயரம் கொள்ளச் செய்வதாகவும் இருக்கிறதே,” என்று புலம்பியதாம்.

அதற்கு அங்கிருந்த மற்றொரு சிப்பி , ” அந்தக் கடலையும், சொர்கத்தையும் நன்றி பாராட்ட வேண்டும். என்னுள் எந்த வேதனையும் இல்லை. என்னுள் ஏதும் இல்லாமையால், நான் சுகமாக இருக்கிறேன் “ என்றதாம் இறுமாப்புடன்.

அந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த ஒரு நண்டு, இந்த இரு சிப்பிகள் பேசுவதையும் கேட்டு, தன்னுள் ஒன்றுமில்லாத்தனால் சுகமாக இருப்பதாகக் கூறிய சிப்பியைப் பார்த்து, “ ஆம், நீ சுகமாகவும், முழுமையாகவும் இருக்கிறாய், ஆனால் உன் அருகிலிருப்பவள் அபரிமிதமான அழகையுடைய முத்து என்ற வலியையல்லவா சுமக்கிறாள் “ என்று கூறியது.


ஆம், வலியும் வேதனையும் சுமந்தாலும், சுமப்பது முத்தல்லவோ ?


2 காதல் கீதம் .


ஒரு முறை ஒரு கவிஞன் ஒரு அழகான காதல் கவிதையை எழுதினான். அதனை பல நகல்கள் எடுத்து ஆண்கள், பெண்கள் என்று அனைத்து நண்பர்களுக்கும், பழகியவர்களுக்கும் அனுப்பி வைத்தான். அதில் ஒரே ஒரு முறை மட்டும் தான் சந்தித்திருந்த மலைகளுக்கப்பால் குடியிருக்கும் ஒரு இளம் பெண்ணிற்கும் அந்த காதல் கவிதையின் நகல் போய்ச் சேர்ந்தது.


இரண்டொரு நாளில் அந்த இளம் பெண்ணிடமிருந்து ஒரு தூதுவன் வந்தான், ஒரு கடிதமும் சுமந்து கொண்டு. அந்தக் கடித்தத்தில் அவள், “ நீ, எனக்காக எழுதிய காதல் கவிதை என் உள்ளத்தைத் தீண்டியது. நீ வந்து என் தாய் தந்தையரைப் பார்த்துப் பேசினால் நம் திருமணம் நிச்சயம் செய்யலாம் “ என்று எழுதியிருந்தாள்.


அந்த கவிஞன் அந்தக் கடிதத்திற்குப் பதிலாக, அவளிடம், “ என் சிநேகிதியே, இது ஒரு கவிஞனின் இதயத்தின் காதல் கீதம். ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணிடம் பாடும் கீதம்,” என்றான்.


அதற்கு பதிலாக அவள்,” ஒரு கபட வேடதாரியின் பொய்யான வார்த்தைகள்! இன்றிலிருந்து என் இறுதிக்காலம் வரை உன்னால் இவ்வுலகக் கவிஞர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக வெறுக்கிறேன்” என்றாள்.


கவிதை என்பதே, பொய்யுரை என்பதை அறிந்திருந்தும், ஒரு கவிஞன் அந்த பொய்யுரை மீது காதல் கொள்வதே இயல்பு.






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:07, 17 மே 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 17 May 2011, at 12:07. This page has been accessed 2,768 times.