வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

எல்லாந்தெரிஞ்சஏகாம்பரச்செட்டியார்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 குறிப்பு: இது நான் சிறு வயதில் கேட்ட தூத்துக்குடி மாவட்ட வேடிக்கைக் கதைகளில் ஒன்று. இது பற்றி இணையத்தில் எங்கும் காணோம் அதனாலேயே பதிவிட முனைந்தேன். எந்த குறிபிட்ட இனத்தையும் தாக்குவது என் குறிக்கோள் அல்ல. இந்த லெஜண்டில் மேலும் சில துணுக்குகள் இருக்கலாம், தெரிந்தவர்கள் இப்பக்கத்தில் பதிந்து உதவலாம்.


ஒரு ஊரில் 'எல்லாந்தெரிஞ்ச' ஏகாம்பரச் செட்டியார் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு தெரியாதது எதுவும் இல்லை என்பது அப்பாவி ஊர் மக்களின் எண்ணம். செட்டியாரும் தனக்கு தெரியாததைக் காட்டிக் கொள்ள மாட்டார். நம்ம சூனா.பானா, கைப்புள்ள போன்ற கதாபாத்திரங்களின் ஆதி வடிவம்.

ஒரு நாள் ஏகாம்பரச் செட்டியார் வீட்டில் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். முந்திய இரவு பெய்த மழையிலும் காற்றிலும் உதிர்ந்து கிடந்த பனங்காயைத் தூக்கிக் கொண்டு ஒருவன் ஓடி வந்தான், 'ஐயா, இது காட்டுக்கு போற வழியிலே கிடந்தது. எங்க யாருக்கும் என்னான்னு தெரியலை. ஐயாகிட்ட கேக்கலாம்னு எடுத்து வந்தேன்'. செட்டியாருக்கு ஒன்றும் புரியவில்லை. மேலும் கீழும் பார்த்தார், தட்டி பார்த்தார். பின்னர் உரக்க அறிவித்தார் 'இது, கரடி முட்டைடா'.

மற்றொரு நாள் ஏகாம்பரச் செட்டியார் அதிகாலையில் சில பேருடன் சென்று கொண்டிருந்தார். தூரத்தில் ஒரு யானை சென்று கொண்டிருந்தது. உடனே கூட வந்தவர்கள் 'ஐயா, செட்டியாரையா அது என்னய்யா கருப்பா போகுது?' என்றனர். துளியும் யோசியாமல் 'இருட்டுடா' என்றார் செட்டியார். 'சூரியன் உதிச்சப்போ எல்லா இருட்டும் போயிடும்ல. அதில மிச்சம் மீதி இருக்கிறது இப்போ போகுது' என்றார். அனைவரும் செட்டியாரைச் சிலாகித்தனர்.

செட்டியார் வீட்டுக்குத் போகும் வழியில் ஊரே கூடி எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். செட்டியாரைக் கண்டவுடன் 'ஐயா, இது என்னான்னு சொல்லுங்கய்யா' என்று விஞ்ஞாபித்தனர். நெளிந்து, வளைந்து கொண்டிருந்த பாம்பை இதற்கு முன் அவர் பார்த்தாரில்லை. யோசித்து பார்த்தார் ஒன்றும் புலப்படவில்லை. உடனே சத்தமாக, 'அட, இதுதான் கோணக்க மாணக்க தையக்குட்டி' என்று கூறிவிட்டு விருவிருவென நடையைக் கட்டினார். 'அடடா, செட்டியாருக்கு தெரியாதது இந்த உலகத்திலே ஓண்ணுமில்லையப்பா' என்றது ஊர்.

Contributors

Rameshl

This page was last modified on 23 October 2011, at 22:35. This page has been accessed 1,579 times.