வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

என் நினைவுகளில் பதிந்த அண்ணா - 2

From மரபு விக்கி

Jump to: navigation, search

என் நினைவுகளில் பதிந்த அண்ணா -(2)

வெங்கட் சாமிநாதன்




அப்போது அவர் அறிஞர் அண்ணா ஆகியிருந்தார். மெதுவாக, சி.என். அண்ணாதுரை எம்.ஏ என்பதும் உதிர ஆரம்பித்திருந்தது. இப்போது அவர் அறியப் பெற்றுள்ள 'பேரறிஞர்" பட்டம் அவருக்குச் சூட்டப்பட்டது மிகப் பின்னர்தான். சில வருடங்கள் பின்னர் அவர் வானொலியில் பேசிய பேச்சுக்கள் சிறு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அதில் எல்லாம் அவர் பெயர் வெறும் சி.என். அண்ணாதுரை என்று தான் அச்சிடப்பட்டிருக்கும். அறிஞர் என திராவிட இயக்கத்தினர் அவரைத் தவறாது பட்டம் கொடுத்தே குறிப்பிட்டாலும், அறிஞர் என அடைமொழி தராது அண்ணாதுரை என்று மற்ற இடங்களில் மற்றவரால் அழைக்கப்பட்டால், " என்னைப் பெயர் சொல்லிக் குறிப்பிடும் அளவுக்குத் தமிழ் நாட்டில் பண்பாடும் அரசியல் நாகரீகமும் தாழ்ந்துவிட்டதே என்று தான் வருந்துகிறேன்" என்று அவர் என்றும் அடுத்திருக்கும் நண்பரிடம் கூட ரகசியமாக வருந்தியதாகக் கூடச் செய்தி இல்லை. மேடையில் எழுத்தில் வேதனைப்படுவது பற்றிப் பேச்சே இல்லை. திராவிட இயக்கத்தின் சரித்திரத்தை ஆராய்கிறவர்கள் இவையெல்லாம் எந்தக் கால கட்டத்தில், என்ன காரணங்களுக்காக தொடங்கியது பின்னர் என்ன காரணங்களுக்காக ஒரு சிலர் விஷயத்தில் இவை கைவிடப்பட்டது, இன்னும் சிலர் விஷயத்தில் இவை பெரு முழக்கமாக அலங்காரங்கள் பெற்றது, என்பதையெல்லாம் சொல்லக்கூடும். ஆனால் அதெல்லாம் ஒன்றும் அப்படி நிகழ்ந்துவிடவில்லை. எவ்வித ஆடம்பரத்தையும் அலங்காரங்களையும் தன் விஷயத்தில் சற்றும் விரும்பாத அண்ணாதுரை தான், வெற்று அலங்கார, ஆடம்பர வர்ணனைகளை தன் தமிழில் கையாண்டவரும். ஆரம்ப காலங்களில் அது ஒரு கவர்ச்சியைத் தந்தது மக்களிடையே. தளபதி என்ற பட்டப் பெயரும் எம்.ஏ என்ற கல்வித்தகுதியும் பெரும்பாலும் படிப்பறிவற்ற தொண்டர் படைக்குக் கவர்ச்சியும் வியப்பையும், ஒரு பெருமையையும் தந்தது. அது கழகத்தின் பிரசாரத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவின என்றும் சொல்ல வேண்டும்.


இத்தொண்டர் படையிடையேயும், பொதுவாக அந்நாளைய கழகத்திடையேயும் ஒரு தாழ்வுணர்ச்சி அழுத்தி வதைத்த காரணத்தாலேயே தாமும் பட்டம் பதவி பெற்றவரிடையே, அறிஞர்களிடையே வாழ்வதான ஒரு பிரமையை தமக்குள்ளும் உருவாக்கிக்கொண்டு அதை மக்களிடையேயும் திரும்பத் திரும்ப பலத்து இரைச்சலிடுவதன் மூலம் அது உண்மையே என்று ஸ்தாபிக்கும் மனப்போக்கும் பரவலாக இருந்ததோ என்று தோன்றுகிறது. அதனால் தான், ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்று மாத்திரமே அறியப்பட்டவர், 'தென்னாட்டு லெனின் பெரியார்' தென்னாட்டு ரூஸோ பெரியார்" 'தென்னாட்டு இங்கர்ஸால்' என்றெல்லாம் பட்டங்கள் சூட்டப்பட்டே கழகத் தலைவர்கள் உலா வந்தனர். வெகு சகஜமாக, ஒரு சடங்காக, திராவிட கழகத்தில் இருப்பவர் எல்லோருக்குமே அவரவர் தெரியவந்த துறைக்குத் தகுந்தபடி ஒரு அலங்காரமான, இரைச்சலிடும் பட்டம் தரப்பட்டது. சிற்பி, திலகம், வேந்தன், என்பன போன்ற சிறப்புப்பட்டங்கள் சேர்க்கப்படும். யாரும் ஒரு அலங்காரப் பட்டம் பெறுவதற்கு ஒருத்தரிடம் இருக்கவேண்டிய தகுதி திராவிட கட்சியோடு தன்னை இணைத்துக்கொண்டால் போதுமானது. திராவிடக் கழக அனுதாபி என்று காட்டிக்கொண்டாலே போதும். ஒரு பட்டம் கிடைத்து விடும். பின் அந்தப் பட்டங்கள் ஒவ்வொரு ஊர் ஊர்வலத்திலும் முழங்கப்படும். முதலில் இவ்வாறான அலங்காரமான பட்டங்கள் கொடுப்பதில் ஆரம்பித்த ஒரு விளம்பர மோகம் பின்னர் ஒரு பயங்கரத் தொற்று நோயாகவே எல்லாச் செயல்களிலும் பரவியுள்ளதை இன்று நாம் பார்க்கலாம். இந்தப் பட்டங்களே ஒரு போதை தான். கூடுதல் போதை என்றும் வேண்டுமானால் சொல்லலாம்.


அந்நாட்களில் நான் அண்ணாவின் ரசிகன். அவர் பேச்சும் எழுத்தும் ஒரு மயக்கம் தரும். அவர் எழுதியதை யெல்லாம் கிடைத்தவரை படித்துவிடுவேன். திராவிடக் கட்சிகளின் மக்கள் தொடர்பு வேறு எந்தக் கட்சியை விடவும் பலமானது. மேடைப் பேச்சு மாத்திரமல்ல, பத்திரிகைகள், பல்கலைக் கழகக் கூட்டங்கள், நாடகங்கள், மாநாடுகள், திரைப் படங்கள் என அவர்கள் பிரசாரம் பலமுனைப்பட்டது, பரவலானது. அனேகமாக ஒவ்வொரு தெருவிலும் ஒரு வாசகசாலை இருக்கும் அதில் விடுதலையிலிருந்து ஆரம்பித்து எல்லா வாரப்பத்திரிகைகளும் படிக்கக் கிடைக்கும். அத்தனையும் திராவிடக் கழகத்தாரின் பத்திரிகைகள். அனேகமாக ஒவ்வொரு தலைவரும் ஒரு பத்திரிகையாவது நடத்திக் கொண்டிருப்பார். அண்ணாவின் பத்திரிகையாக 'திராவிட நாடு" பின்னர் காஞ்சி..... தலைவன் ( - ஓ, என்னவோ..பெயர் முழுக்க நினைவில் இல்லை) என்றும் இரண்டு பத்திரிகைகள். கும்பகோணத்தில் நான் இருந்த மகாமகக் குள மேற்குத் தெருவிலிருந்து ஐம்பது அடி நடந்தால் போதும். பத்துக்குப் பத்து என்ற அளவிலிருந்த கடை போலிருந்த ஒரு அறையில் எனக்கு திராவிடக் கழகத்தின் எல்லாப் பத்திரிகைகளும் படிக்கக் கிடைத்துவிடும். அண்ணாவின் திராவிட நாடு எனக்கு மிகவும் பிடித்த பத்திரிகை. 'கடமை அறியாக் கரந்துகள்" - இப்படித்தான் இருக்கும் அவர் எழுதும் கட்டுரைத் தலைப்புகள். படிக்க மிகவும் சந்தோஷமாக இருக்கும்.


அவர் பேச்சுக்கள் கேட்பதிலும் எனக்கு ஒரு மயக்கம் இருந்தது. அந்த வயதில் அந்த மயக்கம் இருந்தது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எனக்கு மாத்திரம் என்ன, தமிழ் மக்கள் அனைவருக்குமே அந்த மயக்கம் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வயது மயக்கங்களை மறந்து விட்டு இப்போது நினைத்துப் பார்த்தால், அவரைப் போன்ற ஒரு பேச்சாளர் எனக்குத் தெரிந்து இல்லையென்று தான் சொல்லவேண்டும். அடல் பீஹாரி வாஜ்பாயையும் சேர்த்துத்தான். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனையும் சேர்த்துத்தான். திராவிடக் கழகமே பேச்சாளர்களின் வாசாலகத்தால் தான் வளர்ந்தது என்று சொல்ல வேண்டும். அப்படியிருக்க மற்ற எந்தப் பேச்சாளரின் பேச்சும் என்னைக் கவர்ந்ததில்லை. படித்தவர்க்கும், படிப்பற்றவர்க்கும் எல்லோரையுமே கவரும் பேச்சுத் திறன் அவரது. அதில் அவரது படிப்பறிவும் இருக்கும். தமிழும் கொஞ்சும். பேச்சும் திருப்புகழ் சந்தத்திற்காகக் கேட்பது போல ஒரு இனிமையான நடையில் நம்மை மயக்கி இருத்தும். பாமரத்தனமோ, கொச்சையோ, துவேஷமோ இல்லாத பேச்சு. சீற்றமிருக்காது. யாரையும் இகழும் நோக்கம் இராது. யாரையும் மனம் நோகச் செய்யாது. பேச்சாளர்களாலேயே வரலாற்றை மாற்றிய பெருமை கொண்ட திராவிட கட்சிப் பேச்சாளர்களின் அண்ணாவைத்தவிர வேறு எவர் பேச்சும் அண்ணாவின் பேச்சின் குணத்திற்கு நேர் எதிரானதாகத் தான் இருக்கும். மனதில் விஷமோ, துவேஷமோ இல்லாத பேச்சு மாத்திரமல்ல. இல்லாத மனிதரும் தான். இந்த குணத்தையும் திராவிட கழகப் பேச்சாளர் யார் பற்றியும் சொல்ல முடியாது. கும்பகோணத்தில் படித்த காலத்தில் இரு முறையும், தில்லியில் இருந்த காலத்தில் இரு முறையும் அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன்.


கும்பகோணத்தில் அவர் பேச்சைக் கேட்க உடையாளூரிலிருந்து ஐந்தரை மைல் வயல் வரப்புகளினூடே நடந்து, அவர் பேச்சைக் கேட்டு பின் ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கி இரவைக் கழித்த நாட்களில் அவர் திராவிடக் கழகத்தில் பெரியாருக்கு அடுத்த பெரிய தலைவர். அவருக்கு இணையாக வேறு யாரும் இல்லை. மற்றவர்கள் அவருக்கு வெகு தூரத்து அடுத்த படியில் இருந்தவர்கள் தாம். அந்தக் கட்டத்தில் திராவிடக் கழகம் பல்கலைக் கழகங்களில், படித்த மக்களிடையே, சினிமா கலைஞர்களிடையே, பத்திரிகைகளிடையே அண்ணாவின் காரணமாகவே அறியப்பட்டது. மதிக்கப்பட்டது. காலுன்றி வேர்கொண்டது. வளரத்தொடங்கியது. பெரியார் காரணமாக அல்ல. மற்ற எவர் காரணமாகவும் அல்ல. கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களிடையே கழகம் புகுந்ததென்றால் அதற்கு அண்ணாவே காரணம். நெடுஞ்செழியனும், அன்பழகனும், மதியழகனும், ஏ.பி.ஜனார்த்தனனும், கழகத் தலைவர்களானது, அண்ணாவின் பல்கலைக் கழக நுழைவின் காரணமாகத்தான். கழகம் என்ன சொல்கிறது என்பதை மரியாதையோடு ஒருவர் கேட்டார் என்றால் அது அண்ணாவின் காரணமாகத்தான்.


இருப்பினும், அண்ணா தன் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் சுழல்வதாக எண்ணியவரில்லை. முதலில் அவர் பேசிய காந்தி பார்க் கூட்டத்தில் அவர் பல அலங்கோலமான பேச்சுக்களுக்குப் பிறகு 40-45 நிமிடம் பேசியிருப்பார். கடைசிப் பேச்சாளராக மணிக்கணக்கில் பேசுபவர் தன் பேச்சைக் குறைத்துக்கொண்டது அடுத்துப் பெரியார் பேசவேண்டும் கடைசியாக என்ற காரணத்தால். ஆனால் மக்களிடையே அவர்தான் நக்ஷத்திரப் பேச்சாளர். அந்த அண்ணாவைத்தான், மற்ற திராவிடக் கழகத் தலைவர்கள் மத்தியில் இன்னும் ஒருவராக ஒரு ஓட்டு வீட்டுக் குறுகலான திண்ணையில் யாரோ போல உட்கார்ந்திருக்க நான் பார்த்தேன். இன்று பந்தா இல்லாமல், அடாவடித் தோற்றம் இல்லாது ஒரு வார்டு கவுன்சிலரைக் கூட நாம் காணமுடியாது. 1957-ல் அவர் தில்லி வந்திருந்தார். அதிகம் நூறுபேர் அமரக்கூடிய ஒரு ஹாலில் தான் அவர் பேசவிருந்தார். நாலைந்து கழகத் தோழர்களோடு ஹாலுக்குள் நுழைந்தார். பள்ளியில் படித்த காலத்தில் பார்த்து நினைவில் பதிந்ததை விட இப்போது பார்க்கும் அண்ணா நன்றாக நினைவில் பதிந்திருக்கிறார். தன் தோற்றத்திலோ உடையிலோ எவ்வித அக்கறையும் இல்லாது எதையோ எப்படியோ இடுப்பில் சுற்றிக்கொண்டு ஒரு சட்டையையும் அணிந்து ஒரு துண்டையும் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பும் கிராமத்தானாகத் தான் அவர் காட்சியளித்தார். அந்தத் துண்டும் சலவை மடிப்பு கொண்ட துண்டு அல்ல. தோய்த்துத் தோளில் வீசிக்கொண்ட கசங்கிச் சுருண்ட துண்டு. இது இன்று வரை நாம் காணும் அத்தனை கழகத் தலைவர்களின் இயல்புக்கு முற்றிலும் மாறான ஒன்று. அன்று பேசியதில் ஒரு வாக்கியம் தான் என் நினைவில் இன்றும் பதிந்திருக்கிறது. "நாங்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளவில்லை. நாங்கள் கற்கவேண்டியது நிறைய இருப்பதை அறிந்தவர்கள் தாம். எங்கள் எதிரே இருப்பவர்கள் நிறைய அனுபவம் வாய்ந்தவர்கள். ...." இப்படி நீண்டது அவர் பேச்சு. தில்லித் தலைநகரில் சுமார் நூறு பேருக்கு முன்னேதானே பேசுகிறோம் என்ற நினைப்பில்லை அவருக்கு.


இன்னொரு முறை அவர் பேசியது, கரோல்பாகில் தங்கியிருந்த நாயர் ஹோட்டலுக்கு முன் இருந்த ஒரு பார்க்கில். அன்று அது பார்க்காக இருக்கவில்லை. அதில் பாதி இடத்தை எருமைகள் ஆக்கிரமித்திருந்தன. கரோல் பாக் வாசிகளுக்கு பால் வினியோகம் செய்பவர்கள் தம் எருமைத் தொழுவத்தை அங்கு நிர்மாணித்திருந்தனர். மிகுந்த பாதியில் சேலத்திலிருந்தும், சின்னாளபட்டியிலிருந்தும் வந்த தமிழர்களின் குடிசைகள். அவர்கள் கரோல் பாக் வீடுகளில் வேலை செய்து வயிறு நிரப்புகிறவர்கள். அந்தக் குடிசைகளிலிருந்து வந்தவன் ஒருவன் தான், பெயர் சுப்பிரமணியன், எங்கள் லாட்ஜுக்குக் காவலாளி. சின்னாளபட்டியிலிருந்துவந்தவன். பட்டு நெசவுத் தொழில் நசித்துப் போகவே வீட்டு வேலை செய்து பிழைக்க வந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்தக் குடிசை வாழ் தமிழர்களால் அழைக்கப்பட்டு அந்த குடிசைகளுக்கிடையே ஒரு மேஜையும் சில நாற்காலிகளும் போட்டுத் தந்த மேடையில் தான் அண்ணா பேசினார். வருடம் 1957. அவரோடு கூட வந்தவர் என்று நாஞ்சில்மனோகரன என் நினைவுக்கு வருகிறார். கையில் ஒரு அலங்காரத் தடி. அதைச் சுழற்றிக் கொண்டே இருப்பதும் பட்டு ஜிப்பாவின் மேல் போர்த்திய பட்டு சால்வை ஒன்றை அடிக்கடி எடுத்து போர்த்திக்கொள்வதுமாக இருந்தார். அலங்காரப் பிரியர். ஜவ்வாதுவோ என்னவோ வாசனைப் பொருட்களிலும் பிரியம் போலும். பணக்காரப் பண்ணையின் செல்லப் பிள்ளையின் சுக வாழ்க்கை எப்படி வெளிப்படும்? அப்படித்தான் அவரும் சுக வாழ்க்கைப் பிரியர் போலும். அண்ணாவுக்கு நேர் எதிர். அண்ணா வந்திராவிட்டால் நாஞ்சில் மனோகரன் அந்த இடத்திற்கெல்லாம் வருவாரா என்பது சந்தேகம் தான். வேறு யார் வந்திருந்தார்கள் என்பது என் நினைவில் இல்லை. பாதி குடிசைகளும் பாதி எருமைகள் கட்டியிருந்த பெரிய தொழுவமுமாக இருந்த அந்த இடத்தில் தமிழர்கள் அழைப்பை ஏற்று அண்ணா பேசினார். அந்தக் கால கட்டத்தில் அண்ணா மக்கள் அபிமானத்தையும் மற்றக் கட்சி அரசியல்வாதிகளின் மதிப்பையும் பெற்ற தலைவராக வளர்ந்திருந்தார். தான் அத்தகைய ஒரு தலைவன் என்ற நினைப்பே இல்லாத ஒரு எளிமையும் அடக்கமும் நிறைந்த மனிதராக அண்ணா இருந்தார். 1947-ல் கும்பகோணத்தில் முதன் முதலாகக் கண்ட அண்ணாவுக்கும் சுமார் பத்து வருடங்களுக்குப் பின் அரசியல் தளத்தில் வளர்ந்து விட்ட அண்ணாவுக்கும் எந்த குண மாற்றத்தையும் நான் காணவில்லை. அதே மனிதர் தான்

வெங்கட் சாமிநாதன்/11.9.07


Contributors

Ksubashini மற்றும் Geetha Sambasivam

This page was last modified on 11 February 2012, at 19:23. This page has been accessed 5,196 times.