Uyar Njanap Panuval
[ இதுவும் 80களில் யான் எழுதிய சிறுநூல்களில் ஒன்று. சில திருத்தங்களோடு அன்பர்கட்கு மீண்டும் ஓர் ஞான விருந்தாகப் படைப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்
உலகன் 27-4-12 ]
உயர் ஞானப் பனுவல்
கி. லோகநாதன், 1984
முன்னுரை
இந்து மக்களாகிய நாம் ஓர் திருப்பு முனையில் இருக்கின்றோம். புதிய தத்துவக் கோட்பாடுகளும் கொள்கை விளக்கங்களும் சமயங்களும் நம் சிந்தனையையும் நமது இளைஞர்களின் சிந்தனையையும் தாக்கி ஓர்வித மயக்கத்தை உண்டாக்கி இருக்கின்றன. நமது பழைய பாரம்பரிய சிந்தனைகளின் சிறப்பினைப் பற்றியும் ஐயங்ககள் எழுந்துள்ளன.
கோயில் வழிப்பாட்டினை மையமாகக் கொண்டு தேவாரத் திருமுறையின் அடிப்படையில் எழுந்ததே இன்றிருக்கும் சைவ சமயம். சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நாற்பாத சைவ சமய வாழ்க்கையை நிறுத்தும் சாதனங்களின் கணிப்பு. இச்சாதனா பயிற்சியால், இறையருளைப் பெற்று தூய மனத்தினனாகி பரம்பொருளுடன் ஒன்றித்து ஒருமையுடன் நிற்பதே வாழ்க்கையின் முடிவு என்ற வாழ்க்கை விளக்கமும் இங்கு உண்டு. இந்த கணிப்பின் விரிவுதான் அடிப்படைகளின் விளக்கந்தான் சைவ சித்தாந்தம் எனும் தத்துவக் கோட்பாடு ஆகும்.
எண்ணற்ற பசுக்களாகிய ஆன்மாக்கள் அநாதியே உள்ளன, அருளே வடிவாய் யாண்டும் ஐந்தொழில்களை இயற்றிக் கொண்டிருக்கின்ற பதியும் உளன். பாசங்களாகிய ஆணவம் கன்மம் மாயை எனும் முப்பொருளும் அநாதியே உண்டு, நாற்பாத சாதனங்களை பயில்வதின் நோக்கு இந்த பாசத் தளைகளிலிருந்து நீங்கி, இறையருளின் அவனது தற்சொரூபத்தைத் தரிசித்து தான் வேறு அவன் வேறு என்றில்லாது ஒருமை நல்லுணர்வுடன் நிற்பதாகிய அப்பர முத்தியை அடைவதே வாழ்க்கையின் நோக்கு என்றெல்லாம் சித்தாந்தம் பகரும். வேதாந்தம் கூறுவது போன்று ஆன்மா உண்மையில் பரப்பிரம்மமே என்று உணர்வது, அல்லது ஆன்ம பிரம ஐக்கியமே பரமுத்தி இது பொய்யாகிய இந்த உலகலிருந்து நிட்டை கூடி தன்னை விடுவிப்பதால் அமையும் என்றும் இன்னும் பலவாறும் கூறுவது போன்று சித்தாந்தம் கூறுவதில்லை. சாதாரண உலக அறிவு உண்மையில் மித்தை வெற்றுக் கற்பிதம் என்றெல்லாம் வேதாந்தம் கூறி உலகியல் ஆய்வை வேண்டவொன்று வேதப் பாராயணம் போன்ற வேத மையமான சாதனங்களே வீடுபேற்றிக்கு வேண்டுவது என்றெல்லாம் கூறிச் செல்ல, சித்தாந்தம் அப்படியல்ல.
சித்தாந்தம் உலகு உண்மையே, மாசுடைய உள்ளத்தால் பிறழ்ச்சியறிவு, மாசில்லா நிலையில் பிறழ்ச்சி அறிவு தோன்றாது, உள்ளதை உள்ளவாக் கண்டு மெய்யுணர்வையே அனுபவிக்கும் என்று கூறும்.
இதில் எது உண்மை?
மேலும் புதிய பல சமயங்களினால் சைவ சிதாந்தத்தின் அடிப்படைகள் ஆட்டங் கண்டுள்ளதா? அது மாற்றியமைக்கப்பட வேண்டிய ஒன்றா? முற்றாகத் தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்றா?
இத்தகைய கேள்விகள் என்னுள் பல வருடங்களாக இருந்தன. இந்நிலையில் தொல்காப்பிய அடிப்படையில் ‘இயக்க விலக்கணம்’ (Process Grammar) என்றவோர் புதிய மொழியியற் கோட்பாடு என்னால் உருவாக்கப்பட்டது. அதன் வழி பிறந்த சிந்தனை தெளிவின் வழி சைவ சித்தாந்தத்தின் அடிப்படைகளை ஓர் புதிய கோணத்தில் ஆராயத் தொடங்கினேன்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளின் ஆராய்ச்சியினை இச்சிறுநூலில் அடக்கியுள்ளேன். சைவ சித்தாந்த்தின் அடிப்படைகள் புதிய முறையில் தெளிவாகுவதைக் கண்டு புளகாந்திதம் அடைந்தேன். அற்புதமான ‘சிவஞானபோதம்’ எனும் நூலின் ஆசிரியராகிய மெய்கண்டாரின் நுண்மையையும் ஆழத்தையும் இவ்வாய்வு மூலம் ஓரளவு உணர்ந்து பெரிதும் வியந்தேன்.
யான் பெற்று மகிழ்ந்த இந்த மெய்யறிவுத் தெளிவினை அனைவரும் பெற்று மகிழவேண்டும் என்ற கருத்தில் இந்த சிறுநூலை இப்போது வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
கி. லோகநாதன்
உயர் ஞானப் பனுவல்-2
வாழ்த்து
மேதகு ஞான மெய்கண்டான் நண்ணி
சிந்தையுட் புகுந்து வந்தது கொண்டு
புந்திதனில் வைத்தப் பேறதனால் மாய
தொந்தனைகட் போயிற்றுத் தூநிலை யாயிற்று
வந்தனைகட் செய்து வழுத்துவோம் சிவாயமே!
அவையடக்கம்
உளவியல் மொழியியலென ஊழ்த்திடும் பலவியல்
பயின்ற தன்வரு பல்லுருவ ஐயங்கள்
அகன்ற தொருநிலை யாயிற்று மாண்ட
பெரு நூல்கள் மகிழ்ந்த நலத்தால்
புதிய சமயங்கள் பொன்றா சைவத்துண்மை
பொய்யென்று காட்டா புலமை யிலாமை
நன்றாய் யுணர்ந்த நலத்தின் நவிலும்
சிறுசொல் சிறிதே செவிமடுப் புமினே
ஐந்தொழில் வித்தகன் அளவிலாப் பெருமை
நைந்தொழி மாந்தரும் நுகர்ந்திடச் சிறிதே
நயந்து மொழிந்திடும் நற்காரிய மஃதால்!
ஆரணங்கள் ஏரணங்கள் ஆயிர மாயிர
அறிவியற் பனுவல்கள் தெரிதரு உத்திகள்
மோனப் புதுநிழலில் முகிழ்ந்த முத்துக்கள்
மானப் பவனிவரு ஞானப் பாக்கள்
கலைகள் தருவுரு அறி
கதிகள் தருவுணர் வறி
நுதல் விழி நாட்டத் திறைவன்
அருளொளி பட்ட அன்பு டையீர்
என்னு ளொன்று உணர்த்த வுணர்ந்து
உரைத்துளன் யானே உயர்ஞானப் பனுவல்
பொய்கண் டகன்றிலா யிளம்புல மையோர்க்கே
நயங் கண்டு நலங் கொள்க
அல்லதூ வதை ஆய்ந் தகற்றியே
நூல்
படலம்1: உலகவுண்மை யதிகாரம்
உலகளாவிய நிலையில் நம் மெய்கண்டார் தத்துவ ஆராய்ச்சியில் ஓர் மாபெரும் புரட்சியைச் செய்தவர். ‘அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்’ என்றும் அதனையே ‘ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து’ என்றும் கூறி உலகப் பொதுவாகிய சுட்டறிவையே ஆய்வுப் பொருளாகத் தேர்ந்து தமது முப்பொருள் உண்மையைக் கூறும் அநாதிப் பொருளியலை நிறுத்தினார். வேத வேதாங்களின் உட்கிடைக்கையை தொகுத்துக் கூறிய பிரம்ம சூத்திரங்கள், ‘ஆகவே பிரம்மத்தின் மேல் விசாரனை’ என்றே தொடக்குகின்றது. இந்த பிரம்ம விசாரணை ஓர் உலகப் பொது அல்ல.
இதேப் போலத்தான் கிரேக்க தத்துவ மேதைகளாகிய பிளேட்டோ அரிஸ்ட்டாட்டில் போன்றாரும் சுட்டறிவினைத் தேர்ந்து அதனை விசாரித்து அநாதிபொருட்களை நிறுத்தவில்லை.
இதேப் போலத்தான் பிற்காலத்து ஐரோப்பிய தத்துவ ஞானிகளாகிய Immanuel Kant, Locke, Hume, Descarte போன்றோரும் அவர்களைச் சார்ந்து எழுந்த Husserl Heidegger Gadamar போன்றோரும் இன்னும் பலரும். இதனால் சைவத்தின் அநாதி பொருளியல் தமிழர்களைத் தவிர்த்து வேறு யாரும் உலகளாவிய நிலையில் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
இந்தப் பெருமையை நமக்குத் தேடித் தந்தவர் மெய்கண்டார் தான்.
ஆன்மாக்களின் சுட்டறிவு பெற்றிமை, இதனை ஆராயவேண்டும் என்ற மெய்கண்டாரின் முறையியல் நுட்பம், தகுந்த ஒன்றா இல்லையா என்பதை ஓர் புதிய கோணத்தில் ஆய்ந்து மெய்கண்டாரின் புரட்சியை வெளிக்கொணர்வதே இந்த சிறு நூலின் நோக்கம்.
இதனை ஆசிரியர் கிளவிகளில் தோன்றும் வழுக்களை ஆய்ந்து எல்லா கிளவிகட்கும் உள்ள பொதுக்கூறுகள் யாவை என்பதை விளக்கி சுட்டறிவு ஆய்விற்கு வருகின்றார்.
சூத்திரம் 1
மூலமேரணம் புறமென முறையின்வரூஉ முருமூன்றே
வழக்கினுஞ் செய்யுளினு மகப்படு கிளவி
வழூஉநிலைத் தோற்றம் நுண்ணிதின் ஆயின்
விளக்கம்
ஓர் மொழிக்கு பொருள்வழு இடவழு எழுத்துவழு புணர்ச்சிவழு என்றவாறு வழூஉக்கள் பல. இவற்றை எல்லாம் மிக விரிவாக தொல்காப்பியம் போன்ற மொழியியல் நூற்கள் ஆய்ந்து தெளிவுபடுத்தி பிழையின்றி எவ்வாறு எழுதுவது என்று காட்டியுள்ளன, இனி மொழியின் நவில்தல் வினாதல் ஆணையிடல் போன்ற மொழிச் செய்திகள்(speech acts) அனைத்திற்கும் மூலமாக இருப்பன கிளவிகளே. இந்த வழூஉக்களின் தோற்றத்தை ஆய்ந்தால் மூலவுரு ஏரணவுரு புறவுரு என்று மூன்று உருக்கள் இருப்பதைக் காண்பம். இம்மூன்றுரு கோட்பாடின்றி பல்வேறு வகைய இலக்கண வழூக்களை விளக்க முடியாது. ‘கந்தனை வந்தான்’ என்பது இலக்கணப் பிழையுள்ளது. இது தொடரியல் பிழை(syntactic error), மூலவுரு வழி இது இங்கு பிறகு விளக்கப்படும்
மூலவுரு என்பது தொடரியல் சார்ந்தது(syntactic structure), மொழிமனோவினைகள் தூண்டும் புத்தியின் இயக்கங்கள். சுட்டல் வேற்றுமை ஏற்றல் போன்றவை இதனுள் அடங்கும். இந்த உருக்களை புத்தியில் இருத்தி தக்க முறையில் பொருண்மைகளை (meanings, concepts, senses) பெய்து உருவாக்கப்படும் ஞானவுணர்வைத் தாங்கி வருவதே ஏரணவுரு. இந்த ஏரணவுரு (semantic form) வழியேதான் விருப்பு வெறுப்பு எனும் உணர்வுகள் உடன்படல் மறுத்தல் போன்ற மனோவினைகள் போன்றவை தோன்றும்.
இவற்றை எல்லாம் ஒலிவடிவில் அதாவது எழுத்துவடிவில் இசை அசைபோன்றவற்றை பெய்து பிறருக்கு உணர்த்த உதவுவதே புறவடிவாகும்.
இவை எல்லாம் பிறகு இன்னும் தெளிவாக விளக்கப்படும் இடையே சைவாகமங்கள் கூறும் வைகரி பைசந்தி மத்திமை சூக்குமை அதிசூக்குமை என்ற புதையடுக்கு மொழியியல் (Hierarchical Theory of Language) போன்ற ஒன்று எனத் தோன்றினாலும், இதுவேறு என்பதை விசாரித்துத் தெளிக.
சைவாகமங்கள் அதிசூக்குமமாகிய ஓங்காரத்திலிருந்தே விரிந்து விரிந்து சூக்குமை மத்திமை பைசந்தி என்றும் செவிப்புலன் ஆகும் வைகரி மொழி உருவாகும் என்று பகரும்
இனி ஆசிரியர் இந்த வழூக்களின் தோற்றத்தை ஆராய அங்கு கிளவியாக்கத்திற்கு முதலாகப் பல சுட்டரங்குகள் இருக்கின்றன என்று விளக்கி தமது சுட்டறிவு ஆய்வினைத் தொடங்குகின்றார்,
தொடரும்
உயர் ஞானப் பனுவல்- 3
சூத்திரம் 2
அரங்கின் வழியது சுட்டு அதூவும்
தனிமன் பொதுவென மூன்றா கும்மே
விளக்கம்
யாதாவதோர் வகையில் பொருள் சுட்டின்றி எக்கிளவியும் இல்லை. அது இது உது போன்றவை பொருளொடுப் புணராச் சுட்டு என்பார் தொல்காப்பியர். இச்சொற்கள் விளங்கும் சுட்டரங்கே தனிசுட்டரங்கு என்று நவிலப்படுகின்றது. ‘ மாடு நல்ல” ‘வான் நீலம்’ என்றெல்லாம் வரும் பொருள் சுட்டுகளில் அது இது போன்று சுட்டுக்கள் மறையாகவே இருக்க இங்கு விளங்குவது பொது சுட்டர்ங்கு ஆகும். இங்கு பெயர் மாத்திரையானே பொருள் சுட்டு நடக்கின்றது. இனி இத்ததகைய சடப் பொருட்களின் சுட்டுகட்கு வேறாக் ‘நான் நீ அவன் உவன்’ என வரும் தன்மை முன்னிலை படர்க்கை என்றவாறு வரும் ஆன்மச் சுட்டுகட்கு மூலமாக இருப்பது மன்சுட்டரங்காகும்.
மெய்கண்டார் ‘அவன் அவள் அது எனும் அவை’ எனச் சுட்டும்போது தனிச்சுட்டரங்கு வழி சுட்டி, ‘ஒருவன் ஒருத்தி ஒன்று’ எனச் சுட்டும்போது பொதுச் சுட்டரங்கின் வழி சுட்டுகின்றார், இங்கு சுட்டும் தொழில் அரங்குப் பெயற்சியோடு நடக்கின்றது.
இனி இச்சுட்டரங்குகள் தான் யாவை? எனும் கேள்வி எழ, அவற்றை விளக்கப் புகுகின்றார் அடுத்து, முதலில் தனிசுட்டரங்கின் விளக்கம்
சூத்திரம் 3
கிளவி முதல்வ னுடல்மைய மாயிடம்
அண்மை சேய்மை முன்மையென முறையே
இ-அ-உ யெனவரும் தனிசுட்ட ரங்கே
விளக்கம்
அது இது உது என்றவாறு பொருள் சுட்டு நடக்கும்போது, பக்கம் தூரம் எதிர் என்றவாறு கிளவி முதல்வன் உடலை மையமாகக் கொண்டே இடச் சுட்டு நடக்கின்றது. இதனைக் கேட்போன் ஒருவன், அப்பொருள் எவ்விடத்தில் உள்ளது என்பதை கண்டுணர, கிளப்போனின் உடலை மையமாகக் கொண்டே அந்த இடச் சுட்டை உணர்ந்து எப்பொருள் சுட்டப்படுகின்றது என்பதை அறிய முடியும். இதேப் போலத் தான் ‘அங்கு இங்கு ஊங்கு’ என்றெல்லாம் வரும் இடச் சுட்டுகள்.
பன்மையுடன் வரும் போது அஃறிணை என்றால் ‘அவை இவை உவை’ என்றும் உயர்திணை என்றால் ‘அவர்கள் இவர்கள், உவர்கள் என்றும் கிளவியாக்கங்கள் நடைபெறும்.
இவை எல்லாம் தொல்காப்பியத்து சொல்லதிகாரத்திலேயே மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கண்டு தெளிக
இனி அடுத்து பொது சுட்டரங்கு யாதென விளக்கப் புகுகின்றார் ஆசிரியர்
சூத்திரம் 4
ஆக்குவோன் கேட்போன் அனைவருக்கும் பொதுவாய்
மெய் றாக்காது தனிமொழி ஏற்காது
மொழிபோக் குடைத்தாம் பொதுச் சுட்டரங்கு
விளக்கம்
இருவர் அல்லது பலர் பங்கேற்கும் உரையாடல்களில் ஒருவர் ஆற்றும் கிளவிகளில் அது இது உது என்றில்லாது பொதுவாக ‘ஒருவன் ஒருத்தி ஒன்று” என்றோ ‘மழை பெய்தது’ ‘மாடு புல் மேய்ந்தது’ ‘மக்கள் ஆறறிவு உடையர்’ என்றெலாம் பகரப்படும் போது, பொருட் சுட்டும் அவற்றை பிழைய்லாது அறிதலும் பெயர்சொல் மாத்திரையானே நடப்பதின் அது பொதுச் சுட்டர்ங்கின் வழி நடப்பதாகும். இந்த பொதுசுட்டரங்கில் கிளப்போன் உடல் சுட்டின் மையம் இல்லை. ‘மழை’ மரம்’ போன்ற பெயர் மாத்திரையே சுட்டப்படும் பொருள் யாதென்று அறியப்படுகின்றது.
இனி இவ்விரண்டு சுட்டரங்குகள் போதும் ‘நான் நீ அவன்’ என வரும் சுட்டுக்களையும் இவற்றில் அடக்கலாம் எனில் அது இயலாது எனக்கூறி மன்சுட்டரங்கும் உண்டு என்கின்றார் ஆசிரியர்.
சூத்திரம் 5
தனிபொது வரங்கு சுட்டி லையாம்
தன்மை முன்னிஅலி படர்க்கை தேறின்
மன்பொருள் விளிப்பு மன்னரங்கு சுட்டே
விளக்கம்
மன் பொருள் என்பது உயர்ததிணைப் பொருளாகிய மனம் எனும் ஆறறிவினை கொண்ட சித்து அல்லது சேதனப் பொருள் ஆகும். “ நீ வா செல், பார் படி” என்றெல்லாங் கிளயாக்கங்கள் நடைபெறும் போது விளிப்போன் “நான்’ என்று தன்னை தன்மை நிலையில் இருத்தி எதிரே உள்ளவனை ‘நீ’ என்று முன்னிலைப் படுத்தல் தனிசுட்டர்னக்கின் வழியும் அல்ல பொதுசுட்டரங்கு வழியும் அல்ல. உடல் வழியோ பெயர் வழியோ இந்த ‘நான், நீ’ எனும் சுட்டுகள் அமைவதல்ல என்பதால் இதற்கு தனியோர் சுட்டரங்கு, மன்சுட்டரங்கு உளதாகின்றது. ஆன்மாக்கள் தம்முள் இவ்வாறு தன்மை முன்னிலை படர்க்கை என்று உறவுபட்டு நிற்கவல்ல பொருட்களாகும்.
தொடரும்
உயர் ஞானப் பனுவல்- 4
வேத மகா வாக்கியங்களும் சுட்டரங்குகளும்.
இனி இன்னும் பல இயக்கவிலக்கண மொழியியல் கூறுகள் விளக்கப்பட இருப்பினும் இதுவரை கூறிய கிளவியாகத்திற்கு மேலே கூறப்பட்ட சுட்டரங்குகள் தேவையே இன்றியமையாதவை எனும் அடிப்படையில் வேதாந்த மகா வாக்கியங்களைப் பற்றிய சில நுட்பங்கள் இங்கு விளக்கப்படும்
சூத்திரம் 6
சுட்டரங் கின்றியெம் மொழியு மில்லை
சுட்டரங்கு கடந்தான் யாதும்மொழி வதில்லை
விளக்கம்
கிளவியாக்கத்திற்கு மூலமாகியவை தனிசுட்டரங்கும் மன்சுட்டரங்குந் தான். பொது சுட்டரங்கு தனிசுட்டரங்கின் திரிபே. பெயரொடு புணராச் சுட்டாகிய அது இது உது போன்றவை பெயரொடு புணரும் போது பொது சுட்டாகின்றது. இனி சுட்டு யாதுமின்றிய உணர்வு நிலையில் சுட்டுச் சொல் பெயர்ச்சொல் போன்றவை அறிவில் பிறவா போதலின் முத்திரைகள் மற்றும் மெய்ப்பாடுகள் வழிதோன்றும் குறிப்புக்கள் போன்றவற்றின் வழியே தான் ஒன்று ஒருவாறு கூறுதல் மெய்யாகும்.
இனி இந்நிலையில் சுட்டரங்குகள் அனைத்தையும் அறிவிலிருந்து போக்கி பொருளாகத் தோன்றி நிற்கும் அனைத்தொடும் அந்நியமின்றி ஓரான்மா நிற்கின் அதற்கு சுட்டுணர்வே பிற்வாது போதலின் அவ்வான்மா சுத்த மோனத்தில் இருக்குமே தவிர தன் அந்நியமின்மையைப் போக்கும் வகையில் யாதும் மொழியாது என்பதாம்.
சுத்த மோனத்தில் வீழ்ந்து சும்மா இருக்கும் சுகத்தை அனுபவித்தவாறு செத்திட்டிருப்பர் இத்தகைய சிவயோகிகள்.
இனி இது உண்மையெனில், மகாவாக்கியங்களைப் பகர்ந்த வேத இருடிகளின் இருப்பு நிலைதான் என்ன?
சூத்திரம் 7
ஆன்ம அறிவில் எழுவவ் வாக்கியங்கள்
ஆன்மா வேறென்று அறியவுந் தரும்
விளக்கம்
அகம் பிரம்மஸ்மி (ஆன்மா பிரம்மமே) தத் துவம் அசி (அது நீ ஆகிறாய்) என்பன போன்ற மகா வாக்கியங்களில் ‘ அது’ ‘நீ’ பெயரின் வழி ‘ஆன்மா” ‘பிரம்மம்” என்றெல்லாம் சுட்டுக்கள் விளங்குவதால் இம்மூவகை சுட்டரங்களும் இவ்வாக்கிய்ங்களில் அந்தர்க்கதமாக மறைபொருளாக இருக்கின்றன. ஆகவே இந்த மகா வாக்கியங்களைக் கிளந்த இருடிகள் பரப்பிரமம் அல்ல, உடலெடுத்து வாழ்ந்தவாறு பல சுட்டரங்கள் வழி அறிவினை வளர்த்து அதன்வழி இக்கிளவிகளை பிறர் நலம் பொருட்டு பகன்ற நல்லுணர்வின் ஆன்மாக்களே யாகும். பிரம்மமே மொழிந்தது எனில், ஆன்மாவில் ஆவேசித்தே கூறியிருக வேண்டும்.
மேலும் இந்த இருடிகள் எச்சுட்டும் இல்லாத நிலையிலேயே மகிழ வரும் பிரம்ம ஞானத்தை அல்லது சிவஞானத்தை சும்மா இருக்கும் சுகத்தை அனுபவித்தவர்களும் அல்ல. ஓர் வகையான உள்ளுணர்வின் அடிப்படையிலேயே இப்படிப்பட்ட கிளவிகளை மொழிந்திருக்க வேண்டும்.
இதுதான் உண்மை என்றால் ஆன்மாவின் இயல்புதான் என்ன? ஆன்மா உண்மையில் பரபிரம்மந் தானா? ஓர் மாயா சத்தியின் காரணமாகத்தான் அது தான் வேறு என்று பிழையாக உணர்கின்றதா?
இதனை விளக்கப் புகுகின்றார் அடுத்து ஆசிரியர்
சூத்திரம் 7
உயிரின் அணுவமே காரணம் மொழி
சுட்டரங் குபல அறியா தடங்கல்
விளக்கம்
மேற் கூறிய மகாவாக்கியங்களின் முதல்வர்களாகிய இருடிகளின் ஆன்மா சுட்டரங்கிற் பட்டே ஆனால் அவற்றை தாம் புத்தி பூர்வமாக அறியாது அறிவில் இருத்தியே இந்த மகாவாக்கியங்களை மொழிந்திருக்கவேண்டும். இனி உடல் எடுத்து அதில் வாழ்ந்து அறிவில் இந்த சுட்டரங்குகளை இருத்தியே இந்த கிளவியாக்கங்கள் நடந்திருக்க வேண்டும் என்றால், இந்த ஆன்மாக்கள் அணுத்துவப் பட்ட சிற்றறிவு ஆன்மாக்களாக்வே இருந்திருக்க வேண்டும். இதனால இவர்கள் அநாதியே அறிவினை அணுத்துவப்படுத்தும் ஆணவ மலத்தால் தாக்குற்ற பசுக்களாகவே இருந்திருக்கவேண்டும். ஆக இந்த மகா வாக்கியங்களின் மெய்பொருள் ஆன்மா பரப்பிரம்மமே என்று உணர்வதல்ல, மாறாக தன்னுள் சகசமாக இருக்கும் தனக்கு அணுத்துவத்தைத் தரும் ஆணவ மலத்தை நீக்கி சிவத்துவம் எய்தி சிவப்பரம்பொருளொடு வேறின்றி சுத்தாத்வைத நிலையில் அல்லது அறிவத்துவ நிலையில் அந்நியமின்றி நிற்பதுவே யாகும். இந்த முடிந்த நிலை இந்த மகாவாக்கியங்களால் குறிப்பாய் உணர்த்தப்படுகின்றது.
தொடரும்
உயர் ஞானப் பனுவல்- 5
காலம் ஓர் தத்துவம் அல்ல
பகுக்கப்படா பரவெளியை, உடலெடுத்து அதில் உலாவும் ஆன்மா தனது கட்டுணட தன்மையால் பல சுட்டரங்குகள் வழியாக பகுத்து பொருட் சுட்டுகளை கிளவிகள் வழியாக உணர்த்தி பிற ஆன்மாக்களோடு உரையாடல் செய்வதை இதுவரை கண்டோம். இதில் சுட்டு நீங்கினால் ஆன்மா அணுத்துவம் போக்கி சிவத்துவம் எய்தி அனைத்தொடும் அந்நியமின்றி நின்று உள்ளதை உள்ளவாக் கண்டு மகிழும் என்றும் கண்டோம். அங்கு தூய பகுக்கப்படாத பரவெளி இல்லாமற் போவதில்லை. வியாபகமாகி நிற்கின்ற பெருங்கடலில் வியாப்பியமாகி நிற்கின்ற நீரில், உப்பெனக் கரைந்து எங்கு நீரோ அங்கு உப்பு இருப்பது போல சிவத்துவ ஆன்மா சிவத்துள் வியாப்பியமாகி நிற்கும். இங்கு பரவெளி இல்லாமற் போவதில்லை.
இதுபோலத்தான் சுட்டறிவோடு வரும் காலவுணர்வா? என்ற கேள்வி எழுகின்றது. காலம் என்பது அழியாத ஓர் தத்துவமா? காலம் நியதி போன்றவை வித்தியாத் தத்துவங்கள் என்று சிவ ஆகமங்களும் பல மெய்கண்ட சாத்திரங்களும் கூறும். இது பொருந்துமா? என்ற கேள்வி எழ, இயக்கவிலக்கண கோட்பாட்டின்படி, காலம் ஓர் தத்துவமல்ல, பரவளி போல உலகுகள் எல்லாவற்றிற்கும் இடம் தந்து நிற்கும் ஒன்றல்ல, அது ஆன்ம அறிவினில் தோன்றுவது, முத்தியின் போது இல்லாது போவது என்று அடுத்து விளக்கப்புகுகின்றார் ஆசிரியர்.
காலவுணர்வு இரண்டு வகைப்படும் என்றும் அதில் மூலமாக இருப்பது அறிவின் காலம் அல்லது குறிப்புக் காலம் என்றும் இதனால் எழுவதே சுட்டுக்காலமாகிய உலக காலம் என்கின்றார் ஆசிரியர்.
சூத்திரம் 8
அரங்கின் காலம் சுட்டினுலகக் காலம்
அதற்கு மூலமறிவின் குறிப்பு காலம்
விளக்கம்
மெய்கண்டார் ‘அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்’ என்று கூறி அதனை மேலும் ‘பூதாதி ஈறும் முதலும் துணையாகய்ஜ் திதியாகும்’ என்றும் கூறி உலகப் பொருட்கள் அனைத்தும் தோன்றி நின்று மறையும் பண்பின என்கின்றார். இதுவே சுட்டு கால்மாகிய உலகக் கால உணர்வு தோன்றுவதற்கு மூலமாகும். இந்த உலக தோற்ற மாற்றங்களில் காலம் இல்லை, அதனை கண்டு ‘இறந்தது, நிகழ்வது எதிரது’ என்றவாறு கணிக்கும் ஆன்மாவிலிருந்தே இந்த காலவுணர்வு உலகில் உள்ளதாக காணப்படுகின்றது. ‘அது வந்தது, வந்துகொண்டிருக்கின்றது, வரும்’ என்றெல்லாம் கூறும் போது, வினைசொற்களில் இந்த காலவுணர்வு ஊர்ந்து வருவதைக் காண்க. மேலும் இவை எல்லாம் சுட்டறிவோடு ஆகவே சுட்டரங்குகள் வழியே உளதாகுவதைக் காண்க.
இவ்வாறு ஏன் ஆன்மா தன்னுளிருந்தே சுட்டுகாலத்தைக் கணக்கிடவேண்டும் என்ற கேள்வியை எழுப்ப, அதற்கு மூலமாக ஒன்றினை எதிர்பார்த்து நிற்கும் ஆன்மாவின் குறிப்பு நிலையே ஆகும் என்பதையும் காண்பம். ஒன்றினை எதிர்பார்த்து நிற்பது ஆன்மாவின் இருப்பு நிலையாகும்--- உலகியல் கால கணக்கின் வழி இது எழுவது அல்ல. ஓர் எதிர் நிகழ்வை எதிர்பார்த்தபடி நிற்பது ஆன்மாவின் விருப்பு நிலை அல்லது நோக்க நிலையாகும். ( intentional state). இத்தகைய இருப்பு நிலையில் இருக்கத்தான் ஒன்று நடக்கும் போது ‘இப்பொழுதுதான், இனிதான், இனி இல்லை நடந்து விட்டது’ என்றவாறு ‘நிகழ்வு, எதிர்வு இறந்தது’ என்றவாறு முக்காலவுணர்வோடு உலக நிகழ்ச்சிகளைக் கணிக்கின்றது.
இவ்வாறான எதிரது போற்றும் இருப்புநிலையில் ஆன்மா இல்லை என்றால், அதனால் உலகக காலத்தைக் கணிக்க முடியாது காலவுணர்வின்றியே நிற்கும்.
இனி எதிரது போற்றாது ஆகவே குறிப்புக் காலவுணர்வின்றிய ஓர் இருப்பு நிலை உண்டா என, உண்டு என்கின்றார் ஆசிரியர்.
சூத்திரம் 9
முத்தி முன்னறிவின் முகிழ்ப்பது காலம்
முத்தி மகிழ முடிந்தது காலம்
விளக்கம்;
இங்கு காலம் என்பது குறிப்புக் காலமாகும். எதிரது போற்றலால் எழும் குறிப்புக்காலம், ஆன்மா உள்ளத்தில் பலவகையான விருப்புக்கள் உள்ளவரை இந்த எதிரது போற்றலும் இருக்கும். இனி சாதாரண விருப்புக்கள் அடையப்பட்டு எழாது போய்விட, விடாது மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு ஏதுவாக இருப்பது வீடுபேறு அடையவேண்டும் எனும் முத்தி விருப்பே யாகும். எல்லா ஆன்மாக்கள் உள்ளத்திலும் இது ஆழ ஆழ ஒர் மறைபொருளாக இருந்து, சாதாரண உலகியல் ஆசைகள் விருப்புக்கள் அடையப்பட்டு மீண்டும் எழாது விழ, அதன் பிறகே ஞானோதயமாக உண்மையில் வேண்டபப்டுவது வீடுபேறே என்ற உணர்வு தலைப்பட அதுபொழுதே ஆன்மா முமுக்சுவாக எழுந்து வீடுபேற்றை குறித்தே வாழும். அதுபொழுதும் எதிரது போற்றல் இந்த வீடுபேற்றைக் கருதி இருக்க, அதனை இறையருளால் ஆன்மா பெற்று மகிழ, வேறு எவ்விருப்புக்களும் தோன்றாது போக, எதிரது போற்றலும் எழாது விழ, உலகில் தோற்றமாற்ரங்கள உண்டெனினும், சுட்டுக்கால உணர்வின் வழி ஆன்மா அவற்றைக் கணக்கிட்டறியாது போம்.
ஆக இந்த முடிவான ஆன்ம நிலையில், வெளி என்பது சுட்டுணர்விற்கு அகப்படாது அதுகடந்த உணர்வில் தூய வெளியாகவே விளங்க, ஆனால் அங்கு காலவுணர்வே முற்றிலும் இல்லாது போக, ஆன்மா உணர்வதெல்லாம் என்றும் நிலத்து நிற்கும் நித்தியங்களே யாகும்
இந்நிலையில் சத்து அசத்து எனும் பேதம் யாதெனும் விளக்கமும் காண வருகின்றது.
சூத்திரம் 10
அரங்கின் வழியெழு அறிவெலாம் அசத்து
அவற்றை கடந்தமை யுந்தானே சத்து
விளக்கம்
‘சத்து எதிர் சூனியம்’ என்று கூறி மெய்கண்டார், ஆன்மா அதுவென சுட்டுதற்கு யாதிமின்றி சூனியத்தையே கொண்டிருக்க அதுபொழுது அகத்தெழும் அறிவெல்லாம் சத்தாகும் பிறவெல்லாம் அசத்து என்று கூறும் சத்து-அசத்து வரையறையை மீண்டும் இங்கு இன்னொரு வகையில் விளக்கப்படுகின்றது.
‘அறிவினால் அறிந்த யாவும் அசத்து’ எனும் வாக்கின் விளக்கமாகவும் இதைக் கொள்ளலாம்.
சுட்டரங்குகளாகிய தனிசுட்டரங்கள் போன்றவற்றில் இருந்தவாறு யாதை சுட்டி அறிகின்றதோ ஆங்கெல்லாம் காலவுணர்வு சுட்டுகால வுணர்வாக அல்லது குறிப்புகால உணர்வாக இருக்கும் என்பதின், மெய்யென்று கூறவரும் அனைத்தும் அசத்து மெய்யே யாகும். காலவுணர்வு இருப்பதின் அது இல்லாது போக அசத்தாக காணப்பட்டதெல்லாம் தொடர்ந்து காண வராது இல்லாது போகும். ‘நின்றது, நடந்தது, எண்ணியது விரும்பியது’ என்றெல்லாம் தொடர்ந்து அந்த ஆன்மா காணாது- காலவுணர்வு இல்லாது போதலின். காணவருவதெல்லாம் இனி மூவினைமையின் அல்லாது போக, அவை அனைத்தும் சுட்டுணர்வு இறந்து நின்ற சங்காரமாகிய இறைவன் அந்நினியமின்றி அவையேத் தானாக நின்று காணாது காண்பது போல ஆன்மாவும் காணாது காணும், நோக்காது நோக்கும்- பார்வையற்ற பார்வையில் பார்க்கும். மகிழ வரும் உணர்வெல்லாம், என்றும் மாறாத ஒரே படித்தாகிய நித்திய சத்திய ஞானங்களாகவே இருக்க அனைத்தும் சத்தறிவே யாம்.
அப்படியெனில் சத்தறிவின் உலகு எப்படிப்பட்ட உலகு?
சூத்திரம் 11
சத்தறிவி னுலகு அதிராச்சத் தியவுலகு
மித்தை யல்லவறி வின்வித்தை யுமல்ல
விளக்கம்
மித்தை மாயாசால வித்தை போன்றவை எல்லாம் விபரீத உணர்வுகள், கற்பனைகள். சத்தறிவு இவற்றைக் கடந்த ஒன்று. கயிற்றினைப் பார்த்து ‘அது பாம்பு’ என்பது மித்தை. ஆயினும் இங்கு இந்த மித்தைக்கு மூலமாக ‘ஒன்று உளது” என்ற சுட்டுணர்வு இருக்கின்றது. அந்த ஒன்று என்று சுட்டப்படுவது ‘கயிறு” என்று அறியப்பட்டால் இந்த மித்தை உணர்வு தோன்றாது. இதேப் போலத்தான் ஆரோபிதங்கள் அத்தியாசங்கள் போன்றவை. இவற்றிற்கெல்லாம் மூலமாக யாதோவோர் சுட்டுணர்வு இருக்கின்றது, அதுவே பல காரணங்கட்காக இந்த விபரீத கிளவியாக்கங்களை தோற்றுகின்றது. இந்த தூண்டல்கள் பேய்த்தேர் காணும்போது வருகின்றது போல புறத்திலிருந்தும் வரலாம், மரதைக் கண்டு பீதியால் பேய் எனக் காணும்போது நிற்கும் அகக் காரணங்களாகவும் இருக்கலாம். எப்படியும் ‘ஒன்று உளது’ என்ற சுட்டுணர்வு ஆங்கிருப்பதால்தான் இப்படிப்பட்ட மித்தைகளும் மாய வித்தைகளுமாகிய பிழையுணர்வுகள்.
சத்தறிவு என்பது இப்படிப்பட்ட சுட்டறிவுகள் கடந்த நிலை என்பதால் ஆங்கு தோன்றும் உலகறிவு மித்தையும் அல்ல அறிவின் விபரீத வித்தைகளும் அல்ல மாறாக எவ்வித ஐயத்திற்கும் இடமின்றிய மெய்யறிவாகும். சத்தறிவு தன்னிலிருந்து ஆங்கு எவ்வித திரிபும் ஐயமும் இல்லை என்பதைத் தானே காட்டிவிட உண்மையே பிழையல்ல என்ற அசைக்கமுடியாத உறுதியையும் தந்துவிடும்.
உலகுண்மை யதிகாரம் முற்றும்