பட்டுப் பூச்சி
பட்டுப் பூச்சியா? பட்டுச் சீலைகளைத் தயாரித்திடத் தேவையான பட்டு நூலை நமக்கு அளிக்கும் பூச்சி பற்றி தானே சொல்லப் போகிறீர்கள்? அது பற்றி எங்களுக்குத் தெரியுமே. புதிதாய் அது பற்றி என்ன சொல்லி விடப் போகிறீர்கள் என்று கேட்போருக்கு ஒரு சிறு ஏமாற்றம் அளிக்கப் போவதற்கு வருந்துகிறேன். நான் பட்டு போன்ற உடல் கொண்ட ஒரு பூச்சி பற்றி எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
மழை நின்ற மறு நாள் தோட்டத்தில் காணலாம் சுருக்கங்கள் மிகுந்த சிவப்பு வெல்வெட் போன்ற உடல் கொண்ட ஒரு சிறிய பூச்சியினை. பார்க்க மிக அழகாக இருக்கும் இந்தப் பூச்சியின் பெயர் ஆங்கிலத்தில் “ரெட் வெல்வெட் பக்” என்பதாகும். விஞ்ஞான ரீதியாய் இதற்கு அளிக்கப் பட்ட பெயர் ட்ராம்பிடியும் ஹோலோசெரிகம் (Trombidium holosericeum.).
இந்தப் பூச்சியை விவசாயியின் தோழன் என்று சொல்ல வேண்டும். காரணம் இது பல சிறு பூச்சிகளையும் தன் உணவாக்கிடும் ஒன்று.
Inline image 2
வட இந்தியாவில் இதன் பெயர் பீர் பஹூதி. இதற்கு அங்கு மவுசு அதிகம். காரணம் இது ஆணின் வீரியத்தினை அதிகரிக்கும் என்னும் எண்ணமும், இதன் எண்ணை பக்க வாதத்தியனை பறக்கச் செய்திடும் என்னும் நம்பிக்கையும்.
Inline image 1
மசாலா தடவி வறுத்த கடலை அல்ல இது. வெய்யிலில் காய வைத்த பட்டுப் பூச்சிகள் இது!
மடலாடல் குழு ஒன்றில் அன்பர் ஒருவர் சொன்னார், “பாசக்கார புள்ளைங்க மதுரெக்கார புள்ளைங்க” என்று.
பட்டுப் பூச்சியை, “பாசாங்குக் காரப் புள்ளைங்க” என்று நான் சொல்வேன். காரணம் தெரிய வேண்டுமா? கவிதை வடிவில் தந்திருக்கிறேன் அதை இங்கு. மேலே படியுங்கள்.
மழை நின்றிடத் தோட்டத்தில்
கண்டேன் உன்னை நான்
கண்டதும் கொண்டேன் காதல்
உன் அழகின் மேல்
பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி
பட்டுப் போல் உந்தன் மேனி
பட்டு ரோஜா உந்தன் நிறம்
தொட்டு மகிழ்ந்தேன் உன் உடலை
சட்டெனப் பிடித்தேன் உன்னை யுன்
அழகில் மயங்கிய நான்
பெட்டிக்குள் வைத்தே
எண்ணிடும் போதெல்லாம் உன்
அழகினைக் பார்க்க நினைத்தேன்
நெருப்புப் பெட்டியுள் புல் பரப்பியே
மெத்தையாய் உனக்கு நான்
பத்திரமாய் அதன் மேல் விட்டேன்
மென்மையான என் கரங்களால் உன்னை
பெட்டி திறந்தால் பார்த்திட
கிடக்கின்றாய் நீ மல்லாந்து
மடங்கிய உன் கால்கள்
வானம் நோக்கிட
முன்னமே தெரிந்திருந்தா லிது
சின்னக் குழந்தை எனக்கு
சிறை வைத்திருப்பேனா
பெட்டியுள் உன்னை?
கொன்று விட்டேனே
குற்ற மொன்று புரிந்திட்டேனே
துக்கம் பீரிடக்
கண்களில் கண்ணீர் தளும்பிட
மெல்ல எடுத்துத் தோட்டத்தில் விட்டேன்
மறு கணம் திரும்பியே நேராய்
ஓடி மறைந்தாய் ஓரு வங்குள்
பாசாங்குக் காரக் கள்ளி நீ
(படங்கள் விக்கிபீடியா தளத்தில் இருந்து.
கவிதை பிறந்தது சொந்த அனுபவத்தில் இருந்து))
நடராஜன் கல்பட்டு