வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

இறைவனைக் காண்போம்- பூரான் 43

From மரபு விக்கி

Jump to: navigation, search
Turn off for: Tamil
பூரான்

Inline image 1
ஒரு வெள்ளிக் கிழமை. வீட்டிற்குள்ளே பூரான் ஒன்று வந்தது. அதை அடிக்கப் போன என்னைத் தடுத்து நிறுத்தினாள் சகதர்மிணி (தர்மத்தைக் காப்பவளும் பெயர் படி சாந்த குணமும் கொண்டவளாயிற்றே!), “வெள்ளிப் பூரானை அடிக்கக் கூடாது என்பார்கள்”, என்று சொல்லியபடி. “பாவம் அது ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாம்”, என்றே தொடர்ந்தாள் அவள்.

மனைவி சொல் தட்டலாமா?  கூடாதல்லவா?  அதனால் ஒரு துடைப்பத்தால் தோட்டத்தில் தள்ளினேன் அதை.

மற்றொரு நாள். சனிக் கிழமை என நினைக்கிறேன் அன்று. எனது ஒரு மகளுக்கு அம்மை போட்டி இருக்க அவளைத் தரையில் ஒரு பாயைப் போட்டு அதில் வேப்பிலையைப் பப்பி அதன் மீது படுக்க விட்டிருந்தோம். பாயை எடுத்து உதறிப் போட முனைந்த மனைவி கத்தினாள், “சீக்கிரம் வாங்கோ. பாய்க்கடிலெ ஒரு பெரிய பூரான் போயிருக்கு. சட்டுனு வந்து அடியுங்கோ” என்று தாய்ப் பாசம் மேலெழ. ‘ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை’ பாசம் கீழே விழுந்தது. பூரானும் என் கையில் அடிபட்டு இறந்தது.
வெள்ளிப் பூரானுக்கும் சனிப் பூரானுக்கும் வித்தியாசம் உள்ளதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் நிச்சயாய்த் தெரியும். பூரான் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை இல்லை.

பூரான் ஒரு விஷ ஜந்து. அது கடித்தால் சாதாரணமாக ஒருவருக்கு உயிர் போகாது. ஆனால் ஒவ்வாமை உள்ள சிலருக்கு அது ஆபத்தாய் முடியலாம்.
பூரானும் மரவெட்டையும் பல கால்கள் (சுமார் 30க்கும் மேல்) கொண்டிருப்பதாலும், பல வளையங்களை கோத்தது போன்ற உடல் அமைப்பு கொண்டதாலும் பார்ப்பதற்கு ஒன்று போலத் தோன்றினாலும் இவற்றுள் பல வித்தியாசங்கள் உண்டு. பூரான் ஒரு விஷ ஜந்து. கடிப்பதற்கு ஒரு ஜோடி விஷப் பற்கள் கொண்டது அது. மரவெட்டைக்கு விஷப் பற்கள் கிடையாது. அதை நாம் கடித்துத் தின்றால் நம் வாய் புண்ணாகும். (நேரில் கண்ட அனுபவம். அண்ணனின் மூன்று வயதுப் பையன் ஒருவன் மரவெட்டை ஒன்றை வாயில் போட்டுக் கடித்துக் கொதப்பி விட்டன். உடனே நாங்கள் அவன் வாயை அலம்பினோம். இருந்தாலும் அவன் நாக்கும் உதடுகளும் வெந்து விட்டன.)
மரவெட்டைக்கு அதிக கால்கள் இருந்தாலும் பூரானைவிட அது மிக மெதுவாகச் செல்லும். பூரான் வெகு வேகமாக ஓடக் கூடிய ஒன்று.

இரண்டுக்குமே பல கால்கள் (சுமார் 30ம் 30க்கு மேலும்) இருந்தாலும் அதிலும் ஒரு வித்தியாசம் உண்டு பூரானுக்கும் மரவெட்டைக்கும். இரண்டின் உடலுமே கோத்த வளையங்கள் போன்றது. ஆனால் பூரானின் உடலில் உள்ள ஒவ்வொரு வளையத்திலும் ஒரு ஜோடிக் கால்களே இருக்கும். மரவெட்டையின் உடலில் உள்ள வளையங்களில் இரு ஜோடிக் கால்கள் இருக்கும்.

Inline image 1
மரவெட்டை


இந்த இரு ஜந்துக்களின் கால்களுமே இயக்கத்தில் ஒன்று போலத்தான் இருக்கும். இவை நடக்கும் போது ஒவ்வொரு ஜோடிக் கால்களுமே அதன் முன் ஜோடிக் கால்கள் அசையும் திசைக்கு எதிர் திசையில் அசையும். அதனால் இவை நகரும் போது கால்களில் ஒன்றறன் பின் ஒன்றாக அலை வரிசைகள் அடிப்பது போன்று காணப்படும்.

மரவெட்டை பகலில் வெளி வரும். பூரான் இரவில்தான் தன் இருப்பிடத்தை விட்டு வெளியே வரும். பகலில் பூரான் எந்தக் கல்லின் அடியில் தங்கி இருக்கிறதோ அந்தக் கல்லை நகர்த்தினால் அது உடனே ஓடி எங்காவது ஒளியப் பார்க்கும். பூரான் “:வெளிச்சத்தை வெறுப்பதை மிகவும் விரும்பும் ஒரு பிராணி என்று ஒரு விஞானி அதைக் குறிக்க “Photo-phobia-philik” என்ற ஒரு புதிய சொற்றொடரையே வேடிக்கையாக உண்டாக்கினார்.

பூரான் வாழ்வதற்கு ஈரப் பசை வேண்டும். அதனால் அது பகலில் கற்களுக்கடியிலோ, சிறு பொந்துகளிலோ, மண்ணில் சாய்ந்து மக்கிக் கொண்டிருக்கும் மரங்களுக்கடியிலோ, தரையில் விழுந்து கிடக்கும் இலை சரகுகளுக்கடியிலோ வசிக்கும். இரவில் இரை தேட வெளி வரும்.
பூரானின் உணவு கடினமாக இல்லாத புழு பூச்சிகள், மண் புழு போன்றவை. வெட்டுக் கிளி, சுவர்க்கோழி இவற்றையும் தின்னும். வௌவால்களைத் தின்னும் ஒரு வகைப் பூரான் கூட இருக்கிறதாம். தென் மெரிக்காவின் அமேசான் நதிக் காடுகளில் காணும் இந்த வகைப் பூரான் சுமார் ஒரு அடி நீளம் இருக்கும். இது தாழப் பறக்கும் வௌவால்களை தாவிப் பிடிக்குமாம். சில சமயங்களில் எலிகளைக் கூடப் பிடித்துத் தின்று விடுமாம்.

Inline image 2
(ஒரு அடி நீளப் பூரான்)

அது சரி. பூரான் யாருக்கு உணவு? பூரான் பாம்பு பறவைகளுக்கு உணவு.

பூரான் சுமார் 420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நம் பூமியில் தோன்றிய ஒரு ஜந்து. இந்த விஷயத்தில் இது கரப்பான் பூச்சிகளுக்கும் அண்ணன், கரப்பான் பூச்சிகள் தோன்றியது சுமார் 295 முதல் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருக்க வேண்டும் என அறிஞர்கள் கணக்கிடுகின்றனர்.

பூரான்களின் கால்களில் ஒரு விசேஷம் என்ன வென்றால் அவை எப்போதுமே ஒற்றைபடை ஜோடிகளாகத்தான் இருக்கும். முழு வளர்ச்சி அடையுமுன் 5,7,9,11,13 ஜோடிகள் என்று இருக்கும் கால்கள் பூரான் முழு வளர்ச்சி அடைந்த பின் 15 ஜோடிகளாக இருக்கும் அனேகமாக.

வளர்ச்சி அடையும் தருணத்தில் ஒவ்வொரு முறை தோலுரிக்கும் போதும் இரண்டு ஜோடிக் கால்கள் அதிகரிக்கும். 27, 29 ஜோடிக் கால்கள் கொண்ட பூரான்களும் உண்டு.

பூரான்களின் முதல் ஜோடிக் கால்கள் உரு மாறித் தடிமனாக முன் நோக்கி வளைந்திருக்கும். இதுதான் பூரானின் கடிக்கும் விஷப் பற்கள் (விஷக் கால்கள்!). அந்த விஷக் கால்களைப் பார்க்க வேண்டுமா? கீழுள்ள சுட்டியைக் கன்ட்ரோல் கீயை அழுத்திய படி சொடுக்குங்கள். வரும் படத்தின் கீழ் தோன்றும் கோழி முட்டையில் மௌசின் அம்புக் குறியினைக் கொண்டு வைத்து மௌசின் இடது பட்டனை அழுத்திப் பிடித்த படி மெல்ல வலது பக்கம் இழுத்துச் செல்லுங்கள். பூரானின் உடல் சுற்றும் போது அதன் விஷக் கால்களை நன்றாகப்  பார்க்க முடியும்.

பூரானின் உடல் சுற்றும் போது

பூரானின் மற்ற கால்களிலும் சுரப்பிகள் உள்ளனவாம். இவை வெறுப்பூட்டும் (Repugnatorial) ஒரு வகைப் பொருளையோ அல்லது ஒட்டும் பசைப் பொருளையோ சுரக்குமாம். அதனால் அவற்றைத் துரத்தும் பிராணிகள், எறும்புகள் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளுமாம். சில சமயம் நாம் பூரானை துடைப்பத்தால் அடிக்க முயலும் போது அது நம் உடலில் விழுந்து ஓடினால் அந்த இடத்தில் அதன் நகங்கள் எங்கெல்லாம் கீறிக் கொண்டு சென்றதோ அங்கெல்லாம் இந்த திரவம் உள் சென்று வீக்கம் தோன்றுமாம்.

பூரான் முட்டைகள் இட்டு இனப் பெருக்கம் செய்யும்.
தந்தைப் பூரான் இல்லாமலே தாய் முட்டை இடும் வகைப் பூரான்களும் உள்ளன. பூரான்கள் ஒரு சமயத்தில் 10 முதல் 60 வரை முட்டைகளை இடும். சில வகைப் பூரான்கள் முட்டைகள் இட்டபின் அவற்றுக் கருகிலேயே இருந்து கொண்டு அவ்வப்போது முட்டைகளைப் பூஞ்சக் காளான் பிடிக்காதிருக்க நக்கிக் கொண்டிருக்குமாம். முட்டைகள் வெடித்துக் குஞ்சுகள் வெளி வந்த பின்னரும் அவற்றுடனே தங்கி அவற்றைப் பாது காக்குமாம். தாய்க்குக் குஞ்சுகளின் மீது பாசம். ஆனால் எல்லா வகைப் பூரான்களுக்கும் தங்கள் தாயின் மீது பாசம் நிச்சயமாக உண்டு என்று சொல்ல முடியாது. சில வகைப் பூரான்களின் குட்டிகளே தாயைக் கொன்று தின்றுவிடும்.

பூரான்களுக்கு இரண்டு கண்கள் உண்டு. கண்களே இல்லாத பூரான்களும் உண்டு.

பூரான்களின் தலையிலும், உடலின் கடைசீ பகுதியிலும் கொம்புகள் போன்ற, ஆனல் கடினமானதல்லாத நுண் உணர் அரும்புகள் உண்டு. இதை ஆங்கிலத்தில் Antenna or Feelers என்பார்கள். தலையில் இருப்பது சரி. பின் புறம் எதற்காக நுண் உணர் அரும்புகள் வேண்டும்? தேவையான போது பின் புறமும் முன் புறத்தில் என்ன வேகத்தில் ஓடுகிறதோ அதே வேகத்தில் ஓடி எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ள தான்!
பூரான் ஓடித் தப்பித்துக் கொண்டு விட்டது. நாமும் ஓடித் தப்பித்துக் கொள்வோமா  நீண்ட கட்டுரையில் இருந்து?

(படங்கள் இணைய தளங்களில் இருந்து)

நடராஜன் கல்பட்டு

--Geetha Sambasivam (பேச்சு) 10:00, 15 ஏப்ரல் 2014 (GMT)

 

-- 

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 15 April 2014, at 10:01. This page has been accessed 5,646 times.