இன்னும் அறியேன்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்

தட்டச்சு செய்து அளித்தவர்: தமிழ்த்தேனீ



தமிழ் ஆராய்ச்சியில் நான் ஈடுபட்ட பிறகு தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடுவது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான வேலையாகிவிட்டது. அச்சிட்ட புஸ்தகமோ, அச்சிடாததோ எதுவானாலும் சுவடியின் உருவத்திலே காணும்பொழுது ஏதோ தெய்வத்தின் உருவத்தைக் காண்பது போலவே நான் எண்ணுவது வழக்கம்.சுவடிகளைத் தேடி அவை இருக்குமிடம் சென்று மூலை முடுக்குகளிற் கிடக்கும் அவற்றைத் தொகுத்து ஆராய்வதில் என் உள்ளம் ஒரு தனி இன்பத்தை அடையும். என் உடலில் முதுமைப்பருவத்தின் தளர்ச்சி ஏறிக்கொண்டே வந்தாலும் என் உள்ளத்தில் மட்டும் ஏட்டுச்சுவடிகளின்பாலுள்ள பற்று இறங்கவே இல்லை.


சில வருஷங்களுக்கு முன் வரையில், ஒவ்வொரு வருஷமும் எங்கேனும் சென்று ஏட்டுச்சுவடிகள் தேடி வருவதை முறையாகவே செய்து வந்தேன். எனக்கு அதுவே தீர்த்த யாத்திரையாகவும் தலயாத்திரையாகவும் உள்ளது.  தமிழ் நாட்டில் ஏட்டுச்சுவடிகள் இருக்கும் இடங்கள் பெரும்பாலானவற்றிற்குச் சென்று பார்த்திருக்கிறேன்.


நான் இப்படி ஏடுதேடும் முயற்சியை மேற்கொண்டிருப்பதைத் தமிழ் நாட்டினர் பலரும் அறிவர். அதனால் எனக்கு சில அபவாதங்களும்கூட சேர்ந்ததுண்டு; நான் போகாத இடங்களில் உள்ளவர் சிலர் தம்மிடமுள்ள சுவடிகளை நான் கொண்டுபோய் விட்டேனென்று சொல்வதாக கேள்வியுற்றிருக்கின்றேன்.


கும்பகோணம் காலேஜில் நான் வேலையில் இருந்த போது பிள்ளைகளிடம் சில சமையங்களில் அவர்களுடைய ஊர்களில் யார் யார் தமிழ் வித்வான்கள் இருந்தார்களென்றும், யார் வீட்டிலேனும் ஏட்டுச் சுவடிகள் உள்ளனவா வென்றும் கேட்டு அறிவேன். சிலர் கூறிய செய்திகளைக் கொண்டு நான் பயனடைந்ததும் உண்டு.


1900 –ஆம் வருஷம் மே மாதம் இரண்டாந்தேதி பிற்பகல் மூன்று மணிக்கு நான் பீ ஏ வகுப்பில் வழக்கம் போலப் பாடஞ் சொல்லத் தொடங்கினேன்.அப்போது ஒரு மாணாக்கர் எழுந்து நின்றார். ஏதாவது வேலையாகப் போகவேண்டி அவர் என்னிடம் அநுமதி கேட்க நிற்பதாக நான் எண்ணி, “ எங்கேயாவது போகவேண்டுமானால் போய்வரலாமே”என்றேன். அவர் பெயர் சாம்பசிவ செட்டியாரென்பது.

“இல்லை; உங்களிடம் ஒரு சமாசாரம் சொல்லவேண்டும்” என்றார் அம்மாணாக்கர்.


நான்: சொல்லலாமே.


அவர்: நான் சாப்பிடும் விடுதியில் ஒருவர் வந்திருக்கிறார். அவர் மிக்க செல்வராக இருந்தவராம். பெரிய குடும்பத்திற் பிறந்தவராம். நல்ல நிலையில் இருந்தவராம். அவரைப் பார்க்கும் போதே அவர் பெரிய மனிதர் என்று தோற்றுகிறது, இப்பொழுது தம் செல்வத்தையெல்லாம் இழந்துவிட்டுக் கடன்காரர்களுக்குப் பயந்து தலைமறைவாக இருக்கிறாராம். அவர் தம்முடைய வீட்டில் பலகாலமாக உள்ள ஏட்டுச் சுவடிகளையெல்லாம் கொண்டுவந்திருக்கிறார். அதுவரையில் அந்த மாணாக்கர் கூறியது சத்தில்லாத சமாசாரமாக இருந்தது; சற்று பாராமுகமாகவே கேட்டுவந்தேன்.ஏட்டுச்சுவடிகளென்ற வார்த்தை என் காதில் விழவே கவனமாகக் கேட்கத் துவங்கினேன்.


“என்ன? ஏட்டுச்சுவடிகளா கொண்டு வந்திருக்கிறார் ?” என்று ஆவலோடு வினவினேன்.“ ஆமாம்: நூறு சுவடிகளுக்கு மேலே கொண்டு வந்திருக்கிறார். அவைகளை அவருடைய முன்னோர்கள் பாதுகாப்பாக வைத்திருந்தார்களாம். அவர் வீட்டில் இருந்த பலவகைப் பொருள்களையும் கடன்காரர்கள் ஏலம் போட்டுவிட்டார்களாம். இந்தச் சுவடிகளையும் அவர்கள் கையில் விட்டுவிட்டால் என்ன கதியாகுமோ வென்று பயந்தாராம்: அவற்றைப் பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்திக் கொள்பவர்களிடம் கொடுக்க வேண்டுமென்று எண்ணினாராம். தங்களிடம் ஒப்பித்தால் நல்லதென்றறிந்து அவற்றைக் கொண்டுவந்திருக்கிறார்.”


தங்கப் புதையலுக்கு வழி சொல்லும் மந்திரவாதியைப் போல அம் மாணாக்கர் சொல்லச் சொல்ல என் மனம் ஊக்க மிகுதியால் நிலைகொள்ளாமல் தவித்தது.


“அந்தச் சுவடிகளை என்னிடம் விற்றுவிடலாம் என்றுதானே வந்திருக்கிறார்?” என்று நான் கேட்டேன்.


“ இல்லை; இல்லை. எனக்கும் அந்தச் சந்தேகம் வந்தது,” இவ்வளவு சுவடிகளையும் விலைக்கு வாங்கிக் கொள்ள எங்கள் தமிழாசிரியரால் முடியாதே’ என்று அவரிடம் சொன்னேன். ‘பணம் வேண்டாம்; இவைகளை வாங்கிக் கொண்டு பாதுகாக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். என் கஷ்ட காலம் இவைகளைத் தரும்படியாயிற்று! அருமை தெரியாதவர்கள் கையில் அகப்பட்டு வீணாவதை விடத் தக்கவர்களிடம் இருந்தால் நல்லதென்றெண்ணிக் கொண்டுவந்தேன்’ என்று அவர் சொன்னார்.”


“ அப்படியானால் ; வா; அவரைப் போய்ப் பார்க்கலாம்” என்று புறப்படத் தொடங்கினேன் ; காலேஜ் தலைவரிடம் அநுமதி பெற்றுக் கொண்டு போகலாமென்பது என் கருத்து. அதனை உணர்ந்த மாணாக்கர் என்னைத் தடுத்து “இப்போது போகவேண்டிய அவசியமில்லை. அந்தக் கனவான் சாயங்காலம் வரையில் காத்திருப்பதாகச் சொன்னார். காலேஜில் வேலை முடிந்தவுடன் போகலாம்” என்றார்.


அதன்பிறகு காலேஜில் என் உடல்தான் இருந்தது; என் உள்ளம் நான் பெறப்போகும் சுவடித் தொகுதியை நினைந்து ஊசலாடிக் கொண்டிருந்தது. ஒரு நிமிஷம் ஒரு யுகம் போவது போலத் தோற்றியது. ‘ எப்போது கடைசீ மணியாகும்?’ என்று எதிர் பார்த்திருந்தேன். மணியும் அடித்தது; ஒரே ஓட்டமாக ஓடி அந்தக் கனவான் முன் நிற்கவேண்டுமென்பது என் ஆசை!


அந்த மாணாக்கர் வந்தார். அவருடன் புறப்படலானேன்; அப்போது அவர் “ நீங்கள் வீட்டிற்குப் போங்கள். அவர் சாப்பாட்டு விடுதியில் இருக்கிறாரா என்று பார்த்து வருகிறேன்.தம்மை யாராவது பார்ப்பதாக இருந்தால் அவர் மிகவும் லஜ்ஜைப் படுகிறார்” என்றார்.


நான் என் வீடு சென்றேன். என் வீட்டிலிருந்து அவ்விடுதி மிகவும் சமீபமாகவே இருந்தது. நான் வீட்டுக்குப் போன சிறிது நேரத்தில் அம்மாணாக்கர் தம்மால் தூக்கிக் கொள்ளக்கூடிய சுவடிகளை அள்ளிக் கொணர்ந்து என் வீட்டிற்கு வந்து என் முன் போட்டார்.


“ ஏன் அப்பா ! நான் வருகிறேன்; அவர் இருக்கிறாரா?”என்று கேட்டேன்.


“அவர் தங்களைப் பார்க்க மிகவும் நாணுகின்றார். தம்முடைய ஊர் பெயர் இவைகளில் ஒன்றையும் தெரிவிக்க மாட்டேனென்கிறார். இன்னும் சுவடிகள் இருக்கின்றன;கொண்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவர் மீண்டும் சென்றார். அவர் ஊக்கமும் தேக வன்மையும் உடையவர். அப்பால் நாலைந்து முறை முன் கொணர்ந்தபடியே சுவடிகளைக் கொண்டுவந்தார்.


சுவடி தேடுங்காலங்களில் நான் பலவிதமான துன்பங்களை அடைந்தவன். பலவிடங்களில் சுவடிக்குரியவர்களைத் தேடிச்சென்று அலைந்து கால்கள் தொய்ந்து போயின. சிலர் வீட்டில் இருந்துகொண்டே இல்லையென்று சொல்லியனுப்பிவிடுவார்கள்.சிலர் பலமுறை வரச்சொல்லி அலைக்கழிப்பார்கள். சிலரிடம் எவ்வளவோ நயந்து கெஞ்சிப் பிணைகொடுத்துச் சுவடிகளைப் பெறவேண்டியிருக்கும்.சிலரிடம் அவமதிப்புக்கூட அடைந்திருக்கின்றேன். குழந்தையைப் பெறும்பொழுது படுந் துன்பமெல்லாம் அக்குழந்தையைக் கண்ட காலத்திலே மறைந்துவிட, தாய் பெரிய இன்பத்தை அடைகின்றாள். அது போலவே சுவடிகளுக்காகப் படும் சிரமங்களெல்லாம் அவற்றைப் பெற்றவுடன் மாறிவிடுகின்றன; என் உள்ளம் பெரு மகிழ்ச்சியை அடைகின்றது.


பலவகையில் துன்பங்களை அடைந்து தேடாமல்,சுவடிகள் வலிய வந்து எனக்குமுன் குவிந்தனவென்றால் எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு வேறு எதையாவது ஒப்புக்கூறமுடியுமா? ‘ இவற்றை வழங்கிய உபகாரியைப் பாராமல் இருப்பது பிழை’ என்று எண்ணினேன்.


“சுவடிகளின் அருமை உனக்குத் தெரியாது. இவற்றைத் தந்த அந்தக் கனவானை நான் பாராமல் இருப்பது பாவம் ! வா;பார்க்கலாம்’ என்று நான் அம்மாணாக்கரிடம் சொன்னேன்.


“நான் என்ன செய்வேன்! அவர் கண்டிப்பாகத் தம்மைப் பார்க்க வேண்டாமென்று சொல்லுகிறார்” என்று பின்னும் அவர்  சொன்னார். “அவர் அப்படிச் சொன்னாலும் அவரைப் பாராமற் போனால் எனக்குத் திருப்தியாக இராது” என்று புறப்பட்டேன். மாணாக்கர் என்னைத் தொடர்ந்து வந்தார்.


போகும் போதே என் மனதில் அக்கனவானுடைய நிலையைப் பற்றிய எண்ணங்கள் எழுந்தன; நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருக்கலாம்;பாவம்! தமிழ்ச்சுவடிகளைப் பிறரிடம் கொடுப்பது பெரிய அகௌரவமென்றும் பஞ்சகாலத்தில் பிள்ளையைக் கொடுத்துவிடுவது போன்றதென்றும் எண்ணினார் போலும்! இவ்வளவு கஷ்டத்தில், இவைகளை நம்மிடத்தில் ஒப்பிக்க வேண்டுமென்ற கருத்து வந்தது நம்முடைய நல்ல காலந்தான், அக்கனவான் ஒரு அபூர்வப் பிறவியுடையவர். அவரைப் பார்த்து மகிழ்ந்து ஸல்லாபம் செய்யவேண்டும்’ என்று எண்ணினேன்; வறுமையின் கொடுமையைப் பற்றி நினைத்தேன்; சுவடிகள் கிடைத்தது பற்றி சந்தோஷமும் அக்கனவானது நிலை பற்றி வருத்தமும் மாறி மாறி என் மனத்தே உண்டாயின என்னுடைய நன்றியறிவை அவருக்கு நன்றாக வெளிப்படுத்த வேண்டுமென்று கருதினேன்,ஆயினும் என் உள்ளிருந்த முழு உணர்ச்சியையும் வார்த்தைகளால் எப்படி வெளியிட முடியுமென்று தயங்கினேன்.


இங்கனம் பலவாறு எண்ணமிட்டுக்கொண்டே சாப்பாட்டு விடுதிக்குள் நுழைந்தேன். மாணாக்கர் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.நான் யாரைப் பார்க்கவேண்டுமென்று அவ்வளவு ஆவலோடு சென்றேனோ அந்தக் கனவான்,தம்முடைய சுவடிகளெல்லாவற்றையும் அம்மாணாக்கர் என்னிடம் சேர்ப்பித்துவிட்டதை யறிந்து,ஒருவரிடமும் சொல்லாமற் போய்விட்டார். நான் அவரை அங்கே காணவில்லை.


“அப்பொழுதே அவர் சொன்னார்;  தம்மை யாரும் பார்க்க வேண்டாமென்றும்,தம் ஊர் பேர் ஒன்றும் சொல்ல விருப்பமில்லையென்றும் வற்புறுத்தினார். சுவடிகளைத் தங்களிடம் சேர்ப்பித்தோமென்ற திருப்தியோடு போய்விட்டார்” என்று மாணாக்கர் கூறினார்.


என்னுடைய நன்றியறியை எதிர்பாராமலே அவ் வுபகாரி சென்றுவிட்டார். உபசாரத்தை அவர் விரும்பவில்லை.சுவடிகளுக்கு அடைக்கலஸ்தானம் ஒன்று வேண்டு மென்று அவர் கருதினார்;தக்க இடம் அகப்படாமல் கஷ்டப்பட்டார்; அப்பால் ஓரிடம் தெரிந்தது; அவ்விடத்திற் சேர்ப்பித்தார்; அந்தக் கடமையைச் செய்துவிட்டுப் போய்விட்டார்.


நான் அவரைக் காணாமையால்,சிறிது நேரம் அங்கே ஸ்தம்பித்து நின்றேன். தம்மைக் காட்டிக்கொளாமல் மகோபகாரம் செய்த அவரைப் பார்க்க முடியவில்லையே!’ என்று வருந்தினேன். ஒரு சிறு காரியம் செய்தாலும் ஊரறிய விளம்பரம் செய்துகொள்ளும் இந்தக் காலத்தில், இப்படி மௌனமாகப் பிறர் அறியாதவாறு உபகாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள்’ என்பதை நினைக்கும் போது என் உள்ளம் கசிந்தது. ‘வலக்கை செய்யும் உபகாரம் இடக்கைக்குத் தெரியாமற் செய்க’ என்று பைபிளில் இருப்பதாகச் சொல்வார்கள் இவ்வாக்கியத்திற்கு இலக்கியமாகிய பேருபகாரியினிடம் உபகாரம் பெற்றும் நான் அவரை அறியக்கூடவில்லை.


அன்று எனக்குக் கிடைத்த சுவடிகளை அப்பால் ஆராய்ந்தேன், அவற்றிற் பெரும்பாலன அச்சிட்ட நூல்களாகவே இருந்தன. ஒரு பழஞ்சுவடியின் ஈற்றில் * “ தமிழ் விடு தூது” என்னும் பிரபந்தம் இருந்தது. அதைப்படித்து வந்தேன்,என்னுடைய வாழ்க்கையின் லக்ஷியம் அந்த நூலில் இரண்டடிகளிலே சொல்லப்பட்டிருப்பதைக் கண்டேன் -

“இருந்தமிழே உன்னால் இருந்தேன்;இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

என்னும் கண்ணியிலே என் உள்ளம் சிக்கிக் கொண்டது. அப்பொழுது, பெயர் தெரிவியாமல் அதனையும் மற்றச் சுவடிகளையும் உதவிய’ பெருந்தகையாளரை மீட்டும் நினைந்து நினைந்து பாராட்டி வாழ்த்தினேன். அவர் யாரோ! இன்னும் அறியேன்!

பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Dev

"https://marabuwiki.org/index.php?title=இன்னும்_அறியேன்&oldid=1757" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 19 பெப்ரவரி 2010, 09:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,878 முறைகள் அணுகப்பட்டது.