வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ஆகமீயம் : தருத் தேர்வு

From மரபு விக்கி

Jump to: navigation, search

 திராவிட மெய்யறிவு வரலாறு- 2.1

படலம் இரண்டு: ஆகமவுளவியலும் தருத் தேர்வும்

முனைவர் கி.லோகநாதன்

A விருட்சங்கள் எந்திரங்கள் ஆதல்

1.0

நமது உடல் ஓர் எந்திரம் --- மெய்கண்டார் கூறியது போல மாயாவியந்திரத் தனு. அதனை செயல்படுத்தும் ஆன்மாவாகிய உள்ளம், தானே தனது ஆணவ மல பந்தத்தால் எதனையும் செய்யும் திறனற்றது. ஆக ஆன்மாவில் இறையருளின் வெளிப்பாடாகப் பதியும் எந்திர சொரூபங்களைக் கொண்டே அதுவும் செயல்படுகின்றது.

2.0

எந்த எந்திரத்தை இறைவன் தேற்றி ஆன்மாவில் பதிவிக்கின்றானோ, எந்த எந்திரம் இதனால் ஆன்மாவில் பதிந்து செயல்படுகின்றதோ, அதற்கேற்ப அந்த ஆன்மாவின் குணங்களும் திறன்களும் அமைகின்றன என்று கண்டோம்.

2.1

ஓர் எந்திரத்தோடு சமைந்தல்லது, அறிவு தொழிற்படாது, ஆகவே எதனையும் படைக்காது. எங்கே எங்கே படைப்பு இருக்கின்றதோ, யாதோ ஒன்றினை மெய்ப்படு பொருளாக்குதல் நடக்கின்றதோ அங்கே அங்கே அறிவினில் எந்திரங்களின் ஆகவே அக்கர சக்கரங்களின் தொழிற்பாடு.

3.0

இவை அறிவினோடு கலந்து தொழிற்படும் அருவுருக்களாக இருக்க, தகுந்த உத்திகள் வழியின்றி அவற்றைத் தனித்துக் காண முடியாது. ஆயினும் படைக்கப்படும் பொருட்கும். அறிவின் தொழிற்பாட்டிற்கும் ஓர் இயைபு இருப்பதால் இந்த படைப்புக்களைக் கொண்டு இந்த எந்திர சொரூபங்களை ஊகித்து ஓரளவு அறிய முடியும்.

4.0

அறிவின் தொழிற்பாட்டின் வழி வரும் படைப்புக்களாக நடத்தைகள், விருப்பு வெறுப்புகள், சிந்தனைகள், கற்பனைகள் என்பவையும் அடங்கும். புனையப் படுவது எழுதப்படுவது தொடப்படுவது சமைக்கப்படுவது எழுப்பப்படுவது என்பன போன்ற பிறவும் அடங்கும்.

4.1

எவ்வாறு ஓர் எந்திர சொரூபம் அசுத்த மாயா பிண்டத்தில் பதிந்து ஓர் வடிவுடையப் பொருளை தனித்து சுட்டியறியப் படுவதாக உளதாக்குகின்றதோ அதேப் போன்று அறிவின் இப்படைப்புக்களுமாம்.

4.2

அறிவியற் சிந்தனை வாணிபச் சிந்தனை காமச் சிந்தனை காதற் சிந்தனை காவியச் சிந்தனை தெய்வச் சிந்தனை தாய்மைச் சிந்தனை உறவுச் சிந்தனை அதிகாரச் சிந்தனை குமுகாயச் சிந்தனை அரசியல் சிந்தனை சமயச் சிந்தனை தொண்டுச் சிந்தனை கலைச் சிந்தனை என்றவாறு அறிவின் போக்குகள் அவற்றிற்கேற்ப படைப்புகள்.

தொடரும்


திராவிட மெய்யறிவு வரலாறு- 2.2

4.3

இத்தகைய அறிவின் படைப்புக்களும் இயற்கையின் படைப்புகளாகிய மரம் செடி கொடி மலை ஆறு நிலன் என்று வரும் உலகத்துப் பொருட்களும் எந்திர சங்கமங்களில் தோன்றி சுட்டறியப் படுவதாய், பெயரிட்டு அழைக்கப்படுவதாய் நின்று பின் அழியும் தன்மையன.

5.0

அறிவினிற் செறிந்து பற்பல படைத்து மகிழ் உதவும் எந்திர சொரூபங்களின் வெளிப்பாடே தருத் தேர்வில் ஒருவன் எழுதும் விருட்சங்களாம். அறிவின் போக்கொடு ஒன்றாயிருக்கும் ஆன்மா. அதன் போக்கினை நிறுத்தும் எந்திர சொரூபங்களை அறிந்தும் அறியாதிருக்கும் நிலையில், தருத் தேர்வி அதனை சித்திர வடிவில் வெளிப்படுத்துகின்றது. மொழியாக்கி உரைபடுத்தும் அளவிற்கு தெளிவில்லாத தன் அறிவினைப் பற்றிய அறிவினை, சித்திரங்கள் வழியாக ஓரளவு ஒருவன் வெளிபடுத்துகின்றான்.

5.1

இத்தகைய பணிகட்கு ஏன் தருத்தேர்வு உகந்தது எனில், விளக்குவம்

உலகத்தில் மரஞ் செடி கொடிகளாக அசுத்த மாயைத் திரித்து உருவாக்கும் அதே எந்திர சொரூபங்கள் அகத்திலேயும் தோன்றி அறிவின் போக்குகளை நிறுத்துகின்றன என்று தெரிகின்றது. மரஞ் செடி கொடியாய் பிறகு பல்வேறு மிருகங்களாக பிறப்பெடுத்து கூர்ந்திருக்கும் மானிடப் பசுக்கள், முற்பிறப்புகளில் ஈட்டப்பட்ட எந்திர சொரூபங்களை பழவினையாக தன் புரியட்ட தேகத்தில் இருத்தியே இந்த மானிடப் பிறவியை எடுத்திருக்கின்றன. முன்பு உடம்பையும் நிறுத்திய மந்திர சொரூபங்கள் இப்பொழுது அறிவினைத் தொழிற்படுத்தும் எந்திரங்களாக செறிந்திருக்கின்றன. இவை பிறப்பொடும் வரும் சித்தி புத்திகளையும் தருகின்றன.

5.2

இதன் மூலம் பிறப்பின் எந்திரங்களாக அமையும் மரஞ்செடி கொடிகள் இன்னும் ஆன்மாவின் பழவினையாக பிராத்த கன்மமாக நிற்க, இத்தகையவற்றை சித்திரமாக எழுத ஊக்குவிக்கும்போது அகத்தினை தொழிற்படுத்தி அறிவின் போக்கினை நிறுத்தும் அந்த எந்திர சொரூபங்கள் எழுதப்படும் சித்திரங்கள் மேல் நுதிக்கப்படுகின்றன( projected)

6.0

இத்தகைய நுதிப்புக்கள் புதைந்து கிடக்கும் ஒன்றை காணவரும் வகையில் வெளிப்படுதலாகும் -- புதைந்து கிடக்கும் கனவுகள் வெலிப்படுத்துதல் போல. யாதோ ஓர் வகையில் உருவாகி எழுந்து அறிவினை தொழிற்படுத்தும் இவை, இவற்றின் சொரூபங்கட்கு அணுக்கமாகிய தருக்களை சித்திரங்களாக எழுதும் போது, இவையும் வெளிப்பட்டு காணக்கூடியவையாக கரப்பு நீங்கி வெளியாகி நிற்கின்றன.


தொடரும்


திராவிட மெய்யறிவு வரலாறு- 2.3

7.0

இந்த எந்திரங்களை பலவகையாக வகுக்கலாம். ஓர் அடிப்படையான வகுப்பாவது சுர அசுர எந்திரங்கள் என்பது.


சுர எந்திரங்கள்

A:

தெய்வ வடிவங்கள் : சிவபெருமான் திருமால், நடராசன், தட்சிணாமூர்த்தி அயன் விநாயகன் திருமுருகன் பார்வதி உமை இலட்சுமி காமாட்சி மீனாட்சி கொற்றவை துர்க்கை நான்முகி நாராயணன் போன்ற நல்லது செய்யும் சக்திகள்..

அசுர எந்திரங்கள்

A:

அரக்கர்கள் அசுரர்கள் பேய்கள் பிசாசுகள் கூளிகள் என்றவாறு தீமை பயக்கும் சக்திகள்

சுர எந்திரங்கள்

B

சிவகணங்கள் இருடிகள் பெருஞ்சமய குரவர்கள் மகாத்மாக்கள் மாமன்னர்கள் மாவீரகள் போன்றவர்கள்.

அசுர எந்திரங்கள்

B

காக்கை கழுகு கரிய வௌவால் கொடூர சுறாமீன் முதலை கொல்புலி தேள் விசச் சிலந்தி கரியப் பாம்பு எருமை என்றவாறு ஆணவ மலத்தோடு வருபவை

சுர எந்திரங்கள்

C

நாகங்களாகிய வாசுகிப் பாம்பு ஐந்தலை அல்லது ஆயிரம் தலை விரித்த ஆதிசேடன், கருடன் மான் மயில் வெண்புரவி அன்னப் பறவை அரிமா வரிப்புலி யானை போன்ற நன்மை செய்யும் விலங்குகள்.

அசுர எந்திரங்கள்

C

பாதாளக் குழிகள் மலைச் சரிவுகள் பாழ் கிணறுகள் பூகம்பங்கள் சூறாவலிக் காற்று, மின்னல் இடியொடு பெருமழை, கடுந்திறலோடு வரும் புயல் போன்ற இயற்கை கூற்றுக்கள்

சுர எந்திரங்கள்

D

வைரம் முத்து பவளம் பொன் வெள்ளி பச்சை மாணிக்கம் என்றவாறும் இவற்றால் இயன்ற அணிகலன்கள் என்றவாறும்,

அசுர எந்திரங்கள்

D

இரும்பு சக்கரங்கள் கூர் வாட்கள் ஈட்டிகள் எரிமலைக் குழம்பு, செந்தீ கூர் ஆணிப்படுக்கை, தீக்குழி நெரிஞ்சி முட்காடு போன்றவை

சுர எந்திரங்கள்

E

தாமரை பசுந்தளிர் படரிலை கரும்பு அருகம்புல் முல்லை போன்றவை.

அசுர எந்திரங்கள்

E

பாலைவனம் வறண்ட வயல், பட்ட மரம், கற்றாளைச் செடி போன்றவை

சுர எந்திரங்கள்

F

கனி வகைகளாகிய வாழை பலா மாங்கனி திராட்சை ஆப்பில் போன்ற இவற்றோடு பூ வகைகள்

அசுர எந்திரங்கள்

F

கள்ளர்கள் குள்ளர்கள் வெறியர்கள் வறியர்கள் ஊனர்கள் நெடிய விலங்குகள் போன்றவை

7.1

பொதுவாக அசுர எந்திரங்களின் அயிக்கியத்தால் ஆன்மாக்களுக்கு துக்கம் துயரம் வேதனை கவலை தாபம் விரக்தி தற்கொலை எண்ணங்கள், சோர்வு அயர்வு நோய் வலி அவமானம் இழப்பு போன்றவை நிகழ்ச்சியாகும்

7.2

இவற்றிற்கு மாறாக சுர எந்திரங்களின் அயிக்கியத்தால், ஆன்மாக்களுக்கு அறிவிற் றெளிவு, மகிழ்ச்சி இன்பம் பெருமிதம் அமைதி மனநிறைவு உவகை உற்சாகம் போன்ற மெய்ப்பாடுகளோடு நோயிலாமை பெரும் புகழ் நன்மதிப்பு நீண்ட ஆயுள் செல்வச் செழிப்பு போன்ற நலன்கள் மெய்யாகும்.


தொடரும்

திராவிட மெய்யறிவு வரலாறு- 2.4

8.0

இந்த எந்திரங்கள் அனைத்தும் தொடர்பின்றி தனித்தனியாக இருப்பவை அல்ல. சங்கிலிக் கோர்வைகள் போல தொடர்புற்று கிடக்கின்றன. ஒன்று வெளிப்பட்டு நின்று தொழிற்பட்டு கழன்று அகல

அவ்விடத்தில் அதுபொழுது பிறிதொன்று சமைந்து பிறிதொரு தொடர்புடைய நிலையை உளதாக்குகின்றது.

8.1

ஒருவன் ஓர் வினையைச் செய்ய, ஓர் எந்திரம் சமைந்து தொழிற்படுகின்றது. அந்த வினை முடிய அந்த எந்திரம் கழன்று அகல, இன்னொரு எந்திரம் சமைந்து தொடர்ந்து இன்னொரு வினையைச் செய்ய உதவுகின்றது. இவ்வாறு வரும் வினைகளின், எந்திரங்களின் தொடர்ச்சியே அவன் அறிவின் பண்பினை, ஒழுக்கத்தினை, நடத்தையை நிறுத்துகின்றது. இத்தகைய ஒழுகலாற்றினைக் கண்டு, இருவினைத் திறத்தின் அடிப்படையில் நல்லதென்றும் தீயதென்றும், புண்ணியமென்றும் பாவமென்றும். உயந்ததென்றும் தாழ்ந்ததென்றும், இன்னும் பலவாறும் செயப்படும் செயல்களை மதிப்பிட்டுக் கூறுகின்றோம்.

9.0

ஓர் வினையைச் செய்து அதன்வழி ஓர் எந்திரசொரூபம் தன்னுள் சமைய வைப்பது கன்ம ஈட்டமாகும். அடுத்தடுத்து இத்தகைய எந்திரங்களின் தொடர் ஒன்றினை ஈட்டி தனதாக்கி தன்னுள் வைப்பதே ஆகாமிய கன்மம் ஆகும். முற்பிறவிகளில் ஈட்டி, அதற்கேற்ற தனுகரணபுவன போகங்களைப் பெற்று ஒர் புத்தியொடு திறனொடு உயிர்ப்பதற்கு அடிப்படையாக இருப்பதே பிராரத்த கன்மமாகும். வாழ்க்கையின் எந்தவோர் கட்டத்திலும் முற்பிறவியில் ஈட்டிய பாராரத்தமும், இப்பிறவியில் அதுவரை ஈட்டைய ஆகாமியமும் உயிரோடு சமைந்து இருக்கின்றன.

9.1

இதுவரை ஈட்டாது இனி ஈட்டுதற்கு ஆங்கே கிடப்பதாய் நிற்கும் எந்திரக் கூட்டங்களே சஞ்சித கன்மமாகும்

10.0

ஓர் உயிர் பிறப்பெடுக்கும்போது அமைகின்ற எவ்வுடலும், சங்கிலித் தொடரென அந்த உயிரோடு பதிந்திருக்கும் எந்திரங்களின் -- பிராரத்த கனமத்தின்-- தொழிற்பாடுவாம். கருவாகி சிசுவாகி குழைந்தையாகி பாலனாகி விடலையாகி இளைஞனாகி ஆடவனாகி கிழவனாகி முடிவில் தளர்ந்து சாய்ந்துவிடல் இந்த கன்மத்தின் தொழிற்பாட்டினால் தான். இயற்கையின் எல்லா பொருட்களுக்கும் இது பொருந்தும்.

தொடரும்


திராவிட மெய்யறிவு வரலாறு- 2.5

11.0

மேலே விரிக்கப்பட்ட உடலோடு கூடிய எந்திரங்களோடு, அவற்றிற்கு வேறாகிய அறிவினிலேத் தொழிற்படும் எந்திரங்கள் அல்லது எந்திரத் தொடர்களும் உண்டு. சிந்தித்தல் எண்ணல் கருதல் கற்பனை செய்தல் ஊகித்தல் உய்ந்தறிதல் என்றவாறு வரும் சிந்தனா கருமங்களை மெய்யாக்குபவையாக இந்த அறிவு எந்திரங்கள் திகழ்கின்றன. இவை மானிடப் பிறவி எடுத்த ஆன்மாக்களுக்கு தனி சிறப்புடையவை. மானிடத் தன்மையை இவையே நிறுத்துகின்றன.

12.0

இந்த இரண்டு வகை எந்திரங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை -- ஒன்று பிறிதொன்றினைத் தாக்கும். தீராத நோய், கடுமையான வலி, இந்திரியங்களின் செயலிழப்பு, உடலில் ஊனம் வருதல் போன்றவை அறிவினையும் தாக்க ஆங்கு பெருங்கவலை அச்சம் பீதி விரக்தி வெறுப்பு தற்கொலை எண்ணம் போன்ற மனநிலைகளை வரும்.

12,1

அறிவினிலேத் தெளிவு, ஞானச் சிந்தனையில் ஆழ வீழ்தல், தியானித்தல். சிந்தனையைக் கட்டுப்படுத்தி சமாதி கூடல் போன்ற அறிவின் தொழிற்பாடுகள் உடலையும் தாக்கி ஆங்கு உடல் நலம் வாய்க்கச் செய்யும். நோய்நொடியற்ற உடம்பு அமைய ஏதுவாகும்.

12.2

அகத்தே பல துன்பங்களை துயரங்களை மனவேதனைகளைத் தருபவை அசுர எந்திரங்கள் ஆகும். தன் அறியாமையினால் ஒருவன் இத்தகைய எந்திரங்களை ஈட்ட, இத்தகைய துக்கங்களும் துயரங்களும் வேதனைகளும், தான் ஈட்டிய எந்திரங்கள் அசுர எந்திரங்கள் என்று அவனுக்கு அறியத் தருகின்றண.

12.3

இத்தகையோன் தன்னையேத் தான் சற்று சிந்திப்பானாகில், தான் செய்த காரியங்கள் அசுர எந்திரங்களை ஈட்டித் தந்து மகிழ்ச்சியைப் போக்கி விட்டவை, ஆகவே அக்காரியங்கள் நல்லவை அல்ல புண்ணியம்ங்கள அல்ல என்று உணர்வான். இந்தத் தெளிவு வந்து அகத்தே நிலைக்குமேயாகில், இப்படிப்பட்ட காரியங்களை எதிர்காலத்தில் செய்யக்கூடாது என்ற முடிவிற்கும் வந்து நல்லதையே செய்யும் ஒருவனாக உயர்வான்.

13.0

இனி இவற்றிற்கு மாறாக ஒருவன் ஒன்றினைச் செய்ய, சுர எந்திரங்கள் ஈட்டப்பட அவையும் அகத்திலே செறிய, உவகை உறசாகம் பெருமிதம் பூரிப்பு போன்ற மெய்ப்பாடுகள் தோன்ற, அதன் வழி தான் செய்த காரியங்கள் நற்காரியங்கள், புண்ணியங்கள் என்றெல்லாம் உணர்வான். இப்படிப்பட்ட கரியங்களையேத் தொடர்ந்தால் உடல் நலம் மன நலம் என்பவற்றோடு தெய்வங்களின் அணுக்கமும் அதனால் அவற்றின் அருள் என்றெலாம் அமைய ஞான தெளிவும் கூடிவரும் என்பதாம்.

14.0

இதனால் திருநெறி என்பது செய்கின்ற காரியங்கள் அனைத்தும் சுர எந்திரங்களையே ஈட்டித் தருபவையாக அமைய வாழ்வதாகும்

14.1

இவ்வாறு தொடர்ந்து செல்ல. திருநெறியே தக்க நெறி என்று நல்லதையேச் செய்து வாழ, ஆன்மாவை அசுத்தமாயையில் தள்ளும் எந்திரங்களை ஈட்டுவதொழிந்து, சுத்தமாயா உலகினிலே புகுந்து ஆங்கேயே வாழ்ந்து மெய்யறிவுகளை மெய்ஞனாத்தைத் தெளிந்து தெளிந்து மகிழும் நிலை உண்டாகும். பிறகு அசுத்தமாயா கழற்சி போன்று சுத்த மாயா கழற்சியும் சித்தித்து இருவினை ஒப்பு எய்தி ஆன்மா முத்தி பேறு நோக்கிச் செல்லும்

தொடரும்


திராவிட மெய்யறிவு வரலாறு- 2.6

C: உலகின் உயிர்களின் பதவூழிகள்

15.0

உடல் எந்திரங்கட்கும் உள எந்திரங்கட்கும் ஒர் வகையான உறவு நிலை இருக்கின்றது. பெண்ணாக உடல் எடுத்துவிட்டால், ஆங்கு மெய்பட நிற்கும் உடல் எந்திரங்கட்கு ஏற்ப, மனோநிலைகளை அறிவுத் திறன்களை நிறுத்தும் உள எந்திரங்களும் இருக்கின்றன. பெண் உடலெடுத்த பெரும்பாலானவர்கட்கு தாய்மைப் பேறு தொடர்பான பல உளவெந்திரங்கள் உடன் வரும். இதேப் போன்று ஆண் உடல் எடுத்த ஆன்மாக்களுக்கும்.

15.1

இந்த உறவு முறைகள் ஓர் இயைபோடு முறையாக அமையாத போதே தடுமாற்றங்களைத் தரும் அலிகள் பேடிகள் போன்ற பிறப்புக்கள்

16.0

அனைத்து எந்திரங்களையும் மேல்-கீழ் என்ற முறையில் அடுக்கவும் செய்யலாம். இதனாலேயே ஆறு அல்லது அதற்கு மேலுமாக பல கற்றளிகள், ஆதார சக்கரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கற்றளிக்கும் அதற்குரிய சுர-அசுர எந்திரங்களின் ஆட்சி. ஓர் கற்றளியின் நுழைவு பெற்று அதனுள் புகுவார், அக்கற்றளிக்குரிய எந்திரங்களின் ஆட்சிக்கு ஆளாக, அவை நிறுத்தும் குணங்களையும் திறன்களையும் பெற்று அதனால் அமையும் பூதிகளையும் பெற்று மகிழ்வர்.

16.1

இத்தகைய பூதிகளின் வளர்ச்சியே தொடர்ச்சியே வாழ்க்கை என்பது. எக்கற்றளியில், ஆதார சக்கரத்தில் நுழைந்து இருக்கின்றார்களோ அதற்கேற்பவே வாழ்க்கையும் அமையும்.

17.0

மானிட உடல் எடுத்தார் அனைவருக்கும் இந்த ஆறு கற்றளிகளிலும் (அவற்றிற்கு கீழாயுள்ள மேலாய் உள்ள கற்றளிகளிலும்) புகுந்து அதற்கேற்ப வாழும் திறனுண்டு, பக்குவம் உண்டு. இதனால் சுர அசுர எந்திரங்களை ஒருவாறு உள்ளுணர்வாக உண்டென்று அறிந்தும் இருப்பர்.

17.1

இக்கற்றளிகளில் மூலாதாரம் தொடங்கி ஆக்ஞா வரை உள்ள கற்றளிகள் தெய்வங்களின் ஆட்சியில் உள்ளவை என ஆங்கு சுர எந்திரங்களின் ஆட்சியே மிக்கிருக்கும். இவற்றைற்கு மேலான கற்றளிகளில் இறைவனே தன் சொரூப நிலையில் ஆட்சி செய்வான். இவற்றிற்கு கீழான கற்றளிகள், கீழாலவத்தைகளைத் தரும் அவக்கற்றளிகள் ஆகும். அவற்றில் வீழ்வார் பெரும்பாலும் அசுர எந்திரங்களின் ஆட்சிக்கே ஆளாகி விலங்கு குணத்தவர்களாக புண்ணிய பாவ சிந்தனை அற்றவர்களாக, கயமை வஞ்சகம் போன்ற தீயதை செய்பவர்களாக , தான் இச்சித்ததை உடன் அடையத் துடிக்கும் வெறியர்களாக உள்ளத்தில் அன்பு பாராட்டத் தெரியாத கொடூர குணத்தவர்களாக வெல்லாம் திகழ்வர். பற்பல கேவலமான வேதனைகள் நிறைந்த அனுபவங்கட்குப் பிறகே, இத்தகையோருக்கு தெய்வக் கற்றளிகள் புகும் வாய்ப்பு வந்தமையும். அது முதலே மெய்யான ஞான வாழ்க்கையும் அமையும்

17.2

சமுதாயத்தில் கொலைவெறியர்கள் கொள்ளையர்கள் கள்ளர்கள் காமவெறியர்கள் போன்ற கொடியோர் இருப்பது இந்த அவக்கற்றளிகளில் தற்செயலாக விழுந்து ஆங்குள்ள அசுர எந்திரங்கட்கு ஆளாகுவதால் தான். தெய்வ கற்றளிகட்கு அவர்களை மீட்டுவிட்டால், அவர்களும் நல்லவர்கள் ஆவர்/


தொடரும்


திராவிட மெய்யறிவு வரலாறு- 2.7

18.0

இனி மேலே விரிக்கப்பட்ட பக்குவங்கட்கு யாண்டும் கீழேயுள்ள அவக்கற்றளி உயிரினங்களே உரைத்திறன் இல்லாதவையே விலங்குகள் ஆகும். யாது செய்தாலும் தெய்வ உணர்வினைத் தரும் சுரகற்றளிகள் புகும் திறன் வராதே போக, ஆறறிவோடு தொடர்புடைய மொழித் திறன் இல்லாத விலங்குகளாகவே இந்த உயிரினங்கள் வாழும்.

18.1

எல்லா உயிர்களும் அநாதியே எவ்வித உணர்வும் அறிவும் இல்லாத ஆணவ மலத்தில் முற்றிலும் ஆழ்ந்து இருளில் கிடக்கின்றன. இந்த ஆணவ இருளைக் கிழித்துக்கொண்டு இறையருள் பதிவு நடக்க உயிர்கள் உணர்வு அறிவு என்றவாறு சிறிது தலைப்பட, எளிமையான எந்திரங்களின் அயிக்கியத்தால் ஓர் உடலையும் அதற்கேற்ற திறனையும் பெற்று உலகில் ஒருவாறு வாழத் தொடங்குகின்றன. இனி எவ்வுயிர்கள் கீழான எந்திரங்கள் ஈட்டுவது ஒழித்து மேலான எந்திரங்கள் ஈட்டி மகிழ்கின்றதோ அவை பதவூழிகள் பெற்று பக்குவத்தில் உயர்கின்றன. இப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து உயிர்ப் பண்பில் கூர்ந்து கூர்ந்து செல்ல, ஓர் கட்டத்தில் மானிடப் பிறப்பு மகிழும் பக்குவத்தையும் பெறுகின்றன. இந்த பிறப்பிலேதான் பக்குவ முதிர்ச்சியின் எல்லையும் முடிவுமாகிய முத்தியைப் பற்றிய முன்னறிவு பெறும் திறனும் கிட்டுகின்றது. சுரகற்றளி வாழ்க்கையை அறிந்து விரும்பி செல்லும் நிலையும் சித்திக்கின்றது, பண்பாட்டோடு கூடிய வாழ்க்கை முறையும் அமைகின்றது.

19.0

இவ்வாறு ஈட்டப்பட்டுள்ள அறிவினை செலுத்தி நிற்கும் உள எந்திரங்கள் , மேலே விரிக்கப்பட்ட தருத் தேர்வில் விருட்சங்களாக எழுதவும் படுகின்றன. அத்தோடு அவற்றின் இன்னொரு வகைய வெளிப்பாடே நாகரீக வாழ்க்கையின் பண்பாட்டுக் கூறுகள் சட்டதிட்டங்கள் சம்பிரதாயங்கள் பாரம்பரியமாக வரும் பழக்க வழக்கங்கள் சடங்குகள் சரியா கிரியைகள் திருவிழாக்கள் பண்டிகைகள் போன்றவை.

19.1

இவற்றின் செயல்பாட்டினாலேயே குடும்பங்கள் அமைவது, குடும்பங்கள பல கூடி ஓர் குலம் அல்லது குடியினை உருவாக்குவது, இத்தகைய பல குடிகள் கூடி ஓர் நாட்டினை உருவாக்குவது போன்றவை வர அரசியல் வாழ்க்கையும் மிக முக்கியமான ஒன்றாக அமைகின்றது.

19.2

இனி இவ்வாறு பல எந்திரங்கள் தூண்ட அதற்கேற்ப வாழ்கையைத் தொடர, அதனை செவ்வே செய்து இன்பம் தூய்க்க இச்சித்ததை அடைய பொருளீட்டும் சிந்தனையும் தோன்றுகின்றது. இதனால் உழவு தச்சு போன்ற கைத்தொழில், பொருள் உறபத்தி செய்யும் தொழிற்கூடங்கள் அமைத்தல் பின் உருவாக்கப்படும் பொருட்களை விறபனை செய்யும் வகையில் வாணிபம் செய்தல் போன்றவை அமைகின்றன. இவற்றின் ஊடே அறிவு செயல்பட்டு சிந்தித்தல் நினைத்தல் திட்டமிடல் புதிது படைத்தல் முன்னுணர்வு பெறல் ஆர்தல் ஓர்தல் என்பவற்றோடு கலைகளோடு தொடர்புடைய எழுதல் படித்தல் ஆடல் பாடல் சித்திரம் தீட்டல் சிலை வடித்தல் வணங்கள் தொழுதல் யோகம் செய்தல் நிட்டை கூடல் போன்றவை மெய்யாகும்.

20.0

தருத் தேர்வில் எழுதப்படும் விருட்சங்கள், ஆகக்கூடிய ஒழுக்கங்களில் பண்பாட்டுக் கூறுகளில் யாது ஒருவன் மாட்டு சிறந்து நிற்கின்றது என்பது வெளிப்படுத்தி அவனை பிழையின்று புரிந்து கொள்ள உதவும்


படலம் 2 முற்றும்







.

Contributors

Ulagankmy

This page was last modified on 25 February 2013, at 07:36. This page has been accessed 1,734 times.