வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் - கோயம்புத்தூர்

From மரபு விக்கி

Jump to: navigation, search

அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில்

                                                                                                                      
T 500 52.jpg


மூலவர் : பிரம்மா,விஷ்ணு,சிவன் (மும்மூர்த்தி,திருமூர்த்தி)
உற்சவர் : பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவருக்கும் உற்சவர் உண்டு.
தல விருட்சம் : அரச மரம்
தீர்த்தம் : தோணி ஆறு
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : தளி - திருமூர்த்தி மலை
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:

இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.

தல விநாயகரின் திருநாமம் சுந்தர கணபதி. முருகனின் திருநாமம் பாலசுப்பிரமணியன், இத்தலத்தில் வாழ்ந்த முனிவர் அத்திரி மகரிஷி


தலபெருமை:

சிவனுக்கு மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், அமணலிங் கேஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. அத்திரி மகரிஷியின் மனைவி அம்மணமாக வந்து மும்மூர்த்திகளுக்கு உணவு அளித்த தலமாதலால் இத்தல இறைவன் அமண லிங்கேஸ்வரர் ஆனார். சந்தன வழிபாடு என்பது இங்கு சிறப்பு. இங்குள்ள மும்மூர்த்திகளுக்கு பக்தர்கள் சந்தனத்தை வாங்கி அவர்கள் மீது எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படி சந்தனம் எறியும் போது மும்மூர்த்திகளின் நெற்றியில் சந்தனம் விழுந்தால் நாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது ஐதீகம். இங்கு சிவன் ஞான குருவாக விளங்குகிறார். எனவே இங்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. அத்திரி மகரிஷியும் அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்துள்ளார்கள்.இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபடுவதாக கூறப்படுகிறது.

இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் வந்து தங்கியதாக கூறப்படுகிறது. இங்கு மும்மூர்த்திகளும் குழந்தையாக விளையாடிய போது அருகிலுள்ள கஞ்ச மலையிலிருந்த கல் ஒன்று உருண்டு வந்தது. அப்போது பட்டாரசி, தேவகன்னி, பத்மகன்னி, சிந்து கன்னி, அகஜாகன்னி, வனகன்னி, சுமதிகன்னி என்ற சப்த கன்னியர் ஏழு விரளி மஞ்சளை வைத்து உருண்டு வந்த கல்லை தடுத்து நிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை காப்பாற்றினர். அப்படி உருண்டு வந்த கல்லிலேயே மும்மூர்த்திகள் ஐக்கிய மாகி விட்டனர். தடுத்து நிறுத்திய விரளி மஞ்சளிலேயே சப்த கன்னியர் ஐக்கியமாகி விட்டனர். இங்கு இந்த சப்த கன்னியருக்கு தனி சன்னதி உண்டு.


தல வரலாறு:

எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். அகத்திய முனிவர் இறைவனின் திருமணக்கோலத்தை பொதிய மலையில் கண்டு களித்ததை மீண்டும் ஒரு முறை காண வேண்டி அதற்கான இடத்தை இறைவன் குறிப்பால் உணர்த்திய இடமே திருமூரத்தி மலை. கைலாயத்தில் நடந்த இறைவனின் திருமண கோலத்தை குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே “பஞ்சலிங்கம் என வழங்கப்படுகிறது. கைலாய காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் இத்தலம் தென் கைலாயம் என்று ம் சிறப்பு பெறுகிறது.

மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசூயையின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பியும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.

ஒரு முறை அத்திரி மகரிஷி வெளியே சென்ற போது மும்மூர்த்திகளும் அனுசூயை தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசூயையும் தன் கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.


திருவிழா:

மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை. இது தவிர ஆடி அமாவாசை , தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்மதியம் 12-2.30 மணிவரை சிறப்பு பூஜை நடைபெறும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜை இங்கு சி சிறப்பு பெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும்.


திறக்கும் நேரம்


காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 வரை தொடர்ச்சியாக கோயில் திறந்திருக்கும்.







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:14, 11 ஜூலை 2011 (UTC)

நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 11 July 2011, at 10:14. This page has been accessed 1,912 times.