வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அபிராமி அந்தாதி விளக்கவுரை 9

From மரபு விக்கி

Jump to: navigation, search

பாடல் முப்பத்தொன்று.


உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

அர்த்தநாரி.jpg

விளக்கம் :

அன்னை அபிராமியும் அவளின் ஒரு பாகமாய் விளங்கும் ஈசனும் ஏக உருவில் வந்து கீழோனான என்னையும் தங்கள்மேல் அன்பு செய்ய வைத்து அருள் புரிந்தார்கள். ஆகவே இனி நான் சிந்திப்பதற்கு வேறு சமயங்களும் இல்லை..என்னைப் பெற்றெடுக்க வேறு தாயும் இல்லை.. அழகிய தோள்களுடைய பெண்கள் மேல்வைத்த காம ஆசையும் இல்லாமல் போனது. "உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து " உமையவளாகிய அன்னை அபிராமியும், அவளின் ஒரு பாகமாய் விளங்கும் ஈசனும் ஓர் உருவில் வந்து... சிவசக்தி சொரூபமாய், அர்த்த நாரீஸ்வரராய் எனக்குக் காட்சியளித்தார்கள். கிடைத்தற்கரிய பேறு அல்லவா? முன்னர் ஒரு பாடலில் இவ்வுருவைத்தான் அதிசயம்
என்று பாடினார் அபிராமிப் பட்டர். அன்னையையும் அப்பனையும் ஏகவுருவில் காணும் பேறு பெற்றது அபிராமிப் பட்டர் செய்த பாக்கியம் அல்லவா...?


அவர்கள் வந்து என்ன செய்தார்கள் தெரியுமா? "இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்" அவர்கள் இருவரும் ஓருருவாக இங்கு வந்து, எம்மையும் -இவ்விடத்து அழுத்தம் கொடுக்கிறார் அபிராமிப் பட்டர். கீழோனான என்னையும் தம் மேல் அன்பு செய்ய வைத்தார்கள். எந்தவிதக் கெட்ட எண்ணங்களும் இன்றி, அன்னையின் மேல் முழு பக்தியாக இருந்த அபிராமிப் பட்டர், தன்னை மிகக்கீழோன் என்று குறிப்பிடுவது வியப்புக்குரியது. "இனி எண்ணுதற்குச்சமையங்களும் இல்லை" இனி நான் வேறு சமயங்களைப் பற்றிச்சிந்திப்பதற்கில்லை... அன்னையின் பேரன்பு கிடைத்த பின்னர் வேறெந்த சமயங்கள் வேண்டும்? இந்த பூஜையை செய்தால் இறையருளைப் பெறலாம்.. இந்த மந்திரங்களைப் படித்தால் இறையருளைப் பெறலாம். இந்த வழியில் நின்றால் இறையருளைப் பெறலாம். என்று பல்வேறு சம்யங்கள் உரைக்கின்றன.. ஆனால் உங்கள் மேல்வைத்த அன்பு ஒன்றே எனக்கு உங்கள் பேரருளைப் பெற்றுத்தந்து விட்டது.


இனி நான் சிந்தித்துப் பார்ப்பதற்கு வேறு சமயங்கள் இல்லை.."ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை" இனி என்னை ஈன்றெடுக்க ஒரு தாய் இல்லை..இதன் பொருள் நான் பிறவிப் பெருங்கடல் நீந்தி விட்டேன். இனி எனக்கு மறுபிறப்பு இல்லை என்பது.. பலமுறை பிறப்பறுப்பைப் பற்றி அபிராமிப் பட்டர் பாடுவது குறிப்பிடத்தக்கது. இனி என்னை ஓர் தாய் ஈன்றெடுப்பாளோ? இல்லவே இல்லை.. இத்துடன் என்பிறவி முடிந்தது.. ஏனெனில் என் அன்னை அபிராமியின் பேரன்பு எனக்குக் கிடைத்திருக்கின்றது என தனக்கு மீண்டும் பிறவி இல்லை என
அபிராமிப் பட்டர் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார். அது அவரது பரிபூரண நம்பிக்கையைக் காட்டுகிறது. "அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே" அழகிய தோளுடைய பெண்டிரின் மேல்வைத்த காம ஆசையும் அமைதியுற்றது. மனிதரைப் பின் தொடர்ந்து துன்பமளிக்கும் ஓர் நோய் இக்காம நோய்.. அவற்றிலிருந்து எவ்வண்ணம் வெளிவருவது என்பதே இன்றைக்குப் பலருடைய கேள்வி.. அன்னையின் அன்பு நமக்குக் கிட்டி விட்டால் அக்காம ஆசை தானே அமைதியாகிவிடும். அன்னையே நீ உன் தரிசனத்தை எனக்குக் காட்டி என்னை உன்பால் அன்பு செய்ய வைத்து விட்டாய். இனி என் மனத்தில் நான் பெண்டிரின் மேல் கொண்ட ஆசை அப்படியே அமைதி பெற்றுவிடும்...


பாடல் முப்பத்திரண்டு


ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே


விளக்கம் :

அபிராமி அன்னையே.. ஈசனின் இடப்பாகத்தில் அமர்ந்த என் அம்மா... நான் கொடிய ஆசையெனும் கடலில் மூழ்கி, கொஞ்சம் கூட இரக்கமற்ற
எமனது கையிலுள்ள பாசக்கயிற்றால் கட்டப்பட்டு துன்பம் மிக அடைய இருந்தேன்.என்னை, மணம் வீசும் அழகிய தாமரை போன்ற நின் திருப்பாதங்களை நீயே வலிய வந்து என் தலை மீது வைத்து ஆண்டு கொண்டாய். உன் பேரன்பினை நான் என்னவென்று சொல்லுவேன்?இவ்வுலகில் நாம் பெறும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நம் மனத்தில் உள்ள ஆசையே.. ஆசையை ஒழித்தால் மட்டுமே துன்பமின்றி வாழ இயலும். அன்னை அபிராமியே நான் ஆசையெனும் கடலில் அகப்பட்டுக் கொண்டேன்.. அவ்வமயம் அங்கே
அருளற்ற - கொஞ்சமும் இரக்கமற்ற கூற்றுவனின் கையிலுள்ள பாசக் கயிறு என்னைப் பிடிக்க வந்தது. நான் அப்பாசத்தில் அகப்பட்டிருந்தால் என் துன்பம் இன்னும் மிகுதியாக இருந்திருக்கும்.. அவ்வமயம் எனக்கு அதைப் பற்றிய எண்ணமே இல்லை.. கண் அது போன போக்கு.. கால் அது போன போக்கு... என்றே போய்க்கொண்டிருந்தேன்...


ஆனால் உனது பேரன்பு என்ன செய்தது தெரியுமா? "நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுகேன் " உனது பாதங்கள் எனும் மணம் வீசும் அழகிய தாமரை மலர்களை நீயே வலிய வந்து என் தலை மீது வைத்தாய்.. உனக்கு
அடியவனாக்கினாய்... அப்பேரன்பை நான் என்னவென்றுரைப்பேன்.. எனக்கு உன்னைத் தெரியவே தெரியாது.. நீயே உலகைப் படைத்தவள் என்ற ஞானம் எனக்கு இல்லவே இல்லை... நீதான் தெய்வம் என்ற உணர்வு என்னுள் இல்லவே இல்லை... ஆயினும் நீயே வலியவந்து உன் திருவடித் தாமரைகளை என் தலைமேல் வைத்தாய். அன்னையே உன் திருவடித் தாமரைகள் என் தலைமேல் பட்டவுடன் நான் உனக்கு அடியவனானேன்..நீ என்னை அருளாட்சி செய்து கொண்டாய்... உனது அன்பு அளப்பறியது.. என்ன காரணத்தாலோ நீ என்மீது இப்படிப் பட்ட அன்பினை வத்து அருட்செய்தாய். அளவிட இயலாத உன் அன்பினை நான் எவ்வாறு உரைப்பேன்...ஈசனது இடப்பாகத்தில் அமர்ந்திருக்கும் என் அபிராமித் தாயே......?



பாடல் முப்பத்து மூன்று


இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே


விளக்கம் : எம் தந்தையான சிவபெருமானின் சித்தமெல்லாம் குழையச் செய்யக்கூடிய மணம் வீசும் குவிந்த திருமுலைகளையுடைய இளமையான
கோமளவல்லியே... என் அபிராமி அன்னையே... நான் செய்யும் தீய செயல்களுக்காக எனைத் தண்டிக்க காலதேவன் வந்து அழைக்கும் போது.. அன்னையே என உன்னைத் தான் நான் அழைப்பேன்.. நீயும் ஓடி வந்து அஞ்சாதே மகனே என்பாய். முன்னர் ஒரு பாடலில் தன்னை அழைக்க எமன் வந்திடும் வேளையில் அம்மையும் அப்பனுமாகத் தனக்குக் காட்சியளித்தருள வேண்டும் என்று வேண்டிய அபிராமிப்பட்டர் இவ்விடத்து ஓடிவந்து எம்மை அஞ்சாதே என்று சொல் தாயே என்கிறார். "இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது"
யாருக்கு அஞ்சுகிறோமோ இல்லையோ... மரண தேவனுக்கு எல்லோரும் அஞ்சுகிறோம். நாம் செய்கின்ற நல்வினை, தீவினைகளுக்கேற்ப காலதேவனும் நமக்கு மரண நேரத்தில் தண்டனைகளைத் தருகின்றான். எனது கர்மங்களுக்கேற்ப கொடுமையான கால தேவன் என்னை நடுங்கச் செய்ய அழைக்கும் போது... என்னை மரணம் நெருங்கும் போது... "வந்து அஞ்சல் என்பாய்" நீ வந்து அஞ்சாதே என்பாய்


. "அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே" என் தந்தையான ஈசனின் சித்தத்தையெல்லாம் குழைப்பவளே... மணம் வீசும் சந்தனங்களைப் பூசிய குவிந்திருக்கக் கூடிய உனது அழகிய திருமுலைகளால் என் தந்தையின்
சித்தத்தைக் குழைக்கும் இளமையான கோமளவல்லியே.... அபிராமித் தாயே...."உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே" காலன் என் வாயில் வந்து நிற்கின்றான். என் மனம் அஞ்சுகிறது. என் உயிர் உடலோடு கொண்ட நட்பைப் பிரிய இயலாத வ்ண்ணம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும் விட்டுப் பிரியலாம் என்ற நிலை... இவ்வேளையில் நான் உன்னையே நினைத்து அன்னையே என்பேன். நீ ஓடி வந்து என்னை நோக்கி அஞ்சாதே மகனே என்று என் மரண பயத்தைப் போக்குவாய்.


மரணவேளை மிக முக்கியமானது.. எதிர்பாராமல் மரணமடைபவர்களை விடுங்கள். வயதாகி மரணப் படுக்கையில் விழுந்த பெரியோர்களிடம் சென்று ஆசி வாங்குவது நம் பகுதி மக்கள் பழக்கம். அச்சமயங்களில் அவர்களின் செவிகளிலும் இறைவனுடைய திருநாமம் விழும்படிப் பார்த்துக் கொள்வார்கள். ஒரு வேடிக்கைக்கதை உண்டு. ஒரு கொடியவன் தான் மரணமடையும் வேளையில் தனது இளைய மகனான
கோவிந்தனை அவன் பெயர் சொல்லி அழைத்தானாம். கோவிந்தா என்று மரண தருவாயில் கூவிய படியால் அவனது ஆன்மா திருவைகுண்டம் சென்றடைந்ததாம். அழியும் வேளையில் அறியாது அழைத்த ஒருவனுக்கே இறைவனது பெருங்கருணை கிடைக்கிறதென்றால், அவனை முழுமனதோடு அழைப்பவர்களுக்கு எப்பேர்ப்பட்ட புண்ணியம் கிட்டும்? இவ்விடம் அவள் பெயரைச் சொல்லி அழைப்பேன் என்றும் பட்டர் கூறவில்லை... 'அம்மா.." இது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயமேற்படும்போது நம் வாயினின்று புறப்படும் வார்த்தை... அபிராமி அன்னையே... நான் மரணநேரத்தில் என்னை அறியாது அம்மா என்றழைத்தால்... அது வேறு யாரையோ குறிப்பிடும் சொல் அல்ல... நான் அழைப்பது உன்னைத்தான்... என்பதைப் புரிந்து கொள் தாயே என்று முன் கூட்டியே சொல்லி வைக்கிறார் அபிராமிப் பட்டர்.

Imagessanthdurga.jpg

பாடல் முப்பத்து நான்கு


வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே


விளக்கம் :

தன்னை நோக்கி வந்து சரணம் என்று அடிபுகும் அன்பர்களுக்கு அன்போடு விண்ணுலகம் தரும் அபிராமி அன்னை தங்கியிருக்கும் இடங்களாவன...நான்முகங்களைக் கொண்ட பிரம்ம தேவனின் நான்கு முகங்களாக, கலைமகளாக...தேன் ஊறும் மலர்கள் கொண்ட மாலைகளையும் பெரிய மாணிக்கங்களையும் தன் மார்பின் மீது அணிந்த திருமாலின் மார்பாக... திருமகளாக... ஈசனின் ஒரு பாகமாக... மலைமகளாக... பொன்னிறத்துடன் கூடிய சுவைமிகுந்த தேனூறுகின்ற தாமரை மலரிலும், விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிடத்திலும்,
சந்திரனிடத்திலும் தங்கியிருக்கின்றாள்..எங்கும் நிறைந்த அன்னை பராசக்தியை இவ்விடம் உள்ளாள் என்று குறிப்பிடத் தேவையில்லைதான். ஆயினும் உயரிய இடத்து உன்னைக் காணும்போது அவ்விடத்தில் நீ தங்கியிருப்பதை எங்ஙனம் உரையாமல் இருப்பது? நீயே கதி என்று உன்னைச் சரணமடையும் உன் அடியவர்களுக்கு நீ விண்ணுலகில் இடமளிக்கிறாய். அதுவும் மிகுந்த கருணையோடும் அன்போடும்... அவர் செய்த தீவினைகள் எல்லாம் உன் பரிவின் முன் பலனற்றுப் போய்விடுகின்றன. நீ எங்கெங்கே இருக்கிறாய்...?


"சதுர் முகமும்" நான்முகங்களைக் கொண்ட பிரம்மதேவனின் நான்கு முகங்களிலும்... அவரது படைப்புத் தொழிலாக.... கலைமகளாக... "பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும..." நறுந்தேன் ஊறக்கூடிய அழகிய மலர்களையும் , பெரிய மாணிக்கங்களையும் தன் மார்பிலே அணிந்த திருமாலின் திருமார்பிலும்...அலைமகளாக... "பாகமும்" ஈசனது இடப்பாகத்திலும்... மலைமகளாக... "பொற்செந்தேன் மலரும்" பொன்னிற நறுந்தேனைக் கொண்டிருக்கும் தாமரை மலரிலும்..."அலர் கதிர் ஞாயிறும்" விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிலும்... உனது
கதிர்கள் எங்கள் மனத்தில் உள்ள அறியாமையைப் போக்குகின்றன தாயே..."திங்களுமே" சந்திரனிடத்திலும்... நீ தங்கியிருக்கின்றாய் தாயே.,..உனது கருணை சந்திரனைப் போன்று குளிர்ச்சியானது தாயே....

விளக்கம் தொடரும்.


எழுதித் தயாரித்தது திரு மு. கந்தசாமி நாகராஜன்



--Geetha Sambasivam 09:28, 26 பெப்ரவரி 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 7 March 2011, at 04:32. This page has been accessed 3,628 times.