வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அபிராமி அந்தாதி விளக்கவுரை 13

From மரபு விக்கி

Jump to: navigation, search

பாடல் நாற்பத்தேழு

திரிபுரசுந்தரி.jpg

வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே

விளக்கம் :

வாழ்வதற்குரிய நெறிமுறையொன்றை என் மனத்தில் நான் கண்டுகொண்டென்.. அதை அறிந்த ஒருவர் அழிவதில்லை... தாம் பிறருக்குச்
சொல்வதுமில்லை.. அது அத்தனை எளிமையான வழியுமில்லை.. கடலால் சூழப்பட்ட ஏழு வகை நிலங்களுக்கும், பெரிய மலைகள் எட்டுக்கும், எட்டாமல், இரவையும் பகலையும் ஒளியால் நிரப்பும் சூரிய சந்திரர்களுக்கு நடுவே நின்று சுடரும் பேரொளியான அபிராமி என்னும் ஒளி அது...
அன்னையை, ஆதிபராசக்தியை, அன்பென்னும் பெரும் பண்பால் நம்மை ஆட்கொண்டவளை, வேதத்தின் உட்பொருளை, எளியோரின் வேதமாய்த் திகழ்பவளை வர்ணணை செய்ய வார்த்தைகள் ஏது? அவளே நெறி... அவளே பாதை... அபிராமிப் பட்டர் சொல்லும்
வாழ்க்கை நெறி அன்னை அபிராமி மட்டுமே... அபிராமி ... அபிராமி ...என்றழைத்தாலே போதுமே.. வாழ்வின் வழிமுறைகளை ஏற்று நெறிப்படுத்தி நடத்திச் செல்பவள் அவளே...


அபிராமி அருகிருக்க வேதங்களை ஏன் ஓத வேண்டும்? அபிராமி அருகிருக்க வேள்விகள் ஏன் செய்ய வேண்டும்? எல்லா நோய்களையும் தீர்க்கும் மருந்தே நம் அருகிருக்க மருத்துவனை ஏன் நாட வேண்டும்..? அபிராமியே...எனக்கு எல்லாமும் ஆனவள் நீ... நீயே வாழ்க்கை வழிமுறை..."வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே" நல்முறையில் வாழ்வினை நடத்துவதற்குரிய வழிமுறையொன்றை என் மனத்திலே கண்டு கொண்டேன்... அது எப்படிப் பட்டது?? "ஒருவர் வீழும் படி அன்று" மனிதரை இழுத்துச் சென்று சீரழிக்கும் அழிவு வழியல்ல அது...மேலும்... "விள்ளும் படி அன்று" அதை அறிந்தோர் மிக எளிதாக விளக்கிச் சொல்லக்கூடிய வழியும் அல்ல அது.,...அற்புதமான அனுபவமானவள் அன்னை... அவளைக் கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் எனச் சொல்வார்கள்.. இறை அனுபவத்தை வார்த்தைகளில் விளக்கிச் சொல்வது என்பது எளிதானது அல்ல... மிகவும் எளிதாக இறைவனைக் கண்டேன்..கண்டேன்... என்று பிதற்றுபவர் இறை அனுபவத்தைக் கண்டே இருப்பதில்லை...


அப்படியானால் அபிராமிப் பட்டர் இதனை எங்ஙனம் விளக்குகிறார்? அவர் விளக்கவே இல்லை... அன்னையை நேரடியாக நம் கண்களுக்கே அனுப்புகிறார்..இதைப் பாரடா மைந்தனே... இவளே உன் தாய்... இவளே உன்னைக் காப்பவள் என்று அன்னையெனும் மாபரிசினை நமக்களித்தவர் அபிராமிப் பட்டர்... சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தார் நண்பர் ஒருவர்.. எனக்கு அது புரியவே இல்லை.. ஆனால் என் அம்மா சர்க்கரைப் பொங்கலை தயார் செய்து எனக்களித்த போது அதன் செய்முறைகளைப் பற்றி நான் கவலைப் படவே இல்லை... அமிழ்தமே அருகிருக்க அதை அடைவதற்குரிய வேறு வழிமுறைகளை நாம் எதற்காகக் கற்க வேண்டும்...?
"வேலை நிலம் ஏழும் " வேலை எனும் பதம் கடலினைக் குறிக்கின்றது.. கடலால் சூழப்பட்ட நிலங்கள் ஏழும்... "பரு வரை எட்டும்" வரை எனும் பதம் மலையைக் குறிக்கும். பெரிய மலைகள் எட்டும் "எட்டாமல்" அடைய இயலாமல் "இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே" இரவிலே சூழும் சுடர் சந்திரன்... பகலிலே சூழும் சுடர் சூரியன்.. இவர்கட்கு நடுவே கிடந்து சுடரும் சுடரொளி.... சந்திரன் தாமாகவே ஒளிர்வதில்லை என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்..


சூரியனது ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கின்றது சந்திரன் என்று உரைப்பார்கள்.. பூமியின் இருளை நீக்க வந்த சுடர்களான இவை இரண்டுக்கும் நடுவே சுடரும் சுடரொளி... அதாவது.. சந்திரன் சூரியனின் ஒளியை வாங்கி ஒளிர்கின்றது... சூரியனுக்கு ஒளியை அளிப்பது யார்???
அதுதான் இந்தச் சுடரொளி... அபிராமி என்னும் சுடரொளி... அபிராமியின் ஒளியை சூரியன் பிரதிபலித்து அழகிய பகலினை நமக்குத் தருகின்றது... சூரியனது ஒளியை சந்திரன் பிரதிபலித்து இனிக்கும் இரவுப் பொழுதினைத் தருகின்றது...அட முட்டாளே... இன்று பூரண அமாவாசை... இன்றெப்படி நிலவு தோன்றும் என்று என்னைக் கேட்டாயே... உலகுக்கு ஒளியை வழங்கும் சூரிய சந்திரருக்கும் ஒளியை
வழங்கும் அன்னை அபிராமியே என் வாழ்க்கை நெறி... அவள் நினைத்தால் அவளருளால் இன்று நிலவு தோன்றாதா?.. தோன்றுமடா.... அது என் அன்னையின் பேராற்றல் முன்னே சிறு துளி...


பாடல் நாற்பத்தெட்டு


சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே

விளக்கம் :

சுடரும் பிறை நிலவு தங்கும் சடைமுடியையுடைய ஈசனின்மேல் ஒன்றிப் படர்கின்ற நறுமணம் வீசும் பசுங்கொடியைப் போன்றவளான அன்னை அபிராமியை இடர்களெல்லாம் தவிர்த்து இமைப்பொழுது நெஞ்சில் நிலை நிறுத்தி, தியானித்து இருப்போர், குடலும், இறைச்சியும், குருதியும் தோயும் இந்த மானுடப்  பிறப்பினை மீண்டும் எய்துவாரோ?? இல்லவே இல்லை..உலகம் என்பது மாயைகளால் நிறைக்கப்பட்ட ஒரு நாடகமேடை போன்றது... இதெல்லாம் மாயை என்று புரிந்த மனத்தில் மட்டுமே ஞானம் உதயமாகின்றது.. ஞானம் உதயமான மனது பின்னர் பிறப்பு பற்றி சிந்திப்பதில்லை. அதை விரும்புவதுமில்லை...நம் கிராமப் பகுதிகளில் ஒரு சொல்வழக்கு உண்டு.. இப்பிறவியில் யாரொருவர்
ஆலய புணரமைப்புப் பணிகளில் ஈடுபடுகிறாரோ அல்லது புதிதாக ஒரு ஆலயத்தைக் கட்டுகிறாரோ அவருக்கு இதுவே ஏழாவது பிறப்பு.. அதாவது இறுதிப் பிறப்பு. மீண்டும் அவருக்கு பிறப்பு இல்லை.. என்று சொல்வார்கள்.. ஆலயத் திருப்பணிகளில் அத்தனை சுலபமாக ஈடுபட்டுவிட முடியுமா? அதற்கு இறைவனின் அழைப்பு வேண்டும்.. அது இருந்தால் மட்டுமே சாத்தியம்..


அன்னையை நம்பி அவளது திருப்பணிகளில் ஈடுபடுவது என்பது பெரும்புண்ணியம்.. இன்றைய தினம் தமிழகத் திருக்கோயில்களில் பெரும்பாலானவை சுற்றுலாத்தலங்கள் போன்றும், திரையரங்குகள் போன்றும் மாறிக்கொண்டே வருகின்றன. இறைவனை அருகிருந்து
காண்பதற்கு ஒரு கட்டணம்.. அங்கே அமர்ந்திருந்து காண்பதற்கு வேறு கட்டணம்.சற்றே தொலைவிலிருந்து காண்பதற்கு ஒரு கட்டணம்.. மிகவும் தொலைவிலிருந்து காண்பதற்கு கட்டணம் ஏதுமில்லை... என்னவோ இவர்களது தந்தையும் தாத்தனும் தங்கள் சொந்தப் பணத்தில் ஆலயத்தைக் கட்டி வைத்ததைப் போன்று பேயாட்டம் போடுகின்றார்கள்.. சரி.. அவ்வளவு பணம் வருகின்றதே.. வருகின்ற பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவோமே என்ற எண்ணமும் அவர்கட்கில்லை.. செந்தூர் செல்லும் போதெல்லாம் ஆலயத்தின்
நிலையைக் கண்டு மனம் வருந்துவேன்.. கட்டணம் செலுத்தி அமர்ந்து குமரனைக் கண்டது ஒரேயொரு முறைதான்... திருமணம் முடிந்து கடல்நீராடி ஆலயவழிபாடு செய்யச் செல்லும்போது மட்டும்தான் அது நடந்தது. இதுபோன்ற நிலைமைகள் மாற வேண்டும்.. என்பதுதான் நமது விருப்பம். ஆலயத்திற்கென்றே வரும் வருமானம், ஆலயத்திருப்பணிகளுக்கே செலவிடப் படவேண்டும்.. ஆலயங்கள் குப்பைக்
கூடாரங்களாகிவிடக்கூடாது... அங்கே திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில் ஆலயத்தை அசுத்தம் செய்யும் கயவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். சரி அபிராமி அந்தாதிக்கு வருவோம்..

Images.jpgகாமாக்ஷி.jpg

"சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில்" ஒளிரும் பிறைச் சந்திரன் தங்கும் சடைமுடியையுடைய குன்றான சிவபெருமானின் மேல் "ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப்" ஒன்றிப் படரும் நறுமணம் வீசும் பசுங்கொடியை....எங்கள் அன்னையை... குன்றின் மீது பசுங்கொடி எங்ஙனம் படருமோ அங்ஙனம் அன்னையானவள் ஈசன் மீது படர்கின்றாளாம்.. கற்பனை வளத்தைப் பாருங்கள்...அதுவும் நறுமணம் வீசும் பசுங்கொடியாம்... அவளைப்... "பதித்து நெஞ்சில்"நெஞ்சில் நிலைநிறுத்தி "இடரும் தவிர்த்து" இடர்களெல்லாம் தவிர்த்து...அன்னையைத் தியானிக்க வரும்போது எழும் இடர்களையெல்லாம் தவிர்த்து...."இமைப்போது இருப்பார்" இமைப்பொழுதாகிலும் இருக்கும் தன்மை படைத்தவர்..."குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே" குடலும், இறைச்சியும்,குருதியும் நிறைந்த இவ்வுடம்பினை.... மானுடப் பிறப்பினை... "பின்னும் எய்துவரோ?" இனிமேலும் அடைவார்களோ...? அதெப்படி சாத்தியம்?? அமைதியாயிருக்கின்ற மனது தியானிக்க அமரும்போதுதான் அலைபாய ஆரம்பிக்கும்..அலைபாயும் மனதோடு அமர்ந்து, எழுகின்ற மாற்று எண்ணங்களையெல்லாம் தவிர்த்து, இமைப்பொழுதாவது... ஒரு நொடியாவது அன்னையை மனத்தில் நிறுத்தி தியானிப்போருக்கு மீண்டும் பிறப்பு இல்லை... என்பது அபிராமிப் பட்டரின் கருத்து... அப்படியாயின் அவளையே என்றென்றும் தியானித்திருக்கும் அபிராமிப் பட்டருக்கு???


தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்..


பாடல் நாற்பத்தொன்பது


குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே

விளக்கம்

நரம்பைக் கொண்டு இசையை எழுப்பும் இசைக்கருவிகளின் இசையாய் நின்ற அபிராமி அன்னையே... இந்த உடலில் குடியிருக்கும் உயிரானது காலதேவன் கொடுத்த காலக்கெடு முடிந்தவுடன் அவன் அழைக்க வரும்போது அஞ்சி நடுங்கும்..அவ்வமயம் நீ வளையல்கள் அணிந்த உனது அழகிய திருக்கரங்களை அசைத்து, அரம்பை முதலிய தேவமாதர்கள் சூழ வந்து நின்று அஞ்சாதே என்பாய்..முன்னர் பலமுறை அன்னையே.. நான் மரிக்கும் தருவாயில் உன் கணவரோடு வந்து காட்சியளிப்பாய். திருமணக்கோலத்தில் வந்து காட்சிதருவாய்... என்னை அஞ்சாதே என்பாய் என்று பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து அரம்பை முதலிய தேவமகளிரோடு வந்து காட்சியளிப்பாய்.. என்னை அஞ்சாதே என்பாய் என்கிறார்..


"நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே" நரம்பினால் ஆன இசைக்கருவிகளில் இசையாய் நின்ற எங்கள் அபிராமி அன்னையே... "குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி " உடம்பை அடிப்படையாகக் கொண்டு குடிபுகுந்த உயிர்... ஆன்மா... ஆன்மாவுக்கு என்றென்றும் அழிவில்லை... ஆன்மாவானது இறைவனோடு ஒன்றியிருக்கின்றது.. பின்னர் உலகத்தில் பிறப்பெடுத்து ஒரு உடம்பில் தங்கி பூலோக வாழ்வை அனுபவிக்கின்றது... அச்சமயம் உயிரானது உடம்போடு கொண்ட பந்தம் நெருக்கமாகிவிடுகின்றது. அவ்வமயம் உயிருக்குத் தெரிவதில்லை.. இது நமது நிரந்தரமான இடமல்லவென்று... எனவே நிரந்தரமற்ற இவ்வுடலைப் பேணுவதிலும், அவ்வுடலின் இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலுமே உயிரின் கவனம் செல்கிறது.. எனவேதான் மரணம் நேரும்போது அச்சம் மனத்தில் குடி கொள்கிறது. இதைத்தான் "வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும்" உடம்புக்கென்ற ஒரு காலக்கெடுவை காலதேவன் நிர்ணயித்துள்ளான்..


அந்த காலக்கெடு முடியும்போது நாம் விரும்புகிறோமோ இல்லையோ அவன் வந்து அழைத்துச் சென்று விடுகிறான். கோபம் நிறைந்த காலதேவன் தான் கொடுத்த வரம்பு நிறைவடையும்போது வந்து அழைக்கின்றான். அப்போதுதான் உயிரானது அஞ்சி மறுகுகிறது என்கிறார்... "அப்போது " அந்த சமயத்தில் "வளைக்கை அமைத்து" வளையல்களை அணிந்த உனது அழகிய திருக்கரத்தை அசைத்து... "அரம்பை அடுத்த
அரிவையர் சூழ வந்து " அரம்பை முதலிய தேவ மகளிர் புடைசூழ வருவாய்.. வந்து "அஞ்சல் என்பாய்" அஞ்சாதே மகனே என்றிடுவாய்... மரணபயத்தை.. இசையாகிய நீயே போக்குவாய்... என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர்.

மாதங்கி.jpg

பாடல் ஐம்பது


நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

விளக்கம் :

அன்னை அபிராமியானவள் உலக நாயகி, பிரம்மசக்தியாகத் திகழ்பவள், திருமாலின் சக்தியுமானவள், அழகிய திருக்கரங்களில் ஐந்துவித மலரம்புகளைத் தாங்குபவள், சம்புவான சிவனின் சக்தி.. சங்கரனின் மனைவி.. அழகு நிறைந்தவள், கொடிய நச்சினை வாயில் கொண்ட பாம்பினைக் கொண்டிருப்பவள், பலவிதமான மாலைகளை அணிந்த மாலினி.. உலகை இரட்சிக்கும் வாராகி, திரிசூலத்தை ஆயுதமாகக் கொண்டவள், மாதங்க முனிவரின் மகளாக உதித்தவள் என்ற பலவிதமான புகழினைக் கொண்டவள்.. அவளது திருப்பாதங்களே நமக்கு என்றென்றும் அரண்.அன்னையின் பல்வேறு திருநாமங்களைப் பாடும் இப்பாடல் மிகவும் அருமையானது..மீண்டும் மீண்டும் பாடத்தோன்றுவது..


"நாயகி" உலகத்தின் நாயகியானவள்... "நான்முகி" நான்முகனான பிரம்மனின் சக்தியாகவிளங்குபவள்.. "நாராயணி" நாரணனின் சக்தியாக விளங்குபவள்..(நாராயணனின் தங்கையானவள் என்றும் சொல்வார்கள்) "கை நளின பஞ்ச சாயகி.."நளினமான திருக்கரங்களில் ஐந்துவித மலரம்புகளைத் தாங்குபவள்.. அவ்வைந்து மலரம்புகளைப் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கின்றோம்.."சாம்பவி" சம்புவான சிவபெருமானின் சக்தி... "சங்கரி.." சங்கரனின் மனைவி... "சாமளை.." அழகிய வடிவுடையவள்..."சாதி நச்சு வாயகி " கொடிய நச்சு நிறைந்த வாயையுடைய
பாம்பினைக் கொண்டவள்.. பாம்பு ரதமேறும் பார்வதியானவள்.. "மாலினி .."பலவித மாலைகளை அணிந்தவள்.. "வாராகி" உலகைக் காக்கும் வராக உருவினள்,.."சூலினி" திரிசூலமேந்தும் மாகாளி.."மாதங்கி" மாதங்க மாமுனிவர் செய்த தவத்தால் அவருக்கு மகளாகப் பிறந்தவள். " என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே" என்று பல்வேறு புகழ்ப்பெயர்களைக் கொண்ட எங்கள் அபிராமியன்னையின் திருப்பாதங்களே எங்களுக்கு அரண்.. பாதுகாவல்...இந்த பாடலை கண்கள் மூடி ஒருமுறை பாடிப் பாருங்கள்.. அன்னையின் பல்வேறு
திருவுருவங்கள் நம் கண்ணெதிரே தோன்றி வியப்பளிக்கும்..
Varahi.jpeg


தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்..

எழுதித் தயாரித்தது திரு மு. கந்தசாமி நாகராஜன்.


--Geetha Sambasivam 09:05, 11 மார்ச் 2011 (UTC)


Contributors

Geetha Sambasivam

This page was last modified on 17 March 2011, at 11:58. This page has been accessed 3,029 times.