அபிராமி அந்தாதி விளக்கவுரை 10

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பாடல் முப்பத்தைந்து

Imagesmahalaxmi.jpg

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே

விளக்கம் :

அபிராமி அன்னையே... திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் கண்களையுடைய பாம்புப் படுக்கையின்மேல் துயில் கொள்ளும் பரம்பொருளே...
பிறைச் சந்திரனின் மணம் வீசும் உனது சிறிய பாதங்களை எந்தன் தலைமேல் வைக்க நாங்கள் என்ன தவம் செய்தோம்...? எண்ணுதற்கியலாத அமரர்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமோ? "திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி" பிறைச் சந்திரனின் மணம் வீசும் சிறிய பாதங்கள்... அன்னை அபிராமியைக் குழந்தையாகக் காண்கிறார் அபிராமி பட்டர். அபிராமிப் பெண்ணின் சிறிய திருப்பாதங்கள் பிறைச் சந்திரனின் மணம்
வீசும் தன்மை படைத்தவை.. (எங்கள் சுப்பிரமணியபுரத்தில் அருளாட்சி செய்யும் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் பலருக்கும் சிறு குழந்தை வடிவில் காட்சியளித்துள்ளாள்.) பெருமை பெற்றுள்ள அன்னையின் சிறிய திருப்பாதங்கள் என்ன செய்கின்றனவாம்?? "சென்னி வைக்க" எந்தன் தலைமீது வைக்கின்றாள்..


உனது அழகிய திருப்பாதங்களை எங்கள் தலைமீது வைக்க நாங்கள் என்ன தவம் செய்து விட்டோம்?? என்று வியந்து பாடுகிறார்... அவளைத் தன் தலைமேல் ஏற்பது... ஆனால் அபிராமிப் பட்டரைப் பொறுத்தவரையில் அன்னையே அவரைத் தேடிவந்தாள்... அன்னையவள் தானே வலியவந்து தனது பொற்பாதங்களை அபிராமி பட்டரின் தலைமீது வைத்ததாக முன்னரொரு பாடலில் குறிப்பிட்டார் அல்லவா??
இவ்விடத்து அவள்தனது திருவடிகளைத் தன் தலைமீது வைக்க என்ன தவம் செய்தேன் என்று வியந்து பாடுகிறார்.. எண்ணிக்கையிலடங்காத அமரர்களுக்கும் இவ்வரிய பாக்கியம் கிட்டியதில்லை... ஆனால் எனக்குக் கிடைத்திருப்பதற்கு நான் என்ன தவம் செய்தேன்!... "தரங்கக் கடலுள் வெம் கண் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே " திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் கண்கள் படைத்த ஆதிசேடன் என்னும் பாம்பையே படுக்கையாகக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் பரம்பொருளே.... இதென்ன விந்தை.... ? திருப்பாற்கடலுள் பாம்பணை மேல் பள்ளி கொண்டிருப்பவன் அந்தத் திருமகளைத் தன் திருமார்பில் கொண்ட திருமால் அல்லவா?? ஆனால் ஏன் பட்டர் அன்னையை அவ்வண்ணம் விளிக்கின்றார்? என்ற வினா எழுகின்றது... அன்னை ஆதிபராசக்தியே வைஷ்ணவி என்னும் திருநாமத்தோடு
திருமாலின் அம்சமாகக் காட்சியளிக்கின்றாள்..என்னும் விடையை அன்னை நமக்குத் தந்தருளுகின்றாள்...அன்னை தானே திருமாலாகவும்
காட்சியளிக்கின்றாள்..


பாடல் முப்பத்தாறு


பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே


விளக்கம் :

அழகிய தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் அம்பிகையே... அபிராமி அன்னையே... நீயே பொருளாகவும் இருக்கிறாய். அப்பொருளால் மாந்தர் பெறும் போகங்களாகவும் இருக்கின்றாய்.. அப்போகத்தால் அவர் மயங்கும் மயக்கமாகவும் இருக்கின்றாய். அம்மயக்கத்தின்பின் உண்டாகும் தெளிவாகவும் இருக்கின்றாய். என் மனத்தில் வஞ்சகம் எனும் இருளை இல்லாது நீக்கிய பேரொளியான உனது பேரருள் என்னவென்று என்னால் அறியமுடியவில்லை...அன்னையின் பேரருள் அளப்பறியது... உலக மாந்தர்க்கு வேண்டிய பொருட்செல்வத்தை அன்னை
தந்தருளுகின்றாள். அன்னையே அப்பொருட்செல்வமாக நிற்கின்றாள். ஆனால் நல்வழியில் செல்லவேண்டிய மனமானது பொருட்செல்வம்
அதிகமானதும் போகத்தை நாடுகின்றது.. அன்னையே அப்போகமாகவும் நிற்கின்றாள். போகம் அதிகமாகும் போது மனம் மாயையில் சிக்கி மயங்குகின்றது... அச்சமயம் அன்னையே அம்மாயையாக நிற்கின்றாள். மயக்கத்தின் பின் தெளிவு உண்டாகிறது...


அம்மையே அத்தெளிவாகவும் இருக்கின்றாள்... நோயும் அவளே.. நோய்க்கு மருந்தும் அவளே... இதென்ன விந்தை...! பொருட்செல்வத்தைக் கொடுத்து, போகத்தைக் கொடுத்து, மாயையில் சிக்கவைத்துப் பின்னர் தெளிவினைத் தருவதற்கு, முதலிலேயே அவள் தெளிவினைத் தந்தால் என்ன? எனும் வினா இவ்விடத்து எழுகின்றது.. பட்ட பின்னர் வரும் ஞானமே சிறந்த ஞானம் என்பது ஆன்றோர் வாக்கு... எனவே பொருளைக் கொடுத்து இறுதியில் அருளைக் கொடுத்துத் தெளிவாக்குபவள் அன்னை அபிராமியாக நிற்கும் பராசக்தி... ."என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன்" உனது அருள் என்னும் பேரொளியால் என் மனத்தில் இருந்த வஞ்சனை என்னும் இருள்... அல்லது என் மனத்தை வஞ்சித்த மாயை என்னும் இருள்... இல்லாது போனது... அப்படிப்பட்ட உனது பேரருள் என்ன என்பது
எனக்குப் புரியவில்லையே அம்மா... மனித மனம் பல்வேறு நிலைகளில் மாற்றமடைகின்றது. பொருளிருக்கும் மாந்தரிடத்து அதைத் தக்கோர்க்குத் தரவேண்டுமென்ற அருள் இருப்பதில்லை... இன்னின்னாருக்கு இதைத் தந்தருள வேண்டும் என்ற மனம் படைத்த மாந்தரிடம் அதற்குத் தகுந்த பொருள் இருப்பதில்லை...


எவ்விடத்து பொருட்செல்வமும், அருட்செல்வமும் கூடி வருகின்றதோ... அவ்விடத்து அன்னையின் பேரருள் உள்ளதென்று உலகம் அறியும்...
மனத்தை அடக்க வழி கற்றோரே பெரியோர் ஆவர்... மனம் அடங்குவதில்லை... ஆனால் அது அன்னையின் பேரொளியால் நிரம்பும்போது அவ்விடத்திருந்த மாயை என்னும் இருள் அகன்று போகின்றது. அன்னையே நம்மை அருளாட்சி செய்கின்றாள்... அன்னை நம்மை ஆண்டு கொண்ட பின்னர் மாயை நம்மை அண்டிடுமோ?? என் மனத்தை உனது அருளெனும் பேரொளியால் நிரப்பிய அன்னையே... உந்தன் அருள்யாது??? பொருளா?? பொருள் தந்திடும் போகமா?? அப்போகத்தால் விளையும் மருளா?? மருளழியும் வேளை வரும் தெளிவா?? என்னால் அறியமுடியவில்லையே..... அழகிய தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் அம்பிகையே... என் அபிராமி அன்னையே.....


தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம்...

Kamakshi.jpeg

-- பாடல் முப்பத்தேழு


கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.


விளக்கம் :

அபிராமி அன்னையே.. எட்டுத்திசைகளையும் ஆடைகளாக அணியும், எல்லா செல்வங்களையும் உள்ளடக்கிய சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே... நீ உன் திருக்கரங்களில் அணிவது கரும்பும் மலர்களும்... தாமரை போன்ற உன் அழகிய திருமேனிக்கு நீ அணிவது வெண்ணிற முத்து மாலைகள். விஷம் நிறைந்த நாகத்தின் படம் போன்றிருக்கும் உன் இடையில் நீ அணிவது பல்வித மாணிக்கங்களால் ஆன
மேகலையும், பட்டும். இந்த பாடலில் அன்னை அபிராமி அணியும் அணிகலன்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.. கன்னல் எனும் பதம் கரும்பினைக் குறிப்பதாகும். அன்னையே.. நீ உன் திருக்கரங்களில் அணிவது இனிமை தரும் கரும்பும் மணம் வீசும் மலர்களும்... கரும்பினாலான வில்லைத் தமது ஆயுதங்களாகக் கொண்டவர்கள் இருவர்... அன்னை ஆதிபராசக்தியும், மன்மதனுமாகிய இவர்களே... அன்னையானவள் தனது கரத்தில் கரும்பு வில்லையும், ஐந்து மலர்க்கணைகளையும் வைத்திருப்பது எதற்காக??? அன்னையின் கையிலுள்ள கரும்பு வில் நம் மனத்தினைக் குறிக்கின்றது.


மனித மனம் இனிமையானது. மேலும் இந்திரியங்களுக்காக எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கக் கூடியது.. இப்படிப்பட்ட நமது மனது
அது போன போக்கில் வளைந்து கொண்டிருந்தால் என்ன நடக்கும்? ஐம்புலன்களின் கட்டுபாட்டில் மனம் இயங்கத் தொடங்கிவிட்டால் சிற்றின்பத்தில் திளைத்து நாம் மானிடராய்ப் பிறந்ததற்கான காரணத்தை மறந்து போவோம்... அன்னையே... என் மனத்தை உன் கரங்களில் சேர்ப்பிக்கிறேன்.. உன் இச்சைப்படி அதை வளைத்துக்கொள்... என் ஐம்புலன்களை ஐந்து மலர்க்கணைகளாக உனது கரத்திலேயே
சமர்ப்பிக்கிறேன்.. நீயே அவற்றை உன் இச்சைப்படி ஏவு... என்ற வேண்டுதல்களுக்காகத்தான் அன்னை தனது கையில் கரும்பு வில்லையும்,
மலர்க்கணைகளையும் தரித்துள்ளாள். மாறாக நம் மனம் மன்மதனின் கைக் கரும்பாக மாறி விட்டால் என்னவாகும்?? மனம் இந்திரிய சுகங்களில் ஈடுபட்டு தன்னிலை மறந்து போகும்.. எனவே நம் மனத்தை அன்னையின் கையில் ஒப்படைப்போம்...


"கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை" அழகிய தாமரை போன்ற நின் திருமேனியில் நீ அணிவது வெண்ணிற முத்துமாலை... முத்துக்களால் ஆன மாலைகளை அன்னை அபிராமி தனது திருமேனியில் அணிவது எதற்காக? முத்துக்களைப் போன்ற
உயர்ந்த மனத்தவனாக இரு என்று நம்மை அறிவுறுத்துவதற்காகத்தான். "விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும்" விஷங்கொண்ட நாகத்தின் படத்தை ஒத்திருக்கும் உனது இடையில் நீ பல்வேறு மாணிக்கங்களாலான மேகலையையும் பட்டையும் அணிந்திருக்கின்றாய்..."எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே. " நீ விலைமதிப்பற்ற அணிகலன்களை அணிந்திருக்கிறாய்... ஆனால் எல்லா செல்வங்களையும் கொண்டிருக்கும் ஈசனோ எட்டுத்திக்குக்களையே தன் ஆடையாகக் கொண்டிருக்கின்றான்.. அந்த ஈசனது இடப்பாகத்தில் சேரும் என் அபிராமி அன்னையே.... நீயோ சகல ஐஸ்வர்யங்களையும் காண்பிக்கும் உயர்ந்த அணிகலன்களை
அணிந்திருக்கின்றாய்.. ஆனால் எல்லா செல்வங்களையும் உடையவனான (உன்னையும் சேர்த்து) ஈசன் மிக எளிமையான தோற்றம் கொண்டவனாக இருக்கின்றான். நீ அவனது இடப்பாகத்தில் சேர்ந்திருக்கின்றாய்....


பாடல் முப்பத்தெட்டு


பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே


விளக்கம் :

எங்கள் அன்னை அபிராமி பவளக் கொடியில் பழுத்த பழம் போன்ற சிவந்த வாயினை உடையவள். முத்து போன்ற பற்கள் தெரியும் படியான குளிர்ச்சி தரும் புன்னகை புரிபவள். தனது மெல்லிய இடை நோகும்படியான திருமுலைகளைக் கொண்டவள்.. இவற்றின் துணையாகக் கொண்டு எங்கள் ஈசனாம் சங்கரனைத் துவண்டு போகும்படி செய்தவள்... அவளைப் பணிந்தால் அமரலோகம் ஆளலாம்.. உலகத்தோரே...
எங்கள் அன்னையைப் பணியுங்கள்...அன்னையின் பேரழகினை இப்பாடலில் அழகுற வர்ணனை செய்கிறார் அபிராமி பட்டர். அன்னையின் பேரழகு சங்கரதேவனின் தவத்தைக் கலைத்ததாம்.. முன்னரொரு பாடலில் அபிராமிப் பட்டர் என்ன உரைத்தார்? எல்லாவிடத்தும் வெற்றி பெறும் மன்மதனின் வெற்றியெல்லாம் தோல்வியுற்ற சங்கரனும் உன்னிடத்துத் தோல்வியுற்றான் என்று அன்னையைத் துதித்த அபிராமிப் பட்டர் இவ்விடத்து..."எங்கள் சங்கரனைத் துவளப் பொருது" என்கிறார்,


எங்கள் தந்தையான சங்கரனைத் துவளச்செய்தாய்...அவன் தவத்தைக் கலைத்தாய்... எவற்றின் துணையைக் கொண்டு இதைச் செய்தாய்??? பவளக் கொடியில் பழுத்த பழம் போன்ற சிவந்த இதழ்கள்."பனி முறுவல் தவளத் திருநகை" முத்து போன்ற பற்கள் தெரியும்படியான
குளிர்ச்சியான புன்னகை.... "துடியிடை சாய்க்கும் துணை முலை" மெல்லிய இடையைக் கீழே விழச்செய்யும் பாரமான திருமுலைகள்... இவற்றின் துணையோடு எங்கள் ஈசனை துவண்டு போகச் செய்தாள் எங்கள் அன்னை அபிராமி... "அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே" அவளைத் தொழுங்கள் உலகத்தாரே.... ஏன் தெரியுமா அவளைத் தொழுதால் அமரலோகம் ஆளும் பேறு பெறலாம். எனவே... அனைவரும் எங்கள் அன்னை அபிராமியைத் தொழுங்கள்.....என்று உலகத்தாருக்கு அன்புக் கட்டளையிடுகிறார் அபிராமிப் பட்டர்...

Devi.jpeg

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி...


எழுதித் தயாரித்தது திரு மு. கந்தசாமி நாகராஜன்.


--Geetha Sambasivam 04:49, 7 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 7 மார்ச் 2011, 08:33 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,687 முறைகள் அணுகப்பட்டது.