வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள் : ஆகஸ்ட் 31.2

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்


‘நாணயத்தில்’ வாழ்நெறி முதலீடு செய்து, நாணயங்களில் முதலீடு செய்யாத சான்றோர்களை மக்களும், வருங்காலமும் மறப்பதில்லை. நாணயங்களில் முதலீடு செய்து, ‘நாணயத்தில்’ வாழ்நெறி என்ற நற்பண்பை காற்றில் பறக்க விட்ட தீயோர்களையும், மக்களும், வருங்காலமும் மறப்பதில்லை. இன்று சொற்சிலம்பு சித்தர்கள் இந்தியாவில் நடமாடும் தருணத்தில், இந்த உண்மை நம்மை சுட்டுப்பொசுக்குகிறது. ஃபிலிப்பைன்ஸ் அதிபராக இருந்தபோது தன்னுடைய யோக்யதையை பதிவிரதை கற்பு காத்தது போல், காப்பாற்றி வந்த ரமோன் மாக்ஸேஸே அவர்கள் பற்றி சில வரிகள். அவர், ஆகஸ்ட் 31, 1907 அன்று பிறந்தவர்;. ஐம்பது வருட வாழ்க்கைக்குள் எத்தனை சாதனைகள்! அவரது நூற்றாண்டு விழா 2007 இல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ‘ஆசிய நோபல் பரிசு’ எனப்படும் பரிசில் ஒன்று வருடா வருடம் பல துறைகளில் அளிக்கப்படுவதால், அவரை அமரர் எனலாம். அன்னா ஹசாரேயுடன் இணைந்து போராடுபவர்களில் இருவர், இந்த பரிசில் பெற்றவர்கள்: கிரன் பேடி & அர்விந்த் கேஜ்ரிவால்.

                                                                                                    
6c201efaf928c4db315bee1e4002a646d5714f13.gif

அவரை பற்றி பிற்கால அதிபரொருவர் ஆகஸ்ட் 28, 2001 அன்று கூறியது: “ அவர் ஒரு விண்மீன். பாமரனான அவர் என்றென்றும் நாம் வணங்கும் தலைவரானார்...சிக்கல்களை தீர்ப்பதில் வல்லவர்...நாணயம் அவர் கூட பிறந்த தன்மை...ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் கெரில்லா சண்டைகள் நடந்திருந்தாலும், அந்த போராளிகள் கூட இவர் மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தனர்...மக்களாட்சியின் போஷகர். ஏழைகளின் நண்பர்...கறார்; ஆனால் கழிவிரக்கம்...46 வது வயதிலே அதிபரான இளைஞர்... உடனுக்குடனே சீர்திருத்தங்களை தொடங்கினார்...வாய்மை, எளிமை, சுறுசுறுப்பு, அணுக எளிதானவர், ஆபத்பாந்தவன், வழுவமைதி ராஜ்யபாரத்தில்... மேக்ஸேஸேக்கு இணையுண்டோ?... அடிமட்ட மானிதர்களுக்கு ஓடோடி உதவிய அதிபர் இவர்...விமான விபத்தில் துரதிர்ஷ்டவசமாக, மார்ச் 17, 1957 அன்று இறந்த போது, மக்கள் வீதியிலும், தெருமுனைகளிலும், சாயாக்கடைகளிலும், கூடி, கூடி, சோகத்தை பகிர்ந்து கொண்டனர். இழந்தது, தற்கால மோசஸ் போன்ற தேசபிதாவை அல்லவா!


ஆனால் பாருங்கள். பிற்காலம் வந்த அதிபர் மார்க்கோஸ்ஸும், அவர் மனைவி இமெல்டாவும் நாட்டை சூறையாடினர். தற்காலம் லஞ்சலாவண்யம், ஊழல் நச்சுக்கேணி,, கறை படுத்திய பணம், மக்கள் தகுதியற்றவர்களை தேர்ந்தெடுத்த அவலம், இவற்றையெல்லாம் பார்த்து நாம் மனம் கலங்கும் போது, இந்த கசப்பான படிப்பினைகளை மறக்கலாகாது, பேராண்டி. விழித்திருந்தால் தான் பிழைத்திருக்கலாம்.


‘தமஸோ மா ஜ்யோதிர்கமய.’ ‘ஒளி படைத்தக் கண்ணினாய்! வா வா!’


சரி. போதனை போதும், மாக்ஸேஸே பரிசிலை பற்றி: அரசு ஊழியம், பொது ஜன சேவை, சமுதாயத்தில் தலைமை பொறுப்பு, இதழியல், இலக்கியம், படைப்பாற்றல், சமாதானம், சர்வதேச புரிதல் பணி ஆகிய துறைகளில், ஆசியர்களுக்கு மட்டும். 1957லிருந்து, வருடா வருடம். ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் சம்மதத்துடன், ராக்ஃபெல்லர் அறக்கட்டளை, இந்தப்பரிசை, வழங்குகிறது. 2000க்கு பிறகு, ‘தலையெடுக்கும் முன்னோடிகளுக்கு என்று ஒரு புதிய பிரிவு. இந்தியாவிலிருந்து இந்தப் பரிசு பெற்ற 48 சாதனையாளர்களின் பட்டியலை இணைத்துள்ளேன். அவர்களின் பலரின் வரலாறு நமக்கெல்லாம் படிப்பினையாக அமையும்

.

இன்னம்பூரான்

31 08 2011

உசாத்துணை:

http://www.mabuhayradio.com/philippine-presidency/remembering-president-ramon-magsaysay-y-del-fierro-a-modern-day-moses


http://www.usstampgallery.com/images/stamps/6c201efaf928c4db315bee1e4002a646d5714f13.gif








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:31, 31 ஆகஸ்ட் 2011 (UTC)


















Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 31 August 2011, at 11:34. This page has been accessed 2,929 times.