வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 5

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்


1972 ஆம் ஆண்டின் ஸெப்டம்பர் 5, ஒரு இருண்ட தினம், மருண்ட தினம். கரும்புள்ளி தினம். அன்று இருள் அகலும் முன் அதிகாலை 4 மணிக்கு ஜெர்மானிய ம்யூனிச் நகரத்தில், மருள் சூழ்ந்து கொண்டது. ஒலிம்பிக்ஸ் பந்தயங்களுக்காக உருவாக்கப்பட்ட கிராமத்தில், பாலஸ்தீனிய விடுதலை அமைப்பை சார்ந்த ‘கறுப்பு ஸெப்டம்பர்’ என்ற பயங்கரக்கூட்டத்தின் எட்டு ஆயுதபாணிகள் சுவரேறி குதித்தனர். இஸ்ரேலிய விளையாட்டுக்குழுவின் கட்டிடத்தைத் தாக்கி, 11 வீரர்களை பிடித்து வைத்துக்கொண்டனர். வீரர்கள் தாம். அவர்கள் சரணடையவில்லை. வலுவாக எதிர்த்தனர். இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டிமாண்ட்: இஸ்ரேல் 234 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும். வரலாறு காணாத கொடுமையான முற்றுகை. ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல. இந்த வன்முறை சோக சகாப்தம் இன்னும் ஓயவில்லை. ஒலிம்பிக்ஸ் ஆட்டம் தடைப் பட்டது. செயற்கைக்கோள்கள் வந்த புதிதா? 100 நாடுகளிலிருந்து 900 மிலியனர் ‘லைவ்’ தொலைக்காட்சிகளை கண்டனர். ‘அசிங்கமான ஈர்ப்பு’ என்றது, ஒரு நாளிதழ்.

                                                                                               
Ebay632.jpg

பாலஸ்தீனியர்கள் முதலில் இந்த ஈர்ப்பை விரும்பினர். ஆனால், ஜெர்மனியும், இஸ்ரேலும் லேசில் மசியவில்லை. மத்திய கிழக்கு பகுதிக்கு (எகிப்து?) போவதற்குக் கேட்ட விமானத்தை பெரிய விமான தளத்தில் தருவதாக வாக்குக்கொடுத்த ஜெர்மனி, ரகசியமாக, அவர்களை தாக்கத் திட்டமிட்டது. இஸ்ரேலின் வேவுத்துறை தலைவர் ஜ்வி ஜமீரும் வந்தடைந்தார். அவருக்கு ஜெர்மன் அணுமுறை சற்றேனும் பிடிக்கவில்லை. நடந்ததும் அதை உறுதி செய்தது. சில ஜெர்மானிய போலீஸ் பணியிடத்தில் இல்லை. மிஞ்சி இருந்தவர்களால், பாலஸ்தீனியருடன் ஈடு கொடுக்க முடியவில்லை. தோட்டாக்கள் பறந்தன. டென்ஷன் ஏறிற்று. தடபுடலாக வந்த ஜெர்மானியர் தங்கள் ஆட்களையே சுட்டு விட, அந்த வெடி சப்தம் ஆத்திரத்தை கிளப்ப, பல இஸ்ரேலிய பிணைக்கைதிகள் கொல்லப்பட்டனர். எங்கும் ஹீனக்குரல்கள். அவர்களின் 11 பேர். ஐந்து பாலஸ்தீனியர் & ஒரு ஜெர்மன் போலீஸ் காலி. இவ்வுலகை நசிக்க பயங்கரவாதம் கிளம்பிய தினமெனலாம்.

ஹிட்லரின் யூத வேட்டையை இஸ்ரேலுக்கு நினைவுறுத்தியது, இந்த படுகொலைகள். அன்னாடு பாலஸ்தீனிய ராணுவ தளங்களின் மீது, குடியிருப்புக்கள் மீது குண்டு மழை பொழிந்தது. போதாக்குறையாக, ஜெர்மனி மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க நேரிட்டது. இஸ்ரேலின் பிரதமர் கோல்டா மீர் சாமான்யப்பட்டவர் அல்ல. பல இந்திரா காந்திகளுக்கும், மார்கெரட் தாட்சர்களுக்கும் சமானம் என்பர், சிலர். (இங்க்ரிட் பெர்க்மென்னின் கடைசி திரைப்படம், இவருடைய வேஷத்தில்.) அவர் பழிக்குப் பழி தொடங்க, இருபது வருடங்களில் பல பாலஸ்தீனியர் கொல்லப்பட்டனர். அத்துடன் விட்டதா? ரோம், பாரிஸ், பேரூட். அதாவது இஸ்ரேலிய- பாலஸ்தீனிய மோதல்கள், உலகெங்கும். ஒரு சாம்பிள். எஹீத் பராக் என்ற இஸ்ரேலிய மின்னல் தாக்குப்படைத்தலைவர் பேரூட்டில் பெண் வேஷம் போட்டுக்கொண்டு அலைந்தார். பிற்காலம், அவர் இஸ்ரேலிய பிரதமரானார்.

இந்த ம்யூனிச் படுகொலை சம்பவத்திற்கு பிறகு, இஸ்ரேல், வைரிகளை இலக்கு வைத்து கொல்லத்தொடங்கியது -நம்மூர் போலீஸ் என்கெளண்டர் மாதிரி! ம்யூனிச் பயங்கரவாதிகளில் மிஞ்சிய மூவரில், இருவர் அவுட். அவர்களில் ஒருவரான அதெஃப் ப்ஸிஸோ பாரிஸில் 1992 இல் கொல்லப்பட்டான். இந்த குறி வைத்துக் கொல்வதை அமெரிக்கா 9/11 வரை ஆதரிக்கவில்லை. பிறகு, அவர்களும் அந்த அஸ்திரத்தை அநாயசமாக வீசத்தொடங்கி விட்டனர். ஒஸாமா பின் லேடன் ஞாபகம் இருக்கோ?

ஈற்றடி:

ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் அவர்களும், பீ.பீ.சி.யும் ம்யூனிச் படுகொலைகள் பற்றி திரைப்படங்கள் எடுத்துள்ளனர். அது சரி. உலகயே கொலைக்களம் ஆக்கிவிட்டது, இந்த ம்யூனிச் படுகொலையும், கோல்டா மீரின் ‘இறைவனின் ஆத்திரம்’ என்று நாமகரணம் செய்யப்பட்ட குறி வைத்தக் கொலைகளும்.

இன்னம்பூரான்

05 09 2011











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:01, 5 செப்டெம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 5 September 2011, at 13:04. This page has been accessed 3,033 times.