வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 12

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான் 


அஜந்தா என்போம்;எல்லோரா என்போம்; சித்தன்ன வாசல் என்போம். கொனரக் சூர்யன் என்போம்; கஜுரஹோ மன்மதராதனை என்போம்; கல்லும் வெட்டும் வரலாற்றுக்கு உறுதி என்போம்; நடுகல் நாடுவோம். இவற்றையெல்லாம் போற்றுதல் செய்யோம். வாய்சொல்லில் கூட கலையார்வம் உதட்டசைவுடன் சரி. இத்தனைக்கும், நமது கலையார்வ மரபு தொன்று தொட்டு வரும் பண்பு. புராதனத்தை பாதுகாக்கும்/ஆய்வு செய்யும் அரசு/தன்னார்வ நிறுவனங்களின் திறன் அறியப்பட்டதே. இருதரப்புக்கும் திறன் உண்டு. முன்னவருக்கு ஆர் வம் குறைந்து விட்டது. பின்னவரிடம் செல்வமில்லை. புராதனச்சின்னங்களை கண்ணின் மணி போல் பாதுகாக்கும் ஆர்வம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால், நாசகார கும்பல்களல்லவா அவற்றை அழிக்கின்றன. ஒரு முறை சாரநாத் என்ற புனித தலத்தில், அசோகச்சக்ரவர்த்தியின் தூணை (நம் நாட்டு அரசு சின்னம்) பார்க்கையிலே, ஒரு ‘இந்தியன்’ அதன் ஸ்தலத்தில் எச்சில் உமிழ்ந்தான். நான் அவனை அறைந்தேன். போலீஸ் வந்தது. மக்கள் அவன் பக்கம்! விதுஷா என்ற மத்தியப்பிரதேச நகரின் ம்யூசியம் காணச்சென்றோம். எல்லாம் சிதறிக்கிடந்தன. ஆழம் தெரியாமல், அந்த க்யூரேட்டர் பள்ளி மாணவியான என் மகளின் ஆர்வம் கண்டு, அவளை கருத்து எழுதச் சொன்னார். “அருமையான சேகரம். அசட்டையான பராமரிப்பு” என்று எழுதினாள். பான் ஜொள்ளு வழிய சிரித்தாரே தவிர, ரோஷமே இல்லை! தஞ்சை பெரிய கோயிலில் அம்பாள் சன்னதி விதானத்தின் ஓவியங்களின் மீது புகை. சித்தன்ன வாசலில் ஓவியங்கள் மேல் கிறுக்கல். கள்ளழகர் பள்ளியறையோ தந்தச்சிற்பம். புகையால் கறுத்தது. இருக்கிறதோ? இல்லையோ? ஆத்திகர்கள் கூடும் எந்தக் கோயிலிலும் சிலாபங்கங்கள்! நம் ஜனங்கள் எல்லாருமே மாலிக் கஃபூர்கள். சரி. ஃபிரான்ஸுக்குப் போவோம், லஸ்கா குகை ஊவியம் காண்க.

                                                                                                               
Bhimbetka1.JPG

தற்செயலாக ஸெப்டம்பர் 12. 1940 அன்று நான்கு இளைஞர்கள் கண்டு பிடித்த சித்திரக்கூடமிது. எழுபது வருடங்கள் கடந்தன. அது 17 ஆயிரம் வரலாற்றில் ஒரு விநாடி என்க. அவர்களில் இருவர் சிரத்தையுடன் காவல் காத்தனர். எட்டு வருடங்கள் பின்னர் அதை பொது பார்வைக்கு வைத்தபோது, வழிகாட்டிகள் ஆயினர். ஏழே வருடங்கள். பார்வையாளர்கள் விட்ட பெருமூச்சிலிருந்த கரியமிலவாயு ஓவியங்களை பாதித்தது. 1963 இல் மையத்தை மூடி, ஒவியங்களை புனருத்தாரணம் செய்தார்கள். அங்குள்ள ஓவியங்கள் 17,300 வருடங்கள் பழமையானவை என்று கருதப்படுகின்றன. இந்த குகை ஓவியங்கள் யுனெஸ்கோ மரபு தலங்களில் ஒன்றாக 1979 ல் அறிவிக்கப்பட்டது. 1998 இல் ஒரு ஃபங்கஸ் பிரச்னை ~ குளிர்சாதனத்தின் பக்க விளைவு?/ அதீத செயற்கை வெளிச்சம்?/ விசிட்டர்கள்? 2008ல் மறுபடியும் மூடு விழா. தற்காலம், மராமத்து செய்ய வல்லுனர்களுக்கு மட்டும் அனுமதி. ஆனால், மராமத்தும் பிரச்னைகளை துவக்குகிறது. ஆக மொத்தம், அங்கே போனாலும் அவற்றை பார்க்க இயலாது. எனவே, உசாத்துணையின் உதவியுடன், மொழி யாதாயினும், நிதானமாக் சென்று, இந்த சித்திரக்கூடத்தை கண்டு களியுங்கள். நாமும் ஏன் நமது புராதன சித்திரக்கூடங்களை எல்லாம் பதிவு செய்து, அவற்றிற்கு இறவாப்புகழ் தேடிக்கொடுத்து, இவ்வாறு அமர காவியங்கள் படைக்கலாகாதா என்ற வினா எழுப்புங்கள். இந்த அளவுக்கு போற்றி பாதுகாக்கும் அக்கறை ஏன் வரவில்லை என்று சாடுங்கள்.
இணைக்கப்பட்டிருக்கும் இந்தியா/மத்தியப்பிரதேசத்தில் உள்ள 9000 வருடங்களுக்கு முந்திய பீம்பேட்கா குகை ஓவியங்களையும் காண்க. மற்றதெல்லாம் சமீப கால வரலாறோ என்று வியக்கும் வகையில் இருப்பதாக, உலகெங்கும் இருக்கும் 10/15 ஆயிரங்கள் வருடங்களுக்கு முந்திய குகை ஓவியங்களின் அபார ஒப்புமையை கூறலாம்!


இன்னம்பூரான்
12 09 2011







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:05, 12 செப்டெம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 12 September 2011, at 15:16. This page has been accessed 1,506 times.