வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: டிசம்பர் 29:

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்


 ‘எங்கிருந்தோ வந்தான்!’


‘மனிதகுலம் ஒன்றே, தேவன் ஒருவனே’ என்று பறை சாற்றுபவர்கள் கூட அதை மனதில் கொள்வது எளிதன்று என்று அறிவர். முத்துப்பட்டன் கதை என்ற நாடோடி பாடல் இதை வள்ளிசாக முன்வைக்கிறது. அந்தணனொருவன் இரு சக்கிலியப்பெண்களை மணக்கிறான். மாமனிடம், குலம் பெயர்ந்து வந்ததை செயல் மூலம் உணர்த்துகிறான். காதலில்லையேல் அது சாத்தியமா என்ற ஐயம் எழுகிறது. இந்த இனபேதத்தின் ஆழம் காண, மற்றொரு உதாரணம். திரு.வி.க. அவர்கள் தன் பெயரிலிருந்து ‘முதலியார்’ அடைமொழியை எடுத்த ‘மனிதகுலம் ஒன்றே’ கட்சிக்காரர். அவருடைய பெயரில் உள்ள அமைப்பு ஒன்று முதலியார் சமூகத்திற்குள் மட்டும் திருமணங்கள் முடிப்பதற்காக இயங்குகிறது! இது நிற்க. இன்றைய விஷயம் அயர்லாந்தை பற்றி. ஏன் என்றால், என் தந்தையை நினைத்துக்கொண்டேன். அவர் தானே ஈமன் டி வேலராவின் வாழ்க்கைச்சரிதம் ( ஓரணா! ராமுலு பிரசுரம்: 25 பக்கங்கள்:தமிழ்/ஆங்கிலம்: மலிவு காகிதம்) வாங்கிக்கொடுத்து, சின்ன வயதில் தேசாபிமானத்துக்கு வித்திட்டார். ஈமன் டி வேலரா தான் விடுதலை போராட்டமன்னன், 1917லியே.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை ஒரு வெண்குடையின் கீழ் இருந்தாலும் ஓரளவுக்கு தனித்துவம் பாராட்டுபவை. அவரவர் மொழி வேறுபாடுகளை கவனமாக பாதுகாப்பார்கள். அயர்லாந்து முழுதும் இந்த வெண்குடை கீழ் தான் இருந்தது, ஒரு காலத்தில். ஆனால்,மக்களின் குணாதிசயங்களில் பல வேற்றுமைகள் காணலாம். முதலில் சமயம். இங்கிலாந்து கிருத்துவத்தின் ப்ராடெஸ்டெண்ட் பெரும்பாலும்; அல்லது ஆத்திகமற்றவர்கள். ஐயர்லாந்தில் கத்தோலிக்கர்கள் தான் அதிகம். இங்கிலாந்து செல்வந்தன். ஐயர்லாந்து ஏழை. இருதரப்பும் நகைச்சுவை உள்ளவர்கள். இங்கிலாந்தில் அடக்கி வாசிப்பார்கள். ஐயர்லாந்தில் அமர்க்களம். சுதந்திரம் என்றால், இங்கிலாந்தில் உள்ளூர் பரவசம். ஐயர்லாந்தில் உலகளாவிய ஆவேசம். தேசாபிமானம் இப்படி சஞ்சரிப்பதால், அவர்கள் எத்தனை நாட்கள் ஒரே வீட்டில் வாசம் செய்ய முடியும்?

1917ல் பிரிவினை வாதம் தலையெடுத்தது. அடுத்த வருடம் ஸின் ஃபைன் என்ற பிரிவினை கட்சி பெரும்பான்மை பெற்று பிரிட்டீஷ் பார்லிமண்டை பாடாய் படுத்தியது. 1919ல் அங்கிருந்து விலகி, டப்ளினில் சுய பார்லிமெண்ட் அமைத்தார், ஈமன் டி வேலரா. மக்கள் ஆதரவு அபரிமிதம். சோவியத் ரஷ்யாவை தவிர, மற்ற நாடுகள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தன. ஒரு போர் கூட இங்கிலாந்துடன். 1921ல் ஒரு அரைகுறை விடுதலை உடன்படிக்கை. வெகுண்டு, ஈமன் டி வேலரா விலகினார். ஏனென்றால், 1922 வது வருட அரசியல் சாசனம் பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் ஆளுமையை ஏற்றுக்கொண்டது. அதை ஒத்துக்கொள்ளாத ஈமன் டி வேலரா, ஒரு புதிய அரசியல் சாஸனம் வகுக்கத்தொடங்கினார். இன்னல்கள் பல தரக்கூடிய இங்கிலாந்தின் அரசர் எட்வர்ட் VIII முடி துறந்த கால கட்டம். அவர்களுக்கு இன்னல். ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்று ஈமன் டி வேலரா தன் வேலையை துரிதப்படுத்தினார். உருவானது: Bunreacht na hÉireann (அரசியல் சாஸனம்). அன்றைய தினம் டிசம்பர் 29, 1937. ஏதோ இஸ்பேட் ராஜாவாக தொடர்ந்து இருந்த பிரிட்டீஷ் தொடர்பும், ஐரிஷ் குடியரசு சட்டம் 1948, ஏப்ரல் 18, 1948 அன்று அமலுக்கு வந்த போது அறுந்து போயிற்று. ஆக மொத்தம் கிடைத்த பலன்கள்:

குடியரசு 2. தேசாபிமான வெற்றி. 3. ஏழை செல்வந்தனான விந்தை 4. இங்கிலாந்துடன் வணிக தொடர்புகள். 5. அடாது விடுபட்டாலும், விடாது தொடரும் வடக்கு அயர்லாந்து பிரச்னைகள்.


இன்னம்பூரான்

29 12 2011


http://upload.wikimedia.org/wikipedia/commons/6/67/Irish_Stamp_2_Two_Pence_Overprint.jpg


http://www.legacymemorabilia.ie/uploads/media/product-images/De-Valera-Time(scan).jpg


உசாத்துணை

http://www.taoiseach.gov.ie/attached_files/Pdf%20files/Constitution%20of%20Ireland.pdf







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 08:32, 30 டிசம்பர் 2011 (UTC)










--

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 30 December 2011, at 08:33. This page has been accessed 2,130 times.