வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஜூலை 30

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்


நிலம், உழைப்பு, முதல், கட்டிமேய்ப்பது ஆகிய நான்கு தளங்கள் தான் பொருளுக்கும், செல்வத்திற்கும் ஆதாரம் என்று பழைய பொருளியல் கூறுகிறது. பிற்காலம் வந்த சந்தை, சந்தை தந்த மொந்தை, சாண் போடும் முழம், ஆழம் தெரியாத கால், தலை கால் தெரியாத வாத பிரதிவாதங்கள், பொருளுக்கு ஆதாரம், தொன்னைக்கு நெய்க்கு ஆதாரம் போல, என்றெல்லாம் சிக்கல்கள் பல. போதாக்குறைக்கு, உலக ஜனத்தொகையை விட ஒரு நம்பர் அதிகமாம், பொருளாதார வல்லுனர் தொகை! எந்தா கஷ்டகாலம்! எந்தா இழுபறி! இந்த அழகில் ‘கூட்டலாக்கத்திணை’ (entrepreneur) என்ற சொல்லின் வேர் ஃப்ரன்ச் மொழியாயினும், அந்த மொழியில் பொருள் காணாத சொல் இது என்றாராம், ஜார்ஜ் புஷ். எனினும், எடுத்த காரியத்தை செவ்வனே திட்டமிட்டு, துணிவுடன் செய்து காட்டி, நேரடியாக கண்ணுக்கு புலப்படும் நிலம், உழைப்பு, முதல் ஆகிய மூன்றுக்கும் மதிப்பு கூட்டுபவர்களே, கூட்டலாக்கத்திணை தலை மாந்தர்கள். அவர்களிலும் தரம் உயர்ந்தோர், நவீன உத்திகளை புகுத்தி, ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல் மாதிரி, வானாளவ பறந்து, பொருளாதார சிகரமாக திகழ்வர். பொருளியலில் இத்தகையோரின் மேன்மையை உரைத்தாக வேண்டும் என்று கங்கணம் கட்டியவர் வில்லியம் பெளமோல். 2006 வருட அமெரிக்க பொருளியல் கூட்டத்தில் அதிகப்படியாக பேசப்பட்டதே, இந்த கூட்டலாக்கத்திணை தான். ஷம்பீட்டர் (Schumpeter) என்ற பொருளியல் சிந்தனையாளர் சொல்லை கேளுமையா, “சந்தை நிர்ணயிக்கும் விலையை சற்றே இறக்கித்தான் மதிப்பீடவேண்டும். குறைந்த விலை மட்டும் பொருட்டல்ல. நவீன சாதனங்களும், நவீன வழிமுறைகளும் தான் முக்யம். அவை கம்பேனிகளின் வரம்புகளை மட்டும் பாதிப்பதில்லை. அவற்றின் அடித்தளத்தையும், உயிர்மையும் பாதிப்பவை என்றார். நோ மோர் எகனாமிக்ஸ் ப்ளீஸ்!

                                                                                                     
Ford-model-t-1a.jpg

ஸ்டாலின் என்றதொரு ‘கம்யூனிஸ்ட்,’ இரண்டாவது உலக யுத்தத்தில் நம்மடவர்கள் வெற்றிக்குக் காரணம், அமெரிக்காவில் பீடு நடை போட்ட நவீன உத்திகள் இரண்டு என்றார். அவை: 1. கொலு பொம்மை வரிசை போல செய்முறைகளை ஒன்றன் பின் ஒன்றாக, திட்டமிட்ட வரிசைப்படி மேம்படுத்துவது (அசெம்ப்ளி லைன்); 2. அவை மிதந்தபடி நகரும் லாகவம் (கன்வேயர் பெல்ட்). முற்றிலும் உண்மை. இந்த இரண்டு புதிய வரவுகளும் பத்தாம்பசலிகளின் அடித்தளத்தையும், உயிர்மையும் குதறி, புத்தம் புதிய வகையில், மோட்டார் கார் செய்வதின், திறன், தரம், வேகம் எல்லாவற்றையும் பல மடங்கு உயர்த்தின. 28 ஆயிரம் டாலர் முதல் போட்டு, 29 மிலியன் கார்களை உற்பத்தி செய்ததுமல்லாமல், யுத்ததிற்காக, பாம்பர் விமானங்கள், டாங்கிகள், ஜீப், ட்ரக், என்ஜின், தளவாடங்கள் எல்லாம் செய்து குவித்தவரை அறிவீரோ? இந்த சாதனையை செய்து, வானாளவ பறந்து, பொருளாதார சிகரமாக திகழ்ந்தவர் ஹென்ரி ஃபோர்ட் அவர்களின் ஜென்ம தினம், இன்று: ஜூலை 30, 1863. பிலியன் டாலர் சம்பாதித்து, உலக செல்வந்தர்களில் ஒருவரானார். உழைப்புக்கேற்ற, ஏன்?, சற்றே அதிகமான கூலி கொடுத்து, வேலை வாங்கும் நேரத்தைக் குறைத்து, செல்வத்துடன், நற்பெயரையும் ஈட்டியவர். தொழிற்சங்கம் என்றால் ஒவ்வாமை என்றும் இயங்கி, பிற்காலம், வளைந்து கொடுத்த முதலாளி, இவர். அமெரிக்கன் நாட்டுப்புறக்கலையை வளர்த்தவர். காலாகாலத்தில், கூர்மையான நோக்கும், கனிவும் நிறைந்த முனிவர் என்று போற்றப்பட்டவர். மாற்று திறவாளிகள், மாஜி வீரர்கள் மறுவாழ்வுக்கும், இளைஞர்கள் முன்னேற்றத்துக்கும் தூணாக நின்று உதவியவர். கருவூலங்கள் அமைப்பதில் அவர் காட்டிய சிரத்தையை புகழத்தான் வேண்டும். மின்சார பல்பை கண்டு பிடித்த எடிஸன், இவருடைய நண்பர். அந்த விஞ்ஞான சாலையையும், அமெரிக்க அதிபர் அப்ரஹாம் லிங்கன் வாதாடிய கோர்ட்டையும் வருங்காலம் பார்க்கவேண்டும் என்று பராமரித்த புண்ணியம் இவரை சாரும். இவருக்கு பிடித்தவையின் பட்டியல்: உலக நாடுகளிம் கூட்டமைப்பு, தொழிலுக்கு வந்தனை, உழைப்புக்கு ஊதியம், பயனளிக்கும் கல்வி, ஓரளவு புலனடக்கம், எளிய வாழ்க்கை. பிடிக்காதது: யுத்தம், புகையிலை, சாராயம். கொள்கை: ஒவ்வொருவருக்கும் வீடு, நிலம், நீச்சு,கார், வேண்டும். இவர் அளித்த நன்கொடைகள் இன்றும் சமுதாயத்திற்கு உதவுகின்றன.


ஐயாவை பற்றி ஒரு கொசுறு செய்தி: இவர் தன்னுடைய மாடல்-டி ஃபோர்ட் காருக்கு வாங்கும் உதிரிபாகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் தான் பேக்கிங்க் செய்து வரவேண்டும் என்று நிபந்தனை போட்டாராம். ‘காசு தரான், அசடு’ என்று கொஞ்சம் விலை ஏற்றி, அனுப்பினார்களாம். பிறகு தான் தெரியவந்ததாம், இவர் அவற்றை வண்டியின் தரையை அலங்கரிக்கும் விரிப்பாக, செலவில்லாமல், போட்டது! ரீடர்ஸ் டைஜெஸ்டில் என்றோ படித்ததாக நினைவு.


இன்னம்பூரான்

30 07 2011

ford-model-t-1a.jpg

http://www.musclecarclub.com/other-cars/classic/ford-model-t/images/ford-model-t-1a.jpg


உசாத்துணை:

http://www.economist.com/node/5601890?story_id=5601890

http://www.nytimes.com/learning/general/onthisday/bday/0730.html







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:34, 1 ஆகஸ்ட் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 1 August 2011, at 15:38. This page has been accessed 2,441 times.