வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 8 ~1

From மரபு விக்கி

Jump to: navigation, search
1510 Quit India Charkh.jpg
இன்னம்பூரான்


சொந்த அனுபவத்தையும், நினைவலைகளையும் முன்னால் வைத்து, தேசத்தின் வரலாற்றில் ஆணிவேர் போல் நிற்கும் ஆகஸ்ட் 8. 1942 புரட்சியை பற்றி எழுத லஜ்ஜையாகத்தான் இருக்கிறது. கண்ணன் சொல்வது போல் அது மைக்ரோ-ஹிஸ்டரி. இருந்து விட்டுப் போகட்டும். மற்றவர்களும் சொல்லட்டுமே. தற்காலம் தேசாபிமானம் இருக்கிறதோ இல்லையோ, 1947க்கு முன்னால், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்காவது பாமரமக்களிடையே, பட்டி தொட்டிகளில், அது நிரம்பி வழிந்த வண்ணமிருந்தது. உசிலம்பட்டியில், காவல் துறை அரசாங்க ஊழியனான என் தந்தை வீட்டிலும் அப்படியே. 1942ல் கலோனிய ஆட்சி தடபுடலாகத்தான் கோலோச்சியது. ‘காந்தி மஹான் கைது’ என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. ஆகஸ்ட் 9ம் தேதி காலையாக இருக்கலாம். ஒன்பது வயதான எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. என்னமோ பண்றது. அழுகை வரது. வயறு குமட்டுகிறது. வேறு ஒன்றுமில்லை. முதல் நாள் இரவு வேளை மட்டும் (சொல்ல வெட்கமாக இருக்கிறது.) இந்த காங்கிரஸ்காரர்கள் கைதை எதிர்த்து உண்ணாவிரதம். ராஜாஜி மீது இனந்தெரியாத கோபம். டிபுடி சூப்பிரண்டெண்ட் வெங்கடராமைய்யருக்கு என்னை இடக்கு பண்ணுவதில் ஒரு குஷி. அவர் கேலி பண்ண, பண்ண, நான் வெடித்துக்கொட்டினேனாம். அது ஞாபகத்தில் இல்லை.


இந்தியாவின் விடுதலை வேள்வியின் எஜமானர்கள் பலர் என்றாலும், காந்தி மஹானின் ஹோமத்தின் ஜ்வாலை மின்னொளி வீசியதை பார்க்கக் கண் கோடி வேண்டும். சொல்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. காந்திஜி போட்ட திட்ட வட்டம் என்ன? ராஜாஜியின் ஆக்ஷேபணை என்ன? கட்சியிலிருந்து ‘நாலணா’ (அது தெரியுமோ?) அங்கத்தினர் என்ற தகுதியை கூட ராஜிநாமா செய்து விட்டாரே. நேருவின் தயக்கம் என்ன? அவர் விரும்பிய மாற்றங்கள் என்ன? சர்தார் படேலின் ஆர்வம் என்ன? ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அணுகுமுறை என்ன? ஆங்கிலேய அரசின் அடக்குமுறைக்கு இங்கிலாந்தில் எழுந்த எதிர்ப்பு என்ன? செக்கானூரணி கோடாங்கி என்ன நினைத்தார்? இதை எல்லாம் சொல்லத்தான் வேண்டும். பார்க்கலாம். இன்று ஆகஸ்ட் 8, 1942 அன்று காந்தி மஹான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அளித்த உரையின் சாராம்சம்; கோவாலியா மைதான பிரகடனம். மணி பவனில் அவருடன் அமர்ந்து இருந்த கிங்ஸ்லீ மார்ட்டின், இத்தனை டென்ஷனுக்கு நடுவில் அண்ணல் குழந்தை போல் தூங்கினார் என்றார். அந்த மோன நிலை எனக்கு காஞ்சி மஹாப்பெரியவாளை ஞாபகப்படுத்துகிறது

.
மஹாத்மாவின் உரையின் குறுக்கிய சாராம்சம்: (எதற்கும் உசாத்துணையில் உள்ள மூலத்தை படித்துவிடுங்கள். என்னால் இயன்றது ஒரு தாழ்மையான திசை காட்டி; பல குறிப்புகளை விடவேண்டி ஆகிவிட்டது.)


“... என் அணுகுமுறையில் இரு விஷயங்களை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு பளு காத்திருக்கிறது. நானும் 1920ம் வருட காந்தி தான். என் அஹிம்சை கொள்கையும் மாறவில்லை. என்னுடைய எந்த கோட்பாடும் நீர்த்து விட வில்லை...அஹிம்சையில் ஆர்வம் இழந்தவர்கள் என் தீர்மானத்துக்கு வாக்களிக்க வேண்டாம். அஹிம்சை ஆண்டவன் எனக்களித்த வரன்...அதை நான் துஷ்பிரயோகம் செய்தால், எனக்கு பாவ மன்னிப்பு கிடையாது. நாம் நாடுவது வலிமை அல்ல; விடுதலை. ஆளுமை நம்முள் யாரிடமானாலும் வரட்டும். காங்கிரஸ் தன்னல சேவையை மட்டுமே நாடவேண்டும்; நாடும். இனவெறி நமக்கு காத தூரம். நமது இருபது வருட சாதனா ஒரு தவமல்லவோ! இறைவன் நம் பக்கமிருப்பார்... கார்லைல் ஃபெரன்ச் புரட்சியை பற்றி படித்தேன். ஜவஹரும் ரஷ்ய புரட்சி பற்றி சொன்னார். அவை வன்முறையை நாடியபோது குடியரசு இலக்கை மறந்தனர். அஹிம்சை தரும் குடியரசில் யாவரும் மன்னர். ஹிந்து-முஸ்லிம் ஒன்றிப்போய் இந்தியர் ஆவர்

.
உங்களில் பலர் ஆங்கிலேயனை வெறுக்கிறீர்கள். எந்த அளவுக்கு? ஜப்பானியரை கூப்பிடும் அளவுக்கு! அது அபாயமையா! ஐயா! ஆங்கிலேய கலோனிய அடக்குமுறை வேறு; ஆங்கிலேய மக்கள் வேறு. நமக்கு ஆங்கிலேயர் மீது சினமில்லை. இந்தியா உலக மன்றத்தில் தன்னுடைய கெளரதையை நிலை நாட்டவேண்டும். அவ்வளவு தான். ஆங்கிலேயன் நமக்கு சுதந்திரம் தந்து தான் ஆகவேண்டும். அவனுக்கு வேறு வழியில்லை. ஆங்கிலேயன் மீது காழ்ப்புணர்ச்சி வேண்டாம்...எனக்கு அவர்கள் மீது பாசம் அதிகரிக்கிறது. அவர்களின் தவறுகளிலிருந்து அவர்களை மீட்கப்போகிறேன். சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். என் வாழ்க்கையின் மாபெரும் போராட்டத்தை தொடங்கும் போது, எனக்கு பகையில்லை, வெறுப்பில்லை, காழ்ப்புனர்ச்சியில்லை...
*
இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதற்கு வாழ்த்துக்கள். மூவர் மாற்றுக்கருத்துக்கள் கூறினர். 13 நபர்கள் அதை எதிர்த்தனர். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...ஜவஹரின் விளக்கங்களையும், மெளலானாவின் விண்ணப்பத்தையும் அவர்கள் பொருட்படுத்தியிருக்கலாம்...முஸல்மான்களும் இந்தியாவை தாயகமாகத்தான் கருதினர், அலி சகோதரர்களைப்போல்...ஜின்னாவும் காங்கிரஸில் இருந்தவர் தான்...இஸ்லாமின் மீதே ஆணையாக, நான் உங்களிடம் நிந்தனையை குறைக்க வேண்டுகிறேன்...பாகிஸ்தான் உருவாகுவதில் நம்பிக்கை வைக்காத ராஜாஜி, ‘ஜின்னா விரும்புவதை கொடுத்து விடலாம். அவரே வாபஸ் வாங்குவார்’ என்கிறார். நானோ எனக்கு சம்மதம் இல்லாததை மற்றவர்களுக்காக ஒத்துக்கொள்ளமாட்டேன்...ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை வேண்டும்... விஷயத்துக்கு வருகிறேன். உடனடியாக விடுதலை வேண்டும்...சத்யாக்ரஹத்தில் பொய்க்கும், புனைசுருட்டுக்கும் இடமில்லை...நீங்கள் ஆளுமையை என்னிடம் அளித்து விட்டீர்கள்...என் 14 அம்ச திட்டம் இதுவே:
நீங்கள் ஒவ்வொருவரும் தன்னை சுதந்திரமனிதனாகக் கருதவேண்டும்;


1.நான் வைஸ்ராயுடன் பேரம் பேசப்போவதில்லை; பூரண சுதந்திரம் தான் இலக்கு;
‘2.சாதனை இல்லையே சாதல்’ ~இது தான் தாரகமந்திரம்;
3.இதழாளர்களே! காங்கிரஸ்ஸை வெளிப்படையாக ஆதரியுங்கள்;
4.குறுநிலமன்னர்களே! மக்களிடம் அரசை ஒப்படையுங்கள்; அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள்;
5.இது மடை திறந்த புரட்சி. ரகசியமே தேவையில்லை;
6.அரசு ஊழியர்களே! ஜட்ஜ் ரானேடே உங்கள் முன்னோடி. பணியை துறக்காமல், தேசபக்தி கொள்ள இயலும்;
7.ராணுவ வீரர்களே! ‘அரசிடம் சொல்லுங்கள்: ஊழியம் செய்வோம். ஆனால், தேசபக்தர்களை சுடமாட்டோம். நாங்கள் காங்கிரஸ் உபாசகர்கள்’ என்று.
மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களிடம் உங்களுடைய காங்கிரஸ் தழுவலை சொல்லுங்கள்; உலகெங்கும் எல்லா புரட்சிகளிலும் மாணவர்களின் பங்கு அதிகம்;
8.என் மனம் கனக்கிறது. என்னுடைய ஆயுதம் அன்பு; நான் சேவகன்; நல்லதொரு சேவகனே தலைவனாவான்;
லின்லித்கோ பிரபுவின் குடும்பமே எனக்கு சிநேகிதம். எனினும், அவர் கலோனிய சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி. நீங்கள் தந்த பலத்தை வைத்து அவருடன் போராடுவேன்;
9.என் மனசாக்ஷி பேசுகிறது: உலகம் உன்னை ஒதுக்கினாலும், தனித்து போராடு; அச்சம் தவிர்;என் பேச்சைக்கேள்; மனைவியை துறந்தாலும், என்னை துறக்காதே. நானே உன் உறு துணை.
10.அன்பர்களே! நான் 120 வருடங்கள் வாழ விரும்புகிறேன். இந்தியா என்ன! உலகமே விடுதலை அடைந்திருக்கும்;
11.காங்கிரஸ்ஸை ‘‘சாதனை இல்லையே சாதல்’ என்ற தாரகமந்திரத்திற்கு அடமானம் வைத்துவிட்டேன். உலகமே என் துணைக்கு வரட்டும்.
-#-
http://www.indiapicks.com/stamps/Gallery/1992-94/1510_Quit_India_Charkh.jpg
இன்னம்பூரான்
08 08 2011
உசாத்துணை
http://www.gandhi-manibhavan.org/gandhicomesalive/speech6.htm





l--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:29, 15 ஆகஸ்ட் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 15 August 2011, at 13:43. This page has been accessed 2,649 times.