வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 21

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்.


1. என்றோ படித்தது. ஒரு சீன ஓவியத்திலிருந்த புறாக்கள் பறந்தோடி விட்டன என்று. அந்த கலைஞரை புகழ அதீத கற்பனையோ? அது போகட்டும். ஒரு புன்னகை களவாடப்பட்டது. அந்த புன்னகை ராணியை இனி பார்க்கமுடியுமோ என்று கலையுலகே கன்னத்தில் கை வைத்து, கவிழ்ந்தக் கப்பலின் சொந்தக்காரன் போல், கவலையில் ஆழ்ந்தது. இன்று நூற்றாண்டு தினம். ஆகஸ்ட் 21, 1911, திங்கட்கிழமை காலை, பாரிஸ் நகரின் புகழ் வாய்ந்த லொவ்ரெ ம்யூசியத்தில், சாவே என்ற ஊழியரை, கதவை திறக்க உதவி கேட்டார், ஒருவர். அவரும் உதவிடவே, அந்த புன்னகையை எடுத்துக்கொண்டு சாவதானமாக நடந்து வெளியேறி விட்டார். உலகையே உலுக்கித் தேடினார்கள், தேடினார்கள், அப்படி தேடினார்கள்; அவனே வந்து திருப்பும் வரை. அதற்க்குள் எத்தனை ஊகங்கள்? பிக்காஸோ முதல் பல பிரபலங்களின் மேல் சந்தேகம். ‘புன்னகை களவாடப்பட்டால் என்ன? வெற்றிடம் இருக்கிறதே’ என்றெல்லாம் கேலிப்பேச்சுக்கள். ஆமாங்க. ஆர்.ஏ.ஸ்காட்டி என்ற அமெரிக்க எழுத்தாளர், ‘மறைந்த புன்னகை’ என்ற நூலில் இந்த உலகப்புகழ் ஓவியத்தைத் தான் குறிப்பிடுகிறார். காவலாளிக்கிழங்களுக்கு ஜூடோ பயிற்சி!


ஒரு வாரம் மூடிக்கிடந்தது, வரலாறு காணாத வகையில், அந்த லொவ்ரெ ம்யூசியம்.

திறந்தவுடனே, நீண்ட க்யூ வரிசைகள், வெற்றிடத்தைக்காண! இதுவே கண்காட்சியா! என்று வியந்தார்,காய்க்னா என்ற கலைஞர்.

திருடிய பெருக்கியா என்பவனுடைய சமைலறையில் இருவருடம் தொங்கினாள் சீண்டுவாரில்லாமல் ~லீஸா டெல் ஜியோகொண்டோ, ஒரு பட்டு வியாபாரியின் அழகிய மனைவியும், அவளுடைய மாறாத புன்னகையும். சார்! அந்த ஓவியம் தான் மோனா லீஸா. இறவாப்புகழ் பெற்ற இத்தாலிய மேதை லியோனார்டா டி வின்சி (அவரை பற்றி 500 பக்கம் எழுதலாம், உடனடியாக.) வரைந்தது. அதற்கு அவர் 16 வருடங்கள் (1503 -1519) எடுத்துக்கொண்டார். உலகிலேயே சிறந்த ஓவியங்களில், இது முதலாவதாகக் கருதப்படுகிறது. எப்படியோ ஒரு இல்லத்தரசியை (அவள் லீஸா டெல் ஜியோகொண்டோ என்பது கூட ஊகமோ?) ஒரு புன்னகை இளவரசியாக்கி, ஆத்மசொரூபம் அளித்து, என்றென்றும் நிலைத்து நிற்கும் அமரத்துவம் கொடுத்து விட்டார். கடந்த ஐநூறு வருடங்களில் அவளுக்கு வந்த காதல் கடிதங்கள் பல. சிலரின் காமப்பார்வைக்கு பயந்து, பாதுகாப்பு இரட்டிக்கப்பட்ட காலங்கள் உண்டு. ஸ்காட்டி, இந்த சின்னப்படம்,’...நாம் பார்க்கும் கண் மட்ட அளவில் இருக்கிறது. ஒரு விதத்தில் முழு அளவு படம். பார்க்க,நிஜமாகவும் இருக்கிறது. ஊடுருவுகிறது..’ 1910ல் ஒரு காதலர் தற்கொலை செய்து கொண்டார், அவள் முன்னிலையில்! அப்படிப்பட்ட இந்த ஓவியம் பொது சொத்து எனின் விலைமதிப்பற்றது. தனியாரிடம் விலை மதிப்பே இல்லாதது. யாரிடம் காட்டமுடியும்?


பெருக்கியா என்ற திருடன் இது இத்தாலிய சொத்து; அதனால் தான் இத்தாலியிடம் ஒப்படைக்கத் திருடினேன் என்று கோர்ட்டில் வாதாடியபோது, ஒரு உரையாடல்:

ஜட்ஜ்: நீயா தன்னலமற்றவன்! காசு பண்ண பார்த்தாயே!

பெ: காசு! காசு! நான் இங்கே திண்டாட்றது போறாதா?

( அவன் ஓவியத்தை தரும்போது, அவனிடமிருந்த காசு: 1.95 ஃபிரன்ச் ஃப்ரான்க் (காலணா1)

பெ. வின் வக்கீல்: என் கட்சிக்காரர் குற்றம் ஒன்றும் செய்யவில்லை. மோனா லீஸா திரும்பி வந்து விட்டாள், ‘பூ மணத்தோடு’. (‘ பூ மணத்தோடு’~ என் சரக்கு).

கதை முடியப்போகிறது: ஒரு புதிய ட்விஸ்ட்! வல்ஃபியர்னோ என்ற அர்ஜெண்டைன் 420 ஆசாமி பெருக்கியா தனது ஏஜெண்ட் என்றும், ஓவியம் கிடைத்தவுடன் போலிகள் தயார் செய்து தான் பெருஞ்செல்வம் ஈட்டியதாகவும் தன்னிடன் சொன்னான் என்று டெக்கர் என்பவர் தன் பங்குக்கு ஒரு நூல் எழுதினார்.

திருஷ்டி பரிகாரமாக ஒரு சொல்:

மோனா லீஸா: ‘...கண்ணிமை கிடையாது; வேடிக்கையாக இருக்கிறது, சிரிப்பு. பற்கள் மோசமோ (அப்போ, இது கே.ஆர். விஜயா இல்லை!!!) பல்லைக்கடிச்சுண்டு சிரிக்கிறா...” ~ பொன் வாக்கு உதிர்த்தவர், கீஸ் வென் டோன் ஜென் என்ற டச்சு ஒவியர்.


http://www.wisdomportal.com/Poems2009/MonaLisaStamp(668x792).jpg

MonaLisaStamp(668x792).jpg

உசாத்துணை:

Scotti R.A: Vanished Smile: The Mysterious Theft of Mona Lisa

pastedGraphic.pdf

2. மேடம் க்யூரிக்கு இருமுறை நோபல் பரிசு; ஒன்று, கணவருடன் இணைந்து; திருமகள் ஜோலியட் க்யூரியும், அவளது கணவருடன் நோபல் பரிசு வாங்கினார். அந்த மாதிரி ஒப்புமைகள் சில, என்றும் நம்மை வியக்க வைக்கின்றன. அண்ணனும் தம்பியும் தணிக்கைத்துறையில் பணி ஆற்றியவர்கள். ஒருவர் ஒலியை தொடர்ந்தார். மற்றவர் ஒளியை தொடர்ந்தார். சித்தப்பனுக்கும் நோபல் பரிசு 1930 இல்; அண்ணனின் திருமகனுக்கும் நோபல் பரிசு 1983 இல். என்ன ஆல்ஃப்ரெட் ஹிச்ஹாக் சஸ்பென்ஸ்? சர். சீ.வி.ராமனையும் , டா. சந்திரசேகரையும் தான் சொல்கிறீர்கள் என்பது வெள்ளிடை மலை என்கிறிர்களா? சரி. சில பூர்வோத்திரங்கள் சொல்லி விட்டு விஷயத்துக்கு வருகிறேன்.

அண்ணன் திரு.சி.எஸ். ஐயர் அக்கெளண்டட் ஜெனெரலாக இருந்து ஓய்வு பெற்றவர். ஒலியை தொடர்ந்த இசை மேதை. கர்நாடக சங்கீதம் பற்றி நூல்கள் பல எழுதியவர். நினைவில் இருக்கிறது. மைலாப்பூர் குளத்தருகே மாடவீதியில் ரிக்க்ஷாவில் வந்தவர், இறங்கவேயில்லை. அநாயசமாக பறந்து போய்விட்டார். தம்பி வெங்கடராமன் தணிக்கைத்துறையில், அண்ணன் மாதிரி; கல்கத்தாவில். சர் அஷுதோஷ் முக்கர்ஜி தான் அவரை ராஜிநாமா செய்ய வைத்து, விஞ்ஞானத்தின் பக்கம் திருப்பினார். ஒளி சம்பந்தமான ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு வாங்கினார். அவர் பேச்சில் நகைச்சுவை இருக்கும். நோபல் பரிசு பணம் அவருக்கு ஒட்டவில்லை. ஒரு 420 அடித்துக்கொண்டு போய்விட்டான். சிலரை போல, அவர் தன்னையே இது பற்றி கேலி செய்து கொள்வார். வயதான காலத்தில், அஹமதாபாத் வந்திருந்தார். என் பையனுக்கு ஆட்டோக்ராஃப் போட்டுக் கொடுத்தவர், விக்ரம் சாராபாயிடம், ‘விக்ரம்! தேதி, மாதம், போட்டு விட்டேன் இந்த என்ன வருடம்?’ என்றாரே பார்க்கலாம்! நான் நினைத்துக்கொண்டேன், இவர் காலத்தை ஒதுக்கிவிட்ட முனிவர்’ என்று. சரி. அடுத்த தலைமுறைக்கு போவோம்.

ஆகஸ்ட் 21, 1995: டாக்டர் சுப்ரஹ்மண்யன் சந்திரசேகர் அமரரான தினம். அவர் திரு.சி.எஸ். ஐயரின் தவப்புதல்வர். அன்னையும் மெத்தப் படித்தவர். இப்ஸெனின் ‘ஒரு பொம்மையின் வீடு’ என்ற இலக்கியத்தை தமிழில் மொழியாக்கம் செய்தவர், அக்டோபர் 19, 1910 இல் ஜனித்த இவர், திருவல்லிக்கேணி கெல்லட் உயர் நிலை பள்ளி/ சென்னை மாகாணக்கல்லுரி/கேம்பிரிட்ஜ் மாணவர். 1938லிருந்து தன்னுடைய 84 வயது வரை ஷிகாகோ பல்கலைக்கழகத்தில் பணி. வானவியல் ஆராய்ச்சியில் இவருடைய பங்கு அதிகம்.1930 களில் வானவியல் விஞ்ஞானிகளின் கூற்று: விண்மீன்களில் இருந்த அனைத்து ஹைட்ரஜனும் ஹீலியமாக மாறி விடுவதால், அவை சக்தியை இழந்து, சுய ஆகர்ஷணத்தாலேயே சுருங்கி விடுகின்றன. ‘வெண்மை குள்ளர்கள்’ எனப்படும் இந்த விண்மீன்கள் நமது தம்மாத்தூண்டு புவி அளவுக்கு சுருங்கி விடுகின்றன. இந்த கூற்றின் அடுத்தக் கட்டம் தான் ‘சந்திரசேகர் லிமிட்’ என்ற இவரது கண்டுப்பிடிப்பு: சூரியனை விட 1.44 பங்கு (ஒன்றரை) அதிக பருமன் ஆன விண்மீன்கள் ‘வெண்மை குள்ளர்கள்’ ஆவதில்லை. மாறாக, அவை சுருங்கி, வாயு மண்டலமாகி, அது சூழ, ஒரு மாபெரும் வெடிப்பு நிகழும். அவை ந்யூட்ரான் விண்மீன் ஆகிவிடுகின்றன. மாபெரும் விண்மீன்களோ ‘கறுத்த ஓட்டைகள்’ ஆகி விடுகின்றன. நன்றாக மாட்டிக்கொண்டேன், ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டு! மின் தமிழர் பார்த்தசாரதி பார்த்தால், தெளிவு கிடைக்கலாம்.

இன்னம்பூரான்

21 08 2011

ttp://th.physik.uni-frankfurt.de/~jr/gif/stamps/stamp_chandrasekhar.jpg








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:45, 24 ஆகஸ்ட் 2011 (UTC)











--

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 24 August 2011, at 14:51. This page has been accessed 2,575 times.