வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொருநாள்: ஆகஸ்ட் 07:2

From மரபு விக்கி

Jump to: navigation, search
Innamburan768.jpg
                                                                                                                   


“நான் சத்தியப்பிரமாணம் செய்கிறேன். என் தந்தையின் மீது ஆணை. ஆண்டவன் முன் சத்தியம். என் மூதாதையர்களும், என் கண்ணியமும், எனது நாடும் சாக்ஷி. இந்த விலங்கை உடைத்தெறிவேன். நாடு விடுதலை பெறும் வரை என் கைகளும் ஓயாது. ஆத்மாவுக்கும் சாந்தியில்லை.”


ரோமாபுரிக்கு சென்று அவெந்தின் குன்றிலேறி, தொன்மைக்காலத்தில் ரோமானியர்கள் சுதந்திரத்தைப் போற்றி வாழ்த்தியதை நனவில் கலந்த கனவாகக்கண்ட செல்வத்திருமகன் ஸைமன் பொலிவரின் சூளுரை இது.


ஒரே நாட்டினுள் பல தேசாபிமானங்கள் இருக்கக்கூடும். அவற்றை உற்று நோக்கி, தக்க தருணங்களில் உகந்த நடவடிக்கைகளை, அந்த அந்த காலகட்டங்களில், தன்னலம் கருதாத, அனுபவம் மிகுந்த, சமுதாய நலன் நாடும் அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளாவிடினும், நிகழ வேண்டிய விளைவுகள் நடந்தே தீரும் என்பதற்கு, வரலாற்றில் சாட்சியங்கள் பல உண்டு.


ஐரோப்பிய நிலைக்கண்ணாடியில் கீறல்கள், விரிசல்கள், ஒட்டுவைத்தியங்கள், யூரோ நாணயம், கோர்ட்டு, இரு உலக யுத்தங்கள் ஆகியவை ஒரு பக்கம்; ஆஃப்பிரிக்காவில் தீராத இனவெறி சண்டைகள்,கலோனிய ஆதிக்கம், அடுத்தடுத்த எழுச்சியும், விழுச்சியும் ஒரு பக்கம் ; ஆசியாவில் பர்மா, பாகிஸ்தான், பங்களா தேஷ், பூடான் பிறந்த கதை, மலேஷியாவின் அவதாரம் ஒரு பக்கம் என்ற மனித வரலாற்று சித்திரப்படலத்தில் தென்னமெரிக்கா கண்டமும் இடம் பெறவேண்டும் என்பதில் ஐயமொன்றுமில்லை.


சின்ன வயதில் படித்த ஸர் ஆர்தர் க்வில்லர்-கொச் எழுதிய ‘கண்ணியத்தின் முரசொலி:’ (The Roll Call of Honour) என்ற நூலின் தலைமாந்தர்களின் - மஜ்சினி, கவூர், கரிபால்டி, லிங்கன், டேமியன் ஆகியோர் - வாழ்க்கைச்சரித்திரம் அரசியல் தலைவர்களுக்கு படிப்பினை, சமூக ஆர்வலர்களுக்கு பாலபாடம், மாணவர்களுக்கு கொடுப்பினை. (உசாத்துணையில் முழு நூலையை படிக்கலாம்.) அவர்களில் ஒருவரான சைமன் பொலிவரை தென்னமெரிக்காவில், ‘விடுதலை தந்தையென போற்றுகிறார்கள். ஆகஸ்ட் 7, 1819 அன்று ஐரொப்பியாவிலிருந்து வந்து கலோனிய ஆட்சி புரிந்த ஸ்பெயின் ராஜாங்கம், கொலம்பியாவிலிருந்து துரத்தப்பட்ட தினம். நமது தலைமாந்தர் சைமன் பொலிவரின் சத்தியப்பிரமாணம் நிறைவேறத்தொடங்கிய தினம். ஒரு பாலத்தின் மீது நடந்த போரில், பொலிவர் மேற்கொண்ட யுத்தத்தந்திரங்கள் அவருக்கு வாகை சூடியன. இன்றளவும் அந்த புனித தலம் போற்றப்படுகிறது. பொலீவியாவில் ஆகஸ்ட் 7 விடுமுறை தினம்; விழாக்கொண்டாட்டம்; அதிபரின் பிரகடன தினம்.
புத்தகத்தில் படிப்பது ஒன்று. நேரில் கேட்டறிவது நன்று. 1948 இல் படிக்கப்பட்ட சைமன் பொலிவர் ஒரு நிழற்படம். 1990 இல் வேறு ஒரு விஷயமாக அறிமுகமான கொலம்பிய தூதர் உற்ற நண்பரானர். என்னிடம் காந்தி/நேரு கதை கேட்ட அவர், பொலிவரின் கதை சொன்னார். திரைப்படங்கள் காட்டினார். அப்போது தான் புரிந்து கொண்டேன்,

நாம் தென்னமெரிக்காவை உற்று நோக்கியதில்லை, போக்குவரத்து குறைவு, ஆழமும் காணவில்லை. அகலமும் காணவில்லை என்று.
சைமன் பொலிவர் செல்வத்தில் திளைத்த வம்சாவளியில் தோன்றியவர். சிறு வயதில் பெற்றோரை இழந்த பொலிவர் சூட்டிகையாக படித்து முன்னேறியவர். காதலித்து 19 வயதில் மணந்த தெரஸாவை துரதிர்ஷ்டவசமாக, சீக்கிரமே இழந்தார். மறுமணம் செய்து கொள்ள மறுத்தார். இங்கு ஒரு மென்மையான சமாச்சாரம். பெண்பாலாரின் நட்பை நாடிய பொலிவர், தன்னுடைய சாதனைகளுக்கு பெண்பாலார் அளித்த ஊக்கம் தான் காரணம் என்கிறார். எனக்கு ஒரு நேர் காணல் நினைவுக்கு வந்தது. இந்தியாவில் அமெரிக்க தூதராக இருந்த ஜான் கென்னெத் கால்ப்ரைத் (அவரை பற்றி ஒரு நாள் எழுதவேண்டும்.) நேருவை பற்றி சொல்கிறார்,

‘Our Prime Minister is fond of feminine company.’ நேருவும் இளவயதில் கமலா நேருவை இழந்தவர். அரசியல் தலைவர் என்றால் காரைக்கால் அம்மையார் போல் இருக்கவேண்டுமா? என்ன? நேருவை நினைத்ததிற்கு மற்றொரு முக்கிய காரணமுண்டு. சைமன் பொலிவரை போல அவரும் நன்கு உயர்கல்வி படித்தவர். நாலு நாடுகளை பார்த்தவர். பல தலைவர்களோடு பழகியவர். செல்வச்சீமானாகப் பிறந்தவர். இந்திய விடுதலை தலைமாந்தர்களில் ஒருவர். நிந்தனை செய்யாதே, மனமே!


நேருவுக்கு ஒரு காந்தி. பொலிவருக்கு ஒரு ஃபிரான்ஸிஸ்கோ டெ மிராண்டா. மனித உரிமைக்காக போராடிய தலைவர். மிராண்டா, காந்திஜி, மண்டெலா போன்ற தலைவர்களுடன் பிறந்தது, அவரவர்கள் முத்திரை பதித்த புரட்சிகள். பொலிவர் காலத்தில் பாரிசில் அலெக்ஸாண்டார் வான் ஹம்போல்ட் என்ற அறிஞர்/விஞ்ஞானி/புத்துலகம் தேடும் பயணி ஒருவர் இருந்தார். வடக்கு/தென் அமெரிக்காக்களை நன்கு அறிந்தவர். அவரிடன் பொலிவர் தன் வேட்கையை கூறிய போது அவர், உனது நாடு விடுதலைக்கு தயாராக இருக்கிறது. அதை நிறைவேற்றப்போவது யார் என்றார். அதுவே பொலிவருக்கு சவாலாக அமைந்தது. நேற்றைய இடுகையில் என்ரிக்கோ ஃபெர்மி அணுவை பிளக்கும் நேரம் குதிரவில்லை என்றார். அதே போல, விடுதலை வீரர்களுக்கு உத்வேகமும், திருப்புமுனையும் எதிர்பாராமல் திடீரன்று நிகழலாம். இதை கேளுங்கள். பொலிவர் ரோமாபுரியிலிருந்து திரும்பி வந்து போது, தாறுமாறாக பிரிந்து குழப்பத்தில் அமுங்கிக்கிடந்த தேசபக்தர் மன்றத்திடம் அறைகூவினார், “... நம்மை பிணைத்தத் தளைகள் தான் இந்த ஐயமும், குழப்பமும் ஏற்பட காரணம். உடைத்தெறிக. பொறுமை என்ன பொறுமை? 300 வருடங்கள் அமைதியாக, வாளா கிடந்தோம். போதுமடா, சாமி. அச்சம் தவிர். துணிச்சலோடு தென்னமெரிக்காவின் விடுதலையின் அடித்தளமமைப்போம்...”

எத்தனை இன்னல்கள்? எத்தனை பயணங்கள்? எத்தனை ஏமாற்றங்கள்? எத்தனை பறிமுதல்கள்? எத்தனை தண்டனைகள்? நமது மன்னன் அசையவில்லை. தென்னமெரிக்கா முழுவதற்குமே - கொலம்பியா, வெனிசூலா, பெரு, ஈக்வடார்,
ட்ரினிடாட் - அவர் தன் தளை கழட்டியவர்.


விடுதலை வேள்வித் தலைவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், சர்வாதிகாரி ஆகிய அம்சங்கள் பொருந்திய சேமன் பொலிவரின் “கார்டெஜெனா பிரகடனம்” நல்லதொரு வழித்துணை,


“எந்ததொரு தூண்டலால், கடமை தவறாதே. சத்திய பிரமாணத்தை மீறாதே. நம்பிக்கைத் துரோகம் செய்யாதே. ஒன்று பட்டால் வாழ்வு.”
( ஏது? இந்தியாவிடமா பேசுகிறார்?)


பி.கு. அவருடைய காலத்திலேயே, பிரிவினை வாதங்கள் தலையெடுத்தன. எனினும், அந்த பிராந்தியத்தின் கலோனிய தளையை கழட்டியவர் என்ற வரலாறு அழியப்போவதில்லை.
http://www.nwwone.org/world-war/worldwar-image-large/20-balboas-simon-bolivar-1972-panama-silver-coin_110671865681.jpg


இன்னம்பூரான்
07 08 2011
உசாத்துணை:
http://www.nalis.gov.tt/Biography/Simon_Bolivar.htmhttp://www.archive.org/stream/rollcallofhonour00quil#page/n7/mode/2up








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 17:45, 11 ஆகஸ்ட் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 11 August 2011, at 18:07. This page has been accessed 1,798 times.