ஸ்ரீ அன்னை - சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

ஸ்ரீ அன்னை - சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

                                                                              
Img1101004041 1 1.jpg


  • வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும் , நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாமே மாறி விடும் என்பதை உணருங்கள்.


  • வாழ்க்கை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களுடன் அதிகமாகப் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையுடன் லேசாக ஏற்கத் தயாராகுங்கள்.


  * உனக்குள்ளேயே விலகி நில்!

உங்களில் மிகப் பெரும்பாலோர் உங்களுடைய ஜீவனின் மேற்பரப்பிலேயே வாழ்கிறீர்கள். அதனால் புறச் செல்வாக்குகள் உங்களைத் தீண்டுவதற்கு இடமளிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் உடலுக்கு வெளியே வாழ்வதுபோல் அவ்வளவு வெளிப்புறத்தில் வாழ்கிறீர்கள். அவ்வாறு புறத்தில் வாழும் விரும்பத்தகாத இன்னொரு ஜீவனைச் சந்திக்கும்போது கலவரமடைகிறீர்கள்.

நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே விலகி நிற்க வேண்டும். உன்னுள்ளேயே ஆழ்ந்து செல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி விலகி நின்றாயானால், நீ பத்திரமாயிருப்பாய். வெளி உலகில் இயங்கிக் கொணடிருக்கும் மேலெழுந்தவாரியான சக்திகள் உன்னைப் பயன்படுத்த இடம் கொடாதே. அவசரத்தில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியதிருக்கும் போது கூட சிறிது நேரம் விலகி நின்றால் எவ்வளவு குறைந்த நேரத்திலும் அதிக வெற்றிகரமாகவும் உங்களுடைய வேலையைச் செய்ய முடியும் என்பதைக்கண்டு ஆச்சரியப்படுவாய்.

யாராவது உன் மீது கோபப்பட்டால் அவனுடைய கோப அதிர்வுகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் விலகி நில். எந்த ஆதரவோ பதிலோ கிடைக்காததால் அவனுடைய கோபம் மறைந்து போகும், எப்பொழுதும் அமைதியுடன் இரு. அமைதி இழக்கும்படியான சோதனைகளையெல்லாம் எதிர்த்து நில். விலகி நிற்காமல் எதையும் முடிவு செய்யாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் ஒரு வார்த்தையும் பேசாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் செயலில் குதிக்காதே.

சாதாரண உலகைச் சேர்ந்த எல்லாமே நிலையற்றவை, சொற்ப காலத்திற்கே இருப்பவை, ஆகவே கலவரப்படும்படியாக அதில் ஒன்றுமே இல்லை. எது நிலைத்து நிற்பதோ, எது நித்தியமானதோ, எது அமரத்தன்மை கொண்டதோ, எது அனந்தமானதோ அதுவே வென்று பெறுவதற்கு, உடைமையாக்கிக் கொள்வதற்கு, தகுதியுடையதாகும். அதுவே தெய்வ ஒளி, தெய்வ அன்பு, தெய்வ வாழ்வு - அதுவே பரம சாந்திர, பூரண மகிழ்ச்சி, புவி மீது அனைத்தின் மீதும் ஆட்சி செலுத்துதல், அதன் சிகரம் இறைவனின் முழு வெளிப்பாடு.

இதை நீ உணர்ந்துவிட்டால் எது நிகழ்ந்தபோதிலும் நீ விலகி நின்று அதை நோக்க முடியும், நீ அமைதியுடனிருநூது தெய்வ சக்தியை அழைத்து, அதன் பதிலுக்குக் காத்திருக்க முடியும். அப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று உனக்குத் திட்டவட்டமாகத் தெரியும். ஆகவே, இதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீ மிகவும் அமைதியாக இருந்தாலன்றி இறைவனின் பதிலைப் பெறமுடியாது. இந்த உள் அமைதியைப் பழகு, சிறிய அளவிலாவது தொடங்கி, தொடர்ந்து பழகி வா, பிறகு அதுவே உனக்கு வழக்கமாகிவிடும்.


* பகுத்தறிவே எஜமானனாக இருக்க வேண்டும்


திறமையுடன் வாழவேண்டும், உடம்பிடமிருந்து அது கொடுக்கக்கூடிய உச்ச அளவைப் பெறவேண்டும் என்றால் பகுத்தறிவே வீட்டுக்கு எஜமானனாக இருக்க வேண்டும் என்பதை சிறு வயதிலேயே கற்கத் தொடங்கிவிடுவது நல்லது.


இது யோகம் அல்லது உயர் அனுபூதி பற்றிய விஷயம் அன்று. இது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டிலும், எல்லா இடத்திலும் கற்றுத் தரவேண்டிய ஒன்று. மனிதன் மனோமய ஜீவனாக இருப்பதற்காகப் படைக்கப்பட்டவன்.


மலர் போல மகிழ்ச்சிப்படுத்து .


  • எத்தனை அன்பு! எத்தனை மென்மை! இனிமை! இவ்வுலகில் இருக்கின்றன. அத்தனையும் நமக்காகவே. நாம் அவற்றை நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
  • ஒரு மலரைப் போன்று இருங்கள். மலரைப் போல திறந்த வெளிப்படையான குணமும், சாந்தமும், கருணையும், அன்பும் மனதிற்குள் எழவேண்டும்.
  • மலர் எப்படி தன்னிச்சையாக மலர்ந்து மணம் பரப்பி தான் இருக்கும் இடத்திலிருந்து மற்றவர்களை மகிழ்விக்கிறதோ அதுபோல ஒவ்வொருவரும் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும்.

எப்பொழுதும் நேர்மையாயிரு - அ‌ன்னை


பாதையில் முன்னேற இது இன்றியமையாதது!


இந்தப் பாதையில் நடப்பதற்கு உனக்கு எதற்கும் தயங்காத அஞ்சாமை வேண்டும். அற்பமான, இழிவான, பலவீனமான, அருவருப்பான இயக்கமாகிய அச்சத்துடன் ஒருபோதும் உன்னைப் பற்றியே எண்ணக் கூடாது.

அசைக்க முடியாத துணிச்சல், பூரணமான நேர்மை வேண்டும், கணக்குப் பார்க்காது அல்லது பேரம் பேசாது தன்னை முழுவதுமாகக் கொடுக்க வேண்டும், ஒன்றைப் பெறும் நோக்கத்துடன் கொடுக்கக்கூடாது, பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் உன்னை அர்ப்பணிக்கக் கூடாது, உன்னுடைய நம்பிக்கைக்கு நிரூபணம் தேவைப்படக்கூடாது - பாதையில் முன்னேற இது இன்றியமையாதது - இது ஒன்றே உன்னை எல்லா ஆபத்துகளிலுமிருந்தும் பாதூக்க முடியும்.


எப்பொழுதும் நேர்மையாயிரு!

நேர்மையாயிரு,
எப்பொழுதும் நேர்மையாயிரு,
மேன்மேலும் நேர்மையாயிரு.

நேர்மையாயிருப்பதென்றால்
சிந்தனைகளில்,
மனவெழுச்சிகளில்,
புலுனுணர்ச்சிகளில்,
செயல்களில்
தனது ஜீவனின் மைய உண்மையைத் தவிர வேறு எதையும் வெளியிடாதிருத்தலாகும்.


அகங்கார முடிச்சை வெட்டு
முடிச்சு? அது ஒரு உருவகம். ஆனால், அது நல்ல உறுதியான கயிற்றினால் போடப்பட்ட முடிச்சைப்போல உன்னை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற ஒன்று. ஆகவே ஆன்மிகப் பாதையில் உண்மையாகவே முன்னேற வேண்டுமானால் முதற்காரியமாக அகங்கார முடிச்சை வெட்டிவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இது ஒரு நல்ல உருவகம், கருத்தை விளக்கமாகக் கூறுகிறது, அல்லவா? - உன்னைக் கட்டிப் போட்டிருக்கிறது. உனக்குள்ளேயே நீ அடைபட்டுக் கிடக்கிறாய், சிறையில் அடைக்கப்பட்டதைப் போல ஜீவனின் எல்லாப் பாகங்களும் சேர்த்துக் கட்டிப் போடப்பட்டிருப்பதால்தான் - ஒட்டியிருத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதே சமயம் அது வரம்பிற்கு உட்படுத்துகிறது.

உன்னைக் கட்டியிருக்கும் கயிற்றிலுள்ள முடிச்சுகளெல்லாம் சேர்ந்து உண்டாக்கிய ஓட்டிற்குள் அடைபட்டிருப்பதால் நீ பெற விரும்பும் அத்தனை சக்திகளையும் உன்னால் பெற முடியாது போகிறது.


 நமக்கு அடிகள் விழுவதற்குக் காரணம்


"என் மீது அன்பு கொண்ட பரமனே என்னை அடி. இப்பொழுது நீ என்னை அடிக்கவில்லையானால் உனக்கு என் மீது அன்பு இல்லை என்பதையே அது காட்டும்" - அரவிந்தர்

தெய்வீகப் பூரணத்தை அடைய விரும்பும் அனைவரும் இறைவன் தன்னுடைய எல்லையற்ற அன்பினாலும் அருளினாலும் நமக்குக் கொடுக்கும் அடிகளே நம்மை முன்னேறச் செய்வதற்கு மிக நிச்சயமான, மிக விரைவான வழி என்பதை அறிவார்கள்.

இதற்கு மாறாக சாதாரண மனிதர்கள் எப்பொழுதும் கஷ்டமில்லாத, சுகமான, வெற்றிகரமான வாழ்க்கையைக் கொடுக்கும்படியே இறைவனைக் கேட்பார்கள். தங்களுடைய சொந்த திருப்தி ஒவ்வொன்றிலும் அவர்கள் தெய்வ அருளைக் காண்பார்கள். மாறாக வாழ்க்கையில் துக்கமும் துரதிருஷ்டமும் ஏற்பட்டால் அவர்கள் குறைபட்டுக்கொள்வார்கள். "இறைவா, உனக்கு என் மீது அன்பு இல்லை" என்று சொல்வார்கள்.

இந்த முதிர்ச்சியடையாத, அறிவற்ற மனப்பான்மைக்கு எதிர்மறையாக ஸ்ரீ அரவிந்தர் தெய்வக் காதலனிடம் "அடி, பலமாக அடி, உனக்கு என் மீது எவ்வளவு தீவிரவமான அன்பு உள்ளது என்பதை நான் உணரட்டும்" என்கிறார்.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:07, 19 ஏப்ரல் 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 19 ஜூன் 2011, 16:41 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,944 முறைகள் அணுகப்பட்டது.