வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மரபும்-மரபுடைத்த மரபும் - 2

From மரபு விக்கி

Jump to: navigation, search

மரபும்-மரபுடைத்த மரபும் - 2


நவீனத்துவம் என்பது மேற்கத்திய உலகில் முக்கியமாக தளைகள் என்று கருதியவைகளை உடைத்தெறிந்து வெளி வந்த ஒன்று. எல்லைக் கோடுகளை உடைத்து பிரவாகமாகப் பெருக்கெடுத்தோடிய ஒன்று.

ஆனால் நவீனத்துவவாதிகள் விஷயத்தில் பெரும்பாலானோர்க்குத் தெரியாத ஒரு விஷயமும் ஒன்று உண்டு.

தொடக்கக்கால நவீனத்துவவாதிகளுக்கு அருமையாக மரபு சார்ந்த விஷயங்களைப் பற்றிய ஞானம் உண்டு.

உதாரணமாக நவீனத்துவ கவிதை எழுதும் அவர்களுக்கு மரபுக் கவிதைப் பற்றிய அறிவு அபாரமாக உண்டு. அதாவது மேற்கத்திய கவிதைகளுக்கு உரிய இலக்கணம் அவர்களுக்கு அருமையாகத் தெரியும். அத்தகையை கவிதைகளை அவர்களால் எழுதவும் முடியும்.

அதே போல் தொடக்கக்கால நவீனத்துவ ஓவிய கலைஞர்களுக்கு, பாரம்பரிய ஓவிய இலக்கணமும் அருமையாகத் தெரியும். அத்தகைய ஓவியங்களை வரைவதிலும் வல்லவர்கள்.

இந்த இடத்தில்தான் இப்போதைய பெரும்பாலான நவீனத்துவ கவிஞர்களுக்கும், அப்போதைய நவீனத்துவ கவிஞர்களுக்கும் இடையேயான பெரிய வித்தியாசம் தெரிகிறது.

தனிமனித சித்தாந்தமே எதையும் தீர்மானிக்கிறது என்ற கட்டுக்கடங்காத சுதந்திரம் நவீனத்துவத்தில் இருந்தாலும், அந்த சுதந்திரத்திலும் சுதந்திரமாக ஒரு ஒழுங்கு இருந்தது. மரபுடைத்த அந்த நவீனத்துவத்திலும் பாதாள கங்கையாக ஒரு மரபு இருந்தது.

நவீனத்துவத்தில் ஓவியம், நவீனத்துவத்தில் கவிதை, நவீனத்துவத்தில் உரைநடை, நவீனத்துவத்தில் சிற்பம், நவீனத்துவத்தில் இசை என கலைகளின் அத்தனை விதங்களிலும் அது உருவாகியது.

அதில் கவிதையை மட்டுமே இங்கே பார்க்கலாம்.

மேற்கத்திய கலாசாரத்தில் கடவுள், வரலாறு, மதம் என அதைச் சார்ந்தே கலைகள் பாரம்பரியத்தைக் கொண்டிருந்தன. எனவே அவற்றை உடைத்துக் கொண்டு நவீனத்துவம் வந்தது. ஆங்கில இலக்கணம் மீட்டர், ரைம், அல்லிடரேஷன் என சில இலக்கணங்களையே கொண்டிருந்தன. அங்கே மதம், வரலாறு ஆகிய பாரம்பரியத்தை உடைப்பதே பிரதானமாக இருந்தது.

ஆனால் நம் நாட்டிலோ விஷயம் வேறு விதம். அதிலும் தமிழில் யாப்பிலக்கணம் ஒரு அற்புதம். இங்கே மதம், வரலாறு ஆகியவற்றை தொடாமலே யாப்பிலும் கவிதை இயற்றலாம். திருக்குறளையே அப்படி எடுத்துக் கொள்ளலாம். சித்தர் பாடல்களில் காணலாம். பாரதிதாசன் கவிதைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆகவே மதம்,வரலாறு ஆகியவற்றை உடைத்தெறிவது என்பது கவிதையை பொறுத்தவரை இங்கே நவீனத்துவமாக இல்லை. யாப்பிலக்கணத்தை உடைத்தெறிந்து வெளிவருவதே முக்கிய இலட்சியமாக இங்கே இருந்திருக்கிறது.

மேற்கத்திய நவீனத்துவ கவிதைகள் கருப்பொருளால் நவீனத்துவம் என்று அறியப்பட்டன. அங்கே மரபிலக்கணத்தை மீறுவதற்கு இரண்டாவது இடம்தான்.

இங்கேயோ மரபிலக்கணம் சாரா ஒன்று நவீனத்துவமாக கருதப்படுகின்றன. இங்கே மரபிலக்கணத்தை உடைப்பதற்கு முதல் இடம்.

இங்கே மரபுடைத்தல் என்பது யாப்பு இலக்கண மீறுதலாகவும், அங்கே மரபுடைத்தல் என்பது சமுதாய மரபெல்லைகளைக் கடக்கும் செயலாகவும் இருக்கிறது.



நவீனத்துவத்தில் தனிமனிதனே கவிதையின் வடிவத்தை தீர்மானிக்கிறான். அப்படியென்றால் எதை வேண்டுமானால் கிறுக்கி விட்டு அதை கவிதை எனலாமா என்ற வினா எழத்தான் செய்யும்.

அந்த நிலையை இன்று வரை பல கவிதைகளை (?)ப் படித்துவிட்டு பலரும் பல கட்டங்களில் உணர்ந்திருப்பார்கள்.

நவீனத்துவத்தில் எழுதுபவரின் ஆழ்மன உணர்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அது நீதீபதி வேலையைப் பார்க்கும். அதில்தான் நவீனத்துவத்தின் ஆரம்பக் கட்டங்களில் ஒரு ஒழுங்கு இருந்தது. எனவே அந்த கவிதைகளை இப்போது படித்தாலும் படிப்பவருக்கும் அவை கவிதை எனப் புரிகின்றன. கொஞ்சம் வியப்பான சங்கதிதான்.

உரைநடையில் இடை இடையே எதுகை, மோனை இத்யாதிகள் வந்தால் அவற்றை கவிதை என்று நினைப்பதில்லை. அது போல கவிதையில் எதுகை, மோனை இத்யாதிகள் வராவிட்டாலும் கவிதை கவிதையாகாமல் போய்விடுவதில்லை என்பது நவீனத்துவ கருத்து.

'கவிதையை இலக்கணம் தீர்மானிப்பதில்லை. கவிதையை மனமே தீர்மானிக்கிறது.' என்பதே அறுதியாக நவீனத்துவக் கருத்து.


ஒரு வகையில் அது உண்மைதானோ எனத் தோன்றுகிறது!

தற்காலத்தில் மரபு இலக்கணத்தில் சமீபத்தில் வரும் நிறைய கவிதைகளில் (?) இலக்கணம் இருக்கிறதே ஒழிய கவிதையைக் காணோம். உள்ளே இருக்க வேண்டிய கரு மிக பலவீனமாக இருப்பதை பல கவிதைகளில் காண்கிறேன்.

'சிவந்த மலர்' என்பதை ' நாணும் மங்கையிரின் கன்னக் கதுப்பொத்து" என்று உவமையாக எழுதி உலா வருகிறது. மொத்தக் கவிதையின் கருப்பொருள் என்னவென்றுப் பார்த்தால், ' காதலனைக் கண்டு ஒரு பெண் கன்னம் சிவக்க, நாணமாகி நிற்கிறாள்" என்பதாக இருக்கும்.
இங்கே கவிஞர் தளை, எதுகை, மோனை, குற்றியலுகரம், சீர் என இதைக் கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாகி விடுகிறது. கருப்பொருளுக்கு முக்கியத்துவம் இல்லை. சாதாரணக் கருப்பொருளும் இந்த கலாட்டாவினால் பப்பரப்பா என்று தெரிகிறது.


அதே சமயம் நவீனத்துவத்தில், கருப்பொருள் மட்டுமே அங்கிருக்கும் ஒரே முக்கியமான விஷயம் என்பதால் அதில் எழுதுபவருக்கு முழு கவனம் போகிறது.


இதில் நவீனத்துவ கவிதைகளுக்கு உரிய இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால், அவர்களின் கவிதையை விமரிசிக்க முடியும்.

தற்காலத்திய மரபுக் கவிதைகளில் கருப்பொருள் பரம கண்றாவியாக இருந்தாலும், பின்னூட்டங்கள் ஆஹோ ஒஹோ என்று இரு வரிகளில் முடிந்து விடும்.


இல்லையேல், இலக்கணப் பிழை, எதுகை, மோனை பிரச்சனைகள் போன்றவை மட்டுமே கருத்தாடலில் வரும்.


மற்றப்படி இங்கே ஒன்றும் பேச முடியாது. கொஞ்சமும் அக்கறையே இல்லாமல், சொத்தை கருப்பொருளை வைத்துக் கொண்டு கவிதை எழுதுபவராய் இருந்தாலும், மரபிலக்கணத்தில் மேதையாய் இருந்தால் நாம் வாயை மூடிக் கொண்டு போய்விட வேண்டியதான். மிதப்பமாய் இருப்பார்கள். நாம் பேசவே முடியாது.

இந்தக் கொடுமை போதாதென்று, இன்ஸ்டண்ட் வெண்பா, திடீர் விருத்தம் என்றெல்லாம் வேறு உண்டு. அப்படி எழுதுபவர்களும் பெரும் கவிஞர்கள் என்று போற்றப்படுவதுண்டு.

அந்தக் கவிதையின் உள்ளே சரக்கைப் பார்த்தால், பர்மா பஜார் செண்ட் போல (2% அசலோடு 98% தண்ணீர் கலக்கப்பட்டிருக்கும்) கோரமாக இருக்கும்.



இதுவே தற்காலத்து மரபுக்கவிதைகளில் காணும் பெரும் குறை. இது நவீனத்துவ கவிஞர்களால் முக்கிய வாதமாக வைக்கப்படும் ஒன்று.


தொடரும்)

செல்வ குமரன்
தேதி - 04/05/2011

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 5 May 2011, at 13:11. This page has been accessed 3,187 times.