வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பொன்னம்பலம் பிள்ளையின் திருப்பணி

From மரபு விக்கி

Jump to: navigation, search

மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்

(தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி கீதா சாம்பசிவம்)

பொன்னம்பலம் பிள்ளையின் அருமையை அறிந்து பழகி வந்த சொக்கம்பட்டி ஜமீன்தாராகிய பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் கி.பி.1721-ம் வருஷத்திற்கு முன் உலக வாழ்வை நீத்தார். தம்முடைய தலைவராகவும், நண்பராகவும் இருந்த அவருடைய பிரிவைப் பொன்னம்பலம் பிள்ளையால் தாங்க முடியவில்லை. அவர் இல்லாத உலகத்தில் வாழ்வதைவிட அவரோடு செல்வதே நல்லதென்று நினைத்தார். ஆனால் விதி அதற்கு இணங்குமா? அன்பு, அருள், அறம் எல்லாவற்றிகும் மேல் நின்று ஆணை செலுத்தும் விதியின் வலிமையைக் கடப்பார் யார்?

பொன்னம்பலம் பிள்ளையின் துக்கம் கரை கடந்து நின்றது. அவர் ஒரே ஒரு செய்யுள்தான் சொல்லியிருக்கிறார். அவருடைய துயரத்தின் முழு இயல்பையும் அச்செய்யுள் புலப்படுத்தும்.

"அந்த மகராஜன் இந்த நாட்டின் அரசாட்சியைத் துறந்து வானாட்டை அரசாளப் போய்விட்டான். ஆனால் இங்கே என்னை ஸ்தானாதிபதியாக வைத்துக்கொண்டு ஆட்சி புரிந்ததைச் சிறிதல்வாவது மதியாமல் தனியே சென்றுவிட்டான். அந்தச் சேனாபதிப் பெருமானாகிய சின்னணைஞ்சானைப் பிரிந்து நான் இங்கே இருப்பதினால் என் உள்ளம் புண்பட்டுத் தவிக்கின்றது. அவன் போனவழி போனாலொழிய அப்புண் தீராது" என்று நைந்து புலம்பி அவர் பாடிய செய்யுள் வருமாறு:

தரவு கொச்சகக் கலிப்பா

"வானாடரசாளப் போன மகராசன்
தானா பதியெனவுஞ் சற்றுமதித் தானிலையே
சேனா பதிப்பெருமான் சின்னணைஞ்சான் போனவழி
போனா லொழியமனப் புண்பாடு தீராதே."

குறிப்பு - இச்செய்யுள், "வானா டரசாளப் போன மதப்புலிதான்
                                        தானா பதிதனையுந் தானழைத்துப் போகாதோ,
                                        சேனாபதிராசன், சின்னணைஞ்சான் போனவழி,
                                        போனாலொழிய மனப் புண்பாடு தீராதே"
                                                                                               என்றும் வழங்கும்.

பெரியசாமி சின்னணைஞ்சாத்தேவருக்குப் பின் சிலர் சிலகாலம் ஜமீன் ஆட்சியை நடத்தி வந்தனர். கி.பி. 1729-ம் வருஷம் சிவராமச் சின்னணைஞ்சாத் தேவரென்பவர் ஜமீன்தாரானார். அவர் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவருடைய தம்பியின் குமாரர். அவர் காலத்தில் பொன்னம்பலம் பிள்ளையும் பெரியநாயகம் பிள்ளையென்பவரும் ஸ்தானாதிபதிகளாக இருந்தனர். தம் பெரிய தந்தையார் காலத்தில் இருந்தவரென்ற நினைவினால் சிவராமச் சின்னணைஞ்சாத் தேவர் பொன்னம்பலம் பிள்ளையை ஸ்தானாதிபதியாக வைத்திருந்தாரேயன்றி உண்மையில் அவரிடத்தில் அன்பு வைக்கவில்லை.

வாழ்க்கையில் வெறுப்புற்றிருந்த பொன்னம்பலம் பிள்ளையின் உள்ளம் தருமத்திற் சென்றது. திருக்குற்றாலம் முதலிய ஸ்தலங்களில் தம் பெயரால் சில தருமங்கள் செய்யவேண்டுமென்று எண்ணினார். அவருக்கு முன்பு சொக்கம்பட்டி ஸமஸ்தானத்தில் ஸ்தானாதிபதியாக இருந்த வைத்தியப்ப பிள்ளையென்பவர் திருக்குற்றாலத்தில் தம் பெயரால் வைத்தியப்ப விலாசம் என்ற மண்டபம் ஒன்று கட்டினார். அவ்வாறு தம் பெயராலும் ஒன்று கட்ட அனுமதி தரவேண்டுமென்று பொன்னம்பலம் பிள்ளை ஜமீன்தாரை வேண்டினார். ஜமீன்தார் அதற்கு இணங்கவில்லை. அப்பால் பண்புளிப்பட்டணத்திலுள்ள திருமலையிலேனும் தம் சொந்தப்பணத்திலிருந்து செலவு செய்து ஒரு மண்டபம் கட்ட இடம் கேட்டார். அதற்கும் ஜமீன்தார் சம்மதிக்கவில்லை. சிலமுறை வற்புறுத்திக் கேட்டபோது, "நமக்கு இஷ்டமில்லாத காரியத்தில் இவ்வளவு பிடிவாதம் பண்ணுவது நன்றாக இல்லை; உம்முடைய மனம் போனபடியெல்லாம் நாம் செய்வது இயலாத காரியம்" என்று கோபித்துக் கொண்டார்.

பொன்னம்பலம் பிள்ளையின் உள்ளத்தை அவ்வார்த்தைகள் சுட்டன; தம் பழைய நிலையை அவர் எண்ணிப்பார்த்தார். அந்த ஸமஸ்தானத்தில் அவர் வைத்தது சட்டமாக நடந்தது ஒரு காலம். ஆனையோடு பழகிவிட்டுப் பூனையைக் கெஞ்சவேண்டிய நிலை வந்ததை நினைந்து அவர் இரங்கினார். "சரி; இனி இந்த இடத்தில் இருப்பதில் பயன் ஒன்றும் இல்லை" என்று தீர்மானம் செய்து கொண்டார். "இவ்வளவு நாள் உங்கள் பரம்பரைக்குரிய செம்புலியென்னும் பட்டத்திற்கேற்ற குணம் எப்போது வரும், எப்போது வருமென்று காத்திருந்தேன். கோபமென்பது சிறிதும் இதுகாறும் உமக்கு வரவில்லை. இப்போதுதான் அந்தப் பட்டம் பொருளுடையதாயிற்று. உம்மிடம் புலியின் குணம் இருப்பதை உம்முடைய கோபம் காட்டியது" என்ற கருத்தைக் குறிப்பாக வெளியிடும் ஒரு செய்யுளைக் கூறிவிட்டு அவர் சொக்கம்பட்டியை நீத்துச் சங்கர நயினார் கோயிலுக்குச் சென்றார். அச்செய்யுள் வருமாறு:

"என்று வரு மென்று வரும் என்றிருந்தேன் திவ்யகுணம்
குன்றமே கோபங் குறியாதே - மன்றுதனில்
செம்பியன்போல் வாழுஞ்சிவராம தேவமன்னா
அம்புவிமேற் செம்புலிப்பட்டம்."

(கோபம் குறியாதே செம்புலிப்பட்டம் என்று வருமென்றிருந்தேன் என்று கூட்டிப் பொருள் செய்க. குணம் குன்றமென்றது குறிப்பு மொழி. சிவராம செம்புலிச் சின்னணைஞ்சாத் தேவரென்பது ஜமீன்தாரின் முழுப்பெயர்)

சங்கரநயினார் கோயில் எம்பெருமானிடம் பொன்னம்பலம்பிள்ளை நெடுநாட்களாக ஈடுபட்டவர். அந்த ஸ்தலத்து நாயகரை உத்தரகோச மங்கையிலிருந்து மீட்டவர். அவ்வாலயத்திற் புகுந்து சங்கர நாராயண மூர்த்தியைத் தரிசித்தபோது அவருக்குத் துக்கம் பொங்கி வந்தது. உலக இயல்பை நினைந்து அவர் வருந்தினார். "இதம் அறியாதவரிடம் ஊழியம் செய்வதைக் காட்டிலும் காவியாடை புனைந்து துறவியாகி விடலாம்; இல்லையேல் அவர் கண்முன்னே இராமல் கப்பலேறி வேற்று நாட்டுக்குப் போய்விடலாம்; அதுவும் இயலாவிட்டால் இறந்து விடலாம்; மறுபிறவியிலேனும் இந்த நிலை வராமல் இருக்கும். கல்லிலே அம்பை எய்து பிளக்க முடியுமா? இங்கிதம் அறியாதவர்களோடு பழகுவது அத்தகையதுதான்" என்ற எண்ணங்கள் அவர் உள்ளத்தே எழுந்தன; அவற்றையே ஒரு செய்யுளுருவத்தில் அவர் வெளியிட்டார் :

கட்டளைக்கலித்துறை

"காவிக் கலையிலை யோகப்ப லேறக்கடலிலையோ
ஆவிக்கு மீளப் பிறப்பிலை யோக ல்லி லம்புதனை
ஏவிப் பிளப்பது போலே யிதமறி யாதவரைச்
சேவிப்ப ரோசிவ சங்கர ராசைச் சிவக்கொழுந்தே!" (கலை=ஆடை, ராசை=சங்கரநயினார் கோயில்; ராஜபுரமென்பதன் மரூஉ)

சில தினங்கள் சங்கர நயினார் கோயிலில் இருந்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுப் பொன்னம்பலம் பிள்ளை திருநெல்வேலி சென்றார். அங்கே இருந்த ஆறை அழகப்ப முதலியார் அவரை வரவேற்று உபசரித்தார். அவரைக் கண்டு பேசி மகிழ்வதில் முதலியாருக்கு மிக்க விருப்பம் உண்டு. பெரியசாமிச் சின்னணைஞ்சாத்தேவர் இறந்த பிறகு பொன்னம்பலம் பிள்ளை ஊக்கக்குறைவாக இருப்பதை முதலியார் அறிந்திருந்தார். அவரை நேரில் கண்டபோது முதலியாருக்குப் பழைய நினைவுகளெல்லாம் வந்தன.

"இப்போது உங்கள் ஜமீன் எப்படி இருக்கிறது?" என்று முதலியார் கேட்டார்.

"எங்கள் ஜமீனா? எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? என்னுடைய மகாராஜன் எப்போது போனானோ அப்போதே என் ஜீவனும் போய்விட்டதென்றே சொல்லவேண்டும். இப்போது நடைப்பிணமாகத்தான் இருக்கிறேன்."

"அங்கே இப்போது நீங்கள் ஸ்தானாதிபதியாக இல்லையா?"

"இருந்தேன்; பெயருக்கு மாத்திரம் அப்படி இருந்தேன். அருமை அறியாத இடத்திலே இருப்பதில் என்ன பயன்? அதனால் தங்களைத் தேடி வந்துவிட்டேன்."

அந்த வார்த்தைகள் முதலியார் நெஞ்சில் மிக்க இரக்கத்தை உண்டாக்கின; "இவர் எத்தகைய மனிதர்! ஆயிரம்பேர் இருந்தாலும் அவர்கள் இவருக்குச் சமானமாவார்களா? இவரை அருகில் வைத்துக் கொள்வதற்கு எவ்வளவு தவம் செய்திருக்கவேண்டும்!' என்று அவர் எண்ணி வருத்தமுற்றார்.

பொன்னம்பலம் பிள்ளை தம் கருத்தை அமைத்து,

"தானா பதியெனும் பேர்மாத் திரமென் றமிழருமை
ஆனா லறிவது நீமாத் திரமெனக் காதரவு
நானா விதத்திலுங் காணே னுனைமுற்றும் நம்பிவந்தேன்
மானா கராதொண்டை நாடா வழகப்ப மன்னவனே"
என்ற பாடலைக் கூறினார்.

முதலியார், "நீங்கள் இங்கே வந்தது என் பாக்கியம். இந்த வீடு உங்களுடையது. செளக்கியமாக இங்கேயே இருக்கலாம்." என்று அன்பு ததும்பக் கூறினார்; அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் உதவிப் பாதுகாத்துவந்தார்.

அவ்வாறு பொன்னம்பலம்பிள்ளை திருநெல்வேலியில் இருந்த காலத்தில் சொக்கம்பட்டியிலிருந்த சிவராமத் தேவரிடம் பலர் வந்து, " உங்கள் ஜமீன் ஸ்தானாதிபதி அங்கே போய் இருப்பது உங்களுக்கு அகெளரவமல்லவா?" என்று கூறினர். ஜமீன்தார் ஆறை அழகப்பமுதலியாருக்கு அடங்கினவர். ஆதலின் தம்மைப்பற்றி முதலியார் ஏதேனும் தவறாக எண்ணிவிட்டால் என்ன செய்வதென்று அச்சம் ஜமீன்தாருக்கே உண்டாயிற்று. ஆதலின் பொன்னம்பலம்பிள்ளையை மீட்டும் சொக்கம்பட்டிக்கு வருவிப்பதற்கு முயன்றார். பிள்ளையின் விருப்பத்தின்படியே திருமலையில் திருப்பணிகள் செய்துகொள்ளலாமென்று சொல்லியனுப்பினார்.

தம் கருத்து முற்றுப்பெறுமென்பதை உறுதியாக அறிந்துகொண்ட பொன்னம்பலம் பிள்ளை முதலியாரிடம் விடைபெற்றுச் சொக்கம்பட்டி வந்து சேர்ந்தார். பிறகு தம் பொருளை விசேஷமாகச் செலவிட்டுத் திருமலை ஆண்டவர் ஆலயத்திற் சில திருப்பணிகள் இயற்றுவித்தார். அவற்றை இயற்றிய பின்னர் அவர் மனம் ஒருவாறு ஆறுதலுற்றது.

சொக்கம்பட்டி ஜமீனில் பல குழப்பங்கள் நேர்ந்தன. பட்டத்தின் உரிமை பற்றிப் பல கலகங்கள் நிகழ்ந்தன. பொன்னம்பலம்பிள்ளை அவற்றில் ஊக்கம் கொள்ளவில்லை. முதுமைப் பருவத்தில் அவருக்குத் தெய்வ சிந்தையும் தமிழன்புமே பற்றுக்கோடாக இருந்தன. அவர் 1762-ம் வருஷம் (கொல்லம் ஆண்டு 937, மாசி மாதம் 7-ம்தேதி) சிவபதமடைந்தனரென்று தெரிகிறது.

மதியூகியும் தமிழ்ப்புலவரும் சிவபக்திச் செல்வருமாகிய பொன்னம்பலம் பிள்ளையின் செயல் ஒவ்வொன்றும், "அவர் சாதாரண மனிதர்களோடு சேர்த்து எண்ணுதற்குரியவரல்லர்; மனிதவர்க்கத்தில் தமக்கென்று தனிச்சிறப்புடைய ஸ்தானத்துக்குரியவர்" என்றே நினைக்கச் செய்யும்.

(குறிப்பு: பொன்னம்பலம் பிள்ளையைப் பற்றி நான் எழுதிய வரலாறுகளுக்கு ஆதாரமாக உள்ளவை, "வடகரை யென்ற சொக்கம்பட்டிப் பாளையப்பட்டுச் சரித்திரம்" என்னும் புத்தகமும் நான் கேள்வியுற்ற கர்ணபரம்பரைச் செய்திகளுமேயாம்.)

Contributors

Ksubashini மற்றும் Dev

This page was last modified on 18 February 2010, at 17:12. This page has been accessed 2,409 times.