பழங்கலத்தில் பழங்கள் - 9
ரெ.கார்த்திகேசு
சுவாமி இராமதாசரும் செந்தமிழ்க் கலாநிலையமும்
(பாகம் 2)
அனைத்துலகச் சுற்றுலாச் சுவர்க்கமான இன்றைய நவீன பினாங்கில் இருந்து கொண்டு பழைய நாட்களை ஓர் ஏக்க உணர்வோடுதான் நினத்துப் பார்க்க வேண்டியுள்ளது. பினாங்கில் டிராம் வண்டிகள் ஓடிக் கொண்டிருந்த காலம் அது. தலை நிலத்திலிருந்து தீவுக்குப் போக ஃபெர்ரி தவிர வேறு வழி கிடையாது. இப்போதுள்ள பட்டர்வர்த்-பினாங்கு ஃபெர்ரியைத் தவிர்த்து கோலப் பிறையிலிருந்து ரயில் ஃபெர்ரி ஒன்றும் ஓடிக் கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் தமிழ்த் தொழிலாளர்களே அதிகம் காணப்படுவார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கிடையே இருந்து இராமதாசர் என்னும் ஓர் உன்னதமான இலக்கியவாதியும் சீர்திருத்தவாதியும் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பது வெளி உலகத்துக்குத் தெரியாது.
அந்தப் பெரியவரின் சிறப்பை நமக்கு உணர்த்தும் சோணைமுத்துவின் வார்த்தைகளில் சுவாமி இராமதாசரின் கதையும் செந்தமிழ்க் கலாநிலையம் உருவான கதையும் இப்படி வருகின்றன:
சுவாமியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வந்த டி.எஸ்.கனகசுந்தரம் (உதய சூரியன், தேசநேசன், சமரசன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர்) "செந்தமிழ்ப் பாடசாலை" என்னும் பெயரை "செந்தமிழ்க் கலாநிலையம்' என மாற்றுமாறு ஆலோசனை கூறினார். சுவாமி அதனை ஏற்க 14/1/1944இல் "செந்தமிழ்க் கலாநிலையம்" பிறந்தது
அப்போது தொடங்கிய கலாநிலையத்தின் இலக்கியப் பயணம் நீண்ட நெடிய பயணமாக அமைந்தது. பொங்கல் விழா, சித்திரைப் பிறப்பு, புத்தர் விழா, இராமலிங்க அடிகளார் விழா, சிவராத்திரி, நூல் வெளியீட்டு விழாக்கள் எனப் பல இலக்கிய, சமய விழாக்களை நடத்தித் தமிழ்ச் சூழலுக்கு உயிரூட்டிக் கொண்டே இருந்தது. மேலும் "செந்தமிழ்" என்ற பத்திரிக்கையையும் அது எஸ்.பி.செல்லையாவை ஆசிரியராகக் கொண்டு நடத்தி வந்தது. ("மறைமுடி வல்லத்தரசு" என்னும் புனைபெயரில் எழுதி வந்த எஸ்.பி.செல்லையா பிற்காலத்தில் பினாங்கு மாநிலச் சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்தார். இவர் பெயரில் பினாங்கில் ஒரு சாலையும் இப்போது இருக்கிறது.)
செந்தமிழ்க் கலாநிலையத்தில் பயின்ற மாணவர்கள் தமிழின் தொன்மையை அறிந்து பாராட்டி அதன் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கற்றார்கள். அவர்களில் சிலர் பின்னர் பிள்ளைத்தமிழ், கலம்பகம், அந்தாதி, காவியம் என்ற இலக்கிய வகைகளைப் பாடும் திறமைகளைப் பெற்றனர்.
கலாநிலைய நிழலில் வளர்ந்த கவிஞர்களில் இன்றும் அறியப்பட்டவர்கள் பலர். காவியம் இயற்றியவர்களில் "கவி காசு" என்னும் காதர் சுல்தான், மற்றும் செந்தமிழ்க் கவிமணி இரா.பாண்டியன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுவாமியின் நெருக்கமான சீடராக இருந்த காலஞ்சென்ற வீ.கே.சுப்பிரமணியமும் இவரின் கீழ் புலமைத்துவம் பெற்றார். பல கவிதை நூல்களை ஆக்கி வெளியிட்டார். கவிஞர்கள் நாச்சிகுளத்தார், வடிவேலு, க.முனியாண்டி, சோலை முருகன் ஆகியோரும் சுவாமியின் நிழலில் பயிற்சி பெற்றவர்களே. குவாலா லும்பூரில் "பாவலர் மன்றம்" அமைத்துப் பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் டி.வி.ஆர்.பி. சுவாமியைத் தனது குருவாக ஏற்றவர்.
கலாநிலையம் இலக்கியத்தை மட்டும் வளர்க்கவில்லை. சமூக அளவில் தீவிரமாக சேவையாற்றிச் சாதிப் பாகுபாட்டை ஒழிக்கப் போராடியது. சாதி ஒழிப்பை முன்னிறுத்தி கலப்புத் திருமணம் புரிய விரும்புவோரை ஆதரித்துத் திருமணங்கள் பல நடத்தி வைக்கப்பட்டன. இயலாதவர்களுக்குக் கலாநிலைய மாணவர்களே தங்கள் செலவில் திருமணங்கள் நடத்தி வைத்தார்கள். முன்பே குறிப்பிட்டதைப் போல சிலம்பம், மற்போர், வர்மக் கலை போன்ற உடலைப் பேணும் கலைகளையும் கலாநிலையம் ஊக்குவித்தது.
இவற்றில் பயிற்சி பெற்று பின்னர் வாழ்வில் உயர்ந்தவர்களில் மேஜர் ஆதிமூலம், லெஃப்டினண்ட் கர்னல் சௌந்தரராஜன் போன்றோரைக் குறிப்பிடலாம். பினாங்கின் கொடை நெஞ்சர் திருத்தொண்டர் கந்தையா பிள்ளை, அவருடைய மகன் டாக்டர் கணேஷ்வரன் ஆகியோரும் சுவாமிக்கு நெருக்கமானவர்களே.
இந்தியாவின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்ட போது, கலாநிலையம் தன் உறுப்பினர்கள் பலரை அதில் சேர அனுப்பி வைத்தது. "பாரதி சொற்பயிற்சி மன்றம்" ஒன்று அமைத்துச் சொற்பொழிவுக் கலையையும் வளர்த்தது.
கலாநிலையத்தின் 40ஆம் ஆண்டு விழாவில் (1984) சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் ஈடுபாடுடைய பலருக்கு விருதுகள் அளிக்கப்பட்டு பாராட்டுச் செய்யப்பட்டது. சுவாமியின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதில் பினாங்கின் முக்கிய இலக்கிய அரசியல் சமுகப் பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன் தமிழகத்திலிருந்து பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனும் கலந்து கொண்டார்.
பிற்காலத்தில் செந்தமிழ்க் கலாநிலையத்தின் செயற்பாடுகள் முடக்கம் கண்டன. சுவாமியின் இறுதி நாட்கள் வறுமையிலும் நோயிலும் தனிமையிலுமே கழிந்தன. அவர் பினாங்கிலிருந்து பிரிந்து சில காலம் தைப்பிங் சென்று வாழ்ந்தார். பின் அங்கிருந்து தமிழ் நாட்டிற்கு தமது உறவினர்களோடு வாழச் சென்றார். 1991இல் தமிழகத்திலேயே அவர் காலமானார்.
(பகுதி – 10 தொடரும்)