வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பங்கா இழுத்த பாவலர்

From மரபு விக்கி

Jump to: navigation, search

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்

தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி கீதா சாம்பசிவம்



சிலருக்குச் சிலவகையான ஆற்றல்கள் எளிதில் அமைந்து விடுகின்றன. அத்தகைய ஆற்றல்கள் வேறு சிலருக்கு மிக முயன்றும் சிறிதும் வரமாட்டா. செய்யுளியற்றும் ஆற்றலும் அவ்வகையானதே. சிலர் யாப்பிலக்கணம் முதலியவற்றை நன்றாக ஆராய்ந்து அறிந்திருந்தாலும், இனிய ஓசையுடைய செய்யுட்களைப் பிழையின்றி இயற்றுவதில் தடுமாறுகிறார்கள். பிறர் செய்யுட்களிலுள்ள பிழைகளை எடுத்துக்காட்டும் இயல்புடைய சிலர் பிழையற்ற சில பாடல்களையேனும் இயற்றும் ஆற்றலை அடைந்திலர். வேறு சிலரோ இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றை ஆராயாவிடினும் மனத்தில் தோற்றிய கருத்துக்களை அழகுபெற அமைத்துச் செய்யுள் செய்துவிடுகிறார்கள்.


தமிழ்நாட்டில் தம்முடைய மனக்கருத்தைச் செய்யுளில் அமைத்து விரைவில் வெளியிடும் ஆற்றல் வாய்ந்த பல புலவர்கள் இருந்து புகழ் பெற்று விளங்கியதுண்டு. காளமேகத்தைப் போன்ற ஆசுகவிகள் பலர் இவ்வகையில் தலைசிறந்து விளங்கியவர் ஆவர். அவர்களுடைய செயல்களும், பலவகையான செய்யுட்களிற் பாடிய வரலாறுகளும் யாவராலும் விருப்பத்துடன் கேட்டு இன்புறற்குரியன. அத்தகைய தனிப்பாடல்களும் அவற்றைப் பற்றிய வரலாறுகளும் நாட்டில் அங்கங்கே கர்ணபரம்பரையாக வழங்கிவருதல் அறிஞர்கள் அறிந்ததே.


சற்றேறக்குறைய இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் வேம்பத்தூரில் இருந்து விளங்கிய சிலேடைப்புலி பிச்சுவையரென்னும் வித்துவானைப் பலர் அறிந்திருத்தல் கூடும். அவர் மிக்க புகழ் பெற்ற கவிராசபண்டிதருடைய பரம்பரையில் தோன்றியவர்; விரைவிற் செய்யுளியற்றும் வன்மையுடையவர்;

*இராமநாதபுர மன்னராக இருந்து விளங்கிய ஸ்ரீபாஸ்கரஸேதுபதியவர்கள் விருப்பத்தின்படி ஒரு மணிநேரத்தில் பன்னிரண்டு சிலேடைகளைப் பாடி அம்மன்னரால் வழங்கப் பட்ட ஐயாயிரம் ரூபாய் ஸம்மானத்தைப் பெற்றவர். அவருடைய குமாரர்களுள் மூத்தவர் மகாதேவபாரதி என்பவர்; அவரும் விரைவிற் செய்யுள் இயற்றுவார். இப்பொழுது மதுரையில் இவர் செளக்கியமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய வரலாறு ஒன்று வருமாறு:-


காலஞ்சென்ற ஸ்ரீ பா. ராஜராஜேசுவர ஸேதுபதிமன்னரவர்கள் ஏறக்குறைய 22 வருஷங்களுக்கு முன்பு இராமநாதபுரத்தில் மிகவும் சிறப்பாக நவராத்திரிவிழாவை நடத்தினார்கள். அவர்களுடைய குலதெய்வமாகிய ஸ்ரீராஜராஜேசுவரிக்கு நித்திய நைமித்தியங்கள் அலங்காரங்கள் முதலியன மிக மேன்மையாக நடைபெற்றன. மன்னரவர்கள் விருப்பத்தின்படி இந்நாட்டின் பல  பாகங்களிலிருந்த ஸம்ஸ்கிருத பண்டிதர்களும் தென்மொழிப்புலவர்களும் ஸங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். நாள்தோறும் தமிழ்வித்துவான்கள் அம்பிகை விஷயமாகப்பல செய்யுட்களை இயற்றிக் கூறிச் செவிக்குணவை அளித்தார்கள். வடமொழி வித்துவான்கள் தேவிவிஷயமாகவுள்ள வடமொழி ஸ்தோத்திரங்களையும் வேறு சுலோகங்களையும் எடுத்துச் சொல்லிப்பிரசங்கம் செய்தார்கள். வாய்ப்பாட்டிலும் மிருதங்கம் முதலிய வாத்தியங்களிலும் வல்ல ஸங்கீத வித்துவான்கள் ஊக்கத்தோடு தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி யாவரையும் மகிழ்வித்து வந்தார்கள்.


அந்த விழாநாட்களிலெல்லாம் வித்துவான்களுடைய பேச்சுக்களையும் பாட்டுக்களையும் இனிய ஸங்கீதத்தையும் கேட்பதிலேயே மற்ற ஜனங்களுக்குப் பொழுதுபோயிற்று. மன்னரவர்களும் அவ்வித்துவான்களுக்கு ஏற்ற வசதிகளை அமைத்து ஆதரித்து வந்தனர்.


அப்போது ஒருநாள் பாஸ்கரஸேதுபதியவர்களின் மாப்பிள்ளையவர்களது மாளிகையில் பல வித்துவான்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் இருந்தேன். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அநுபவத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறினர். அப்பொழுது காலை 9 மணியிருக்கும். இயல்பாகக் காற்று இல்லாமையால் வெப்பமாக இருந்தது. அம்மாளிகையில் பெரிய பங்காக்கள் இருந்ததைக் கண்ட நான், "பங்கா இழுப்பவன் இல்லையோ?" என்ரு கேட்டேன். உடனே அக்கூட்டத்திலிருந்த மகாதேவ பாரதியார் திடீரென்றெழுந்து அங்கிருந்த பங்காவின் கயிறுகட்டியிருந்த நிலைக்கு அப்புறம் விரைந்து சென்றார். நிலையின் மேலுள்ள துவாரத்தின் வழியாக வெளியில் விடப்பட்டிருந்த கயிறு முடியப் பட்டிருந்தது. சென்ற பாரதியார் எழும்பி அந்த முடிச்சை எட்டிப் பிடித்துக் கொண்டார். பங்காக்காற்றை அநுபவிக்க, அறிந்த அவர் அதனை இழுக்கும் முறையை அறியாமல், எப்படியாவது பங்காவை இழுத்து விரைவில் வெப்பத்தைப் போக்கவேண்டுமென்பதை எண்ணி அவசரமாக அந்தக் கயிற்று முடிச்சைக் கையில் பிடித்து இழுத்தார். அது கீழே வந்தது; பின்பு மேலே போயிற்று. அதைப் பிடித்துக்கொண்டிருந்த பாரதியார் அதைவிட்டுவிட்டால், மறுபடியும் பிடித்து இழுக்க நேரமாகுமென்றெண்ணி அது மேலே போகும்பொழுது அதைப் பிடித்துத் தொங்கிக் க்கொண்டே தாமும் மேலே எழும்பிப் போனார். நிலை உயரமானது; அவரோ மெல்லிய தேகத்தையுடையவர். இப்படிக் கீழே வருகையில் இழுத்தும் மேலே போகையில் உடன் மேலே சென்றும் தம்மையே மறந்து பங்காவை இழுத்துக்கொண்டிருந்த அவரது நிலைமையை யாவரும் கண்டு வியப்புற்றனர். உடனே பங்காக்காரன் வந்துவிட்டான். அவன் கயிற்றை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு வழக்கம்போல முடிச்சை அவிழ்த்துக் கயிற்றை நெடுகவிட்டு இழுக்க ஆரம்பித்தான். மகாதேவபாரதியார் அவனுடைய செயலைச் சிறிதுநேரம் கூர்ந்து கவனித்துவிட்டு எங்களை நோக்கிவந்தார்; "உயர்குலத் தோன்றலும் கவிஞருமாகிய நீர் இப்படிச் செய்யலாமா? உமக்கு முன்பு பழக்கம் இல்லையே!" என்று சொன்னேன். அவர் உற்சாகத்தோடும் உவகையோடும், "பங்கா இழுப்பதென் முன்னோர்கள் செய்திட்ட பாக்கியமே" என்று பாட்டாக விடையளித்தார். அது ஒரு கட்டளைக்கலித்துறையின் ஈற்றடியாவதற்கு ஏற்றதாக இருத்தலை யறிந்து, "பாட்டைமுடித்துச் சொல்லவேண்டும்" என்றேன். உடனே அவர் சற்றும் தயங்காமல்,

"கொங்கார் பொழில்புடை சூழ்முகவாபுரிக்கொற்றவனாம்
மங்காத கீர்த்தி வளர்பாற் கரமுகில் மாப்பிளையின்
சிங்கார மாளிகையிற்புல வோர்க்குச் சிரத்தையுடன்
பங்கா விழுப்பதென் முன்னோர்கள் செய்திட்ட பாக்கியமே"

என்ற கட்டளைக்கலித்துறையைச் சொல்லித் தமது பரம்பரைப் பெருமையை விளக்கினார். அங்கிருந்த யாவரும் அவருடைய ஆற்றலையும் வித்துவான்களிடத்தில் அவருக்கிருந்த அன்பையும், வியந்து பாராட்டினார்கள். அன்று மாலை ஸ்ரீராஜராஜேசுவர ஸேதுபதியவர்கள் வீற்றிருந்த சபையில் இந்த நிகழ்ச்சியை நான் தெரிவித்தபோது அவர்கள் கேட்டு மகிழ்ந்தார்கள். மகாதேவ பாரதியார் பங்கா இழுக்கும்பொழுது கீழே வருவதும் கயிறு மேலே செல்கையில் தாமும் மேலே செல்வதுமாகிய அந்தக் காட்சி இன்றும் என் கண்முன் நிற்கின்றது.


*அம்மன்னரவர்கள் செய்த நன்றிய மறவாமைக்கு அடையாளமாகப் பிச்சுவையர் தம் குமாரர் ஒருவருக்குப் பாஸ்கரையரென்ற பெயரையும், அந்த நிதியைக் கொண்டு வாங்கிய நிலத்திற்குப் பாஸ்கரன்செய் என்ற பெயரையும் இட்டனர்.

Contributors

Ksubashini மற்றும் Dev

This page was last modified on 19 February 2010, at 17:07. This page has been accessed 3,781 times.