ஈரோடு, தொண்டர்சீர்பரவுவாரும், பேரூர் ஆதீனப் புலவருமாகிய சைவத்திரு இரா.ப.தங்கவேலனார் அவர்களுக்கு பவள விழாவை முன்னிட்டு, திருச்செங்கோடு தமிழாசிரியர், புலவர், மா.கணபதி, அன்புடன் சூட்டிய நவரத்தின மாலை.
நவரத்தின மாலை!
திருமுறைச் செல்வர் செந்தமிழ்க் குரிசில்
சிவனடித் தொண்டர்சீர் பரவும்
பெருமக னாராம் தங்கவே லவர் தம்
பீடுசேர் பவளநல் விழாவின்
அருமையை அவர்தம் அரும்பணி தன்னை
அகமிக மகிழ்த்தினி துரைக்க
வருந்துணை யான கரிமுக வள்ளல்
மலர்ப்பதம் தொழுதுளம் மகிழ்வோம்.
வெண்பா
தெய்வத் தமிழே திருக்கோயிற் பூசனைக்கு
மெய்ம்மைமொழி என்றே விளம்பினார் - துய்ய
வயிரமணி போலுடம்பு வாய்த்ததங்க வேலர்
உயிரன்றோ தொண்டர்க் குரை.
கட்டளைக் கலித்துறை
உரையால் உளத்தால் உறுசெயற் றூய்மை உடையதனால்
தரைமீ துளார்கள் புகழ்மாலை சாற்றும் தகைமையுளார்
வரையாமல் நீல மணிமிடற் றண்ணல் மகிமையெலாம்
கரையாத நெஞ்சம் உகுமா றுரைக்குமெங் கண்ணியரே.
எண்சீர் விருத்தம்
கண்ணியராய் வாழ்ந்திளைஞர் கற்கக் கல்விக்
கழகங்கண் டாசிரியர் கடமை யாற்றி
எண்ணரிய நன்முத்துப் போன்ற சொல்லால்
எடுத்துரைத்து மாணவர்தம் இதயம் ஓங்கப்
பண்ணியநற் றிறலுடையார் பரிசை எம்மால்
பகரமுடி யாதிந்திப் படியி லுள்ளார்
உண்ணினைந்து போற்றிடுவர் நாளும் நாளும்
ஒப்பரியர் : உறுபகழ்க்கே உரியரானார்.
அகவற்பா
உரிமையா லவர்சீர் உரைத்திட விழைவன்
விரியும் எனவே மிகமிகச் சிருக்கிப்
புரியும் வண்ணம் புகன்றிடு வேனால்:-
சிவனடி யார்திருக் கூட்ட மமைத்து
நீரார் சடையன் நிலவணி புனைந்தோன்
பவள மேனியன் பால்வெண் நீற்றன்
திருக்கூத் தாடும் தில்லை முதலாப்
பற்பல தலங்களைப் பாங்குடன் கண்டு
அவ்வத் தலத்தின் அற்புத மெல்லாம்
அடியவர் கேட்க அகமகிழ்வோடு
சொற்றவர் : தம்மை உற்றவர்க் கெல்லாம்
நீடு பயன்பெறப் பாடுபட் டுழைத்துத்
திருமுறைக் கழகம் நிறுவியங் கதனால்
பற்பல நூல்களைப் பதிப்பித் தவற்றை
விற்பனர் போற்ற வெளியிட்டுதவி
ஆண்டுகள் தோறும் ஈண்டிய அறிஞர்கள்
சொற்பெருக் காற்றிடத் துணையர் யிலங்கி
ஆத்திக உணர்வை அடிநாள் முதலா
பட்டிதொட் டியெலாம் பரப்பிடச் சென்று
பள்ளிச் சிறார்முதல் பருவக் காளையர்
முதியோர் ஈறா முன்வந் திருக்கப்
பெரிய புராணப் போமு தத்தினை
நகைச்சுவை ததும்ப நல்கியங் காங்கே
அருந்தொண் டாற்றிய அண்ணல் : தூய
பச்சை யப்பரும் பழனியம் மாளும்
இச்சகம் போற்ற ஈன்றநற் புதல்வர் :
தொண்டர்சீர் பரவும் தூயவ ரவரே.
தரவுகொச்சுக்கலிப்பா
அவரே திருநாவுக் கரசருக்குச் சித்திரையில்
புவனத் தவரெல்லாம் பூரிப்புக் கொண்டிடவே
நவமாம் நிகழ்ச்சிபல நாட்டிமணித் தேரோட்டி
உவமை சொலாவின்பம் உற்றே இலகுவரே.
வஞ்சிவிருத்தம்
இலகும் பச்சைக் கொடிசேர்
நலமார் பங்கன் தாளை
வலமாய் வணங்கிடும் திருநூல்
பலவாய் அளித்த பண்பர்.
கட்டளைக்கலிப்பா
பண்பர் : பாவலர் தம்மைப் புரப்பவர்:
பாரில் இன்னருள் தன்னைச் சுரப்பவர் :
நண்ப ராய்நறம் யார்க்கும் விளைப்பவர்;
நல்ல சற்குரு வாக முளைத்தவர்;
எண்டி சைப்பலர் ஏத்தமே லோங்கினர்;
எங்கள்கோ மேதகவுடைப் பாங்கினர்;
தண்பு நற்பொன்னி சூழுமீ ரோட்டினைச்
சார்ந்த வர்புகழ்த் தங்கவேலரவரே.
அறுசீர் விருத்தம்
தங்கமே அனையார் கூடும்
சபைதனிற் றளர்வி லாமல்
இங்கித மாகப் பேசும்
இயல்பினர்; இறைவி சேர்ந்த
பங்கினர் பதும ராகப்
பதந்தினைப் பரவும் அன்பர்;
சங்கையில் லாத ஞானச்
சதுரராம் தங்க வேலர்.
எழுசீர் விருத்தம்
தங்கவே லனார் தரணியிற் பவளம்
சார்த்தநல் விழவினைக் கண்டு
மங்கலம் பொலிய முத்துவி ழாவும்
மற்றுநூ றாகிய விழவும்
பொங்கொளி சேர்ந்த வாலவாயத்தன்
பூம்பதந் தருளினாற் காண
எங்குல தெய்வ மாகிய செவ்வேள்
இணையடி இறைஞ்சுவம் மாதோ.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:12, 9 ஜூலை 2011 (UTC)