வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தக்காளித் தொக்கு, பாரம்பரிய முறையில்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 தக்காளி ஒரு கிலோ, மிளகாய் வற்றல் 50 கிராம்.(காரம் தேவை இல்லை எனில் குறைத்துக்கொள்ளவும்.) எண்ணிக்கையில் சொன்னால் சரியாக வராது என்பதாலஅளவு சொல்லி இருக்கேன். உங்கள் தேவைக்கேற்பக் கூட்டியோ குறைத்தோ போட்டுக்கொள்ளலாம். நல்லெண்ணெய் தான் இதற்குச் சரியாக இருக்கும். ஆகவே நல்லெண்ணெய் நூறு கிராம் தேவை. உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்தது. வெல்லம் தூளாக இரண்டு டேபிள் ஸ்பூன். கடுகு ஒரு டீஸ்பூன் தாளிக்க


நான் ஸ்டிக் கடாய் அல்லது இரும்புச் சட்டியில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெருங்காயம் பொரித்துக்கொள்ளவும். தனியாக வைத்துக்கொண்டு, மிளகாய் வற்றலைச் சிவப்பாக வறுத்து எடுக்கவும். பின்னர் தக்காளியை நன்கு அலம்பி நான்காக நறுக்கி அந்த மிச்ச எண்ணெயில் போட்டு வதக்கவும். தோல் பிரிந்து வரும் வரை சுருள வதக்கிய பின்னர் ஆற விடவும். ஆறியதும் மிக்சியின் பெரிய ஜாரில் போட்டு மி.வத்தல், தக்காளி வதக்கல், தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.


இப்போது அதே கடாயைக் கழுவிட்டு அல்லது வேறொரு கடாயில் மிச்சம் இருக்கும் எண்ணெயை ஊற்றவும். கடுகு போட்டுத் தாளிக்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும். அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்க்கவும். கொஞ்சம் கொட கொடவென்றே இருக்கும். பயப்படாமல் விழுதை மேலே தெளித்துக்கொள்ளாமல் சேர்க்கவும். நிதானமாகத் தீயை வைத்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். மெல்ல மெல்ல கெட்டிப்பட ஆரம்பிக்கும். நன்கு கெட்டியாகி எண்ணெய் பிரியும் சமயம் வெல்லத்தூளைச் சேர்க்கவும். சிறிது நேரம் கிளறியதும் அல்வா பதத்துக்கு உருட்ட வரும். அப்போது கீழே இறக்கி வெந்தயப் பொடியைச் சேர்த்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்.


இதை தோசை, சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ளப் பயன்படுத்தலாம். மேலும் சாதத்தை நன்கு உதிராக வடித்து ஆற வைத்து இந்தத் தொக்கைப் போட்டுக் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுக் கிளறி , மேலே வறுத்த கொத்துமல்லிப் பொடி ஒரு டீஸ்பூன் தூவிக் கொண்டு, கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்தால் ஒரு நாள் வித்தியாசமான ஒரு சாதமும் கிடைக்கும். காரட் தயிர்ப்பச்சடி இதற்கு நன்றாக இருக்கும்.  தக்காளித் தொக்கு செய்முறையும் ஏற்கெனவே இருந்தாலும் இது பாரம்பரிய முறை என்பதால் இதையும் முயன்று பார்க்கவும். 



--Geetha Sambasivam 12:01, 18 அக்டோபர் 2012 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 18 October 2012, at 12:01. This page has been accessed 1,457 times.