சோழர் காலத்திய சமயம்-- பகுதி 6 களப்பிரரும் பிரமதேய நிலங்களும்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 எழுத்து: டாக்டர் அ.பத்மாவதி

களப்பிரரும் பிரமதேய நிலங்களும்

பிரம்மதேயம் -- என்பதில் பிரம்ம/பிரம --என்பது பிராமணர்களையும், தாயம் என்பது உரிமையையும் குறிக்கிறது. பிராமணர்களுக்கு உரிமையுடைய நிலம் அல்லது ஊர் பிரமதாயம் ஆயிற்று. பெரும்பாலும் பிரம்மதேய ஊர்கள், ஏற்கெனவே அமைந்திருக்கும் நீர்நில வளமிக்க ஆற்றுப் படுகைகளில் உள்ள ஊர் அல்லது அதற்கு நிகரான நீர் ஆதாரமுள்ள ஊரை ஒட்டியே அமைந்திருந்தன.


பிரம்மதாயமாக நிலக்கொடை அளிக்கும் வழக்கம் வட இந்தியாவில் மெளரிய ஆட்சிக்காலத்திற்கு முன்னரே ஏற்பட்டிருந்தது. கோசல நாட்டு மன்னர்களும், மகத நாட்டு மன்னர்களும் அந்தணர்களுக்கு கிராமங்களை பிரமதாயமாக அளித்திருந்த செய்திகளைப் பழைய பாலி நூல்கள் குறிப்பிடுகின்றன.*1


ஏறத்தாழ அதே கால கட்டத்தில் தமிழகத்திலும் பிராமணர்களுக்கு நிலக்கொடை அளிக்கப் பட்டிருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னன் ஒருவனால் வெளியிடப் பெற்றுள்ள வேள்விக்குடிச் செப்பேட்டில், சங்ககால பாண்டிய மன்னனாகிய பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன், பிராமணன் ஒருவனுக்கு அவனது சிறந்த கல்வியினைப் பாராட்டி வேள்விக்குடி என்னும் பெயரில் ஒரு ஊரை தானமளித்திருந்தான் என்ற செய்தி காணப்படுகிறது.*2 சங்ககாலப் பாடல்களாகிய பதிற்றுப் பத்தின் 2-ஆம் பத்துக் கொளுவில் சேரமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன் அவனைப் பாடிய புலவராகிய குமட்டூர் கண்ணனாருக்கு, உடம்பற்காட்டு ஐந்நூறூர் பிரம்மதாயம் கொடுத்து, முப்பத்தெட்டுயாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சங்க கால மன்னர்களில் ராஜ சூயம் வேட்ட பெரு நற்கிள்ளி போன்ற பல வைதீகம் சார்ந்த மன்னர்கள் வாழ்ந்திருக்கின்றனர். பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் என்ற நிலவுடமையாளர் மேல் பாடப்பட்ட பாடல் ஒன்றும் சங்கத் தொகுப்பில் உள்ளது. எனவே சங்க கால மன்னர்கள் பிராமணர்க்கு தாராளமாக நிலக்கொடைகள் அளித்திருத்தல் வேண்டும். தானம் செய்த அரசர்கள் அந்நிலங்களின் விளைச்சல் அல்லது அதன்மேல் விதிக்கக் கூடிய வரிகளையும், அதன் மேல் செலுத்தக் கூடிய அதிகாரத்தையும் சேர்த்து தானம் செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


கல்வெட்டுச் சான்றுகள்


இவ்வாறு அளிக்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றி நமக்குக் கிடைத்திருக்கின்ற மிகப் பழைய கல்வெட்டுச் சான்று, கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகன மன்னர் ஆட்சி காலத்தில் அசுவமேத யாகம் ஒன்று செய்த போது அளித்த நிலக்கொடையைக் குறிப்பிடும் சான்றாகும்.*3


குப்தர்கள் ஆட்சியில் நிலவிய நிலமானிய வளர்ச்சிப் போக்கில் குறிப்பிடத் தக்க அம்சமாக பிராமணர்களுக்கு நிலக்கொடை தரும் வழக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இவ்வகைத் தானங்கள் மிக உயர்ந்த புனிதத் தன்மை வாய்ந்தவை என்பதை தர்ம சாஸ்திரங்களும், இதிகாசங்களும், புராணங்களும் கூறுகின்றன என்பதை திரு ஆர்.எஸ்.சர்மா சுட்டிக் காட்டுகின்றார்.*4


தமிழ்நாட்டில் பிரம்மதேயம் பற்றிக் குறிப்பிடுகின்ற மிகப் பழைய கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் உள்ளது. பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியின் மலைச் சரிவில்மூன்று கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் வடக்கு ஓரமுள்ள முதல் கல்வெட்டு மிகவும் சிதைவுடனும், 2-ஆம் கல்வெட்டு முழுதும் சிதைவுடனும், மூன்றாம் கல்வெட்டு முழுவதும் நல்ல நிலையிலும் கிடைத்துள்ளன. இவற்றுள் மூன்றாம் கல்வெட்டின் மூலமாகத் தான் மன்னன் பெயர்--கோச்சேந்தன் கூற்றன் என்று அறிய முடிகிறது. எனவே பிற இரு கல்வெட்டுகளும் இம்மன்னன் காலத்தையோ அக்காலத்தையொட்டியோ எழுதப் பட்டிருத்தல் வேண்டும். இக்கல்வெட்டு கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கூற்றன் என்று மன்னன் பெயர் உள்ளதாலும், இப்பெயர் களப்பிர மன்னர்களுக்கு உரியது என்பதாலும் இக்கல்வெட்டுகள் களப்பிர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவை என உறுதியாகக் கூறலாம்.*5


இக்கல்வெட்டுகளுள் முதல் கல்வெட்டில் தான் பிரம்மதாயம் பற்றிய அரிய குறிப்புகள் கிடைக்கின்றன. பிரம்மதாயம் பற்றிய இலக்கிய, செப்பேட்டு ஆதாரங்களுக்கு வலுவூட்டத்தக்கதாக விளங்குகின்ற ஒரே கல்வெட்டுச் சான்றும் இதுதான். இக்கல்வெட்டு "கூடலூர் நாட்டுப் பிரம்மதாயம் சிற்றையூரும்மவ்வூர் படும் கடைய வயல்" --என்று சிற்றையூரையும் கடைய வயலையும் பிரம்மதாயமாகக் குறிப்பிடுகின்றது. பிரம்மதாயம் சிற்றையூரைத் தொடர்கின்ற சில எழுத்துக்கள் சிதைந்து, பின்னர் "அவ்வூருபடுங் கடைய வயல்" என்று உள்ளது. இதைத் தொடர்ந்து, --"விற்றுக் குடுத்துக் கொண்ட--என்ற பகுதியும் கிடைக்கின்றது. இப்பிரம்மதேய ஊர்கள் புன்செய் நிலங்களையும் நீர் நிலங்களையும் உள்ளடக்கியிருந்தன என்பதையும் அக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. *6 மேலும் இவ்வூர்கள் காராண்மை, மீயாட்சியுடன் பிரம்மதேயக் கிழவர்களாகிய பிரம்மதேய உரிமையாளர்கள் அனுபவித்து வந்தனர் என்பதையும் கல்வெட்டு குறிப்பிடத் தவறவில்லை.


பிரம்மதாயத்துட் பிரம்மதாயக்கிழவர்... என்ற தொடரும் காணப்படுகின்றது. அதாவது பிரம்மதாயமாக நிலப்பங்கு பெற்றிருந்தவர்களுள் ஒருவர் --எனக் கொள்ளலாம். ஒரு ஊர் பிரம்மதேயமாகக் கொடுக்கப்படும்போது அவ்வூர் பிராமணர் பலருக்கு நிலம் பங்கிட்டு அளிக்கப் படும். அவ்வாறு பங்கு பெற்றவருள் ஒருவரே--பிரம்மதாயத்துட் பிரம்ம தாயக் கிழவர்--என்பதாகும்.


வெள்கூரு பச்செறிச்சில் என்று அன்று கூறப்பட்ட இன்றைய பூலாங்குறிச்சி மலை மேல் கட்டப்பட்ட புதிய தேவகுலம் பற்றியும், அதற்குக் கொடுக்கப்பட்ட நிலக்கொடை பற்றியும், அத்தேவகுலத்தை யார் நிர்வாகம் செய்ய வேண்டும், யார் பாதுகாக்க வேண்டும் என்றும் அங்குள்ள 3-ஆம் கல்வெட்டால் கூறப்படும்போது, நிலக்கொடைகள் பற்றி அதில் கூறப்படவில்லை. நிலக்கொடை பற்றிக் கூறுகின்ற கல்வெட்டு இந்த முதல் கல்வெட்டுத்தான். இத்தகைய சூழலில் பிரம்மதேவ ஊரை, அதுவும் நீர்நில வளமிக்க ஊர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, அந்நிலங்களைப் புதிதாகக் கட்டப்பட்ட கோயிலுக்குத் தொடர்பு படுத்தித் தானே கூறியிருக்க வேண்டும்--விற்றுக் கொண்டு குடுத்த--என்ற தொடரும் கிடைப்பதால், பிரம்மதாயம் சிற்றையூரும் அவ்வூர் படுங் கடைய வயல் என்னும் பகுதியும் இப்புதிய தேவகுலத்திற்கு விற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று கொள்வதே பொருத்தமுடையதாகும்.


இப்பகுதியை அடுத்து அதே கல்வெட்டில் பாண்டி நாட்டு, கொங்கு நாட்டு காராண்கிழமை, கலக்கிழமை மீயாட்சி, மேலாண்மை ஆகிய உரிமை பெற்ற பிரம்மதேய ஊர்களைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறு குறிப்பிட்ட பின்,


".....அவருடைய காலாசமும் தோட்டங்களும் மவரு
தமரையும் மவரு குடிகளையும்....


,,,," என்று கூறிய பின் சில எழுத்துக்கள் சிதைந்திருக்கின்றன. பின்னர்"


....வேறு வேறு ஆயிரத்து இருநூறு...."

என்று கூறியவுடன் பல்வேறு அதிகாரிகளைக் குறிப்பிடுகிறது கல்வெட்டு. இக்கல்வெட்டு மூலம் இப்புதிய தேவகுலம் கட்டுவதற்கு முன்பே இயங்கிக் கொண்டிருக்கின்ற பாண்டி நாட்டுக் கொங்கு நாட்டு பிரம்மதேய ஊர்கள் தான் குறிப்பிடப் படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்பகுதியைத் தொடர்ந்து அவருடைய காலாசமும் தோட்டமும் அவருடைய தமரையும் அவருடைய குடிகளையும்...என்ன செய்யச் சொல்கிறது இக்கல்வெட்டு?? இக்கல்வெட்டில் கூறப்பட்ட அதிகாரிகள் பலரும் அப்பிரம்மதேயங்களை இறக்கவேண்டுமென்றோ அல்லது வரியாக வசூலிக்கப் பட்டு புதிய தேவகுலத்திற்கு அதன் பராமரிப்பிற்குத் தர வேண்டும் என்றோ ஆணையிட்டதையே அப்பகுதி தெரிவிக்கிறது எனக் கொள்ளலே பொருத்தமுடையதாகும்.


புத்தருடைய நிர்வாணத்திற்குப் பிறகு அரசர்களும் மூத்த குடிமக்களும், புத்தமதத்தைத் தழுவிய குடும்பத் தலைவர்களும், பெளத்த துறவிகளுக்காக மடங்களைக் கட்டித் தந்ததோடு அவர்களுடைய வசதிக்காகத் தோட்டங்களையும், வயல்களையும் மானியமாய்க் கொடுத்தார்களென்றும், அந்த விளை நிலங்களில் வேலை செய்வதற்காகக் குடியானவர்களையும் கால்நடைகளையும் அளித்து உதவினார்கள் என்றும் சீன யாத்திரிகர் பாஹியான் எழுதியிருக்கின்றார்--என்பதை ஆர்.எஸ். சர்மா குறிப்பிட்டுள்ளார்.*7


இத்தகைய நடவடிக்கையாகத் தான் பூலாங்குறிச்சி கல்வெட்டுக் குறிப்பிடும் தகவல்கள் இருத்தல் வேண்டும். பாஹியான் காலமும் இக்கல்வெட்டின் காலமும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது வட இந்தியாவில் பரவலாக பெளத்த மடத்திற்கும் கோயிலுக்கும் அளிக்கப்பட்ட தானங்களைப் போலவே வடக்கிலிருந்து வந்து தமிழகத்தில் ஆட்சி புரிந்த பெளத்த ஆதரவு களப்பிர அரசர்களும், படைத்தலைவர்களும் பெளத்த கோயிலுக்குத் தானமளித்தனர் எனக் கொள்வதில் தவறில்லை.


பேராசிரியர் ஒய்.சுப்பராயலு அவர்கள் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் பிரம்மதேய ஊர்களில் கொடையளிக்கப்பட்ட நிலங்களைச் சரியாகப் பராமரிக்க வேண்டும் என்று மன்னன் ஆணையிட்ட செய்தியாகவே இச்செய்தி பெரும்பாலும் இருத்தல் வேண்டும் என்கிறார். வரிக்குறைப்பு செய்திருக்கலாம் என்றும் உறுதியாகக் கூற முடியவில்லை என்று கூறுகின்ற அவர், வேள்விக்குடிச் செப்பேட்டில், சங்க கால மன்னன் கொடுத்த பிரம்மதேய ஊரைக் களப்பிரர்கள் இறக்கிவிட்டுக் குடிமக்கள் நிலமாக்கியச் செய்தியையும் கூறுகிறார். ஆனால் இக்கல்வெட்டில் களப்பிரர் பிராமணர்க்கு எதிராக வன்முறைச் செயலில் ஈடுபடவில்லை என்றும், பூலாங்குறிச்சி பச்செறிச்சின் மலை மேல் கட்டப்பட்டக் கோயில் பிராமணீயக் கடவுள்களாகிய சிவன் அல்லது விஷ்ணுவுக்கே எடுக்கப் பட்டிருதல் வேண்டும் என்றும் கூறுகிறார்.


ஆனால் களப்பிர மன்னர்கள் பிராம்மணீயத்திற்கு எதிரானவர்கள் என்பதற்கு இரண்டு பாண்டியர் செப்பேடுகளும் ஒரு பல்லவர் செப்பேடும் ஆதாரங்களாக உள்ளன. முதலாவது செப்பேடு வேள்விக்குடிச் செப்பேடு. அச்செப்பேடு பற்றி முன்னர் கூறப்பட்டது. திரு.சுப்பராயலு அவர்களும் களப்பிரர் பிரம்மதேய நிலத்தைக் குடிமக்கள் நிலமாக்கினர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.*8


இரண்டாவது செப்பேடு தளவாய்புரச் செப்பேடு. இச்செப்பேடு பராந்தக வீரநாராயணன் என்ற பாண்டிய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. திருமங்கலம், சோமாசிக் குறிச்சி என்ற இரு பிரம்மதேய ஊர்களின் சாசனங்கள் மறக்கோட்டால் தொலைந்து போயிற்று என்றும், கடத்திருக்கைக் கிழவன் என்பவன் இந்நிலங்களைப் பறித்துக் கொண்டு மதுரதர நல்லூர் என்று பெயரிட்டுக் குடி நிலனாக மாற்றிக் கொண்டான் என்றும் அதைத் தவிர்த்து மேற்கூறிய இரு ஊர்களையும் ஒரே ஊராக்கி எல்லையிட்டு, பிடி சூழ்ந்து சாசனம் செய்து தரவேண்டுமென்று அப்பிரமதேய ஊர்களைச் சேர்ந்த பிராமணர் சார்பாக ஶ்ரீநாராயணன் கேசவன் என்பவன் மன்னனிடம் முறையிட, மன்னன் மீண்டும் அவ்வூர்களைப் பிரம்தேயமாக வழங்கினான் என்கிறது தளவாய்புரச் செப்பேடு.*9 முன்னர் இப்பிரம்மதேய ஊர்கள் எதற்காக யாரால் கொடுக்கப்பட்டது என்பதையும் இச்செப்பேடு கூறுகிறது.


"கற்றறிந்தோர் திறல் பரவ களப்பாழரைக் களை கட்ட
மற்றிரடோண் மாக்கடுங்கோன் மானம்
பேர்த்தருளிய கோன்
............

............
அறு தொழில்கள் மேம்பட்ட மறையோர் பன்னிருவர்க்கு
காராண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச்
செப்பேடு செய்து கொடுத்தருளின்......."
என்கிறது. *10


களப்பிரரை அடக்கி ஆட்சியை மீட்ட பாண்டியன் கடுங்கோன் கற்றோராகிய பிராமணரின் மேம்பாட்டிற்காகவும் களப்பாளரைத் தொடர்ந்து களையெடுப்பதில் உதவுவதற்காகவும் இப்பிரம்மதேயத்தை தானமளித்திருந்தான். அதோடு காடக சோமயாஜி என்பவருக்கும் ஏகபோக பிரம்மதேயமாக நிலமளித்திருந்தான். ஆகவே, களப்பிரரை அடக்கியது, அடக்குவது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட பிரம்மதேயமே கடற்றிருக்கைக் கிழவன் என்பவந்தலைமையில் சூத்ரர்களால் கைப்பற்றப் பட்டிருந்தது. இப்பிரம்மதேயம் மீண்டும் முன்னர் பிரம்மதேயம் பெற்றிருந்தோர் வம்சத்திற்கே கொடுக்கப் பட்டது.


தளவாய்புரச் செப்பேட்டின் மூலமாக இரண்டு செய்திகள் தெரிய வந்திருக்கின்றன. 1. களப்பிரரை ஒழித்துக் கட்டியதற்காக, மேலும் களை கட்டுவதற்காகப் பாண்டியன் கடுங்கோன் பிராமணர்களுக்கு பிரம்மதேயமாக நிலமளித்தான். 2. அந்நிலம் சூத்ரர்களாகிய களப்பிர ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டுக் குடிமக்கள் நிலமாக்கப் பட்டது. ஆனால் மீண்டும் தங்கள் குடும்பத்திற்கே அந்த பிரம்மதேயமாக அளிக்கப்பட்ட நிலத்தைத் தர வேண்டும் என்று சம்பந்தப் பட்டவர்கள் மன்னனிடம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கூட முற்றிலும் களப்பிரர் அடங்கிவிடவில்லை. களப்பிரர் காலத்தில் அவர்களுக்கு ஆதரவளித்த ஊர்த்தலைவர்கள், பிரம்மதேய எதிர்ப்பாளர்களாகவே இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது.


மூன்றாவது ஆதாரம் பல்லவர் காலச் செப்பேடாகும். இச்செப்பேடு சிம்மவிஷ்ணு வெளியிட்டுள்ள ஹொசக் கோட்டைச் செப்பேடாகும். இச்சம்ஸ்கிருதச் செப்பேட்டின் 13, 14-வது வரிகள் ஒரு அரிய செய்தியைக் கூறுகின்றன. அதாவது இம்மன்னனது பல அரிய திறன்களை எடுத்துக் கூறும்போது தான் இச் செய்தியைக் கூறுகிறது. அச்செய்தியாவது,


"நீண்ட காலமாக மறைந்திருந்த அனேகம் ஆயிரம்
பிரம்மதேயங்களை விடுவித்தலென்ற
ஆக்ரயணம் என்னும் யாகத்தைச் செய்தவன்,*11"


--என்பதுதான்.


நீண்ட காலமாக பிரம்மதேயங்கள் மறைந்திருக்க வேண்டிய காரணம் என்ன? அதை விடுவித்தவனோ குருவையும் பசுவையும் பிராமணரையும் பூஜிக்கிற பல்லவர் குலத்தினன். இச்செப்பேட்டை வெளியிட்ட சிம்மவிஷ்ணு களப்பிர மாளவ சோழ பாண்டியர்களை வென்றவன் எனக் காசாக்குடிச் செப்பேடு கூறுகிறது. இவன் களப்பிரரை வென்று, அவர்களால் மாற்றப்பட்ட பல ஆயிரம் பிரம்ம தேய நிலங்களை மீட்டு பிராமணர்களுக்கு அளித்திருக்கின்றான்.


பெரும்பாலான பல்லவர் செப்பேடுகள் பிராமணர்க்குப் பிரம்மதேயமாக நிலமளித்த செய்திகளையே கூறுகின்றன. அச்செப்பேடுகளுள் பல--


"கலியுக தோஷத்தினால் அபகரிக்கப்பட்ட தர்மத்தைத் தூக்கி நிறுத்த எப்போதும் சன்னத்தமாய் இருப்பவன்"*12 என்று மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.


கலியரசர் என்ற களப்பிர அரசரை வேள்விக்குடி செப்பேடும், கோவை அருகேயுள்ள வெள்ளலூர் கல்வெட்டும் கூறுவதைக் காணலாம். கலியுக தோஷத்தில் அபகரிக்கப்பட்ட தர்மம்--என்பது களப்பிரர் காலத்தில் அபகரிக்கப்பட்ட பிரம்மதேயம் என்ற நிலதானமேயாகும் என்பது வெளிப்படை.


இத்தனை சான்றுகள் இருக்க பூலாங்குறிச்சியிலுள்ள களப்பிரர் கல்வெட்டு, பிரம்மதேயங்களைப் பராமரித்தது என்றும், களப்பிர அரசர் பிரமதேய நிலம் பெற்றிருந்த பிராமணர்க்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறுவது எவ்வகையில் பொருந்தும்? இதுவரை இங்கு கூறப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையிலும், தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு--என்பதன் அடிப்படையிலும் அச்சிதைந்த கல்வெட்டை அணுகிப் பொருள் காண முயல்வோமானால் அக்கல்வெட்டுக் கூறும் உண்மைச் செய்திகளை அறிய ஏதுவாகும். பூலாங்குறிச்சி மலைமேல் கட்டப்பட்ட பெளத்த தேவகுலத்திற்குப் பிரம்மதேயங்களை விலை கொண்டு உரிமையாக்கிய செய்தியையும், வரியாகவோ அல்லது விற்றுப் பணமாகவோ அளித்தல் வேண்டும் என்ற தகவல்களையும் தான் அக்கல்வெட்டுக் கூறுகிறது எனக் கொள்வதே பொருத்தமானதாகும்.


கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த, கி.பி. 7,8-ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட இரு செப்பேடுகள், மான்யமாக நிலம் பெற்றிருந்த சிலரிடமிருந்து நிலத்தைப் பறித்து பெளத்த மடத்திற்கு அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றன. இவ்வாறு பறிக்கப்பட்ட நிலங்களுள், அரசிக்கும், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், சாமந்தனல் அவனது தலைவனுக்கு அளிக்கப்பட்ட நிலங்களும் அடங்கும்.*13


எனவே முந்தைய ஆட்சியில் கொடுக்கப்பட்ட நிலக்கொடைகள் பறிக்கப்பட்டு பெளத்தக் கோயிலுக்கு உரிமையாக்கப்பட்டதன் மூலம் மாற்றியமைக்கப்பட்ட தகவல் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.


பிரம்மதேயம் சிற்றையூர்--கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலும் பின்னரும்


பிற்காலச் சோழர்கள் முத்தரையரை வென்று தஞ்சையில் சோழராட்சியை நிறுவிய பின்னர் புதுக்கோட்டைப் பகுதியும் அவர்களின் ஆளுகையின் கீழ் வரத் தொடங்கிவிட்டது. விஜயாலயன் பெயரில் முத்தரையர்களால் விஜயாலய சோழீஸ்வரம் எடுக்கப்பட்டதும், முதலாம் ஆதித்தனின் கல்வெட்டுக்களும் அவனைத் தொடர்ந்து ஆட்சி செய்த சோழர்களின் கல்வெட்டுகளும் இங்கு கிடைப்பதே இதற்குச் சான்று.


முதலாம் ஆதித்த சோழனின் வெள்ளனூர் கல்வெட்டொன்று, "கூடலூர் நாட்டுப் பிரம்மதேயம் சிறையூரைக்*14 குறிப்பிடுகின்றது. இவ்வூரைக் கேட்டவுடனே பூலாங்குறிச்சிக் கல்வெட்டு கூறிய ஊர் நினைவிற்கு வரும். உண்மைதான். அதே ஊரைத்தான் வெள்ளனூர் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. ஆதித்த சோழன் காலத்தில் இருக்கு வேளான் என்பவன் தம் பெயரால் சிற்றையூர் கோயிலுக்கு தேவதானமாக நிலமளித்திருக்கின்றான். அவன் தேவதானமாக அளித்த நிலம் வேறெதுவுமில்ல, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக் கூறும் அதே கடைய வயலைத்தான் கொடுத்திருக்கின்றான்.


..............சிற்றையூர் தி
ருவக்னீஸ்வரத்து ப்ரமேஸ்வரர்க்கு தேவதான்
மாக அட்டிக் குடுத்த நில(ம்) இவ்வூர்ப்பால் கடை
ய வயலை........


என்கிறது அக்கல்வெட்டு. கடைய வயல் என்பது ஒரு நிலப்பகுதி. அதனால்தான் கடைய வயலைத் தம் பேரால் உத்தம சீல மங்கலம் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றான். பூலாங்குறிச்சிக் கல்வெட்டும் 'கடைய வயலென்னும்" என்று கூறுகிறது. கடைய வயல் பகுதிக்கு வேறோர் பெயரும் இருந்திருக்கிறது, என்பது பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலும் வெளிப்படுகிறது. சோழர் கல்வெட்டின் மூலம் அது ஒரு நிலப்பகுதி என்பது தெளிவாகிறது. ஆகவே, திருநடன காசிநாதன் அவர்கள் கூறியது போல் அது ஒரு துண்டு நிலமல்ல என்பது பெறப்படுகிறது. கடைய வயல் பற்றி இரு கல்வெட்டுகளும் கூறுகின்ற தொடர்கள் சுவை பயப்பன.பூலாங்க்குறிச்சிக் கல்வெட்டு,


அவூருப் படுங் கடைய வயல்--என்றும்


வெள்ளனூர்க் கல்வெட்டு,


இவ்வூர்ப் பால் கடைய வயல்--என்றும்


கூறுகின்ற சொற்றொடர்கள் தாம் அவை. கடைய வயல் என்ற நிலப்பகுதி, சிற்றையூரை ஒட்டி அமைந்து அவ்வூரைச் சேர்ந்ததாக இருந்திருக்கிறது.



இத்தனைப் புகழ் பெற்ற சிற்றையூர்தான் இன்று சித்தூர் என்று அழைக்கப்படும் ஊராகும், என்று அவ்வூர்க் கல்வெட்டுக்களால் அறிய முடிகின்றது. இக்கல்வெட்டுகளும், "கூடலூர் நாட்டுப் பிரமதேயம் சிற்றையூர்" என்று குறிப்பிடுகின்றன. ஆதலால் இன்றைய சித்தூரே அன்றைய சிற்றையூர் என்பது தெளிவாகிறது. இவ்வூரில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் இராஜாதிராஜ சோழன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.


களப்பிர மன்னனாகிய கோச்சேந்தன் கூற்றன் காலத்தில் பிரம்மதேயமாகிய சிற்றையூரும், கடையவயலும் விற்றுக் கொடுக்கப்பட்டு விட்டது. அதாவது பிரம்மதேயம் இறக்கப்பட்டுவிட்டது. ஆனால் கி.பி. 9, 10-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் மீண்டும் சிற்றையூரை பிரம்மதேயமாகக் குறிப்பிடுவதால், இறங்கல் மீட்கப் பட்டு விட்டது தெரிகிறது. அதாவது மீண்டும் பிரம்மதேயமாக்கப் பட்டிருக்கிறது.


பிரம்மதேயம் அளித்தது, அதை இறக்கியது, மீண்டும் நிறுவியது என்ற வரலாற்று நிகழ்ச்சிகளை அடுத்து, பொருளாதார வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட மாற்றம், கோயில் பொருளாதாரமாகும். சோழர் காலங்களில் கோயில்கள் நிலவுடைமை நிறுவனமாகவும், அதனால் பொருளாதார மையமாகவும் செயல்பட்டன. அந்த வளர்ச்சியின் தேவையாக, மையப் பகுதிகளிலும் பிற பகுதிகளிலும் கோயில்களைக் கட்டி அப்பகுதி நிலங்களைக் கோயிலுக்குச் சொந்தமாக்கினர், சோழர். அப்போது பிரம்மதேய நிலங்களும், ஊர் நிலங்களும் கோயிலுக்குச் சொந்தமான தேவதான--நிலங்களாயின. அதைப் போல் சிற்றையூரின் பகுதியான கடையவயலை முதலாம் ஆதித்த சோழன் காலத்து அதிகாரி ஒருவன் தன் பெயரால் உத்தமசீல மங்கலம் என்று பெயரிட்டு தேவதானமாக அளித்திருக்கின்றான். இவ்வூரே மேற்கூறிய பொருளாதார மாற்றத்திற்கான சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது.


1.பிரம்மதேயமாக சிற்றையூரும் கடைய வயலும் களப்பிரர் காலத்திற்கு முன்னர் பிரம்மதேயமாகவும்,


2. களப்பிரர் காலத்தில் பூலாங்குறிச்சிக் கோயிலுக்கு விற்றுக் கொடுக்கப்பட்டதால் பெளத்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலமாகவும்,


3. சோழர் காலத்தில் சிவன் கோயிலுக்குச் சொந்தமான தேவதான நிலமாகவும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.


அரசியல், சமய மாற்றங்கள் நிலவுடமைமைப் பொருளாதாரத்தை எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்தியிருக்கிறது என்பதற்கு நமக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான சான்றாக, இதைக் கொள்ளலாம்.


பிராமணரும் பெளத்தரும்


ஆட்சியாளர்கள் பிராமணர்களையோ அல்லது பெளத்தர்களையோ ஆதரிப்பதன் மூலம் தான் தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்தனர் என்பது தெரிகிறது. கெளடில்யர் என்ற அரசியல் வித்தகர், புதிய குடியேற்றங்களில் பிரம்மதேய உரிமையுடன் பிராமணர்க்கு நிலக்கொடையளிக்க வேண்டும் என்கிறார். பிராமண ஆதரவு அரசுகள் அவ்வாறே செய்தன. பூமிதானத்தின் உயர்வைப்புகழ்ந்து கூறுகிற பகுதி மகாபாரத அனுசாசன பருவத்தில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். அதே கெளடில்யர், பெளத்தர்கள் பற்றிக் கூறும்போது,


பெளத்தத் துறவிகளை நகருக்கு வெளியில்தான் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும், அவர்கள் நடவடிக்கைகள் மீது எப்போதும் அரசு கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் பெளத்த மடாலயங்களில் அதிக சொத்துக்கள் சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். *15 அரசியல் ஞானமும், விவேகமும், தந்திரமும் மிக்க பெளத்தத் துறவிகள் ஒற்றர்களாகச் செயல்பட்டிருக்கின்றனர் என்பது தெரிகிறது.


வைதீகத்தை ஆதரித்துப் பின் பற்றி அசுவமேத யாகம் போன்ற யாகங்கள் பலவற்றைச் செய்து பிராமணர்களுக்குப் பிரமதேயங்கள் அளித்து மகிழ்ந்த சாதவாகன அரச வம்சத்து மன்னன் கெளதமி புத்ர சதகர்ணி என்பவன் கி.பி. 2-ஆம் நூறாண்டில் ஆட்சி செய்தவன். இவன் பெளத்த துறவிகளுக்கு நிலக்கொடையளித்து, அந்நிலத்தில் நாட்டின் போர் வீரர் முதலிய காவல் துறையினர் உள்ளே நுழையக் கூடாது என்றும் ஆணையிட்டிருந்தான்.*17 ஒற்றர்களாகத் திறம்பட செயல்பட்டு அரசியல் மாற்றத்திற்குக் காரணமாக விளங்குகின்ற பெளத்தத் துறவிகளுக்கு நிலதானமளித்துத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் போலும்.


பிராமணர்கள் எந்த அளவு அரசு அதிகாரத்தில் தலையீடு செய்தனர் என்பதற்கும் சான்று கிடைத்துள்ளது. சாதவாகன மன்னர் வழிவந்த வாகாடகர்களும், சாதவாகனர் போன்ற பிராமண ஆதரவு அரசர்கள், பிராமணர்க்கு பிரம்மதேயம் அளித்த செய்தி உள்ளது. இம்மன்னன் வெளியிட்டுள்ள ஒரு செப்பேடு பிராமணர்க்குச் சில நிபந்தனைகளை அளித்துள்ளது. பிராமணர்கள் அரசனுக்கும் நாட்டிற்கும் எதிராய் சதி செய்தல், திருடுதல், பிறன்மனை விழைதல், பார்ப்பனரைக் கொலை செய்தல், அரசனுக்கு நஞ்சூட்டல் முதலிய செயல்களிலும், போரிடுதல், பிற கிராமங்களுக்குத் துன்பம் விளைவித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுதல் கூடாது என்பதே அந்நிபந்தனைகளாகும்.*16 பிராமண ஆதரவு அரசே இத்தனை நிபந்தனைகள் விதித்ததால் மேற்கூறிய நடவடிக்கைகளில் பிராமணர் ஈடுபட்டிருந்தனர் என்பது வெளிப்படை. பிராமணர்களும் ராஜதந்திரிகளாகவும் படை நடத்திப் போர் புரியும் படை வீரர்களாகவும் விளங்கினர் என்பதால் தான் அரசர்கள் பிராமணர்களை ஆதரித்தனர்.


அரசர்கள் பிரம்மதேயம் என்ற பெயரில் அவ்வூரின் வருவாயையும் நிர்வாகத்தையும் அதன் மேல் ஆட்சி செலுத்தும் அதிகாரத்தையும் பிராமணர்க்கு விட்டுக் கொடுத்திருந்தனர். இத்தனை சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்த பிராமணரை வேற்று ஆட்சியினர் அதே அதிகாரம் தந்து வாளா விட்டிருபபரா? வருவாயையும் அதிகாரத்தையும் கைப்பற்றத் தானே நினைப்பார்கள். அத்தகைய செயல்தான் பிரம்மதேய இறக்கம் என்பது.




அடிக்குறிப்புகள்

1. ராம் கரண்சர்மா--இந்திய நில மானிய முறை பக்.3

2. பாண்டியர் செப்பேடுகள் பத்து--வேள்விக்குடி செப்பேடு(ஜடில வர்மன் பராந்தக நெடுஞ்சடையனால் வெளியிடப் பெற்றது)

3. ராம்கரண் சர்மா--மேற்குறிப்பிட்ட நூல்--பக்3

4. ராம்கரண் சர்மா--மேற்குறிப்பிட்ட நூல்--பக். 3

5.N. Sethuraman--Date of Pulankurichchi Inscription, Srinithi P. 285--292

6. Dr.R. Nagaswamy--An outstanding Epigraphical discovery in Tamil Nadu--Proceeding of the 5th International Conference Seminar of Tamil Studies Vol.I Page 67--71 and Natana Kasinathan--Pulankurichchi Inscription--a Relook--Dept of Archaeology, Govt. of Tamil Nadu, Madras--28.

7. ராம் கரண் சர்மா-- பக். 54--55

8. Kaveri--Studies in Epigraphy, Archaeology and History Professor, Y. Subbarayalu Felicitation Volume--Editor. S. Rajagopal..2001

No.1 The Pulangurichi Inscriptions. p.1 to 7


9. பாண்டியர் செப்பேடுகள் பத்து.
பராந்தக வீர நாராயணனின் தளவாய்புரச் செப்பேடு பக். 124--130

10. மேற்படி நூல்.. பக் 124--130

11. பல்லவர் செப்பேடுகள் முப்பது: ஹொசக் கோட்டைச் செப்பேடு வரிகள் 13-14

12. ரேயூருச் செப்பேடு, உருவப்பள்ளி நெடுங்கராய, சேந்தலூர், ஒங்கோடு, சுரா, உதயேந்திரம், ஹொசக்கோட்டை ஹல்லகிரே போன்ற செப்பேடுகள்.

13. ராம் கரண் சர்மா--பக் 18

14.Pudukkottai State Inscriptions. No. 26

15. ராம்கரண் சர்மா, பக்.3

16. மேற்படி நூல் பக் 10

--Geetha Sambasivam 08:32, 5 ஜூன் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 29 ஜூலை 2014, 19:38 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,345 முறைகள் அணுகப்பட்டது.