சிவஞான கற்பம் -3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


சிவஞானகற்பம்: மூன்றாம் தந்திரம்: மாணவியல்

ஒன்று மனதில் ஆதிசித்தாக உதிக்க, அதனை பலவாறு சிந்தித்துத் தெளிந்து உண்மைதான் பொய்யல என்று காணும்போது அது அந்தசித்து அல்லது சித்தாந்தம் ஆகின்றது. அசைக்கமுடியாத வகையில் திகழும் சித்தாந்தங்களாகிய இவை இங்கு மாணம் என்றும் ஆளப்படும். இவற்றில் உலகப் பொதுவாக காலத்தில் அழியாத சத்திய நித்தியங்களாக இருப்பவை பிரமாணம் எனப்படும். மாள், மாண் எனின் தெளிவு ஒளிமை பிரகாசம் என்றெல்லாம் பொருள்படும். மாணறிவு என்பது உண்மை என்ற உணர்வோடு வரும் தெள்ளிய அறிவு என்பதாம். தெளிவின்மை போக்கி ஐயந்திரிபற ஒன்றினை மாணறிவாக, சித்தாந்தமாக யாது ஆக்குகின்றதோ அதனைப்பற்றிய ஆய்வு மாணவியல் ஆயிற்று இங்கு. "நன்றி மறப்பது நன்றன்று" என்பது போன்றவை உலக மக்கள் அனைவராலும், சாதி சமய பண்பாட்டு பேதங் கடந்து உடன்படப்படும் ஓர் உண்மையாகும். அதன் எதிராகிய "நன்றி மறப்பது நன்று" என்பது சிலரால் ஓம்பப் பட்டு உயர்ந்த மக்களால் பொய் என்று உணரப்படுவதாகும். இவ்வாறு ஒன்றினை மெய்யென்றும் பிறிதொன்றினை பொய்யென்றும் மதித்து துணிதற்கு யாது காரணமாக இருக்கின்றதோ அது மானம் அல்லது அளவை என்று பகரப்படும். இத்தகைய மானங்கள் அல்லது அளவைகள் யாவை என்று ஆய்வது மாணவியல் என்றும் ஆகும்.

அடுத்துவரும் பல சூத்திரங்கள்-- உடுகுறி இட்டவை -- கண்கட்டி மறைஞான சம்பந்தரின் 'பதிப் பசு பாசப் பனுவல்' பிரமாணவியல் சூத்திரங்களாகும். இவற்றை எடுத்தாண்டு இன்னும் புதிதாக சில யாத்து இந்த படலம் யாக்கப்பட்டிருக்கின்றது.

*3.1

சமலன்சிற் சத்திதிரி வையமறின் மானம்
அமலனணுப் பாசமுமே யம்

(இ-ள்)

அறியாமை இருளைத் தருகின்ற, ஆன்ம பிரகாசத்தை தடைசெய்து கருமேகங்களென நிற்கின்ற மலத்தின் பல வடிவங்களோடு கூடி நிற்கின்ற சமலனாகிய பசுவின்கண் திரிபுகளோடும் ஐயவுணர்வுகளோடும் ஆதிசித்துக்களாக பல்வேறு அறிவுகள் தோன்ற அங்கு ஆன்மசிற்சத்தி வெளிப்பட்டு இஇந்தத் திரிபு ஐயங்களைப் போக்கி இலதாக்கி அறிவினை தெளிவுபடுத்துகின்றதால் இதுவே மானமாயிற்று. இஇங்கு இதனின் மானம் என்பது ஆன்மசிற்சத்தி ஈட்டி , அறிவினில் நிற்கும் ஐயம் திரிபுகளைப் போக்கும் அறிவின் தொழில் என்றும் ஆயிற்று-- கருமேகங்களைப் போக்கி வானத்தைத் தெளிவாக்கும் திறம் போன்று. இத்தகைய மானங்களால் அறியப்படும் மேயங்கள் அல்லது பிரமேயங்கள் அதாவது மெய்பொருட்கள் யாவை எனின் அநாதியே நிமலனாகிய, அநாதியே முத்தசுத்தனாகிய பதியும், ஆணவ மலத்தொடு அநாதியே செறிவுற்று கிடப்பதால் அணுத்துவப் பட்டு (finititude) , சுட்டறியும் பண்பின் சிற்றறிவினதாக கிடக்கும் எண்ணிறந்த பசுக்களும், இவ்விரண்டிற்கும் வேறதாகி ஆணவம் கன்மம் மாயை என்றவாறும் பிறவாறும் பிரித்தறிய வரும் பாசங்களும் ஆகும்.

பல்வேறு வகைபட்ட பந்தங்களை உருவாக்குவதால் இஇவை பிணிக்கின்ற பாசங்கள்-- கயிறுகள், சங்கிலிகள் -- ஆகின்றன; இந்தப் பாசங்களால் கட்டுண்டு பந்தப் பட்டு கிடப்பதால் ஆன்மாக்கள் பசுக்களாகின்றன; பசுக்களை தன் அருளால் பாசத்தளைகளிலிருந்து சோபான முறையில் ஞானபோதகம் புரிந்து சுத்தமாக்கி தான் பதிந்து ஆன்மாக்களை சிவமாக்கி விடுவிப்பதின், இறைவன் பதியாகின்றான்.

பதிபசுபாசம் என்ற அநாதிப் பொருள் அறிவு (Fundamental Ontology) சிற்சத்தி எனும் இறையருள் புகுந்து அறிவினை தெளிவாக்க, அதன்வழி அறியவரும் உண்மைகளாம் என்றவாறு. அதனின் முப்பொருளூண்மை , உலகப் பொதுவாக அனைவர் உள்ளத்திலும் கிடப்பதாகிய உண்மை என்றும் ஆகும்
இனி சிற்சத்திப் பதிவிற்கும் கற்றல்கட்கும் உள்ளத் தொடர்புகள் யாதென்று கேள்வி எழ, அதனை அடுத்து விளக்குகின்றார் ஆசிரியர்.

3.2

சிற்சத்தி பதிவின் தெளிவினால் கற்றல்
இச்சத்தி தருமிறை யருள்

(இ-ள்)

சிற்சத்தியாவது சித்தாந்தமாகிய மெய்யுணர்வினை தரும் சத்தியாகும். இது வெளிப்பட்டு அகத்திலே பதிய, அதனால் மலமாசுக்கள் நீங்க அதனால் தெளிவு வர, அதனால் கற்றல் கலைகள் மெய்ப்படுவதாயிற்று. இச்சத்தியானது இறையருளைத் தவிர வேறொன்றுமில்லை யென்றது.

இங்கு கற்றல் என்பது ஒன்றினைக் காண்பான், அதனை ஓர் நூலெனக் காண அதுபொழுது அதனை முற்றாக புரிந்துகொள்ள முடியாமையின் காரணமாக தன் அகத்தே அறியாமை இருக்கின்றது , அதனால்தான் அந்நூல் அப்பிரகாசமாக தன் கண்களுக்குப் படுகின்றது என்றும் உணர்ந்து அதனைப் போக்கு முகத்தான் பல அறிவுத்திகளைப் பயில்வதாகும். நூலெனக் காணலுறும் அப்பொருளின் அப்பிரகாசம்(opacity), அது காட்டுமறிவு தன்னுள் இல்லாமையின், தன்னுள் இருக்கும் ஒன்றாகும். நூலிற்கு அப்பிரகாசம் இல்லை-- அதனை கற்போன் கண்ணேயே அது. இந்த அப்பிரகாசத்தினை அறிவுத்திகளால் போக்க அவற்றைப் பயிலும் போது அகத்திலே தோன்றும் ஞானப்பிரகாசம் (Lumen) இச்சிற்சத்திப் பதிவினால் மெய்யாகும் என்றாயிற்று. ஆக இது இறையருளும் ஆயிற்று -- ஒன்றினை காட்டி அதன்வழி ஞானத்திரோதகமாய் அகத்தே ஆணவம் இருக்கின்றது என்பதையும் புரியவைத்து , முறையாக சிந்திக்க வைத்து அதனை சற்றே நீக்கி காணப்படும் பொருள் தெற்றென அறிவில் புலப்பட வைப்பதின்.
இவ்வாறே கூறியிருக்கின்றனர் பல பெரியார்களும்.
தொல்காப்பிய மரபியலார்:

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூலாகும்

என்கின்றார். அகத்திலே கிடக்கின்ற விலங்குகளாகிய பாசங்களை அல்லது மணிவாசகர் கூறும் தொல்வினைகளை (வில்> விலங்கு, வினை: பிணிப்பது ஆகவே பாசங்கள்) நீங்கி அதன்வழி அறிவினை தெளிவாக்கி பிரகாசிக்கச் செய்து அதன்வழி தானொரு முனைவன் ஆகி, ஒர் நூல் படைக்க, அது மெய்யைத் தவிர்த்து பொய்மை யாதொன்றும் நுவலாத திறத்தின், பிறருக்கு ஆனை தரதக்க ஆளுமை உடையதாக (authoritative) திகழ்வதில் முதல் நூல் ஆகும் தகுதி உடையது என்றவாறு. இங்கு சிற்சத்திப் பதிவே குறிப்பாய் உணர்த்தப் படுகின்றதைக் காண்க.
திருமூலர் தம் திருமந்திரத்தில் இதனைப் பரக்கக் கூறியுள்ளார்-- குறிப்பாக ஐந்தாம் தந்திரத்தில்

அருளிற் றலைநின்று அறிந்து அழுந்தாதார்
அருளிற் றலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளிற் பிறந்திட்டு அறிந்து அறிவாரே (1783)

முத்திறக் கல்வியை முனைப்போடு செய்யும் போது அறிவின் செருக்கினால் தற்போதங்கள் பல பயின்று அதன் ஓட்டத்தில் தனை மறந்து அருளிற் றலைப்படாது நின்று அறிவார்கட்கு மெய்மை தோன்றாது; பாசங்கள் நீங்கா. அருளில் அழுந்தி அதன்வழியாக அருளேக் கண்ணாகக் கொண்டு யார் கற்கின்றார்களோ, அவர்கட்கே மெய்யுணர்தல் சித்திக்கும் பாசநீக்கம் மெய்யாகும் என்றவாறு.
இனி அகத்தெழுந்து அறிவினை தெளிவாக்கி தெள்ளறிவு தரும் இறையருளையே அண்டாதித்தன் பிண்டாதித்தன் மனவாதித்தன் ஞானத்தித்தன் சிவாதித்தன் என்றவாறும் வகைபடுத்தி விளக்குகின்றார். காட்டாக பிண்டமாகிய உடலிலே இருந்து ஞானவொளி தரும் பிண்டாத்தித்தன் தொடர்பாக:

நின்றும் இருந்துங் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வலி யோடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே (1948)

பல்வேறு வகையில் உள்ளிருந்துகொண்டு ஞானவொளியை வீசிக்கொண்டே இருக்கும் நந்தி, மலங்களாகிய அறியாமை இருளைக் கெடுத்து இல்லாது போக்கி ஞானத்தெளிவும் அதனின் மெய்யறிவும் தரும் ஒன்றாய் வெற்றியொடு நிற்கும் என்றது.
இவற்றின் விரிவையெலாம் அடியேனது " The Inner Radiance and the Growth of Tamil Mystic Literature from Sumerian Times" என்ற கட்டளை நூலிற் கண்டு கொள்க.

இப்படிப்பட்ட மானங்களால் அறியப்படும் முப்பொருளுண்மையினை இஇன்னும் சற்று தெளிவாக்குகின்றார் அடுத்த சூத்திரத்தில்.

3.3

  • மிதிமான முன்பெற்ற மேயம்பின் பெற்ற
    மதிமான மாதிருவான் மா

(இ-ள்)

மிதிமானம்: அளவையியல் அல்லது ஏரணச் சிந்தை வழி, பிரமிதி(premises), பிரமேயம் (conclusions) என்றவாறு சென்று, தக்க ஏதுக்கள் வழியாக எல்லாவகைப் போலிகளையும் நீக்கி சிந்தித்து பெறப்படும் மெய்யறிவுத் துணிபுகளே 'மிதிமானம்' என்றவாறு.

மதிமானம்: மிதிமானங்கள் வேட்டு, அளவை நெறிவழி சென்று மெய்யென்றும் பொய்யென்றும் துணிந்து செலும் அந்த செயலையே மறித்து நோக்கி ஆய்பொருளாக்கி மதித்து ஓர்ந்து பெறப்படுகின்ற மெய்யறிவு என்றாயிற்று. இஇங்கு மானம் ஆகுபெயராய் தக்கமானங்கள் வழி பெறப்படும் மெய்யறிவு மேல் நிற்கின்றது.

மாதிருவு= ஞாதிருவு: ஞானத்தை, தெள்ளறிவினை சிந்தித்துப் பெறுகின்றவொன்று

ஆன்மாவைத் தவிர்த்து முன்பு பெற்ற மேயங்களாகிய பதியுண்மை பாசவுண்மையையும் விசாரித்தறிந்து பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அளவைகள் வழி சாதிக்கத் தக்கவையாகும். தக்க ஏதுக்கள் வழி உண்டென்று துணிதற்குரியதாக அவை இருக்க, அவை மிதிமானங்களாகின்றன. பசுவுண்மையோ, இஇவ்வாறு பதியுண்டோ? பாசமுண்டோ ? நிறுத்தும் அளவைகள் யாவை ? என்றெல்லாம் விசாரித்தறிய முயலும் முயற்சியையே மறித்து நோக்கி, பொருளாக்கி அதனியல்புகளை மதித்தறிய அதுபொழுது தெளிவாகுமொன்று என்பதாம். அறிவு தேடும் முயற்சியின் வழியாக மெய்யறிவுகள் ஆம் பொழுது பதியறிவும் பாசவறிவும் சித்திக்க, அந்த அறிவுகளை தேடும் முயற்சியை மறித்து நோக்கி ஆய்பொருளாக்கி மதித்துத் தெளிய பசுவுண்மை புலப்படும் என்றவாறு.

இனி மேலான சிவஞானத்தின் வழியல்லது வேறு எவ்வகை ஞானத்தாலும் போக்க வாராத மூலவைய்யத்திற்கு வேறாக, அளவையியற் சிந்தனையில்தோன்றும் திரிபு அய்யங்கள் யாதென்று அடுத்து விளக்குகின்றார், கண்கட்டியார்.

3.4

  • ஒன்றனைமற் றொன்றென் றுணர்கை திரிவையம்
    ஒன்றினிரட் டுற்ற வுணர்வு


(இ-ள்)

ஐயவுணர்வில், மூலவையத்தைத் தவிர்த்த ஏனைய ஐயங்களையும் அதனோடு வரும் திரிபுகளையும் விளக்கியது. ஓர் பொருளைக் காணுறும் போது உண்டென்று மாத்திரம் உணர வர, அது இன்னது என்று அடையாளம் தெரியாத நிலையில் இதுவாக இருக்கலாம் அதுவாக இருக்கலாம் என்றவாறு ஆகும் உணர்வு ஐயம் என்றது. இதுவாக அதுவாக இருக்கலாம் என்ற நிலயில் இரட்டுற்ற, ஏகப்பொருண்மை ( univocity) இல்லா அறிவின் நிலை ஐயம் என்றது. தொலைவில் தெரிவது குற்றியோ மகனோ, என் கணவனோ வேறொரு ஆடவனோ வென்றும், இச்சிலை இராஜராஜனோ இரஜேந்திரச் சோழனோ என்றும் துணிந்து இது இன்னது என்று கூறவராதிருக்கும் போது திகழும் அறிவின் நிலை ஐயநிலை என்றவாறு.
இனி திரிபாவது ஒன்றினை அதுவிலா வேறொன்றாக என்ணுவது. "சிவஞானபோதம்" மூலத்தமிழ் நூலாயிருக்க , வடமொழி அபிமானத்தால் அதனை வடமொழி இரௌரவாகமத்தின் சில சூத்திரங்களின் மொழிபெயர்ப்பு என்பதுவும், மெய்யான உலகினை மித்தை என்று கூறலும், இருளிலே சப்திக்கும் மரத்தினை பீதியின் காரணமாகவும் மருளின் காரணமாகவும் பேயாகக் காணலும் இதுபோன்றவையும் திரிபுகளாம்.

இனி இந்த ஐயங்களும் திரிபுகளும் சுட்டறிவின் பாற்பட்டவை என்றுணர்க. இவற்றிற்கு மாறாக விருக்கும் மூலவையமாவது, தோன்றி நிற்கின்ற எல்லா அறிவிகளையும் , தத்துவக் கோட்பாடுகளையும், சமயங்களையும் கண்டு அவற்றைப் பரபக்கமாக்கி சுத்தமெய்ஞானமாகிய சிவஞானத்தையே சுபக்கமாக்கும் முனைப்பிற்கு காரணமாக இருப்பது என்று அறிக. இதுவே இறைவனது ஐந்தொழில்களில் ஒன்றாகிய திரோதகம் என்பதின் காரணமாக எழுவது; முத்தி முன்னறிவோடு உடன் வருவது; சிவஞானத்தைத் தவிர்த்து வேறொன்றாலும் போக்க முடியாத வொன்றும் ஆகும்.

இந்த மூலவையத்தோடு வருவதே மூலத்திரிபாகும்.
இது யாதெனில், மதப்பற்று, வாதப்பற்று என்பன போன்ற பற்றுக்களின் காரணமாக, ஏரணச் சிந்தனையை எழவொட்டாது தடுக்கும் அபிமானங்களின் காரணமாக, சிவஞானம் அல்லாதவற்றை சிவஞானமாகக் திரியக் காண்டலாகும். சிந்தனைத் துறவியாகி, தான் பற்றி நிற்கின்ற சமயத்தையே, தத்துவக் கோட்பட்டையே மறித்து நோக்கி ஆய்வுபொருளாக்கி, நடுநிலை பிறழாது கேள்விக் கணைகளை தொடுத்து மெய்ஞானத்தை தேரும் பொழுதே இத்தகைய மூலத் திரிபுகள் அகலும் என்பதாம்.

இனி திரிபு ஐயம் போக்குதல் சிற்சத்தி என்றாலும், அது மெய்மையினோடுற்ற தொடர்புகளை அடுத்த சில சூத்திரங்களில் விளக்குகின்றார் ஆசிரியர்.

3.5

பொய்மை போக்கும் பெற்றிமையே மெய்யை
மெய்யாக் காட்டி விடும்

(இ-ள்)

இறையருள் பதிவாகிய சிற்சத்தி அகத்திலே வெளிப்பட்டு ஐயம் திரிபுகளைப் போக்கி தெற்றென ஒன்றினை தெளிவாக்கிக் காட்ட, அப்பொழுது அது மெய் என்றவுணர்வு உதிக்கின்றது. அதேபொழுது அதுவரை இருந்த பொய்மை இல்லாது போய்விடுகின்றது. ஐயந் திரிபுகளும் இதுபோன்றவைகளும் பொய்மைகள் ஆகும். இந்த பொய்மை போக்கும் திறனே, பெற்றிமையே ஒன்றினை மெய்யென்று உணர்விற் படுத்துகின்றது. அதுபொழுது ஆங்கு சிற்சத்திப் பதிவு என்றும் உணர்கிறோம்-- வெளிச்சத்தைக் கண்ட மாத்திரையின் இதுவரை இருந்தது இருள் என்று அறிவது போல.
சிற்சத்திப் பதிவே மானம் என்ன, அதன் பதிவினை எவ்வாறு உணர்வோம் என்ற கேள்விக்கு விடை இதுவேயாம். "அது மெய்" என்ற உணர்வு, பொய்மையினைப் போக்கி எழுமொன்று -- இருளைக் கடிந்து ஒளி பரவுவது போல. பொருள் தெரிதலும் ஒளி படர்தலும் இருள் அகல்தலும் ஒருங்கே நிகழும் நிகழ்ச்சிகள் என்றறிக. சிற்சத்திப் பதிவு ஒளிப்பதிவினைப் போன்றது. அதுவரை நின்ற பொய்மையைப் போக்கி மெய்மை உணர்வினை பயப்பித்து பொருளைக் காட்டுவது. ஆக மெய்யை மெய் என்று அறிதற்கு வேறு யாதும் வேண்டியதில்லை என்று முடியாத தொடர்ச்சியாக(Infinite regress) செலும் மாணவியல் ஆய்விற்கு முடிபான வொன்றை இதன்வழி சொல்லியதுமாகும்.
அடுத்து மயலின்றி காணல் என்றால் என்ன என்பதை விளக்குகின்றார்.
3.6

உள்ளதை உள்ளவாக் காணவுண் மையது
உய்திக்கு வழிகாட்டு மொளி

(இ-ள்)

ஒன்றினை அதுதானிலாத வேறொன்றாக காண்பது திரிபு என்றாயிற்று. இது போன்றதே மயக்கவறிவும் மருளும் மித்தையும் பிறவுமாம். ஓர் பொருள் தன்னகத்தேயிருந்து தன்னை எவ்வாறு வெளிப்படுத்தி நிற்கின்றதோ, உலகில் இயலுகின்றதோ, அதனை அவ்வாறேக் காண்பது உள்ளதை உள்ளவாக் காணலாகும். அறிவினைப் பிறப்பிக்கும் அனைத்து அகப் புறக் கரணங்களை காணப்படும் பொருள்மேல் குவித்து, உறுதியாக நின்று தற்போத சேட்டைகள் தவிர்த்து அந்த பொருளினைப் பற்றியத் தெளிவு சிற்சத்தி பதிவினால் தெளிவாகத் தெளிவாக, அந்த தெளிவினையே சொற்படுத்த அது உண்மையைத் தவிர்த்து வேறொன்றும் அல்லதாகின்றது. "அது பூனை" என்று சுட்டுவானைக் கேட்டு, சுட்டப்படும் பூனையைக் கண்டு பிறிதொருத்தன் உடன்படுவது இப்படி சனிக்கின்ற உண்மைகளை சொற்கள் தாங்கி வருவதின் காரணமாகத்தான் என்றறிக. இப்படி வெளிப்படும் உண்மைகளைக் காண, அதனை யொட்டி எழுகின்ற பிறவுண்மைகள் பிறகு வெளிப்பட, இவ்வாறு அறிவு செல்லும் என்க. இஇதனால் இத்தகைய உண்மையறிவுகள் மேலான சிவஞானத்தைப் பெறுதற்கு படிகளாக அமைகின்ற அக்காரணத்தால், இவை உய்திக்கு வழிகாட்டும் ஒளியாயிற்று.

இதனால் சொல்லானாகும் அனைத்து அறிவும் கற்பிதங்கள் ஆகவே பொருளைப் பொருளாக அறிதற்கு உதவாதவை என்ற மாயாவாத வேதாந்தம் மறுத்ததுமாயிற்று. இயல்நெறி நூல்நெறி வழாது வருகின்ற அறிவுகள் மெய்யறிவுகள் என்றும் அதனால் அதனைத் தாங்கி வருகின்ற சொற்கள் உண்மையைக் கூறாத கற்பிதங்கள் அல்ல என்றும் ஆயிற்று. ஓர் பொருளினைப் பற்றி அதுதானாகி நிற்கின்றபோது பதிகின்ற சிற்சத்தி தெளிவாக்கும் அப்பொருளறிவு கற்பிதம் அல்ல, மெய்யானப் பொருளறிவு என்றாயிற்று. சாதாரண உலகியல் வாழ்க்கையில் இத்தகைய உண்மையறிவுகள் இல்லையெனில் யாரும் வாழவே முடியாது என்பதைக் காண்க.
அடுத்து உண்மையின் இன்னொரு பண்பினையும் தெளிவாக்குகின்றார்.

3.7

மறுத்துமறுத் தெறிந்தும் மரியாவகை ஒளிர்ந்து
உறுத்தி நிற்பதே உண்மை

(இ-ள்)

உண்மையாக நிற்கும் ஒன்று, திரித்தும் பிறழ்ந்தும் மற்றும் பிறப்பிற வகைகளில் மயங்கியும் காணப்பட்டு மறுக்கப் பட்டாலும் அது மாயாது நிற்கும் பண்பிற்று என்பதாம். உண்மைக்கு அழிவில்லை; அதனை மறுத்து அழித்தொழிக்க எடுக்கப்படும் முயற்சிகளெல்லாம் வீணாகி விடும் என்றவாறு. கண்களை மூடிக்கொண்டு பகல்நேரத்தில் ஒருவன் ஆதவன் இல்லை இல்லை என்று வன்மையாக மறுத்தாலும், உடன்படாதோரை வெறியொடு அடித்துப் புடைத்தாலும் ஆதவன் சுடர்கின்ற உண்மைக்கு ஊறு யாதுமில்லை. மெய்யான ஞானியாக இருக்கின்றவொருவனை பிழையாக உணர்ந்து கொண்டு அவனைப் பலவாறு இகழ்ந்து அழித்தாலும் அவன் ஞானிதான் என்ற உண்மைக்கு ஊறு இல்லை என்றவாறு.

அடுத்து ஒன்று உண்மையோ அல்லவோ என்று ஐயம் தோன்றும் போது, அதனைப் பிறப்பிற கோணங்களிற் கண்டு மறுத்து மறுத்துப் பார்க்க, அதுபொழுதும் அது அழியாது நிற்குமெனில் அது உண்மையான வொன்றாக, சிற்சத்தி அகத்திலே வெளிப்பட்டு காட்டுமொன்று என்று உண்மையை உண்மையென்று அறிந்துகொள்ள ஓர் இலக்கணம் நவின்றதுமாகும்.
அடுத்து உண்மையின் வன்மையாக திகழும் ஓர் பண்பினையும் விளக்குகின்றார்.

3.8

தனைக்காண் பான்றன்னை தன்பா லடக்கும்
வன்மை உண்மைக்கே வுண்டு

(இ-ள்)

ஒருவனது கற்பனா சேட்டைகட்கு அப்பாற்பட்டு உலகில் இருப்பதாக, உண்மைகள் யாண்டும் இருப்பதால், யாராலும் அவை அழிக்கப்படாது என்றாயிற்று. அத்தோடு யார் அதனைக் காண்கின்றனோ, அது மெய்யென்று உணரும் போது, அதற்கு மறுப்புக்கூறும் திறத்தை உடன் இழப்பதின், அதற்கு உடன்பட்டே ஆகவேண்டுமென்பதால், இதனைக் காண்பான் தன்னை தன்பால் அடக்கும் வல்லமை உண்மைக்கு உண்டு என்றாயிற்று. மறுத்தலை மறுக்கும் பண்பு பிறவற்றிற்கு இல்லை என்பதின், அது உண்மைக்கே உண்டு என்பதுவுமாம். சிற்சத்திப் பதிவினால் ஆகக்கூடிய அறிவுத் தெளிவுகளே, பல்வேறு வகையில் பிறழ்ந்து போராடும் மாந்தர்களிடை ஓர் இணக்கத்தையும் உடன்பாட்டையும் கொண்டு வரும் திறத்தது என்பதுமாம்

அடுத்து உண்மையறிதலை நினவு கூர்தலே என்போர் கூற்றை மறுக்கும் கண்கட்டியார் நவின்றதை இங்கு உபகரிக்கின்றார்.
*3.9

அனுபூத வாதனையான் ஆகும் மிருதி
அதுதானும் அல்லவி மானம்

(இ-ள்)

வி மானம்: இந்த மானமாகிய மெய்யறிவு.
இத்தன்மைய மெய்ஞான உணர்வுகள் அனுபங்களின் வழி பெறப்பட்டதை நினைவில் வைத்திருந்து பிறகு மீட்டுதலால் வரும் மிருதி ஞானம் அல்ல என்றவாறு.

கற்றலால் மெய்யறிவு என்பதை மறுப்பாரிற் சிலர், இஇவ்வாறு உண்மையென்று காணப்படுபவை, அறிவிற்கு எட்டுபவை உண்மையில் மீக்கூர்தலே (remembrance) , புதிதாக அறியாதவொன்று அறிதல் அல்ல என்பார். இக்கூற்றை கண்கட்டியார் மறுக்கின்றார்.

ஒர் நிகழ்ச்சி மெய்யாக அதனுள் அகப்பட்டு அதனால் ஆகும் உணர்வுகளை, மெய்ப்பாடுகளை, தெளிவுகளை தனதாய்ப் பெறுதலே அனுபவவாதனை என்பது (experience). இந்த அனுபவவாதனையில் எழக் கூடியவற்றைக் கண்டு பொருளாக்கி சிந்தித்து ஒற்றுமை வேற்றுமை படுத்தி சொற்படுத்தியோ அல்லது படுத்தாமலோ நினைவில் நிற்க வைப்பதால் வருவதே ஞாபகம் ஆகும். இதுவும் இருதன்மைத்தாகும் -- மொழிப்படுத்திறத்தின் கருகங்கள் (concepts) என்றும் , அதற்கு இடங்கொடா உருகங்கள் (images) என்றும் ஆகும். மேலும் இவற்றைக் காலம்வழி கணித்து ஓர் வினாடியே நிற்கும் பொறியுணர்வுகள் குறுதி நினைவுகள்(sensory memory) என்றும் இருபது வினாடிகள் மிகாதிருக்கும் சடுதி நினைவு (short term memory) என்றும், இஇந்த காலவெல்லையையுங் கடந்து நிற்கும் நெடுதி நினவுகளென்றும் (Long term memory) வகைப் படுத்துவர் தற்கால உளவியலாளர். மிருதி ஞானமாவது இவ்வாறு அகத்திலே குறுதி சடுதி நெடுதி நினைவுகளாக இருப்பவற்றை ஓர் காரியங் கருதி மீக்கூர்தலாகும். அதனையும் இரண்டு வகைப் படுத்துவர். மீக்கூர்தலாவது (recall) ஓர் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்க, அல்லது ஓர் செயலில் ஈடுபட்டிருக்க, அதனை செவ்வே முடிப்பான் பொருட்டு, அதுவரை அறிந்திருந்தவற்றை உள்ளிருந்து வெளிக்கொணர்ந்து மனத்தொடு நிறுத்துவதாகும். இனி இதனோடு தொடர்புடைய மீட்சி அறிவாவது (recognition), ஒன்றினை காணும்பொழுது அடையாளங் கண்டு, முன்பும் இதனை கண்டிருக்கின்றேன் என்று உணர்வதாகும்.
இஇப்படி வருகின்ற மிருதி ஞானங்கள் அனுபவ வாதனையின்றி தோன்றாமையால், அவை புதியதாகவொன்றை, தான் இஇதுவரை அறியாதவொன்றை கற்று அறிகின்ற முகத்தானாகின்ற உண்மைகள அல்ல என்றவாறு.

மேலே கூறியுள்ள மிருதிபோன்ற அறிவுகளை மேலும் சிறிது அடுத்த சூத்திரத்தில் விளக்குகின்றார் கண்கட்டியார்

  • 3.10

உன்முகமா னங்கரணத் தோடுயிரம் மானத்தோ
டுன்முகமாய் வேறற் றுறும்

(இ-ள்)

உன்முகமானமாவது அகத்திலே எழும் உணர்வுகளை அறிந்து அவையும் உளதாம் என்று உணர்வது (internal perception) காட்டாக காண்டல் என்பது புறத்திலே ஒன்றைக் காணல் என்றும், அகத்திலே ஐயம் திரிபு தெளிவு போன்றவை இருப்பதை அறிவது என்றும் கொள்ளலாம். உன்முகமானம் இருந்தறிவின்பாற் படும். இவற்றை உயிர் எவ்வாறு காண்கின்றதெனில், உயிர் காண்பதற்குக் கருவியாக ஓர் கரணம் பற்றி, காணுதற்றொழிலாக அந்த மானமாகிய கற்றலோடு பிறழாது அதுவே கருத்தாக நின்று, நாட்டத்தை பற்றியிருக்கின்ற பொருளின்மேல் ஓட்டாது, உன்முகமாய் நின்று நாட்டத்தை அகமுகமாக்கி, அதுவே தானாகி வேறற நிற்க அதுபோது இது உறும் என்கின்றார் கண்கட்டியார் இங்கு. ஓர் பொருளைக் காணுழி அது இன்னதென்று அறியாநிலையில் தான் இருக்கின்றேன் என்றுணர்வது, அந்த பொருளைப்பற்றி நிற்கின்ற போதே தனது இருப்புநிலையாக அது அமைகிறது என்று உணர்வதால் வருவது. தன்னுள் இருக்கின்ற ஐயவுணர்வு, திரிபுணர்வு, பிறழ்ச்சி போன்றவற்றையும் அதற்கு மாறாக எழும் தெளிவு போன்றவற்றையும், இத்தகைய உணர்வுகளோடு தான் ஒன்றித்து வேறறற நின்றாலே அவை உறும் என்றவாறு.

இனி இவ்வாறு சிற்சத்திப் பதிவே மெய்யறிவிற்கு மூலமென்றும், அத்தகைய மெய்யறிவுகள் கற்றலின்பால் அடங்குவது, மிருதி ஞானத்தின்பால் அல்லவென்றும் விளக்கி, பின் எவ்வாறு ஐயம் திரிபு தெளிவு போன்ற இருப்பு நிலைகளும் அறியப்படுகின்றது என்றும் விளக்கியபின், இந்த மானங்களாகிய கற்றல் கலைகளை வகைபடுத்துகின்றார் கண்கட்டியார் -- சிற்சத்தியே பிரமாணம் என்பதை இன்னும் தெளிவு படுத்தும் பொருட்டு.

  • 3.11

காண்டலு மானமுரை யொப்பொழிவ பாவமுமென்
றீண்டிருமூன் றாமான மெண்

(இ-ள்)

அறிவினைத் தருகின்ற கற்றல் கலைகள் யாவையெனின் அவை: காண்டல், கருதலாகிய அனுமான சிந்தனை, உரை ஆகிய ஆகமங்களை அறிதல், உவமை உள்ளுவமை என்பவற்றோடு ஒப்பிட்டு காண்டலாகிய ஒப்பு; சொற்களின் வழி மறையாக சொல்லப்படுவதாகிய எச்சப்பொருளை நாடியறிவதாகிய ஒழிபு, இன்மை உணர்வை பயப்பதாகிய அபாவம் என்று ஆறுவகைப்படும் என்றவாறு. இன்னும் பலவும் உண்டு. அவை பிறகு தனித்தனியாக விளக்கப்படும்.

இவ்வாறு பிறித்து தனித்துப் பார்ப்பினும் அனைத்தையும் காண்டல், கருதல், உரை என்ற மூன்று பெரும் பிரிப்பில் அடக்கிவிடலாமென்று, அருணந்தியார் முதல் இஇன்னும் பலரும் கூறியிருக்கின்றனர்.

இவ்வாறு வகைபடுத்தி மெய்யறிவு உத்திகளாக இவற்றை இங்கு விரிப்பதின் நோக்கம், உண்மையான பிரமாணம் சிற்சத்திப் பதிவே எனினும், இத்தகைய உத்திகள் அவற்றை ஈட்டும் வழிகள் ஆகவே பழுதில்லா சாதனங்கள் என்று தெளிவுறுத்தவே.

இத்தகைய உத்திகள் மெய்யாகும் போது மனோகரணங்களாக அவை செயல்படும் என்பதை நோக்கி, அவை எவ்வாறு மெய்யாகின்றன என்பதை அடுத்து விளக்குகின்றார் கண்கட்டியார்.

*3.12

அந்தக் கரணம் புறக்கரணம் என்றிவற்றை
பந்தித் திலங்குமிவை பார்

(இ-ள்)

அந்தகரணமாவது , புறத்து விடயங்களைப் பற்றி பொறிகளோடு நின்றிருக்கும் மனமும், மனதால் பற்றியிருப்பதை அறிவேனென்று முனைப்போடெழும் ஆங்காரமும், அதனோடு பற்றியதை விகற்பித்து யாதென்று அறியும் புத்தியும் , பிறகு இஇதன்வழி பல்வேறு சிந்தனையோடு எழும் சித்தம் என்பவையாகும். புறகரணங்களாவது, கண்ணிந்திரியம் செவியிந்திரியம் நாக்கு இந்திரியம் நாசி இந்திரியம் உடல் இந்திரியமென கண் செவி நாக்கு நாசி உடல் என்பவற்றோடு ஊர்ந்து வரும் அறிதற் கருவிகள் என்பவையாகும். மேலே விரித்த காண்டல், கருதல், ஒப்பு, ஒழிபு , அபாவம் என்றவாறு வரும் அறியுத்திகள் அனைத்தும் இந்த அந்தக்கரணம் புறக்கரணம் என்ற இந்த கரணங்களைப் பற்றியே நிகழும் என்பதாயிற்று. மேலும் இவற்றை கடந்துரு அறியத் தரும் கடபூதக அவத்தைகளைத் (metaphysical experiences) தரும் சிவகரணங்கள் என்றும், அதற்குக் கீழாகிய பூதக அவத்தைகளைத் (physical experiences) தரும் பசுக்கரணங்கள் என்றும் கூறுவதுண்டு. யாதாவதோர் கரணம் பற்றியே அறியுத்திகள் அனைத்தும் என்பது கருத்து.

அடுத்து மேற்கூறப்பட்ட பிரமாண விலக்கணம் குற்றமிலாதது என்று நையாயிகர் மதம் பற்றி நம் கண்கட்டியார் விளக்குகின்றார்.

  • 3.13

அவ்வியாத்தி தோடமிலை யத்தியக்க மாதியெலாம்
இவ்விலக்க ணம்பெறலா லே

(இ-ள்)
ஓர் பொருளிற்கு அதனை யாண்டும் பிழையின்றி அறிவதற்கு உதவும் வகையில் அதற்கே உரித்தாததும் பிறவற்றிற்கு இல்லாததுமாகிய சில அடையாள குணங்களை பிரித்தறிவித்தலே இலக்கணம் கூறுவதாகும். ஆடுகளின் பண்பு இஇது மாடுகளின் பண்பு இது என்றவாறு ' ஆடு' என்றும் 'மாடு' என்றும் பிழையின்றி அறிவதற்கு யாது உதவுகின்றதோ அது இஇலக்கணமாயிற்று. ஆக இலக்கணமாவது யாண்டும் பிரிப்பின்றி ஓர்வகைப் பொருளோடு வரும் பண்பாகும். இவ்வாறு கூறப்படும் இஇயல்பு அவ்வகைப் பொருள் எல்லாவற்றிலும் இல்லாது சிலவற்றை எச்சமாக்கிட அது 'அவ்வியாத்தி' எனும் குற்றமாகும். தோடம்= தோஷம்: குற்றம். அதேப் போன்று கூறப்படும் இயல்பு குறிப்பிடப்பட்ட பொருட்கன்றி வேறு வகைப் பொருட்கும் உரித்தாக விருப்பின் அது அதிவியாத்தி தோடமாகும்.

இங்கு பிரமையாகிய மெய்யறிவு என்பதின் இலக்கணம் அது மெய்யறிவுகளைத்தான் பயப்பதாகிய காண்டல் போன்ற கரணங்களே என்ற நையாயிகர் மதத்தை மறுத்து , சிற்சத்திப் பதிவே ஓர் அறிவினை மெய்யறிவாக்குகின்றது, அதுவே பிரமாணம் என்று மெய்யறிவிற்கு இலக்கணம் கூறினார். அவ்விலக்கணம் அவ்வியாத்தி தோடத்தைத் தராது என்கின்றார்.
அத்தியக்கமாதி: பிரத்தியக்கமாதி, அதாவது மேலே விரித்துரைக்கப்பட்ட காண்டல் கருதல் உரை ஒப்பு ஒழிவு அபாவம் போன்றவை
இந்த அறிவுத்திகளிலும் இவற்றைப்போன்ற பிறவற்றிலும்(எண்ணிலடங்கா?) சிற்சத்திப் பதிவு இல்லாது மெய்யறிவு இல்லை என்பதால், யாங்கு மெய் எனும் உணர்வு உண்டோ ஆங்கு சிற்சத்திப் பதிவு உண்மையாக, இங்கு அவ்வியாத்தி தோடமில்லை என்றவாறு.

அடுத்து இதேப் போன்று இவ்விலக்கணத்திற்கு அதிவியாத்தித் தோடமும் இல்லை என்கின்றார்.

  • 3.14

அதிவியாத்தி யில்லைப் பதிபசுபா சார்த்தத்
திதுமீண் டிடுதலினா லே.

(இ-ள்)

அதிவியாத்தி என்ற தோடமுமில்லை; பதிபசு பாசம் என்ற அநாதிபொருள் வகையினை உண்டென்று உணர்ந்து அவற்றின் இயல்புகளைத் தெற்றென அறியும்போது, சிற்சத்திப் பதிவே மெய்யறிவினை தருவது என்ற இவ்விலக்கணம் அந்தப் பொருளறிவிலும் மீண்டும் வருதலினாலே என்றவாறு. காட்டாக பதியுண்மையோடு பதியியல்பும் அறிவினிலே தெளிவாகும் போது, எவ்வாறு இத்தெளிவு என்று விசாரிக்க, இறையருள் பதிவாகிய சிற்சத்தியினாலன்றோ இவ்வறிவு தெளிவாயிற்று என்று உணரப் படுகின்றது. எல்லா உலகத்துப் பொருட்களுமே பதி, பசு, பாசம் என்று எஞ்சாது படும் என்பதால், இவற்றிற்கு அப்பால் அறியக் கூடிய வேறொரு பொருளில்லை என்பதால், இஇம்முவகைப் பொருளறிவிலும் சிற்சத்திப் பதிவினால் அவற்றை அறியலுற்றோம் என்றே வருவதால், இவ்விலக்கணம் பொய்யறிவுகளைத் தருகின்ற பிற அறிவுத்திகட்கு இல்லையென்றாயிற்று. இதனால் மெய்மை தரும் அறிவுத்திகளைத் தவிர்த்து பிறவற்றிலும் வியாத்தியாகும் இலக்கணப் பிழை இங்கு இல்லாதாயிற்று என்றவாறு.
அடுத்து இத்தகைய இலக்கணம் அறியப்படாதது, இல்லாதவொன்று என்பதையும் மறுத்தவாறு.

  • 3.15

அசம்பவமு மல்லவிமா னத்தறியப் பட்டே
துயங்கினர்மா னத்துண்டோ சொல்

(இ-ள்)

சம்பவம்: மெய்யாகும் நிகழ்ச்சி; அசம்பவம்: அப்படி மெய்யாகாதது, வெற்றுக் கற்பனை என்பது.
சிற்சத்திப் பதிவின் வழி மெய்யுணர்வு என்பது நிகழாத ஒன்றல்ல, மெய்ப்படு நிகழ்ச்சியேயாம் என்றவாறு. எங்கே எங்கே மக்கள் மெய்யறிவோடு தெளிந்தனராக, இது இன்னது என்று அறிந்து துலங்குகின்றவராக, விளங்கிய மெய்யறிவு உடையவராக திகழ்கின்றார்களோ, ஆங்கெல்லாம் யாதாவதோர் அறிவுத்திவழி சிற்சத்திப் பதிவினைப்பெற்று உண்மைகளைக் கண்டு உய்கின்றனர். ஆகையால் சிற்சத்திப் பதிவாகிய இம்மானம் உண்டேயாம் , இல்லை என்றும் கூற முடியாது என்றவாறு.
உலகத்து அறிவெலாம் பொய்யறிவாயின், அனைத்தும் மித்தை பிராந்தி என்பதாயின், ஒருவனால் ஓர் செயலும் செய்ய முடியாதுபோம். மரத்தைக் கண்டு அதிலே தொங்கும் கனிகளைப் பரிக்க மரத்திலே ஏறுவான்கண், அவன் மரத்தைக் காண்பதும் அதிலே கனிகள் தொங்குவதும் இன்னும் இதனைபோன்ற பிறவும் மித்தையாய் பொய்யாய் கற்பனையாய் ஐயந்திரிபுகளோடு திகழ்வதாய் இருப்பின், மரத்தின்மேல் ஏறவும் செய்யான், கனிகளைப் பரிக்கவும் முயலான், உண்டு சுவைத்து மகிழவும் நினைக்கான். உலகத்தில் மக்களும் பிற உயிரினங்களும் இவ்வாறு யாதும் செய்யாதும் ,செயலில் இச்சித்ததை அடையாதும் வாளே கிடப்பதில்லை. ஆதலால் ஏதாவதோர் வகையில் பல மயக்க அறிவுகள் ஊடே மயக்கமில்லாத உண்மை அறிவுகளையும் அறிந்திருக்கின்றனர் என்பதே உண்மையாகும். இஇத்தகைய உண்மைகளும் பல்வேறு வகையில் கற்று அறிவதே என்பதால், அங்கு சிற்சத்திப் பதிவின் வழி உண்மையறிவு என்பதாயிற்று.
மேலும்'உலகெலாம் பொய்' , 'எல்லாமேக் கற்பிதங்கள், மித்தை' என்று ஒருவன் கூறுவனேயாகில், அதுவும் அவனோர் இருப்புநிலை அடைந்து அதனை சொற்படுத்துமாற்றால் , உண்மையொன்றினை கூறாது கூறுகின்றானாதலின் , மெய்யறிவு சிற்சத்திப் பதிவால் சித்தித்தல் அசம்பவம் அல்ல என்றாயிற்று. இங்கு கூறாது கூறப்படும் உண்மை யாதெனில், அவ்வாறு தன்னை சொற்படுத்த வைக்கும் ஓர் இருப்புநிலை உள்ளது என்பதாம்.
இனி நையாயிகர் மதம் பற்றி எழும் பிரமாணம் என்றால் என்ன? என்பதின் பிறிதோர் விளக்கத்தை உரைத்து அதன் குறைபாடுகளை நவில்கின்றார் கண்கட்டியார்.

  • 3.16
    மானம் பிரமிதிக்குச் சாதனமென் றேமதித்தார்க்
    கூனமுரைத் தீண்டுணர்த்து வோம்

(இ-ள்)

தகுந்த அளவை என்பது சிற்சத்தி பதிவு அல்ல மற்று என்னை எனின், மெய்யறிவுகளாகிய அனுமதித்துப் பெறப்படும் பிரமிதிகளை பயப்பிக்கின்ற சாதனங்களேயாம் பிறவல்ல என்பது நையாயிகர் கருத்தும் இன்னும் பலரின் கருத்துமாகும். இக்கூற்று தவறுடைத்து, ஊனம் உடைத்து என்று நவின்று அது எவ்வாறு என்பதை விரிவாகக் கூறத் தொடங்குகின்றார் கண்கட்டியார்.
"பிரமா கரணம் பிரமாணம்" என்பதே இங்கு மறுத்துரைக்கப்படும் கூற்றாகும். இறையருட் பதிவாகிய சிற்சத்தியே மெய்யறிவினை தருவது என்ற மாணவியல் கருத்திற்கு முரண்பாடானது இக்கூற்று என்பதால், இது மறுக்கப்பட வேண்டியதாயிற்று. இது பண்டைய நையாயிகர் கூற்றுமன்றி தற்காலத்து ஐரோப்பிய அளவையியலாளர்களும் (epistemologists), பொறிலிய அறிவியல் துறைகள் பல கண்ட அறிஞர்கள் பலரும் கொண்டிருக்கும் மெய்யறிவு கோட்பாடாகும். கரணம் என்பது ஓர் இயந்திரம் போன்றது. உலகத்தில் பொய்யினை உருவாக்குவதும் மெய்யினை உருவாக்குவதுமாகிய எந்திரங்கள் (machineries) உண்டு; அவற்றில் மெய்யறிவுகளை பிறப்பிக்கின்ற கரணங்களே பிரமாணங்கள் பிறவல்ல என்பது இவர்களது கூற்று. ஆக ஓர் ஐயப்பாடுடைய முரண்மொழியொன்றோ கருத்தொன்றோ தோன்றிற்றெனின், அதன்மேல் எழும் ஐயப்பாடுகளைப் போக்கும் முறைமை யாதெனின், அந்த அறிவு எவ்வாறு பிறந்துள்ளது என்று அதன் பிறப்பியலை ஆராய்வதேயாகும். மெய்யினையே பயப்பிக்கும் காண்டல் போலிகள் பயிலா அனுமானச் சிந்தனை, அறிவியல் முறையியல் என்று ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கரணங்கள் வழி அக்கருத்து பிறந்துள்ளது எனில், அது மெய்யே என்றும் அல்லவெனின் பொய்யே என்றும் இஇவர்களது மாணவியல் செல்லும்.

இக்கூற்று ஊனமுடைத்து என்று நவின்று எவ்வாறு அது என்பதை அடுத்த சில சூத்திரங்களில் விளக்குகின்றார் கண்கட்டியார்.

  • 3.17
    தீபாதி யும்மிதியைச் செய்யும் அவைமெய்யே
    தீபாதி மானமோ செப்பு

(இ-ள்)

தீபமொன்று ஒளி உமிழ்ந்து படிந்திருக்கும் இருளைபோக்கி ஓர் பொருள் உண்டென்றும் அது இத்தென்றும் அறிதற்கும் காரணமாக, கருவிக் காரணமாக இருப்பது உண்மைதான். ஒளி இல்லையெனில் புறவுலகில் யாதொன்றையும் கட்பொறி வழி விடயம் என்று பற்றி அறிதல் முடியாது. ஆனால் அதன் காரணமாக தீபாதிகளே பிரமாணங்கள் ,மெய்யினை பயப்பது எனின் அது ஒவ்வாது. தீபவொளியில் கண்டேன் என்பதால் மாத்திரம், காணப்படுவது உண்மையாகாது என்றவாறு. காணுதற்கு ஒளி வேண்டும், உண்மைதான் ஆனால் ஒளியோடு வேறொன்றும் வேண்டும். அது யாதெனில் கண்ணொளி எனப்படும் சிற்சத்தியே யாகும். எவ்வாறு எனின், திருமூலர் கூறியது போல் காட்சி எனப்படுவது என்பதின் என்க.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற்பூதம் (2251)

புறத்து ஒரு பொருளைக் காணும் வகையில் இருதிறனுண்டு. ஒன்றினை புதைத்து பின்புலனாக்கி பிறிதொன்றினை கொணர்ந்து முற்புலனாக்கி காண்பதே எங்கும் நடைபெறும் காண்டல் என்பதின் இயல்பாகும். மரக்கட்டையால் செய்த மதயானை ஒன்றினை தெள்ளிய ஒளி படர்ந்து உண்டெனக் காட்டி அதன் இயல்புகளை வெளியாக்கும் நிலையில், ஒருவன் பயன்படுத்தப்பட்ட மரத்தினையே பற்றி நின்று சுட்டி இது தேக்கு, முருங்கை, பலா என்றவாறு மரத்தையே பார்க்கும்போது, மரமென்பது முற்புலனாகி (foreground) யானை என்பது பின்புலனாகி (background) , புதையுண்டு அவன் கண்களுக்குத் தெரியாது போகின்றது. அதே பொழுது உருவத்தைப் பற்றி யானையைக் காணும் போது, எந்த மரத்தாலாகியது என்ற கேள்வி எழாது, எவ்வகை யானை, அது எந்நிலையிலிருக்கின்றது என்றெல்லாம் யானையை முன்புலனாக்கி, மரத்தைப் பின்புலனாக்கி யானையப் பார்த்தும் மகிழ்வான். இவ்வாறு ஒன்றினைக் காணும் போது ஓர் கூற்றை முன்புலனாக்கியும் பிறிதொன்றினை பின்புலனாக்கியும் காண்டல் நடைபெறுகின்றது என்பதாலும், இவ்வாறு செய்தாலேயே ஒழிய காட்சி சம்பவியாது என்பதாலும் ஒளி உமிழும் திறத்து தீபம் மாத்திரம் காட்சியை பயப்பிக்காது என்றாயிற்று. ஒன்றினை முற்புலப்படுத்துவதும் பிறிதொன்றினை பின்புலப்படுத்துவதும் காண்பான் செய்பவை. இவ்வாறு அவன் செய்வதற்கு ஏதுவாக இருப்பது சிற்சத்தி என்பதால், சிற்சத்தியே பிரமாணம் என்றாயிற்று.

இனி அடுத்து இவ்வாறு முன்புலம் பின்புலம் என்றவாறு படுத்துவது உண்மைதான் , ஆயினும் அவை ஏரணவொழுங்கு சிந்தனைக்கு பொருந்தாது என்ற மறுப்பெழ , அதுவும் மறுக்கப்படுகின்றது இங்கு கண்கட்டியார் வழி செல்லும் ஆசிரியரால்.

3.18

ஏரண நியதிகளும் எழூஉதல் சிற்சத்தியின்
காரணமா வெனக்கருதற் றகும்

(இ-ள்)

ஏரண நியதிகளாவது அரிஸ்ட்டோட்டல் (Aristotle) முதற்கொண்டு நவீன ஐரோப்பிய அளவையிலார் (logicians, epistemologists) வரை ஆய்ந்து கண்டவையும் தற்காலத்து பலவேறு துறைகளாக வளர்ந்துள்ளவையுமாகும். ஏரண நியதி என்பது, "A-ஐ விட B பெரியது, B-ஐ விட C பெரியது, ஆகவே A-ஐ விட C பெரியது" என்பது போன்றும்; "நல்லோர் அனைவரும் சாந்தத்தை நயக்கின்றனர், இவன் நல்லவன், ஆகவே இவன் சாந்தத்தை நயக்கின்றான்" என்றும் இஇன்னும் பலவாறும் வரும். ஐரோப்பியர்கள் கூறும் நையாயிதம் (syllogism) எனப்படுபவை அனைத்தும் இத்தகைய நியதிகள் ஆகும். இவற்றின் விரிவை 19ஆம் நூற்றாண்டு ஈழத்து சிதம்பரப் பிள்ளையின் "நியாய இலக்கணம்" என்னும் நூலிற் கண்டு தெளிக.

இனி இஇத்தகைய ஏரண நியதிகள் கரணம் போன்று தோன்றினும், குழந்தைகளிடம் இத்திறன் இல்லாதிருக்கின்றது. அத்தோடு அறிவு வளர்ச்சி தடைபட்டாரிடத்தும் இத்திறன் வெளிபடாதே இருக்கின்றது. அவர்களால் முறையாக சிந்திக்கமுடியாது கல்விக் கேள்விகளில் சிறவாதொழிகின்றனர். மேலும் இத்திறன் அமைந்துள்ளாரிடமும் சித்தமாயை, மதவெறி, அபிமானம், மாச்சரியம் , வீணான வெறுப்பு என்பன போன்ற இழிதகைமையின் காரணமாக செவ்வே செயற்படுவதில்லை. வலிந்து தனக்கேற்றவாறு திரித்துக்கூறி மகிழ்தலும் பரவலாகக் காணப்படுகின்றது. ஆக ஏரணவொழுங்கினொடு நியதி பிழையாது சிந்தித்துத் துணிதல் அறிவி வளர்ச்சியை ஒட்டியும், பிறவற்றிற்கு இடங்கொடாது உண்மையேக் காணவேண்டும் என்ற மனட்திண்மை உடையாருக்கே அமைகிற திறன் என்பதால், இவையும் சிற்சத்தியின் வெளிப்பாடாயிற்று. ஏரணவொழுங்கொடு சிந்தனை இயங்கும் அத்திறனே சிற்சத்தி வெளிப்பாடும் அருட்பதிவுமாகும். அது இல்லாதுபோக, ஏரணவொழுங்கொடு கூடிய சிந்தனையே எழாது போக, இத்தகைய கரணங்கள் அறிவிலே செறிந்திருப்பதின் காரணம் சிற்சத்தியேயாம் என்பது. ஏரணவொழுங்கு பிழையாது சிந்திக்கும் திறனொடு வரும் மனோகரணங்கள் சிற்சத்தியின் இயங்கும் வடிவம் என்பதால், இங்கும் சிற்சத்தியே பிரமாணமாயிற்று என்க.

இனி இன்னொரு சாரார் இந்திரியங்களை பிரமாணமாகக் கொள்வர். அவர்கள் கூற்றை மறுக்கின்றார் கண்கட்டியார் அடுத்து.

  • 3.19

இந்திரியம் அந்தக் கரணம் இவையுமல
வந்திடுந்தோ டங்காட்டு வாம்

(இ-ள்)

இந்திரியங்களாவன கட்பொறி யாதி. அந்தக்கரணங்களாவன மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்பன. இவற்றை முன்பே விளக்கியாயிற்று. இனி ஓர் சாரார் இத்தகைய பொறிகளின்றியும் அந்தக்கரணங்களின்றியும் அறிவு தோன்றுவதில்லை என்பதால், இவையே பரிமாணமாயிற்று -- மெய்யறிவு பயப்பதாயிற்று என்பர். கண் இல்லையெனில் காட்சியில்லை. அதேப் போன்று பிற பொறிகளும். மேலும் மனமின்றி பொருட்களைப்பற்றுதல் இல்லை , இலவே புறத்துப் பொருளறிவு இல்லை என்றவாறு. இதேப்போன்று பிற அந்தகரணங்களும். இவையின்றி அறிவு இல்லையென்பதால், இவையே அறிவிற்கு காரணமாக இருப்பதால், இவையே பிரமாணம் என்பர். ஆயினும் இக்கூற்றில் பல குறைகள் உண்டு, அவை அடுத்து காட்டப்படுகின்றன.

  • 3.20
    கண்ணுருவம் காணும் அதன்விடயம் கந்தமுமன்
    றுண்மனம் பற் றும்துணியு மோ

(இ-ள்)

ஐம்பொறிகளின் செயலினைக் காணும்போது ஒவ்வொன்றும் தமக்கே அமைந்த ஓர் விடயத்தை காட்டி ஓர் பொருளின் முழுவறிவினை தருமாறில்லை. கட்பொறி உருவப்பொலிவினைக் காட்டும், அதன் மணத்தை -- கந்தத்தை-- காட்டாது. நாசிப்பொறி மணத்தைக் காட்டும் , உருவினைக் காட்டது. இவைபோன்று பிறவும். பொருளறிவு என்பது உருவவறிவு மாத்திரம் அல்ல, சுவை மாத்திரமல்ல, மணம் மாத்திரமல்ல, அதனை உற்றறிகிறதால் பரிசத் தன்மையும் செய்கின்ற ஓசையுமல்ல. இவை அனைத்தையும் பெற்று, இவற்றில் மேலும் தற்செயலாய் வருவது ஈது, இயல்பாய் இருப்பது ஈது என்றும் பிறித்தறியவே தான் 'இஇது மாடு, மரம், பூனை" என்றவாறெல்லாம் நிருவிகற்ப உணர்வு போக்கி சவிகற்ப உணர்விற்றாய் பொருளுணர்வு பெற்று பெயரிட்டு அழைக்க முடிகின்றது. ஐம்பொறிகளில் எந்த பொறியும் இத்தகைய சவிகற்ப உணர்வினை தருமாறில்லை.
இனி இத்தகைய முழுசறிவுகளை (gestaltic perception) தருவது உள்மனம் எனப்படும் அந்தக்கரணங்கள் எனில், அவை ஓர் பொருளை தானே பற்றுதலும் சிந்தித்து இஃதென துணிதலும் செய்யாது. நுதிப்பு ஒன்று அறிவிலே நிற்க, அதனை பற்றி அது தானாக வேண்டும் என்ற முனைப்பொடு ஆன்மா கற்றல் தொழிலில் விழாவிட்டால், பொருள்கள் தன் சூழலில் கிடந்தாலும் அவற்றை பற்றி நின்று கற்கின்ற வினைகள் நடைபெறா. இவ்வாறு கற்கின்ற தொழிலை செய்தற்கு ஐம்பொறிகளும் அகக்கரணங்களும் தேவையே எனினும், இந்தக் கரணங்களே அறிவினைத் தராது போக, அவை பிரமாணம் அல்லை என்றாயிற்று.
இனி இதனால் மீண்டும் சிற்சத்தியே மானமென வற்புறுத்துகின்றார் கண்கட்டியார்.

  • 3.21
    அத்தமுரு மூன்றினையும் தானிவற்றால் ஆய்தலினால்
    சிற்சத்தி மானமெனத் தேறு

(இ-ள்)

அர்த்தமாகிய பொருட்களின் உரு மூன்றாவது உருவென்றும் அருவென்றும் அருவுரு என்றும் பொருட்கள் அறிவிற்கு ஆவதாகும். உருவாவது(concrete objects) ஐம்பொறிகட்கு விடயமாய் அமையும் ஒளி, ஒலி, சுவை, மணம், பரிசம் எனப்படும் இவற்றோடு பொலிவதாய் காலம் இடம் என்பவற்றோடு திகழ்ந்து சுட்டறிவிற்கு எட்டுபவை ஆகும். நுண்மையாக நின்று பல்வேறு கருவிகளின் உதவியோடு அறியப்படுபவையும் அடங்கும்.
இனி அருவங்களாவன (abstract objects) ' நன்றி மறப்பது நன்றன்று' 'களவாடல் தீது ' ' ஆறுவது சினம்' ' கன்மம் உண்டு' என்றவாறு சிந்தைக்கே புலப்படும் பொருட்களாகும். இவற்றை ஐம்பொறிகளாலும் மேலும் அவற்றின் விருத்தியாகிய நுண்கருவிகளாலும் எவ்வகை முயன்றாலும் காணமுடியாது சிந்தித்து அறிவானுக்கே புலப்படும் பொருட்களாகும்.

இனி அருவுருவங்களாவன இடைப்பட்ட நிலையில் இருப்பவை -- மனச்சோர்வு, கவலை, தாபம், விரக்தி, மகிழ்ச்சி, சாந்தம் போன்றவை. இவை பட்டறிந்தே காண வருபவை. அத்தோடு இருப்பதாய் ஆனால் ஓர் கருவியின் வழியாகவே உணரப்படுவதாய்த் திகழும் மின்காந்த அலைகள் போன்றவற்றை அருவுருவங்கள் என்பாரும் உளர்.

இவ்வாறு வரும் மூவகை உருவத்து பொருட்களையும் ஆன்மா ஆய்ந்து மெய் எது? பொய் எது? என்று தேர்ந்து துணிவதின் , சிற்சத்தியே மானமென்றாயிற்று.

மெய்கண்டாரும் சிவஞானபோதம் ஐந்தாம் சூத்திரத்தில், ஐம்பொறிகளால் வரும் விடயவுணர்வுகளை அப்பொறிகளும் அந்தகரணங்களும் அறியா, ஆன்மாவே உணரும் என்கின்றார். மேலும் இந்த ஆன்மாவானது இந்தப் பொறிகளோடு ஒன்றித்து வேறற்று நின்று காணின் அல்லது, இந்தப் பொறிகள் யாதனையும் விடயமாகப் பற்றாது என்கிறார்.

ஐம்பொறியை யாண்டங் கரசா யுளம்நிற்ப
ஐம்பொறிக ளுள்ள மறியாவாம் -- ஐம்பொறியின்
காணாதேற் காணாது; காணுமுளங் காணாதேல்
காணாகண் கேளா செவி

என்று கூறி ஐம்பொறிகளால் ஆகும் உருவறியவும், விடயங்களாக ஆகுதற்கு காரணம் ஆன்மா முனைப்பொடு நின்று ஓர் அரசன் ஆணை தந்து அமைச்சர்களையும் காவலர்களையும் செயலிற் பணிப்பதுபோல், இந்த பொறிகளை தொழிற்படுத்துவதால்தான். இவ்வாறு உருவ வறிவுகள் பல சித்திக்க, அனுபவங்களாக பட்டறிவுகளாகப் பட அவற்றை மனோகரணங்கட்கு இலக்காக்கி மேற்கூறிய நியதிகள், கோட்பாடுகள், அறங்கள் போன்ற அருவப் பொருட்களைக் காண்கின்றன. இங்கும் ஆன்மாவே அந்தக்கரணக்களைச் செலுத்தி உண்மையிது பொய்யிது அது தெளிவு அது திரிவு ஐயமுடையது என்றெல்லாம் உணர்வதின், ஆன்மாவின் கண் எழுவதும் எழாதுபோவதுமாகிய சிற்சத்தியே மானமென்றாயிற்று.

அருவப் பொருட்களை ஐம்பொறிகளும் அந்தக்கரணங்களும் கண்டு மகிழா. அறநெறிகள் , சமயக் கோட்பாடுகள், நீதி நியாயங்கள் என்பன போன்ற அருவப்பொருட்களைப் பற்றித் துணிதல் அந்தக்கரணங்கள் அல்ல, அவற்றைக் கடந்து செல்லும் திறனுடைய ஆன்மாவே என, அந்த ஆன்மாவின் கண் மலமறைப்பினை நீக்கும் பண்புடைய சிற்சத்தியே மெய்யறிவிற்கு, மெய் எனும் உணர்விற்கு அடிப்படையாக அதுவே மானம் என கொளத்தகும் என்றவாறு விளக்குகின்றார் மெய்யோர் பணிந்தேத்தும் மெய்கண்டார்.

இனி இந்த சிற்சத்தியைப் பற்றி வேறொன்றும் விளக்கியது

*3.22

சிவமானம் சைவநூல் செப்புயிர்சிற் சத்தி
அவமானம் மற்றையமா னம்

(இ-ள்) சிவமானமாவது , சிவபெருமானே சிவப்பார்வையின் ஞானிகள் வாயிலாக அறிவுறுத்தும் மெய்யறிவுகளாகும். அவற்றில் ஒன்றே சைவாகமங்கள் விளக்குகின்ற இறையருட் பதிவாகிய சிற்சத்தியின் வெளிப்பாடு, மெய் யாது? பொய் யாது? என்று தெளிதற்கு ஏதுவாயது. ஆகவே சிற்சத்தியேப் பிரமாணம் என்பதாகும். இவற்றை தவிர்த்து பிற கருத்துக்களெல்லாம் மானிடனின் தற்போத செருக்கால் எழுபவையென அவை மெய்யான அறிவிற்கு இட்டுச் செல்லாதென அவமானங்களாகின்றன.

சத்தறிவு, அசத்தறிவு என்றும் சுத்தம் அசுத்தமென்றும் இன்னும் இவ்வாறெல்லாம் அற்வுகள் மெய்யாய் அறியப்படுவதற்கு காரணம், இறைவன் கண்ணோடு கண்ணாக அறிவோடு அறிவாக நின்று உணர்த்தி யருளும் அக்காரணமேயாம். எவ்வாறு ஐம்பொறிகள் ஆன்மா செலுத்தாதபோது யாதோன்றையும் விடயமென்று அறியா தொழியுமோ, அவ்வாறே ஆன்மா தன்னை உணருதல் என்கின்றார் மெய்கண்டார். ஆன்மாவாவது அந்தக்கரணங்களாகிய அவற்றில் ஒன்றன்று. ஆயினும் ஓர் அரசன் அமைச்சர்களைக் கொண்டு உலகத்து அறிவினை பெறுவது போல, இந்த கரணங்களைக் கொண்டு உலகத்தினை அறிந்து நிற்கின்றது. மூல மலமாகிய ஆணவமலத்தால் இருளில் கிடக்க, அதனின்று வெளிப்படும் முகத்தான் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன போன்ற பல இருப்புநிலைகளை அடைந்து பற்பல அறிவுகளைப் பெறும் என்றவாறு. இவ்வாறு பஞ்சாவத்தை படும்பொழுது தனது இருப்புநிலைகளை தான் அறியாதே நிற்கும்.

"இவ்வான்மாத் தன்னாலே உணரும் இந்திரியங்களைப் போலத் தானும் தன்னைஇயுணராது நிற்றலான், இதுவுந் தன் முதலாலே உணரும் என்றது"

என்கின்றார் மெய்கண்டாரும் சிவஞானபோதம் ஐந்தாம் சூத்திரம் இரண்டாம் அதிகரணத்தில். மேலும்,

மன்னுசிவன் சந்நிதியில் மற்றுலகம் சேட்டித்த
தென்னு மறையின் இயல் மறந்தாய் -- சொன்ன சிவன்
கண்ணா வுளம் வினையாற் கண்டறிந்து நிற்குங்காண்
எண்ணான் சிவன் அசத்தை இன்று

என்று கூறியும் இன்னும் விளக்குகின்றார்.
இறைவனது திருவருளேக் கண்ணாகக் கொண்டு ஆன்மாக்கள் பற்பல செய்து சத்தறிவு ஈதென்றும் அசத்தறிவு ஈதென்றும் இன்னும் பலவாறும் விவேகித்து அறிந்து நிற்கும் என்றவாறு. இதன்னாற்றான் ஆன்மாக்கள் அசத்தை ஒழித்து சத்தையே போற்றியும், அசுத்தத்தை விடுத்து சுத்தத்தையே பற்றியும் உய்கின்றன. இதனைப் போன்றதே கண்ணுக்குள் கண்ணாக நின்று மெய்யறிவினைத் தரும் சிற்சத்தியே பிரமாணம் என்று தெரிவிக்கும் அறிவும் என்றவாறு.

இனி இது தொடர்ந்து இறைவன் அறிவிக்க, அறியப்படுவதே அறிவு என்பதை பல சூத்திரங்களால் சிறிது விளக்கியவாறு. மேலும் 'சிவமானம்' என்பதை இன்னும் விளக்கியவாறும்.

3.23

வேறறநிற் கின்றவிந் தையிறைவன் விளையாடி
புகரற போதிக்கப் புலன்

(இ-ள்)

புலன் என்பது மெய்யறிவு என்பதே -- குற்றமற்ற மெய்யென அனைவராலும் மெய்யென உடன்படுதற்கு வருவது. சகசமலத்தால் வரும் அறியாமை இருளில் கிடக்கும் ஆன்மாக்களுக்கு, அதனைக் கிழித்துக் கொண்டு எவ்வாறு அறிவு புலருகின்றதெனில், முன்பே கூறியவாறு ஓர் நுதிப்பு அறிவிலே எழ, அதனைப்பற்றி அது தானாகவேண்டும் என்ற முனைப்பால் முயற்சிகள் பிறக்க, ஆங்கு அதனால் கற்றல்வினைகள் மெய்யாக அதன்வழி அறிவு சித்திக்கின்றது என்பது. இனி இப்படிப்பட்ட கற்றல் வினைகட்கும் காரணமாக மூலமாக இறைவனே நிற்கின்றான் என்று பகரப்படுகின்றது. ஆன்மாக்கள் இருக்கின்ற பக்குவத்திற்கு ஒருபடி மேலதாகிய நுதிப்புக்களை ஆன்மாக்களே படைத்துக்கொள்ள முடியாது -- அது அவற்றின் வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒன்றென்பதால். ஆக எவ்வாறு இஇந்நுதிப்புக்கள் தோன்றுமெனில், அந்த ஆன்மாக்களோடு வேறற நிற்கின்ற இறைவனாலேயே யாம் என்பது. பற்பல திருவிளையாடல்களை நடத்தி சிற்சத்தியை பதிவித்து எல்லாக் குற்றங்களும் போக்கிய மெய்யறிவுகளை ஆன்மாக்கள் பெற்று மகிழும்படி உதவுவான் என்றவாறு.

இவற்றைப் பின் விரிவாக விளக்குவம். இங்கு ஏற்புடைமைப்பற்றி ஒரு சிறிதே கூறப்படுகின்றது.

இனி மனகலக்கங்கட்கும் அறிவாய்விற்கும் உள்ளத்தொடர்பினை விளக்குகின்றார் ஆசிரியர்.

3.24

ஆட்டங்கள் பலவாடி அறிவினைக் கலக்கியாண்டு
மூட்டுவா னறிவுவான் மாவுய்ய

(இ-ள்)

"பிரமா கரணம் பிரமாணம்" எனும் கூற்றும் இன்னும் அதனைப்போன்று ஆன்மவிச்சைகட்கு அப்பாற்பட்ட வொன்றாக மெய்யறிவாய்வினை கொண்டு செலும் முயற்சிகளெல்லாம், மெய்யறிவாய்வின் நோக்கினை உணர்ந்ததாயில்லை. அகத்தெழுங் கலக்கங்கள், துக்கங்கள், துயரங்கள் , ஐயங்கள், கிலேசங்கள் என்பனவே உண்மை எது? என்ற கேள்வி எழ காரணமாகின்றன. ஆக இதுதான் உண்மை என்ற அறிவு உயிர்களின் இத்தகைய அவலங்களை போக்குவதாகவும் இருக்கவேண்டும். அகத்தெழு கலக்கங்களை ஆகின்ற மெய்யுணர்வுகள் போக்குகின்றன என்பது மெய்யாயிருக்க, இறைவனே இப்படிப்பட்ட ஆன்மவேதனைகளைத் தந்து ஆன்மாக்களை சிந்திக்க வைத்து அதன்வழி சிற்சத்தி பதிவித்து தெளிவு உண்டாக்கி பக்குவம் முதிர்ந்து ஊய்ந்து உயர்ந்து செல அருள்பாலிக்கின்றான் என்றவாறு. இதனால் மெய்யறிவு என்பது மருந்து போன்றதும் என்றாயிற்று.
இனி தொடர்ந்து மெய்கண்டார் கருத்தினைப் போற்றி வழிமொழிகின்றார் இதனை இன்னும் விளக்குவான் பொருட்டு.

3.25

காட்டப்பதி காண்கின்றான் பசுநற் கலையின்
காட்டானாயின் காண்கிலன் கருள்மயன்

(இ-ள்)

ஆணவ இருளிலே கிடக்கும் ஆன்மாக்களுக்கு நற்கலைகள் பலவற்றை பிழையற பயின்றாலே மெய்யறிவு சித்திக்கின்றது -- கற்றல் முகத்தானே அறிவு, இல்லையெனில் இல்லை என்றவாறு. இங்கு நுதிப்பினை பதிப்பித்து அதனை ஆன்மாக்கள் காணுமாறு இறைவன் செய்யாவிடில் பசுக்களுக்கு கற்கவேண்டும் என்ற முனைப்பே, ஒன்றினைச் செய்து முடிக்கவேண்டும் என்ற முயற்சியே இல்லாது போகும். ஆக இறைவன் காட்டியருளவேதான் ஆன்மாக்கள் காண்கின்றன, இல்லையேல் அவை இருளில் வதிந்து அறிவுச் சூன்யங்களாக கேவலத்தில் கிடக்கும் என்றவாறு. "நற்கலைகள்' என்று இங்கே நவிலப்படுவது பிறகு விரிவாக விளக்கப்படும்.

இனி இறைவனேக் காட்ட எல்லா அறிவுகளும் ஆன்மாக்கள் மாட்டு மெய்ப்பட நிற்கின்றன வெனின், பொய்யறிவுகளும் இறைவனாலேயே தரப்படும் என்றாகுமே என்ற சங்கையை மறுக்கின்றார் அடுத்து.

3.26

காட்டிய தைப்பசு காட்டியவாக் காணுங்கால்
ஊட்டமா மங்குவுண்மை யுணர்வு

(இ-ள்)
ஓர் குருவினிடத்து சற்சீடனாக ஒருவன் அமர்ந்திட , அந்த குருவானவன் யாதை உணர்த்துகின்றானோ அதனையே பிழையின்றி அந்த சீடன் உணர்வது ஒத்தக்காட்சி உத்திகளால் வருவதாகும். குருவொன்று உணர்த்த, தன் தற்போத செருக்காலும் அற்பச் சிந்தையாலும் சோர்வினாலும் மல ஈர்ப்பிற்கு ஆளாகி அதனைத் திரித்து கண்டானாயின் அங்கு பிழைபட உணர்தல் ஆகின்றது. இதேப்போன்று சத்தறிவேத் தன்னறிவாய், சிவஞானமே தன் ஞானமாய் நின்று நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தில் தாக்காது நின்று எல்லா ஆன்மாக்களுக்கும் சிவஞானம் போதித்துக் கொண்டே இருக்கும் இஇறைவன்பால் அடங்கி போதிக்கின்றவாறு போதிக்கபப்டுவதை உணரும்போதே இறைவனோடு ஒத்தகாட்சி அறிவு சித்திக்கும் என்க. அதுபொழுதே சிற்சத்திப் பதிவு நிகழ, உண்மை என்ற உணர்வும் எழுந்து அந்த ஆன்மாவிற்கு மனவுறுதியினைத் தரும் ஊட்டமாக அது அமையும் என்றவறு.

இதனால் நூலிய அறிவியல் முறையே ஏற்புடைத்த மெய்யறிவு ஆய்வு நெறி என்று முடிக்கின்றார்.

3.27
உளதா முலகினை உளவாக் கண்டுணர்தல்
மலவான் மாமறுவிற் செய்தி

(இ-ள்)

இறைவன் காட்டியருள அதனையே காணுந்திறனே உண்மையறிவினை தரும் என்பது மெய்யாக, உளவாகி நிற்கின்ற உலகினை உள்ளவாறு கண்டுணர்தலே தக்க நெறியாம், அதனை மெய்யாக கற்றலே மலத்தின் சம்பந்தத்தால் மயங்கிக் கிடக்கும் ஆன்மாக்கள் செய்யக்கூடிய பிழையில்லா செயல்களாகும் எனப்படுகின்றது.

பொறிபுல உலகாய் சொற்பொருள் உலகாய் மேலும் சொல்லறிவிற்கும் எட்டாத பொருளணர்வாய் தோன்றி நின்று அழிந்து செலும் இவ்வுலகின் வழியேயேதான் மெய்மை சித்திக்கும் என்றவாறு. உளதாமுலகினை உளதாக் கண்டுணர்தலாவது, நூலிய அறிவியல் வழி சென்று அதனை அறிவதாகும். இது இயலியம் (phenomenology) சார்ந்தது. இயலியம் செல்வார் வீணான கற்பனை சேட்டையெலாம் ஒடுக்கி , மனோகரனங்களை எல்லாம் பயன்படுத்தி ஓர் பொருள் தன்னை எவ்வாறு தானே வெளிப்படுத்துகின்றதோ, உலகில் இயலுகின்றதோ, அவ்வாறே பிறழ்ச்சியின்றி "இது இற்று" என்று அறிந்துணர்வதாகும். இதனோடு வரும் நூனெறி யாவது (Hermeneutics) தோன்றுகின்ற அனைத்தையும் ஓர் நூல் எனக்கண்டு அதன்பால் அடங்கும் போது அது அப்பிரகாசமாக நிற்க, அந்த அப்பிரகாசத்திற்குக் காரணம் தன்னுள் கிடக்கும் அறியாமையே என்றுணர்ந்து தகுந்த அறிவுத்திகள் பெய்து தன்னுள் கிடக்கும் அறியாமையைப் போக்கி அப்பொருளின் அப்பிரகாசத்தையும் போக்கி நூலாகிய அப்பொருளினை தெற்றென உணர்வதாகும். இந்தப் பேருலகையே, அதனோடு வரும் வாழ்க்கையையே பெருநூலாக எடுத்துக்கொண்டு, இறைவனே அதனை யாக்கியோன் என்று கருதி ஒத்தக்காட்சி வழியின் இந்த உலகினை அறிதலே, ஆன்மாக்கள் தம்முள் செறிந்திருக்கும் மலங்களை போக்குதற்கு செய்யக்கூடிய குற்றமற்ற செயல்கள் என்பது. இங்கு பொருட்களை உலகினை வாழ்வினை நூலாக நோக்க ஆங்கு தோன்றும் ஆன்மாக்கள் பால் கிடக்கும் தெரியாமையின் காரணமாக வெளிப்படும் அப்பிரகாசத்தை போக்குவது சிற்சத்தியே தவிற வேறொன்றுமல்ல என்றவாறும்.

இனி ஆய்தற்பொருளாய் உலகு இல்லை, அதுவோர் மாயாசத்தியால் ஆன்மாக்களை மயக்கத்தில் வீழ்த்தி துன்புறுத்துகின்றது, ஆக அதனின்று விடுபட்டு ஒடுங்கி கிடப்பதே நலமென்று கூறும் வேதாந்தக் கூற்றை அடுத்து மறுக்கின்றார் ஆசிரியர்.

3.28

இல்லையுல கெனில் இல்லையே யெவ்வறிவும்
தொல்லையே யறிவுச்சோதனை யெலாம்.

(இ-ள்)

உலகத்தில் கிடக்கும் பொருட்கள் சத்தென்றும் அசத்தென்றும், சுத்தம் அசுத்தமென்றும் சித்து அசித்தென்றும் அறியப்படும். மேலும் இன்னொரு வகையில் அநாதிபொருள் கண்ணோட்டத்தில் பதி பசு பாசம் என்றும் அறியப்படும். இப்படிப்பட்ட பொருளுலகோடு, அறிவு வகைகளாய் சத்தறிவு அசத்தறிவு சுத்தவறிவு அசுத்தவறிவு இருந்தறிவு எண்ணறிவு என்றெல்லாம் உணரப்படும் அறிவுலகும் இருக்கின்றது. இப்படி பொருளுலகாய் (அர்த்தப் பிரபஞ்சம்) அறிவுலகாய் (சத்தப் பிரபஞ்சம்) உலகு இல்லையெனில்., மேலும் வெளிப்பட்டு நிற்கின்ற உலகு, அவ்வாறு வெளிப்பட்டு நிற்கின்றதின் வழி சிந்தித்தே பெறப்பாலதாகிய வெளிப்படா நிற்கின்ற மறையுலகு என்றும் உலகு இல்லையெனில், எவ்வகை அறிவும் இல்லாது போம். அத்தோடு மறையாக நிற்பதை அறியவேண்டும் என்ற முனைப்புமின்றி யாது பிரமாணம் யாது அப்பிரமாணம் என்றவாறு அறிவுச் சோதனைகளும் எழாது போம். ஆயினும் அறிவுச் சோதனைகள்தாம் உளவே? ஆகவே அந்த மெய்யினை விளக்குதற் திறத்து மேற்கூறிய உலகு கூறியவாறு உண்டு என்பதாயிற்று.
இவ்வாறு பலதிறப்பட்டு ஆராயப்படவேண்டியதாக உலகு இருக்கின்றது என்பதை மறுப்பவர்கள் சொரூபசார வேதாந்திகள் ஆவர். அனைத்தும் சித்தே, சித்தின்றி வேறொன்றும் உலகில் இல்லை எனும் சித்துவாதத்தை (pure idealism) எடுத்துரைப்பவர்கள் இவர்களாகும். இது மேற்கூறிய நூலிய அறிவியல் நெறிக்குப் புறம்பானதாகும். இந்த 'சித்துவாதம்' என்பது "சொரூபசாரம்" எனும் சஙகர மாயாவதம் தழுவிய (16ஆவது நூற்றாண்டு) நூலில் இவ்வாறு கூறப்படுகிறது.

சிற்சொரூபந் தானே செகசொரூ மானவெலாஞ்
தற்சொரூப சாரமாய் சாற்றவே -- பொற்சொரூப
மச்சுருவாம் போல வதுவதுவாய் தோற்றமொரு
சொச்சொருபந் தானே துணை

மேலான மறைவாக்கினால் உளதாம் என்றறியப்படும் பரப்பிரமமாகிய சொற்சொரூபமும் சிற்சொரூபமும் தற்சொரூத்தின் சாரமாய் நிற்பதுமாகிய அதுவே இஇந்த உலகத்து எல்லா உருவங்களுமாக நிற்கின்றது; எவ்வாறு எனின் விழும் அச்சுக்கேற்ப விளங்கிடு பொன்னின் உருவது போல என்க.

மேலும் :

புத்திவிகற் பத்தாற் பொருந்துசக பேதமெலாஞ்
சத்தியம்பொற் றோன்றுவது சாட்சியன்றோ - முத்திமுதற்
சுத்த மசுத்தம் சுகாசு கங்க ளுல்லதில
தத்தனையும் சத்தாத லால்

மேலே அனைத்தும் சித்தென்றவர், அடுத்து அனைத்தும் சத்தென்கிறார். எவ்வாறெனின், உலகத்து அதுவிதுவென்று வெவ்வேறாகப் பொருட்கள் தோன்றுவது மெய்யாக அவ்வாறு இருப்பதால் அல்ல, புத்தி இவ்வாறு விகற்பித்தலால் தான் அவ்வாறு. மேலும் 'மெய்" என்ற உணர்வு எழுவதும் சாட்சிமை எனப்படும் ஆன்மாவின் தன்மையால் தான். ஆகலின் முத்திமுதல் சுத்தம், அசுத்தம் என்றும் இன்பம் துன்பமென்றும் உள்ளது இஇலது என்றும் இன்னும் பலவாறும் விகற்பித்து அறியப்படுவது யாதெனின் சத்தாகிய அப்பரப்பிரம்மமே வேறல்ல என்றவாறு.
இக்கூற்றுகளும் இவற்றின் விரிவுகளும் ஆன்மா கற்கின்றது, அவ்வாறு பற்பல கலைகள் பயில்வதின் வழி இஃது இன்னது என்றெல்லாம் அறிகின்றது என்பதை மறுப்பதாகும். இதனின் ஒவ்வாமையை மேலே விரித்துள்ளோம். மீண்டும் பின்னொருவகையில் பிறகு.

பற்பல கலைகளைப் பயின்று அதன் வழி நூலெனக் காணும் போது, ஓர் வகையப் பொருட்கள் தோன்றும்; இருக்கின்ற அறியாமையினால் எழும் அப்பிரகாசத்தைப் போக்கி அறிவினைப் பெருக்குவது அனைவரும் சாதிக்கின்ற ஓர் உண்மையாகும். அதனையே இங்கே திரித்தும் பிழையாகவும் 'புத்தி விகற்பத்தால் அறிவு" என்று விளக்கப்படுகிறது. உலகத்துப் பொருட்கள் மெய்யாகவே வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருக்க, அவ்வாறே , உள்ளதை உள்ளவாறேக் காண மெய்யறிவு சித்திக்கின்றதே யன்றி, புத்திதன் தற்போத சேட்டைகளால் அல்ல. தனக்கு அப்பாலாகி நிற்கும் பொருளின் மெய்யறிவு சித்திக்கவேதான், அதன் உண்மை தெளிவாகவேத்தான் பிறரோடு உடன்படு சூழ்நிலை பிறக்கின்றது. பொருளெல்லாம் புத்தியின் சிருட்டி எனின் செப்புகின்றானைத் தவிற பிறிதொருவன் கண்டு அதனை பொய்யென்றோ மெய்யென்றோ அறிந்து உடன்படவோ எதிர்க்கவோ முடியாது போய்விடும். ஆயினும் உலகத்தில் இது யாண்டும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது என்பதால், இவ்வாறு நடைபெறவில்லை என்று மறுப்பது முரண்படாகும்.
மேலும் இவ்வாறு 'அனைத்தும் சித்து', 'அனைத்தும் சத்து' என்றெல்லாம் பகன்று தனது கோட்பாட்டை கூறத் தொடங்குவான் ஒருவன், வெளிப்படையாகக் கூறாது, பிறருக்குத் தான் ஒன்றினை போதிக்கப் புகுந்துள்ளேன் என்று குறிப்பால் உணர்த்துகின்றான். இனி தான் போதிக்க எழுந்துள்ளேன் என்பது மெய்யாக, பிறர் அதுகொண்டு கற்க விருக்கின்றனர் என்பதும் மெய்யாக, இருஇவருக்கும் கற்றல் வழியே அறிவு என்பது உடன்பாடாயிற்று என்பதாம். மயக்க அறிவினால் தான் செய்வதையே தான் உணராது பிதற்றித் திரிகின்றார் என்றும் அறிக.

இனி கற்றல் வழியேதான் எவ்வறிவும் என்பதை நிறுத்தி, மேற்கொண்டு உண்மை பிரமாணமாகிய சிற்சத்தியைப் பற்றி இன்னும் சில கூறுகின்றார் ஆசிரியர்.

3.29

அருளேக் கண்ணா யறிவார்க் கன்றியிலை
பொருளை மெய்யாப் புல்லல்

(இ-ள்)

அனைத்தும் புத்தி விகற்பத்தால் ஆகும் கற்பிதமென்றும், பிராந்தியால் ஆகும் ஆரோபிதமென்றும், மேலும் பிரமாவாகிய மாணறிவு பிரமாணக்கரணங்களால் பெறப்படுவது என்றும் இன்னும் பலவாறும் அறிவாய்வினை தொடர்வார்க்கெலாம், கற்றலால் அறிவு என்பது உடன்பாடில்லை. ஆயினும் அதுவே மெய்யாயிருக்க, அது உடன்பட்டார் எங்கும் பரந்து நிறைந்து நிற்கின்ற அருளொடு புணர்ந்தே, அதனையே கண்ணாகக் கொண்டு அனைத்தையும் அறிய வேண்டுமென்பது. இல்லையெனில் பொய் அறிவுகளை மகிழத் தரும் மலபந்தங்கள் அறுபடா என்றவாறு.
பொருளை மெய்யாப் புல்லல் என்பது, தனது புந்தி விகற்பத்தால் வரும் விகாரங்களையும் கற்பிதங்களையும் ஒடுக்கி, தனக்கு அயலாக ஓர் நூலாக நின்று தோன்றுகின்ற அப்பிரகாசத்தினால், தன்னுள் இருக்கின்ற அறியாமையை தெரிவித்து நிற்கின்ற அப்பொருளை அது எவ்வாறு நிற்கின்றதோ, தனைக் காட்டுகின்றதோ அவ்வாறே பிழையாது அறிதலாகும். இவ்வாறன்றி அதன் இயல்பிற்குப் புறம்பாகக் காணும்போதே தோன்றுகின்ற அறிவு திரிபறிவாகின்றது. இதனின் இஇத்தகு அறிவுகளைத் தோற்றுவியா ஒத்தக் காட்சி உத்திகளே பயிலப்பட வேண்டும் என்பதாம். அப்பிரகாசத்தை நீக்கும் பண்பிற்றாகிய இவை, இறையருளோடு பொருந்தி பயிலப்படல் வேண்டும். இல்லையேல் சிற்சத்திப் பதிவு மெய்யாகாது போக . ஐயமும் திரிபும் அகலாதாகிவிடும் என்றாயிற்று.

திக்குத் தெரியாத படர்ந்த அடர்ந்த காட்டில் திரிகின்றான் ஒருவனுக்கு கிடைக்கின்ற காந்தமுள் போலவும், எங்கும் பரந்தும் கரந்துமுள்ள துன்னிருளில் கிடப்பானொருவனுக்கு கிடைக்கும் கைவிளக்குப் போலவும் அறிவினிலே பதிகின்ற சிற்சத்தி உண்மையிது என்றவாறு உணர்த்தியருளி, அவன் பரபஞ்சச் செலவினை திருநெறி வழியே நடத்த உதவும் என்றாயிற்று.
இவ்வாறு தெளியாதார்,வேதாந்திகளைப் போல பற்பல முயன்று கற்றலைச் செய்யாது உலகத் தொடக்கையெலாம் அறுத்து தன்னுள் தானொடுங்கி கிடத்தலே தக்கது என்று திரிபாகக் கண்டு மயங்கி மாய்வர் என்பதாம்.

மேலதக்கோர் புறனடையாக அடுத்து ஒன்று.

3.30

சிற்சத்திப் பாய்வை சிதைக்கின்ற வனைத்தும்
எத்திறத்து மேற்புடைத் தாகா

(இ-ள்)

இங்கு தகுந்த , அறிவிற்கு உகந்த மெய்யறிவு ஆய்நெறி யாதென்பதற்குப் பொதுவாக ஒன்று கூறுகின்றார். அருட்பதிவு, சிற்சத்திப் பாய்வு, சத்திநிபாதம் என்பவை எல்லாம் ஒரே பொருளுடையன. மெய்மை இதுதானென்று அகவிருளைப் போக்கி அறிவிலே தெளிவினைக் கொண்டு வந்து 'மெய்யிது', 'மெய்யிது' என்றவாறு அறிந்தறிந்து ஆன்மாக்கள் ஊய்ந்து செல உதவும் சிற்சத்திப் பாய்வை யாது தடை செய்தும் சிதைத்தும் தெள்ளறிவு விளங்கவொட்டாது செய்கின்றதோ அத்தகைய கோட்பாடுகள், அறநெறிகள், சமயங்கள், வாதங்கள், கடைப்பிடிகள், சங்கற்பங்கள் என்பனபோன்றவை ஏற்புடைத்து அல்ல என்றவாறு. உடன்பட்டும் எதிர்த்தும், ஒற்றுமை வேற்றுமைகளைப் பகுத்தறிந்து கண்டும் இவ்வாறு இன்னும் பலவாறும் உழைத்தாலேயொழிய மிகவும் வலுவாக உள்ளத்தில் செறிந்திருக்கும் மலமாசுக்களை நீக்க முடியாது என்பதாம்.

சிவஞானகற்பம், மூன்றாம் தந்திரம்: மாணவியல் முற்றும்












பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=சிவஞான_கற்பம்_-3&oldid=10954" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 23 மே 2012, 07:57 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,715 முறைகள் அணுகப்பட்டது.