வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கம்பராமாயணத்தில் கடமை உணர்வு

From மரபு விக்கி

Jump to: navigation, search

வாதூலன்



கடமைதான் முக்கியம் என்பது, களத்தில் போர் புரியும் வீரர்களிலிருந்து கலிகால மக்கள் அனைவரும் அறிந்ததே. இத்தகைய கடமை உணர்வைக் கம்பர், அற்புதமாகச் சித்திரிக்கிறார். அதுவும் தர்ம சங்கடம் நேரும் தருணத்தில் எல்லாவற்றையும் பின்னால் தள்ளி, கடமை உணர்வுதான் முன் நிற்கும் என்கிறார்.


அயோத்தியா காண்டத்தில் வருகிற பாடல் பலரும் அறிந்த ஒன்று. தனயனை நோக்கி தசரதர், "இந்த அரசை ஏற்றுக் கொள்" என்று வேண்டும் போது, இராமர் மனநிலை எவ்விதம் இருந்தது?
"தாதை அப்பரிசு உரைசெய தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன் இகழ்ந்திலன், கடன் இதென்று ணர்ந்து
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
நீதி எற்கு என நினைந்து அப்பணி தலை நின்றான்." (கம்.1382)


தந்தை சொல்லைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றுதலே "கடமை" என்கிற உணர்வு தான் அவரை உந்தித் தள்ளுகிறது. இராமரிடம் காணப்பட்ட இன்னொரு தர்மம், "அபயம்" தருவது. இந்த இடத்தில் (யுத்த காண்டம்) இராமர் ஒரு பழைய நினைவை எழுப்புகிறார். இராவணனால் சீதை கவர்ந்து செல்லப்பட்டபோது, "நானே உனக்கு அரண் போல் காப்பேன்" என்று உறுதியளித்து, ஒற்றையாகப் போர் புரிகிறார். ஜடாயு பட்சியை வாளால் வெட்டிக் கொல்கிறான் இராவணன். அத்தகைய கொடியவனை விட்டு நீங்கி, தன்னிடம் சரண் புகுகிறான் வீடணன். குரு விசுவாமித்திரர் இட்ட ஆணைப்படி, பெண்களைக் கொல்வது தவறு என்ற மரபை மீறி, தாடகை என்ற அரக்கியைக் கொன்றதும் ஞாபகத்துக்கு வருகிறது.


மாருதியின் யோசனையையும் ஆராய்ந்து, பிறர் இடைமறித்துப் பேசவிடாமல் ஒரு முடிவுக்கு வருகிறார்.  "ஆதலான் "அபயம்" என்ற பொழிததிதே, அபயதானம் ஈதலே கடப்பாடு என்பது, இயல்பினீர் என் பால்வைத்த
காதலான்; இனிவேறு எண்ணக் கடவது என்?, கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி' என்றான்." (கம்.6481)
இதை, "அவதரித்துச் செய்த ஆணைத் தொழில்களெல்லாம் ஆசிரத விரோதிகளை அழிப்பதற்கே" என்ற வைணவ உரை நினையத் தக்கது" என்று அ.ச.ஞா. குறிப்பிடுகிறார்.


இராமருக்கு, வாலியை வதம் செய்ய நேர்கையில், மிகப்பெரிய சங்கடம் ஏற்படுகிறது. சுக்ரீவனுக்கு முன்னரே "உன் பகைவர் என் பகைவர்" என்று வாக்குத் தந்துவிட்டான். வாலியை வீழ்த்தினால் தான் தாரமுடன் தலைமைப் பதவியையும் அவனுக்குத் தர இயலும். எனவே, "வில்லறம் துறந்து" மகா வீரனான, வாலியை வீழ்த்துகிறார். வாலியும், இராமரின் தன்மை அறிந்து சுக்ரீவனுக்கு அறிவுரை புகல்கிறான்.


இலக்குவனையும் கடமை உணர்வு இணைக்கிறது. தந்தை இட்ட கட்டளையை ஏற்று இராமர் வனத்துக்குச் செல்கிறார். கைகேயி கொடுத்தனுப்பியதாகப் பணிப் பெண்கள் மரவுரியைக் கொண்டு வந்தனர். அப்போது சுமத்திரை, இலக்குவனுக்கு ஆணையிடுகிறாள் .
"பின்னும் பகர்வாள், "மகனே! இவன் பின்செல்; தம்பி
என்னும்படி அன்று, அடியாரின் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்
முன்னம் முடி" என்றனள், வார்விழி சோர நின்றாள்." (கம்.1752)


"இளைய அரசகுமாரன் என்றோ, இராமனுக்குத் தம்பி என்றோ ஒரு நிமிடம் கூட எண்ணாதே. பணியாளரைப் போல் செல்!" என்று ஆணையிடுகிறாள். இளையவனும், சித்திரக் கூடத்தில், இராமர் தங்க ஒரு பர்ண சாலை அமைத்துத் தருகிறான்.
"என்று கற்றனை நீ இது போல்?" என்றான்
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்." (கம்.2096)
என்று இராமர் வியந்ததாகப் பாடல் ஒன்று வருகிறது.


இந்த நவயுக நூற்றாண்டில், எல்லோர் வாழ்க்கையிலும் பல தர்மசங்கடங்கள் ஏற்படுகின்றன. இதே போல இராமாயணத்தில் முக்கிய நாயகர்களுக்கும் எழுகிறது; மேகம் போல சூழ்கின்ற சஞ்சலத்தை, "கடமை உணர்வு" தெளிவுபடுத்திப் போக்குகிறது!


நன்றி:- தினமணி

Contributors

Ksubashini

This page was last modified on 27 January 2010, at 17:32. This page has been accessed 3,142 times.