ஆகமீயமும் தொல்காப்பியமும்-1
முனைவர் கி. லோகநாதன் 3-3-13
அறிமுகம்
தொல்காப்பிய மரபு சுமேருத் தமிழ் காலந்தொடங்கி வருகின்ற மிகப் பழைய ஓர் மரபு என்பதொடு, மிகச் சிறப்பான ஓர் மரபும் ஆகும். மூன்று அதிகாரங்களாக பகுக்கப்பட்டுள்ள தொல்காப்பியத்தில் முதன்மையானது பொருளதிகாரமே. இதனை ஒட்டியே சொல்லதிகாரமும் எழுத்ததிகாரமும் பிறந்திருக்கின்றன. பொருளை ஆயவே சொல்லாய்வும் எழுத்தாய்வும் இங்கு ஆகமீயம் எனப்படும் மக்கள் ஒழுக்கத் தெரிவி ( Theory of Human Behavior) தொல்காபியத்தில் வரும் திணையியலோடு தொடர்புடையது என்பதை விளக்கவே இக்கட்டுரை.
சுருக்கமாகக் காணும் போது வழக்கியல் செய்யுளியல் நாடகவியல் என்று கிளவியாக்கங்களும் உடன் வரும் மெய்ப்பாடுகளும் ஆகவே பொதுவாக எல்லா ஒழுக்கங்களும் அகம் புறம் என்று பிரிக்கப்படுவதொடு அவற்றை தொகுத்து ஏழு திணைகளுக்குள் அடக்கவும் செய்வர். இவற்றில் அன்பின் ஐந்தினையாக குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனப்படும் திணைகளாக வகுத்து, இவற்றிற்கு புறம்பாக ஒருதலை காமத்து கைக்கிளையும் ஒவ்வாக காமத்து பெருந்திணையும் கொள்வர். இவற்றிற்கு புறமாக எழுவனவே புறத்திணைகள் ஆகும் இதில் தனிப்பட்ட சிறப்பு என்ன வென்றால அன்பின் ஐந்திணைகளை அகமும் புறமுமாக ஆட்சி செய்வதாக முருகன் மாயோன் இந்திரன் வருணன் கொற்றவை போன்ற தெய்வங்களைக் கொள்ள கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் தெய்வங்கள் மேவுதல் இல்லை.
இதுவே மிகச் சிறப்பான ஓர் கருத்து. மொழியாலும் மனத்தாலும் உடம்பாலும் செய்யப்படும் எல்லா செயல்களும் அவை அன்பின் அடிப்படையில் இருக்க தெய்வங்களின் ஆட்சியால் நடைபெற அவற்றிற்கு புறம்பானவை தெய்வங்களின் ஆட்சி இல்லாது நடைபெறுவன என்று கருதப்படுகின்றது.
இந்தக் கோட்பாட்டின் விரிவே ஆகமீயம் எனும் தெரிவி ஆகும்.
ஆகமீயம் தோன்றிய கதை.
திராவிட மெய்யறிவு வரலாறு என்பதை நான் சுமேருத் தமிழ் இலக்கிய காலத்திலிருந்து தொடங்குகின்றேன். இங்கு எல்லா இலக்கியங்களையும் பார்க்க முதல் நூல்கள் என்றும் சார்பு நூற்கள் என்றும் இருவகையான இலக்கியங்களைக் காண்கின்றோம். மேற்கணக்கு நூற்கள் கீழ்கணக்கு நூற்கள் பத்தி இலக்கியங்கள் தலபுராணங்கள் தொண்டர் புராணங்கள் தெய்வ புராணங்கள போன்றவை முதல் நூற்கள். இவற்றைச் சார்ந்து பல்வேறு மெய்யறிவுத் தெளிவுகளை உள்ளடக்கியவையாக எழுந்தவை சார்பு நூற்கள். எல்லா தத்துவ நூற்களும் சார்பு நூற்கள் தான். காட்டாக மெய்கண்ட சாத்திரங்கள். வேதாந்த பிரம சூத்திரமும் வேதங்களையும் உபநிடதங்களையும் சார்ந்து எழுந்த சார்பு நூல் தான. அதேப் போன்றுதான் திருமாலிய ‘ஆசாரிய இருதயம்’ போன்ற கிரந்தங்கள், நாலாயிர திவ்விய பிரபந்தங்களைச் சார்ந்து எழுந்தவையாகும்/
இந்த இரண்டு வகை நூற்களும் தோற்றுவித்த அறிவின் ஓட்டங்களை அறிமானங்களை புரிந்த கொள்ள உருவாக்கப்பட்டதே ஆகமீயம் எனும் கோட்பாடு அல்லது தெரிவி யாகும்.
ஆகமீயம் எப்படி இதனை விளக்குகின்றது?
முதலில் அறிவின் பல்வேறு போக்குகளை நிறுத்துவனவாக பல்வேறு எந்திரங்கள் உள்ளதாக கொள்ளப்படுகின்றது, இந்த எந்திரங்கள அறிவினையும் உணர்வினையும் செலுத்தும் காரணத்தால் அவை மந்திரங்களால் ஆகியவை என்றும் கொளப்படுகின்றது. இவை அசித்துப் பொருட்கள் என, ஆக தானே இயங்காதன என்பதின் அவற்றை இயக்குவனவாக சித்துப் பொருட்களாக தெய்வங்கள் இருக்கின்றன என்று கொளப்படுகின்றது.
இங்கு தான் தொல்காப்பியத்தோடு தொடர்பும் வருகின்றது. எவ்வாறு ஐந்திணைகளை அகமும் புறமுமாக மேவி ஆட்சி செய்து பல்வேறு கிளவியாக்கங்களை ஒழுக்கங்களை தெய்வங்கள் நிறுத்துகின்றதோ அவ்வாறே, தெய்வங்கள் மூர்திகளாக நின்று மந்திரங்களை ஆட்சி செய்து பல எந்திரங்களை சேடித்து ஆன்மாவில் பதிய வைத்து பல்வேறு ஒழுக்கங்களை நிறுத்துகின்றன என்று கொளப்படுகின்றது. குறிப்பாக பல்வேறு மூல இலக்கியங்களை உருவாக்கும் அறிவின் செலவுகளையும் அவற்றை சார்ந்து எழும் மெய்யறிவுச் சிந்தனைகளையும் இந்த தெய்வங்களே நிறுத்துகின்றன என்றும் முடிக்கப்படுகின்றது.
இனி எல்லா தெய்வ வடிவங்களும் மந்திர வடிவங்களே என அவற்றின் மூலமாக ஏகனாகிய பரம்பொருளே இருக்க, அந்த ஒரே தெய்வம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது எனினும் அது ஒன்றே, ஏகமே, அந்த ஏகப் பொருளே அநேக தெய்வங்களாகவும் தோன்றுகின்றது என்றும் கொளப்படுகின்றது. ஆக ஒன்றாகிய தேவனின் கருணையால் தான் பரந்துபட்ட இலக்கிய வகைகள் தோன்றுகின்றன, அவற்றை முதல் நூற்களாகக் கொண்டு மெய்யறிவுச் சிந்தனையின் மெய்ஞானப் பனுவல்கள் சார்பு நூற்களாக தோன்றுகின்றன என்று இவற்றின் தோற்றங்களின் புரிவு உண்டாகின்றது,
தொடரும்
ஆகமீயமும் தொல்காப்பியமும்-2
ஆகமீயமும் ஐரோப்பியச் சிந்தனைகளும்.
நான் ‘ஆகமீயம்’ ஓர் தெரிவி (Theory) எனும் போது அது ஐரோப்பிய அறிவியல் துறைகளைச் சார்ந்த ஓர் கருத்து என்பது தெளிவு. அப்படியென்றால் தமிழப் பாரம்பரியத்தில் இது இல்லையா? அப்படித்தான் தெரிகின்றது. ஆயினும் தொல்காப்பிய பொருளததிகாரத்தைக் காண, இந்த தெரிவியை ‘இலக்கணம் கூறுதல்’ என்றே கொண்டிருந்தார்கள் என்று படுகின்றது. ஐரோப்பிய தெரிவியும் தமிழ் ‘இலக்கணம் கூறலும்” ஒன்றா என்பதை அன்பர்களது விசாரணைக்கு விட்டு விடுகின்றேன். ஆயினும் நான் கூற வருவது தெரிவி என்ற கருத்து மிகப் பரவலாக ஐரோப்பிய அறிவியல் துறைகளில் இருந்தாலும் இதுவரை ‘ஆகமீயம்’ போன்ற மானிடகளின் மெய்யறிவுச் சிந்தனைகளின் வரலாற்றுப் போக்கினை தெளியவைத்து ஓர் புரிவினைக் கொண்டு வருவதாக யாதும் இல்லை என்றே எனக்குப் படுகின்றது.
இதனை சற்று விளக்கவது இந்த இரண்டாவது கட்டுரையின் நோக்காகும்.
இந்த முயற்சிக்கு வித்தாக இருந்தது Edmund Husserl என்ற ஜெர்மானிய யூத தத்துவப் பேராசிரியரே யாகும். Rene Descartes என்ற பரங்கி தத்துவ மேதையின் Meditations என்ற நூலினால் கவரப்பட்டு முறையான சிந்தனைகள் வழி மெய்ஞானம் விளையும் அனைவராலும் ஓம்பப்படும் பண்பையும் பெற்றிருக்கும் என்று கருதி மெய்யறிவு விசாரனையை ஓர் அறிவியல் துறையாக வடிக்க பலவாறு முயன்றார். இந்த முயற்சியில் வெளிப்பட்டதே Phenomenology எனும் இயலியம் ஆகும். உணர்வுகளை அலசி அலசி, அதற்கு இயல்பாக அல்லாதவற்றைப் பிரித்தெடுத்து ஒதுக்கி மிக சுத்தமான உணர்வினை தலைப்படுதலே மெய்யறிவு விசாரணையின் போக்காக இருக்கவேண்டும் அப்படி இருந்தால் அதுவும் ஓர் அறிவியல் துறையாக வெவ்வேறு சிந்தனையாளர்கள் தத்தம் போக்கில் சென்று முரண்படுவதைத் தவிர்த்து உண்மையைக் கண்டு உடன்பட முடியும் என்று கூறிச் சென்றார். ஆனால அவரும் உணர்வுகளின் மூலத்தில் தெய்வங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கத் தவறி விட்டார். மேலும் உணர்வின் ஒரு கூறாய் காலவுணர்வு இருப்பதற்கு தக்க விளக்கமும் கூறவில்லை. ஆக இந்த இயலிய இயக்கம் பல புதிய அணுகுமுறைகளோடு மாந்தர்களின் ஒழுக்கங்களை ஆயும் முறையியல்களைத் தந்தாலும், மெய்யறிவு வாழ்க்கையை தக்க முறையில் விளக்கத் தவறிவிட்டது என்றே கருதலாம்.
அடுத்து வருபவர் Husserl அவர்களின் மாணவராகிய Heidegger என்ற ஜெர்மானியப் பேராசிரியராகும். இவரே மானிடப் புரிவினை(understanding) மையப் பொருளாக்கி அது நுதிப்பு வாய்ப் பட்டது ஆகவே குறிப்புக்கால வயப்பட்டது என்றவோர் பேருண்மையை விளக்கி தமது நூற்களை எழுதினார். இவர் வழி தான் தொல்காப்பியர் கூறியது போல கால உணர்வு குறிப்புக் காலம் என்றும் அதன்வழி எழும் சுட்டுக்காலம் என்றும் ஆகும் என்று காலவுணர்விற்கு நல்லவோர் விளக்கத்தைத் தந்து உதவியுள்ளார். ஆயினும் ஆன்மா உண்டு இறைவன் உண்டு காலவுணர்வு கடந்த நிலையில் வீடுபேறு சம்பவிக்கும் என்றெல்லாம் கூறாது கூற முடியாது தடுமாறி தன் வாழ்வியல் ஆய்வினை பாதியிலேயே முடித்து விட்டார். ஆயினும் அவர் வளர்த்த நூலியல் அணுகு முறை ( Hermeneutics) தமிழச் சிந்தனை மரபோடு ஒத்து வருகின்றது. தொல்காப்பியத்தில் இந்த நூனெறி மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
உளவியல் துறைகள்
மெய்யறிவுச் சிந்தனை என்பது ஓர் வகையான ஒழுக்கந் தான் செயல் தான. மானிடச் செயல்களை விளக்க பல தெரிவிகளை ஐரோப்பியர்கள் முன் மொழிந்தும் வளர்த்தும் சென்றுள்ளனர். அவை இன்று உலகெல்லாம் பரவி கிடக்கின்றன. அவற்றில் மிகப் பரவலானது Behaviorism எனப்படும் அணுகு முறையாகும். B.F Skinner , Pavlov போன்றோரால் வளர்க்கப் பட்ட ஓர் பெரும் துறையாகும். ‘தூண்டி-துளக்கம பந்தம்” (stimulus response conditioning) என்ற முறையில் மானிட ஒழுக்கங்கள் அகத்தும் புறத்தும் எழும் பல வகையான தூண்டல்களாக எழ அவற்றில் யாது வேண்டிய பயனை விளவிக்கின்றதோ அது அந்த உயிரின் பழக்கத்தில் ஒன்றாகக் கட்டப்படும் இல்லையேல் அழிக்கப்ப்டும் என்று கூறி மானிட ஒழுக்கங்களை விளக்கப் புகுவர். ஆயினும் எல்லா ஒழுக்கங்களையும் இவ்வாறு விளக்க முடியுமா? என்ற கேள்வி எழ, முடியாது என்றே பல அறிஞர்கள் கூறி இந்தக் கோட்பாட்டைக் கண்டித்துள்ளனர். குறிப்பாக Noam Chomsky என்பார் மானிட மொழித் திறனை அலசி அது படைப்பாற்றல் மிக்கது, எல்லையற்ற முறையில் புதியப் புதிய கிளவிகளை ஆக்கும் திறத்தை இவ்வாறு தூண்டில் துளக்க பந்தம் வழி விளக்க முடியாது என்று நயம்பட விளக்கி இந்த அணுகுமுறையின் குறைகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
மொழித்திறனை விளக்க முடியாத Behaviorism, மெய்யறிவு விசாரணைகளின் போக்குகளை விளக்க முடியாது. ஆகவே இந்த கோட்பாடும் நமக்கு உதவாது.
அந்தரகரண உளவியல்
இது மிகவும் பரந்து விரிந்து கிடக்கும் ஓர் பெருந்துறையாகும். சைவ பாரம்பரியத்தில் மனம் புத்தி ஆங்கராம சித்தம் என்படும் அந்தகரணங்களின் தொழிற்பாட்டை ஊகித்தறிவது சிந்தித்துத் தெளிவது யோகப் பயிற்சிகளால் அறிவது என்றில்லாது செயல்முறை ஆய்வுகள் பல நடத்தி பார்த்தல் காணல் நினைத்தல் மறத்தல் மீக்கூர்தல் கற்பனித்தல் எண்ணல் சிந்தித்தல் உன்னல் என்பன போன்ற அந்தகரணங்களின் செயல்பாட்டினை நுணித்தறிவதே இத் துறையின் போக்கு. இங்கு மெய்கண்டார் கூறுவதுபோல, அந்தகரணம் அவற்றில் ஒன்று அன்று ஆன்மா அவற்றை சந்தித்தது என்று விளக்கி ஆன்மா என்றோர் சித்துப் பொருளே இந்த அந்தகரணங்களை கருவியாகக் கொண்டு செயல்படுகின்றது என்று இந்த மேலை நநட்டினர் கூறுவது இல்லை. ஆன்மா உண்டு என்று அவர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. இவ்வாறிருக்கையில் இந்தத் துறையின் மூலம் மானிடர்களின் மெய்யறிவுச் சிந்தனையின் போக்கினை ஆன்ம வினைகளை விளக்க முடியாது என்பதின் இந்தக் குறையில்லா ஆகமீயம் நமக்குத் தேவைப்படும் ஒன்றாகின்றது
ஆழ்வுள ஆய்வுத் துறைகள் (Depth Psychology)
Sigmund Freud எனும் அறிஞரைப் பற்Ri அறியாதவர் யாரும் இருக்க முடியாது, மனோமருத்துவத் துறையை உருவாக்கி பெரும் புகழ் பெற்றவர். இவரது கனவுகளைப் பற்றியக் கோட்பாடு புகழ்பெற்ற ஒன்று எனினும் தவறான ஒன்றும் ஆகும். உணர்வினை புறவுணர்வு புதையுணர்வு(Unconscious) என்று பிரித்து, இந்த புதையுணர்வுதான் மனோவியாதிகட்கு காரணமாக இருக்கின்றது, வியாதியாளனுடன் உரையாடி உரையாடி புதையுண்டு கிடப்பதை வெளிப்படுத்தி தெரியவைத்து புதைவினை நீக்கிவிட்டால் மனநோயும் இல்லாதுபோகும் என்று கூறி தனது மனோமருத்துவத்தை நிறுவினார். இத்துறை இன்றும் பயினும் ஒன்றாகும். புறவுணர்வு புதையுணர்வாக மாறுவது பொல்லாத காமஞ் சான்ற அல்லது நமது தொல்காப்பியரின் பெருந்திணை சான்ற ஒவ்வாக் காமத்தினால் ஏற்படும் முரண்பாடுகள் அகப்போராட்டங்கள் தாம் காரணம் என்கின்றார். Incest எனப்படும் தகாது காம உறவுகள் பல அகப் போராட்டங்களை உருவாக்க அவற்றிலிருந்து தப்பிக்க அவை புதைக்கப்பட்டு நினைவில் இல்லாது போக்கப்படுகின்றன. ஆனால் அவை அழியாது ஆழ்வுள்ளத்தில் கிடந்து பிறகு கனவுகளாக வெளிப்படுகின்றன என்றும் கூறிச் சென்றார்.
இவர் Metapsychology எனும் தெரிவீயில் நம் முப்பொருள் கொள்கைபோல் அதீத காம வேட்கையின் Id அதனை போற்றும் Ego என்றும், ஒவ்வாத காமவுணர்வுகளைக் கண்டிக்கும் தன்மையின் Super Ego என்றும் முப்பொருளும் கொள்வர். ஆனால் இது திருமூலர் போன்ற நம் ஞானிகள் பரிந்துரைத்த அநாதிப்பொருளாகிய பதியினைப் போல் பசு பபசம் அநாதி என்ற கோட்பாடு அல்ல. Freud அவர்களும் பதியாகிய இறைவன் இருக்கின்றான் என்ற கருத்தை ஏற்றுக் கொளவதில்லை.
அநாதிபொருள் ஆய்வு இல்லாத அதன் வழி முப்பொருள் உணமையை பரிந்துரைக்காத கோட்பாடு நமது ஆகமீயம் போல் ஆகாது என்று காண்க.
இனி அடுத்து நாம் கருதவேண்டியவர் Freud அவர்களின் சீடராக இருந்து பின் பிரிந்து சென்று பல புதுமைகளோடு கூடிய இன்னொரு ஆழ்வுள ஆய்வுத்துறையை உருவாக்கிய Carl G. Jung என்பாரே யாகும். பிராய்ட் அவர்களின் புதையுணர்வுக்கு மேற் சென்று ஆழ் கனவுகள் பழங்கால சமயங்கள் புராணங்கள போன்றவற்றை ஆய்ந்து ‘பரப் புதையுரு’ (Collective Unconscious) என்றவொன்று இருக்கின்றது அது புதைக்கப்பட்ட ஒன்றல்ல இயல்பாகவே இருப்பது அதிலிருந்து தெய்வங்கள் (archetypes) தோன்றுகின்றன, சமயங்கள் சமயஞ் சார்ந்த சடங்குகள் புராணங்கள ஆழ்க் கனவுகள் போன்றவற்றை நிருத்துகின்றன என்றெல்லாம் கூறுவர்.
இப்படிப்பட கருத்துகளும் இன்னும் பலவும் நமக்குப் பெரிதும் உதவுவன, ஆனால சில சிக்கலகளும் உண்டு. ‘ தெய்வங்கள் பரப்புதையுருவிலிருந்து தோன்றுகின்றன எனும் போது அது இறைவன இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. இவை நமது மூர்த்திகள் அவதாரங்கள் தாம் எனில் அவை பரம்பொருளாகிய இறைவன் தோற்றுவிக்கின்ற எடுக்கின்ற பல மந்திரவடிவங்களேயாகும். ஆயினும் Jung அவர்கலள் மந்திராயணத்தை முன்மொழியவில்லை என்பதொடு அநாதிப் பொருள் ஆய்வினை மேற்கொண்டு பதியினைப் போல் பசு பாசம் அநாதிப் பொருட்களே என்று நிறுத்தவில்லை,
ஆக இந்த குறைகள் இல்லாத ஆகமீயம் நமது சிந்தையில் எழுந்த ஓர் புதுமை என்றே கொண்டு அதன் வழி மெய்யறிவு வரலாற்றை புரிந்துகொள்ள முயல்வோம்.
தொடரும்
ஆகமீயமும் தொல்காப்பியமும் (முற்றும்)
சமயச் சார்புடையவர்கள் மெய்யறிவு வரலாற்றின் பல போக்குகளை விளக்க முற்படும்போது, அவர் சார்ந்த சமயம் மெய்யறிவு மரபு போன்றவை அவர் சிந்தனையைத் தாக்கி ஓர் பிறழ்ச்சியை உண்டு பண்ண அவர் கருத்துக்கள் திரிபற்ற உண்மைகள் அல்லாதுபோக இடமுண்டு. ஆனால ஆகமீயக் கண்கொண்டு பார்க்கும்போது, இந்த ஒருதலைச் சார்பு மதிப்புகட்கு இடம் இருக்காது என்றே தோன்றுகின்றது. சமயாதீத கண்ணின்றி ஆகமீயக் கண் வாராது என்பதால் இது. அதனை விளக்குவது இந்த மூன்றாவது கட்டுரையின் நோக்கமாகும்.
ஆகமீயமும் சமயாதீதமும்.
தொல்காப்பியத்தில் சமயாதீதம்
‘சமயாதீதம்’ ‘மதாதீதம்’ போன்ற சொல்லாட்சிகள் தாயுமானவரின் பாடல்களில் உண்டு, அதற்கு முன்பும் இந்த சொற்களின் பயிற்சி தமிழ் இலக்கியங்களில் இல்லாமல் போயிருக்கலாம். எனினும் இக்கருத்து மிகப் பழமையானது. சூக்குமமாக இருந்து தூலமாகி பின் தாயுமானவர் போன்றோர் வாக்குகளில் சொல்லாகிற்று எனலாம.
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் எல்லா ஒழுக்கங்களையும் ஏழு திணைகளுக்குள் அடக்கி அங்கே நடுவன் ஐந்திணைகளுக்கு வெவ்வேறு தெய்வங்களின் ஆட்சியைக் கொண்டு வந்து அந்த ஒழுக்கங்களை விளக்கப் புகுகையில், ஒருவகையான சமாயாதீதம் வெளிப்படுகின்றது, பிற்காலத்தில் குறிப்பாக பக்தி காலத்தில் அனைத்தையும் சிவபெருமானுக்கோ அல்லது திருமாலிற்கோ உரிததாக ஆக்கி ஓர் சமயஞ் சார்ந்த விளக்கம் வெளிப்படுவது போல் இங்கில்லை. சைவம் வைணவம் வேதீயம் என்பனபோன்ற சமயச் சார்புகள் யாதுமில்லாது ஆனால அதே சமயம் தெய்வங்களையும் ஒதுக்காது விளக்கம் தரப்படுகின்றது. ஆக சமயாதீதத்தின் தோற்றத்தை இங்கு காண்பதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன்.
திருக்குறளில் சமயாதீதம்
இதேப் போன்றுதான் திருக்குறளிலும் ஓர் தெய்வத்தைச் சார்ந்த சமயச் சிந்தனை இல்லாது இறைவன ஒருவனையே முன்மொழிந்து மிக விரிவாக நயவிசாரணை அதாவது நல்லது எது தீயது எது என்று திறன்பட விசாரித்து செல்லும் போக்கால், திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சேர்ந்தவர் அல்ல மாறாக சமயாதீதம் காட்டியவர் என்றே எனக்குப் படுகின்றது. எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணபது அறிவு எனும் போது சமயங்களையும் அவற்றை நிறுத்தும் சுருதிகளையும் சமயத் தலைவர்களையும் உண்மையை நிறுத்தும் ஆதாரங்களாகக் கொள்ளாது தீர சிந்தித்துத் தெளிய வேண்டும் மெய்ப்பொருளைக் காணவேண்டும் எனும்போது சமயாதீதமே வெளிப்படுகின்றது என்று நினைக்கின்றேன்
மணிமேகலை நீலகேசி
சமயாதீதத்தின் ஒருபோக்கு ஒருதலை சார்பாக இல்லாது எல்லா சமயங்களையும் விசாரித்து பிறகு அவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து உண்மை எது பொய் எது என்று தேர்ந்து முடிவில் உண்மையையேக் கொண்டு மகிழ்வது தான். சமயச் சார்பு சிந்தையர் இவ்வாறு செய்யாது தனது மதத்திற்கு வேறாக பிறிதாக இருக்கின்ற சமயங்கள் பொய்யானவை என்று முற்கூட்டியே முடித்து அதனை பலவாறு வற்புறுத்தி வெற்றி காணவும் முயல்வர். இப்படிப்பட்ட போக்கு இந்திய பாரம்பரியத்தில் அவ்வளவாக இல்லை. எல்லா சமயவாதிகளின் கருத்துகளையும் கேட்டு பட்டி மன்றம் நடத்தி விவாதித்து மெய் இதுதான் என்று முடித்துத் தெளிவதே நமது பாரம்பரியம். இதனை தமிழ் மெய்யறிவுப் பனுவல்களில் நன்றாக காண்கின்றோம்.
இதற்கு நல்லச் சான்றாக இருப்பது புத்தநூலாகிய மணிமேகலையாகும். அங்கு சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதையில், புத்த சமயங்களை மாத்திரம் விசாரியாது அளவைவாதி சைவவாதி பிரமவாதி வைணவவாதி வேதவாதி ஆசீவகவாதி நிகண்டவாதி சாங்கியவாதி வைசேடிகவாதி பூதவாதி ஆகிய சமயக் கணக்கர்களின் கோட்பாடுகளை கேட்கின்றாள் சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை. ஆயினும் அவற்றை தீரவிசாரியாது, நல்லது அல்ல என்று மிகச் சுறுக்கமாக முடித்து தர்மங்கேட்ட காதையில் தமது புத்த சமயக் கோட்பாட்டை விளக்குகின்றார். இங்கு ஏன் இவ்வாறு பல சமயங்கள் என்பதற்கு விளக்கம் இல்லாது போக இந்தப் போக்கு நன்றாக வளர்ந்துவிட்ட சமயாதீதப் போக்கு என்று கூற முடியாது.
இதேப் போன்ற ஓர் போக்கைத் தான் சமண நூலாகிய நீலகேசியிலும் காண்கின்றோம். ஆயினும் இந்நூலில் கண்டணம் அல்லது நிராகரணம் மிக விரிவாக இருக்கின்றது, எடுத்தியம்பி மறுக்கப்பட்ட சமயங்களாக புத்தவாதம், ஆசீவக வாதம், சாங்கியவாதம் வைசேடிக வாதம் வேதவாதம் என்பவற்றோடு கடைசியாக பூதவாதத்தையும் அடக்கி நூல் முடிகின்றது,
சிவஞான சித்தியார், சங்கற்ப நிராகரணம்
இந்த பாரம்பரியத்தில் வந்த பெரும் சைவ நூற்களே அருணந்தியாரின் சிவஞான சித்தியாரும் உமாபதியின் சங்கற்ப நிராகரணமும். நீலகேசியினைப் போலவே அன்று விளங்கிய எல்லா சமயங்களும் முதலில் விளக்கப்ப்ட்டு பிறகு கண்டிக்கப்படுகின்றன. இதில் சித்தியாரில் ஓர் ஒழுங்கு அதிகார முறைமை இருக்கின்றது- உலகாயதம் தொடங்கி படிப்படியாக புத்தம் என்றும் சமணம் என்றும் வளர்ந்து புறப்புறச் சமயங்கள் புறச் சமயங்கள் அகப்புறச் சமயங்கள் அகச்சமயங்கள என்றவாறு வளர்கின்றது, மேலும் பக்கச் சிந்தனையின் ஒவ்வாத சமயங்களை பரபக்கமாக்கி ஒவ்வுகின்ற மறுக்க முடியாத கண்டிக்க முடியாத சமயத்தை இதன் வழி கண்டு சுபக்கமாக நிறுத்துவதுவாகும். இதில் சுபக்கமாக நிறுத்துப்படுவது முப்பொருளுண்மையை அநாதிபொருளாகக் கொண்டுள்ள சைவ சித்தாந்தமே யாகும்.
அருணந்தியார் உமாபதியார் போன்ற சைவர்களின் கூற்றுப்படி சைவ சித்தாந்தம் எவ்வாறும் கண்டிக்கப்டமுடியாத குறையில்லாத சுபக்கமாகவே திகழும் நல்லவோர் கோட்பாடு என்றே முடிக்கின்றார்கள்
சிவப்பிரகாச பெருந்திரட்டு
இது அழியும் நிலையில் இருக்கின்ற 16ஆம் நூற்றாண்டில் எழுந்த ஓர் மாபெரும் தத்துவ நூலாகும். மலாயாப் பலகலையில் ஓர் பிரதி கிடைக்க அதனை ஆதாரமாகக் கொண்டு இப்பகுதி எழுதப்படுகின்றது,
மேலே விளக்கப்பட்ட பெருநூற்களின் பாரம்பரியத்தில் வந்த தமிழச் சிந்தனையில் ஓர் பெரும் புரட்சியைச் செய்த மாபெரும் நூலாகும் இது. சமயங் கடந்த ஆகமீயச் சிந்தனைக்கு மிக நெருங்கி வருவது,
இதன் ஆசிரியர் சிவப்பிரகாசர் அன்று விளங்கிய தமிழச் சிந்தனை மரபுகள் அனைத்தையும் தொகுத்து ஓர் மாபெரும் விருட்சமாகக் கொண்டு ஒவ்வொரு சிந்தனைப் போக்கையும் ஓர் கிளையாகக் கொண்டு நூற்றுக்கணக்கான இந்த பரந்த விரிந்த சிந்தனை மரபுகளையெல்லாம் 26 கிளைகளாக அடக்குகின்றார். சமயப்பணை எனும் ஓர் கிளையில் மாத்திரம் 32 சமயங்களைத் தொகுத்து ஒவ்வொன்றையும் விளக்கி பிறகு கண்டனமும் தருகின்றார். இங்கு சாதிசங்கற்பம் அர்ச்சனா சங்கற்பம் சாத்திரம சங்கற்பம் பிரமாண சங்கற்பம தீர்த்த சங்கற்பம் என்றெல்லாம் பல சமயங்களையும் தொகுத்துரைத்து மறுப்பையும் தருகின்றார்.
இதில் ஒரு குறை: ஏன் சிந்தனைகளின் போக்கினை ஓர் விருட்சமாகவும் ஒவ்வொறு சிந்தனை மரபினை ஓர் கிளையாகவும் கொள்ள வேண்டும்? இவ்வாறுதான் சிந்தனைகள் தாமே வளர்கின்றனவா அல்லது இவற்றை இவ்வாறு தொகுத்து வகுப்பது ஓர் ஞானியின் பெருமுயற்சியா?
ஓர் நல்லாசிரியர் அனைத்துச் சிந்தனைகளையும் ஒழுங்குபடுத்தி புரிந்துகொள்ளும் வகையாக இப்படிப்பட்ட ஓர் தொகுப்பு-வகுப்பு முறை உருவாக்கப்பட்டது என்றேப் படுகின்றது. இங்கே தான் இந்த குறையை ஆகமீயம் போக்கும் என்று நினைக்கின்றேன். சமாயாதீதப் போக்கில் வலுவாகவும் வழாதும் நின்று எல்லா சமயங்களையும் சிந்தனைபோக்குகளையும் பரம்பொருளின் பல்வேறு மூர்த்திகளின் தந்திரங்களாக மந்திரங்களால் வடிக்கப்பட்ட எந்திரங்களின் ஆட்சியால் எழுவன, ஓர் மாபெரும் மரத்தின் கிளைகள் போன்று ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி வளர்ந்து அறிவில் எவ்வித அறியாமையும் இல்லாவகை சுடர்ந்து நின்று வியக்க வைக்கின்றது என்று கொள்ளலாம். இது ஒரு வகையயன இறைவனது விசுவரூபம். இதன்வழி எல்லா ஆன்மாக்களையும் இறைவன் வீடுபேற்றிற்கு இட்டுச் செல்கின்றான் என்றும் தெளியலாம்
முடிபுரை:
பண்டையத் தமிழர்களின் தொல்காப்பிய மரபு இன்னும் அழியாதே தமிழ் பண்பாட்டை வளர்த்து வருகின்றது என்றே படுகின்றது. புத்தம் சமணம் சைவம் வைணவம் என்றெல்லாம் பல சமயங்களை தமிழர்கள் வளர்த்தாலும் இடைகாலத்தில் பல போராட்டங்கள் வெடித்தாலும் மேலான ஞானிகள் சிந்தையில் இந்த சமயாதீதப் போக்கு மிக சிறப்பாகச் சுடர்ந்து கொண்டு மக்களிடையே அமைதி நிலவுமாறும் செய்திருக்கின்றது. இந்தப் போக்கினை தொடர்ந்து வளர்ப்பதாக ஆகமீயம் இருக்கின்றது என்றே நினைக்கின்றேன்
முற்றும்