வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அரவணைப் பாயசம்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 அரவணைப் பாயசம்


ஐயப்பன் பூஜைக்கு அரவணைப் பாயசம் செய்யறது உண்டு.  இதற்குத்


தேவையான பொருட்கள்:

நல்ல பச்சரிசியாக ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம். நெய் அரைகிலோவில் இருந்து ஒரு கிலோ வரையிலும் தாராளமாய்த் தேவை. வெல்லம் ஒரு கிலோ. தேங்காய் ஒன்று. உடைத்துப் பல்லுப் பல்லாகக் கீறிக்கொள்ளவும். ஏலக்காய்ப் பொடி. 


வெண்கலப் பானை அல்லது திருச்சூர் உருளியில் அரிசியை நன்கு கழுவிக் களைந்து கொண்டு சாதமாகக் குழைத்துக் கொள்ளவும். ஒரு கிலோ நெய்யில் அரைகிலோ நெய்யை அந்தச் சாதத்தில் விட்டு நன்கு மசிக்கவும். தனியே எடுத்து வைக்கவும். அதே உருளியில் ஒருகிலோ வெல்லத்தைத் தூள் செய்து போட்டு நீர் சேர்த்துப் பாகு வைக்கவும். பாகு நன்கு காய்ந்து வரும்போது நெய்யில் கலந்த சாதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். நன்கு கிளறவும். வெல்லப் பாகும் சாதமும் சேர்ந்து வந்து கொதித்ததும், வெல்ல வாசனை போய்விட்டதா என உறுதி செய்து கொண்டு அடுப்பை அணைக்கவும். மிச்சம் நெய்யை ஒரு கடாயில் ஊற்றித் தேங்காய்க் கீறி வைத்திருப்பதை நெய்யில் வறுத்துக் கொட்டவும். ஏலப் பொடி சேர்க்கவும். இதற்கு முந்திரிப் பருப்புப் போட வேண்டாம்.


சூடாகவும் சாப்பிடலாம். ஆறினாலும் சாப்பிடலாம். நன்றாக இருக்கும். குறைந்தது ஆறு மாதங்களுக்கு வீணாகாது.



கடலைப்பருப்பு, ஜவ்வரிசி வெல்லப் பாயசம்:


தேவையான பொருட்கள் : 50 கிராம் கடலைப்பருப்பு.  50 கிராம் ஜவ்வரிசி, வெல்லம் 200 கிராம், தேங்காய்ப் பால் ஒரு கிண்ணம், ஏலக்காய்ப் பொடி சிறிது. முந்திரிப்பருப்பு, திராக்ஷைப் பழம் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.  நெய் 50 கிராம்


கடலைப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் களைந்து கொண்டு வேக வைக்கவும்.  ஜவ்வரிசியையும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொண்டு நீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். தேங்காய் மூடியைத் துருவிக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துப் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.  வெல்லத்தைத் தூளாக்கவும்.  வேக வைத்த கடலைப்பருப்பு, ஜவ்வரிசியைக் கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கொள்ளவும்.  வெல்லம் சேர்க்கவும்.  வெல்ல வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.  தேங்காய்ப் பாலைக் கொஞ்சம்கொஞ்சமாகச் சேர்க்கவும்.  தேங்காய்ப் பாலைச் சேர்த்ததும் அதிக நேரம் கொதிக்க வேண்டாம்.  கீழே இறக்கி ஏலப்பொடி சேர்த்துக் கொண்டு நெய்யில் முந்திரிப் பருப்பு, திராக்ஷையை வறுத்துச் சேர்க்கவும்.  சூடான, சுவையான பாயசம் கொஞ்சம் வித்தியாசமாகத் தயார்.



--Geetha Sambasivam 11:34, 9 ஜூலை 2012 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 9 July 2012, at 11:34. This page has been accessed 1,805 times.