அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 26.2From மரபு விக்கிஇன்னம்பூரான்
திண்ணைப்பள்ளியில் துவங்கி, ஒன்பது வயதிலிருந்து பத்து வருடங்கள் சம்ஸ்க்ருத பாடசாலையில் காவியம், அலங்காரம், வேதாந்தம், ஸ்ம்ருதி, ந்யாயம், ஜ்யோதிஷம் ஆகிய சாத்திரங்கள் பலவற்றை, ஆழ்ந்த கவனத்துடனும், அடக்கத்துடனும், கண்ணியத்துடனும், ஆசிரியர்களுக்கு பணிந்தும், கற்றுணர்ந்த இந்த சான்றோனின் ஜன்மதினம் ஸெப்டம்பர் 26, 1820. நடை,உடை, பாவனைகளை நோக்கினால் கிராமத்து ஏழை புரோகிதன் மாதிரி எளிய உடை. இவருடன் பழக, தேடி வருபவர், மாகாணத்தின் முதல் கவர்னர் ஸர் ஃப்ரெட்ரிக் ஹாலிடே.
கல்விக்கடல் என திகழ்ந்த இந்த புருஷோத்தமர் பல மொழிகளை கற்று தேர்ந்து, உலகின் பற்பல துறைகளின் அறிவியல்/ஆன்மிகம்/தொன்மை/கூடி வரும் புதிய தகவல்கள்,ஆய்வுகள், விமர்சனங்கள் யாவற்றையும் முனைந்து அறிந்து, பகிர்ந்து கொண்ட அறிஞர், தத்துவ ஞானி, புலவர்,குலபதி, எழுத்தாளர், எழுத்துத் திருத்தம் செய்த ஆய்வாளர், மொழி பெயர்ப்பாளர், பிரசுரகர்த்தா, சீர்திருத்த வாதியும், கொடை வள்ளலும் ஆவார். 20 வயதிற்க்குள் குவிந்த பரிசுகளும், வழக்கறிஞராக தேர்வு பெற்றதும், 21 வயதில், ஐ.சி.எஸ். அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் காலேஜில் முதன்மை பண்டிதர். 30 வயதில் அவருடைய பாடசாலையின் முதல்வர் பதவி. 35 வயதில் நான்கு ஜில்லாக்களில் கல்வி மேலாளர் பொறுப்பும் சேர்ந்து கொண்டது, இந்த நிறை குடத்திற்கு.
சாதனை வீரர்: ஆசிய மன்றம் போன்ற பல மன்றங்களில் பொறுப்பு ஏற்று இருந்ததால், அவருடைய பணியும் விஸ்தாரமாக அமைந்தது. அவரது ஒளி எங்கும் வீசியது. 1+ 1 =2 என்றில்லாமல், 1+1 = 3+ என்றல்லவோ இவரது தொண்டுகள் அமைந்தன. என்ன வேகம்! கல்வி மேலாளரான உடனே மின்னல் வேகத்தில் தணிக்கை செய்து, ஊழல்களை களைந்து, பெண்களுக்காக 20 பள்ளிகளை இரண்டே மாதங்களில் துவக்கினார். சொன்னால் வாய் வெந்து போகாது. அக்காலம் ஹிந்து சமயத்தின் பேரில் அட்டூழியங்கள் பல நடந்தன. பெண்களுக்கு ஓர வஞ்சகம். படிக்க வைக்க மாட்டார்கள்;சொத்தை பிடுங்குவார்கள்; பட்டினி போடுவார்கள்; இவர் பிறந்த குலின பிராமண ஜாதியில் பல தாரங்களை, அதுவும் சிறுமிகளை கிழங்கள் மணம் புரிவதும், இளம்விதவைகளை துன்புறுத்துவது,பட்டினி போடுவது, அடிமையாக நடத்துவது, பாலியல் கொடுமைகள், வாரணாசிக்கும், பிருந்தாவனுக்கும் விரட்டி அடிப்பது போன்ற கொடுமைகள் பரவியிருந்தன. விதவாவிவாஹத்தை சட்டரீதியாக செய்த 1856 வருட சட்டமும், பல தாரமணத்தையும், குழந்தைகள் விவாஹத்தையும் தடை செய்த 1872 வருட சட்டமும், சமுதாயத்திற்கு, இவருடைய உபயம். சனாதனம் இந்த இழிச்செயல்களை ஆதரிக்கவில்லை என்று திட்டவட்டமாக, ஆதாரங்களுடம், கூறினார். விழிப்புணச்சியின் பிதாமகன் இவர் தான் என்க. வீடு வீடாய் சென்றல்லவா பெண்மையின் பெருமையை உணர்த்தினார். இவற்றிற்காக, தன் மாத சம்பளத்திலிருந்து செலவழித்த வள்ளல், இவர்.
ஆங்கிலமும், தாய் மொழியும், சம்ஸ்கிருதமும் படிக்கவேண்டும் பள்ளியில் என்றார். எல்லா கலாச்சாரங்களையும் கற்க வேண்டும் என்றார். எங்கிருந்து வந்தாலும், மூட நம்பிக்கைகளை தவிர்க்கவேண்டும் என்றார். இவரை பற்றி நிறைய சுவையான நிகழ்வுகள் உண்டு. அவற்றில் சில:
சாகசங்கள்: பத்தாம்பசலிகளின் எதிர்ப்பு கடுமையாகி, இவரின் உயிருக்கு உலை வைத்த வேளையிலே, கல்கத்தாவின் 80 முறை கூட மணங்கள் புரிந்த கயவாளிகளின் பட்டியல் போட்டு அவர்களின் மானத்தை வாங்கினார். தன் பிள்ளைக்கே விதவா விவாஹம் நடத்திக்காட்டினார். கைக்காசு போட்டு சத்தமில்லாமல் பலருக்கு புனர்வாழ்வு அளித்தார். சம்ஸ்கிருதக்கல்லூரியில் பிராமணரல்லாதாரை அனுமதித்தார். காலரா நோயாளிகளை காப்பற்றியது, அனாதைப்பிணங்களுக்கு ஈமச்சடங்குகள், ஹரிஜனங்களுடன் சமபந்தி, விதவைகளுக்கு நிதியுதவி, விதவாவிவாஹம் பற்றி இரு நூல்கள், பலதாரமணத்தை எதிர்த்து மூன்று நூல்கள்; தன் இறுதி நாட்களை, ஒரு பழங்குடி இனத்துடன் கழித்தார், தயா சாகர் என்றும் அழைக்கப்பட்ட, இந்த வித்யா சாகர். இன்றைக்கும் அவருடைய பெயரில் ஒரு விழா எடுக்கப்படுகிறது.
அமரர் ஈஷ்வரசந்திர வித்யாசாகரின் கீர்த்தி நமக்கு கவசமாகட்டும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:21, 27 செப்டெம்பர் 2011 (UTC) |