அன்றொரு நாள்: ஜூலை 11: 11 நிமிடங்கள்.மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
கஃபூர் என்னை தள்ளிவிட்டான்! அவனுடைய வாப்பா ஜனாப் மஜீத்கான் ‘நீயும் கறி சாப்பிடு ராஜூ. பலம் வரும்’ என்று சொல்லி சிரித்தார். நான் முறைத்தேன். வயது மூன்று இருக்கலாம். அதற்கு மேல் நினைவில்லை.
கண் கலங்க வந்த அப்பா, பிருத்வி ராஜ் கபூரின் ‘படோசி’ சினிமாவை பற்றி சொன்னார். மதகின் வெளிப்புறம் சாய்ந்த நிலையில் ஹிந்து-முஸ்லீம் அண்டை வீட்டுக்காரர்கள், சடலமாக. சூழ்ச்சி செய்தது ஆங்கிலேயன் என்று அப்பா சொன்னதாக நினைவு. அப்பா ஏன் கலங்கினார்? ஆப்த நண்பன் மஜீத்கானிடம் துக்கம் விஜாரித்து விட்டு வந்திருந்தார். வீட்டிற்குள் போகக்கூட அனுமதியில்லை. வைசூரியில் அவரது குழந்தைகள் மாண்டு போயினர். எந்த குழந்தை? நினைவில் இல்லை. கஃபூரை பிறகு பார்க்கவும் இல்லை. என்ன வாழ்க்கை இது?
தாயாதி சண்டை கொடிது என்பர். அண்ணன் - தம்பி அடிச்சுண்டா ஆகாயமே கவுந்துடும்டா என்பாள் அந்த நூத்துக்கிழவி. அந்த மாதிரி தான் இருக்கு, இந்த இந்தோ-பாகிஸ்தான் உரைசல். தீவிர வாதம் என்ற சொல்லே தப்பு. தீவிரம் ஒரு வாதம் ஆகலாமோ? பயங்கரம் ஒரு வாதம் ஆகலாமோ? இரண்டுமே அநியாயம், அட்டூழியம், அதர்மம். அநாகரீகம், அசிங்கம். ஆபத்பாந்தவா! நீ தான் இந்த பூலோகத்தை ரக்ஷிக்கணும்.
ஐயா! ஹிந்துக்களுக்கு ‘ஓம்’ எப்படி தாரகமந்திரமோ, அதே மாதிரி ‘ரஹம்’ ஒரு இஸ்லாமிய தாரகமந்திரமையா. அதற்கு ‘கருணை’ என்று பொருள் ஐயா! மிகவும் இக்கட்டான நிலையில், பகையும், புகைச்சலும் பேயாட்டம் ஆடக்கூடிய வேளையில், ஒரு ஹிந்துவும், ஒரு இஸ்லாமியரும் ஆரத்தழுவிய நிகழ்வு ஒன்று உண்டு. தருணம் வரும்போது ( அதாவது, வந்தால்? ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும்?) சொல்கிறேன். திசை மாறவேண்டாம். பார்த்தீர்களா? எனக்குள்ளேயே நானே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்! அது போகட்டும்.
ஜூலை, 11, 2006: பதினோறு நிமிடங்களில்: 18 24/கார்; 18 24/பாந்த்ரா;18 25; ஜோகேஷ்வரி; 18 26: மாஹீம்: 18 9: மீரா ரோட்; 18 30: மாதுங்கா: 18 35: போரிவிலி => விரைந்தோடும் லோக்கல் ரயில்களில் ஐந்து குண்டுகள்; ஸ்டேஷன்களில் இரண்டு. 210 பயணிகள் கொலை.714 படுகாயம்.
குருதி வெள்ளப்படங்களை போட மனம் வரவில்லை. ரத்ததானம் வாங்கும் போது, இனமும், ஜாதியும், குலமும், கோத்திரமுமா கேட்கிறார்கள், இந்த மனித ஜந்துக்கள்? ஒரு மனித நேயப்படம் போதுமடா, சாமி!
இன்னம்பூரான் 11 07 2011
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:55, 11 ஜூலை 2011 (UTC)
|
