வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஏப்ரல் 10:

From மரபு விக்கி

Jump to: navigation, search

 

இன்னம்பூரான்


திரைகடலோடிய இந்தியா!


‘...ஏடன் நகரத்தில் கலோனிய ஆட்சி புரிந்தது, இந்திய அரசு என்பது ‘ஏடாகூடமான பேச்சாக’த் தோன்றினால்...! என்று அன்றொரு நாள்: ஜனவரி:19:ஏடாகூடம்! இழையில் கூறப்பட்டதின் தொடர்பாக, இன்று எத்தியோப்பியா (அபிசீனியா) போகப்போகிறோம். தொன்மையும், வளமும், இனம், மொழி, கலாச்சார வித்தியாசங்கள் (80 வகை தொகைகள்) நிறைந்த நன்னாடு. இயற்கை வளமும், கானகங்களும், மலையும், மடுவும், பழங்கால நாகரீகமும் நிறைந்த பூமி. தொன்று தொட்டு வரும் கிருத்துவ சமயத்தின் ஆளுமை. புராணங்களில் பேசப்படும் மஹாராணி ஷேபாவின் பிரதேசம்.

இந்தியாவின் மொகலாய சாம்ராஜ்யத்தின் இறுதி நாட்களில், தடியெடுத்தவன் எல்லாம் தாண்டவராயர்களான மாதிரி, எத்தியோப்பாவிலும் 1769 -1855 காலகட்டத்தில் மூலைக்கொரு மகராசா வந்து, ராஜ்யத்தைக் குலைத்து, நாட்டாண்மையும், கட்டைபஞ்சாயத்தும் செய்து கொண்டிருந்தனர். 1855ல் லிஜ் காசா ஹைலு ( அருமையான பெயர்!) என்பவர் தன்னை சக்ராதிபதி திவொட்டரோஸ் II (தியோடர்?) என்று முடி சூட்டிக்கொண்டு, வரிசையாக எதிரிகளை வீழ்த்தி, பகை தேடிக்கொண்டார். நல்ல மனிதர். சோம்பேறி பிரபுக்களை உதைத்து, ஏழை பாழைக்கு உதவினார். அடிமை வணிகத்தை ஒழிப்பதில் கணிசமான வெற்றி. பிரஜை விரும்பிய ராஜா. ராணுவத்தை துப்பாக்கி, தளவாடங்கள் வாங்கி, தடபுடல் செய்ய பார்த்தார் மாவீரன். எல்லாம் தெரியும், ராஜ தந்திரத்தைத் தவிர. போறாக்குறைக்கு ஆத்திரக்காரன். அதனாலே புத்தி மட்டு. அதான் சாக்கு என்று திரைகடலோடி, இந்தியா எத்தியோப்பியாவை தாக்கியது. நடந்த கதை கேளும்.


மஹராசாவுக்கு விளையாட்டுத்தோழர்கள், சிங்கங்கள்! மனுஷனுக்கு போறாத காலம். போயும்,போயும், ஆங்கிலேயனிடம் டெக்னிக்கல் உதவி நாடினார். சிவப்பு நாடா அவருக்கு மகத்தான உதவி செய்தும், மாட்டிக்கொண்டார். கர்மவினையோ? அவர் விக்டோரியா மஹாராணிக்கு துப்பாக்கி செய்யும் முறையஒ சொல்லிக்கொடுக்க ஆள் அனுப்பச்சொல்லி, கனிவுடன் கடிதம் எழுதி, அக்காலமே அங்கு தூதுராக குந்தியிருந்த கேப்டன் சார்லஸ் டங்கன் கேமரானிடம் கொடுத்து, நேரில் கொடுத்து வருக என்று ஆணையிட்டார். ஆனால், இங்கிலாந்தின் வெளியுறவு (உறவா) துறை, வீண் செலவு வேண்டாம், அனுப்பி வைய் என்றனர். அவரை சூடானுக்கு அனுப்பினர். திரும்பிய கேமரானை, சினம் கொண்டு, ஜெயிலில் போட்டார், நம்ம திவொட்டரோஸ் II. இங்கிலாந்தின் வெளியுறவு (உறவா) துறை கடிதத்தை ‘pending’ லெ போட்டு (இந்த ‘pending’ பற்றி நானூறு பக்கம் எழுதலாம், சுவை கூட்டி, கூட்டி!), ராணி கிட்ட அனுப்பாமல், ஒரு வருடம் வைத்திருந்து,’ மறந்துட்டோமே! அபிசீனியா இந்திய கலோனிய பிரிட்டீஷ் ராஜ் அடியில் அல்லவா வருகிறது’ என்று, அதை இந்தியா பக்கம் திருப்பி விட்டனர். ‘அப்பனுக்கு மேலெ பிள்ளை’ என்ற சொலவடைக்கொப்ப, மஹா கனம் பொருந்திய இந்திய கலோனிய அரசு அந்த கடிதத்தை ‘not even pending!’ என்று ஒதுக்கி விட்டது. இரு வருடங்கள் ஓடின. இருக்கற வெள்ளைக்காரன் எல்லாரையும் ஜெயிலில் போட்டு வதைத்தாரு, சக்ராதிபதி திவொட்டரோஸ் II.
மூன்று வருடங்கள் ஓடின. ராணியம்மா, ‘நம்ம ஆளுங்களை விட்டுடு’ என்ற மிரட்டல் கடிதத்தை. ஹோர்மஸ்ட் ரஸ்ஸம் என்பரின் தலைமையில் ஒரு படையுடன் அனுப்பி வைத்தாள், பெரிய ராஜதந்திரியை போல. எல்லாரையும் ஜெயிலில் போட்டுட்டாரு, சக்ராதிபதி திவொட்டரோஸ் II. இப்போ தான் ரோஷம் வந்தது, பிரிட்டீஷ் கலோனிய அரசுக்கு. ராபெர்ட் நேப்பியர் தலைமையில், இந்தியாவிலிருந்து, ஆங்கிலேயரும், இந்தியர்களும் 30 ஆயிரம் கொண்ட படை ஒன்று அபிசீனியா வந்து, உலக வழக்கத்திற்கு இணங்க, துரோகிகள், உதவியுடன், அரோக்யா என்ற இடத்தில், சக்ராதிபதி திவொட்டரோஸ் II யை தோற்கடித்தது. இன்றைய தினம். வருடம் 1868. நேப்பியர் கெளரவமாக நடத்துவேன் என்றார். ஆனால், அவரோ, தன்மானம் தலை தூக்க, தன்னை சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி ஏது? ரஸ்ஸம் மூலம் ராணியம்மா அனுப்பிய பிஸ்டல்! கர்மவினை எப்படியெல்லாம் இயங்குது, பாருங்கோ!
வாகை சூடிய படை காவற்காட்டை அழித்தது; கோட்டையை இடித்தது; ஊரை கொளுத்தியது: பழமை வாய்ந்த மாதாகோவில்களையிம் அழித்தது. அஃறிணை மீது பழி வாங்கும் கயவாளிக்கூட்டம். இன்றளவும் சக்ராதிபதி திவொட்டரோஸ் II எத்தியோப்பிய மக்களால் மதிக்கப்படுகிறார்.
இன்னம்பூரான்
10 04 2012
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/ST-Theodore.jpg/300px-ST-Theodore.jpg


உசாத்துணை:
http://en.wikipedia.org/wiki/Tewodros_II_of_Ethiopia
http://www.ethiopiantreasures.co.uk/pages/tewodros.htm






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:16, 17 ஏப்ரல் 2012 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 17 April 2012, at 03:16. This page has been accessed 1,844 times.