ஐக்கிய அமெரிக்காவின் 44வது அதிபராக நவம்பர் 4, 2008 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனவரி 20, 2009 இல் பதவி ஏற்ற முதல் அஃப்ரோ~அமெரிக்கன் ஆகிய பராக் ஹுசேய்ன் ஒபாமா அவர்களின் ஜன்ம தினம், ஆகஸ்ட் 4, 1961. சின்ன வயசு இல்லெ. நீடுழி வாழட்டும். அழகிய படித்த மனைவி, சமத்தா இரண்டு பெண்குட்டிகள். அமெரிக்கா என்றாலே புலன் பெயர்ந்தவர்கள், ஆனாலும், கலப்பு மணங்கள்! ஐயாவுக்கும் அப்டியே. தந்தை கென்யா நாட்டுக்காரர். தாய் கான்சாஸ் மாநிலத்துப் பெண். இவர் பிறந்தது ஹவாயில். வளர்த்தது, நடுத்தர வர்க்கத்தைச்சார்ந்த தாத்தா பாட்டி. முன்னுக்கு வந்தது ஷிகாகோவில். இனி சொல்லத்தேவையில்லை.
எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். இருந்தாலும், கொசுறு செய்திகள் சுவைக்கும். ஆங்கிலேய கலோனிய அணுகுமுறைக்கும் ஒபாமாவுக்கும் சம்பந்தம்! ஆம். கென்யாவின் லுவொ பழங்குடியினத்தை சார்ந்த இவருடைய தந்தை கலோனிய முறை பள்ளியில் படித்து, ஹார்வெட் வரை காலெடுத்து வைத்து, முனைவர் பட்டம் வாங்காமல், குடியும், பொண்டுகள் சகவாசமும் ஆக காலம் கழித்தவர், மனைவிகள் நான்கு. நைரோபியில் ஒரு மரத்தை தன் காரால் தாக்கி, அந்த விபத்தில், இறந்து போனவர்.
இந்த தேர்தல் சமயத்தில் நான் அமெரிக்காவிலிருந்தேன். ஊரோ பத்தாம் பசலி. பைபிள்-பெல்ட் என்பார்கள். எல்லாம் பழங்காலக்கொள்கைகள். அங்கு போய் இவர் பேரும், இவரது கட்சியான டெமாக்ரடிக் கட்சி எடுபடுமோ என்ற ஐயம். எதிர்க்கட்சி ரிபப்ளிகன் கட்சி. இரண்டுமே தமிழில் மொழி பெயர்த்தால் குடியரசு கட்சி! அந்த வம்புக்கு பிறகு வருகிறேன். அமெரிக்காவில் மக்கள் வெளிப்படையாக பேசுவார்கள். சுற்றி வளைக்கும் மாயாஜாலங்கள் குறைவு; தொலைக்காட்சியில் அப்படி இருந்தாலும் ஜாலி. வீட்டு வாசலில் தங்கள் ஆதரவை போர்டில் வைத்து (டிஜிட்டல் பேன்னர் எல்லாம் இல்லை!) தெரிவிப்பார்கள். காலாவட்டத்தில் இவருக்கு ஆதரவு கூடுவது தெரியவந்தது. தொலைக்காட்சிகளிலும், இவரின் மீட்டர் முன்னணியில். இருந்தும் டென்ஷன். முதலிலேயே, கட்சி உள்ளுக்குள்ளே இவருக்கும், சென்னை விஜயம் புகழ் அழகிய கிழவி ஹிலாரி க்ளிண்டனுக்கும் கடும்போட்டி. க்ளிண்டன் துரையும்,
தன்னால் இயன்றவரை ஒய்ஃபை கெலிக்க வைக்கப்பார்த்தார். ஒபாமாவா? கொக்கா? அவுக பாயில் புகுந்தால், இவரு கோலத்தில் புகுந்தார். கெலித்தார். க்ளிண்டனோர்களின் ஆதரவையும் சம்பாதித்தார். இந்த அனுபவம் கொடுத்த பாடங்களின் பயனாக, இவரும், கூட்டாளி பிடன் அவர்களும், எதிர்க்கட்சி மக்கெய்னையும், அலாஸ்கா ஆம்பளை பாப்பாத்தி சேரா பாலினையும் தோற்கடித்தார்கள்.
சர்ர்தான்! அது என்ன இரண்டு கட்சிக்கும் ‘குடியரசு கட்சி’ என்று ஒரே பெயர்? இந்த கேள்வியை கேட்டுவிட்டு, நான் பட்ட பாடு. சொல்லப்போனால், அப்ரஹாம் லிங்கன், ஐஸன்ஹோவர் போன்ற ரிபப்ளிகன் அதிபர்களுக்கு டெமாக்ரட்டிக் மனப்பான்மை! 1952 அல்லது 1953 என்று நினைக்கிறேன். நம்மூர் பெரிய மனிதர் ஸர்.சி.பி.ராமசாமி அய்யர், ஒரு அமெரிக்கன் திக்விஜயம் செய்து விட்டு, அதை பற்றி உரையாற்றினார். பேசிட்டுப்போகவேண்டியது தானே! சும்மாவாணும் ‘கேள்வி ஏதாவது?’ என்றவுடன் க்ளாஸ் மாதிரி கையை தூக்கிவிட்டேன். கேட்டாகணும் இப்போ!
நான்: ‘ரிபப்ளிகன்’, ‘டெமாக்ரட்டிக்’ கட்சிகளுக்குள் உண்மையான வித்தியாசம் என்ன?
ஸர்.சி.பி.ராமசாமி அய்யர்: ‘வினாதாரர் தினந்தோறும் நாளிதழ்களை படித்தால், அது புரியுமே.
(கோபம் அவருக்கு வரணும். ஆனா, எனக்கு வந்தது!)
நான்: ‘சார்! ( நெடிலை அரை மாத்திரை குறைத்து, குறிலை அரை மாத்திரை ஏற்றினால் ‘ஸர்’) என் கேள்வி வேறு. ஒருவர் யானை, மற்றவர் கழுதை என்பதை அறிவேன். நேற்று ‘ரிபப்ளிகன்’ சொன்னது இது. ‘டெமாக்ரட்டிக்’ சொன்னது இது. இரு கட்சிக்கும் என்ன வித்தியாசம் தெரிகிறது?
ஸர்.சி.பி.ராமசாமி அய்யர்: வினாதாரர் கேட்பதில் ஓரளவு நியாயம் இருக்கிறது. இருந்தாலும் ‘ரிபப்ளிகன்’ ரிபப்ளிகனே! ‘டெமாக்ரட்டிக்’ ெமாக்ரட்டிக்கே! புரிகிறதா?
நான்: இல்லை, சார்!
ஸர்.சி.பி.ராமசாமி அய்யர்: நான் கூட அதை தான் அங்கு சொன்னேன்!
இன்னம்பூரான்
04 07 2011
உசாத்துணை:
http://www.whitehouse.gov/administration/president-obama
http://www.biography.com/articles/barack-obama-12782369
Jacobs. SH (2011): THE OTHER BARACK: Public Affairs.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:48, 10 ஆகஸ்ட் 2011 (UTC)