தெய்வக் குழந்தை!
மே 19 - குமரகுருபரர் குருபூஜை!
திருச்செந்தூர் குமரப் பெருமான் அருளால், உலகிற்கு கிடைத்த புண்ணிய புருஷர் குமரகுருபரர்.
திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வசித்த சண்முக சிகாமணி கவிராயர் - சிவகாமி சுந்தரி தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. திருச்செந்தூர் சென்று, சஷ்டி விரதம் அனுஷ்டித்தனர்; அதன் பின், அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனை, முருகன் பெயரால், "குமரகுருபரன்' என அழைத்தனர். ஐந்து வயதாகியும் குழந்தை பேசாமல் இருந்தது கண்டு, பெற்றோர் கவலை அடைந்தனர். திருச்செந்தூர் சென்று, குழந்தை பேசும் வரை, அங்கேயே தங்கி, விரதமிருப்பது என உறுதி கொண்டனர்.
அங்கு தங்கியிருந்த காலத்தில், கரையில் மோதிய கடல் அலைகள், "ஓம்' என்ற நாதம் எழுப்புவதைக் கேட்டார் குமரகுருபரர். அவர்கள், நாற்பது நாட்களுக்கு மேலாக அங்கு தங்கி விட்டனர்; குழந்தை பேசுவதாக தெரியவில்லை. 45வது நாள், குழந்தையுடன் கோவிலுக்குள் நுழைந்தனர். கண்ணீர் அருவியாய் கொட்ட, "இன்னும் எத்தனை நாள் தான் எங்களை சோதிக்கப் போகிறாய்?' என்று முருகனிடம் முறையிட்டனர்.
அப்போது. குமரகுருபரர் வாய் திறந்து ஏதோ பேச முற்பட்டார்; பெற்றோர் கூர்ந்து கேட்டனர். தெளிவில்லாமல் ஏதோ சில சொற்கள் வெளிப்பட்டன. அடுத்த சில நொடிகளில், அந்த ஐந்து வயது பாலகன், கரியமேகம் மழை பொழிவது போல கவிமழை பொழிந்தார். "இதுவரை பேசாமல் இருந்த பிள்ளை, முருகப் பெருமானை புகழ்ந்து பாடுகிறாரே...' என, பெற்றவர்களும், மற்ற பக்தர்களும் ஆச்சரியப்பட்டனர். தேனினும் இனிய அந்த பாடல்களே, "கந்தர் கலிவெண்பா' ஆயிற்று; அதுவே, குமரகுருபரரின் முதல் நூல். இந்த நூலில், "சரவணபவ' என்ற மந்திரத்தின் மகிமை பற்றி, குமரகுருபரர் பாடியுள்ளார்.
பெற்றோர் மனம் மகிழ்ந்து, முருகனுக்கு நன்றி சொல்லி ஊர் திரும்பினர். ஆனால், பெற்றோருடன் அதிக நாட்கள் தங்கவில்லை குமரகுருபரர். அவர்களது ஆசி பெற்று, தல யாத்திரை புறப்பட்டார். மக்கள் அவரை, "குமரகுருபர சுவாமிகள்' என்று மரியாதையுடன் அழைத்தனர். அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அம்பாள் சன்னிதியில் நின்று, மடைதிறந்த வெள்ளம் போல் கவிதைகளை பொழிந்தார். அதுவே, "மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' ஆயிற்று. அப்போது, மதுரையை திருமலை நாயக்கர் ஆண்டு வந்தார். அவர், ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். புலவர்கள் எல்லாம் கூடியிருந்தனர். சிறுவனாய் இருந்த குமரகுருபரர், அருமையாக அம்பாளைப் பற்றி பாடினார். "தொடுக்கும் கடவுட் பழம்பாடல்...' என்ற பாடலை பாடும் போது, மன்னரின் மடியில் வந்து அமர்ந்த ஒரு சிறுமி, அவரது கழுத்தில் கிடந்த முத்து மாலையை எடுத்து, குமரகுருபரருக்கு அணிவித்து மறைந்தாள்; அவள், மீனாட்சி அம்மன் என்பது பின்னர் தெரிய வந்தது. திருமலைநாயக்கர் மகிழ்ச்சி அடைந்து, குமரகுருபரருக்கு பல பரிசுகளை அளித்தார்.
இதன்பிறகு, குமரகுருபரர் தருமபுரம் சென்று ஆதீன குருமூர்த்தி மாசிலாமணி தேசிகரிடம் தம்மை ஆட்கொள்ள வேண்டினார். காசி சென்று, தர்மப்பணி செய்து வருமாறு அவருக்கு கட்டளையிட்டார். அப்போது, காசியை ஆட்சி செய்த சுல்தானிடம், காசியில் சைவ மடம் நிறுவ அனுமதி பெறுவதற்காக அங்கு சென்றார் குமரகுருபரர். சுல்தானுக்கு இந்துஸ்தானி மொழி மட்டுமே தெரியும். எனவே, கலைவாணியை புகழும், "சகல கலாவல்லி மாலை' என்ற பாடலை பாடினார் குமரகுருபரர். அதைக்கேட்டு மகிழ்ந்த சரஸ்வதி, அவருக்கு பிறமொழி பேசும் ஆற்றலைக் கொடுத்தாள்.
அம்பாளின் அருளால், ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து, சுல்தானின் சபைக்கு சென்றார் குருபரர். இந்துஸ்தானி மொழியில் பேசி, மடம் கட்ட இடம் தரும்படி கேட்டார். சிங்கத்தின் மீது வந்த வீரப் புலவரைப் பார்த்த சுல்தான், அவர் கேட்ட இடத்தைக் கொடுத்தார். அந்த இடத்தில், "குமாரசுவாமி மடம்' அமைக்கப்பட்டது. இன்றும் காசியில் குமரகுருபரரின் பெயரில் உள்ள இந்த மடம், சமயப்பணியில் ஒரு ஈடுபட்டு வருகிறது.
வைகாசி மாதம் தேய்பிறை திரிதியை திதியில் முக்தியடைந்தார் குமரகுருபரர். அந்த நாளில், அவருக்கு குருபூஜை நடக்கிறது. முருகனையும், மீனாட்சி அம்மனையும் பாடிய குருபரை, அந்நாளில் வணங்கி, அவரது நல்லாசி பெறுவோம்.
***
தி. செல்லப்பா
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:54, 19 மே 2011 (UTC)
நன்றி - தின மலர்.