rajam rajam@earthlink.net
to மின்தமிழ் mintamil@googlegroups.com
சுதமதி
சுதமதி யார் என்று கேட்டால் ... சுதமதி என்பவள் மணிமேகலையின் தோழி என்றுதான் சட்டென்று சொல்ல வரும். அப்படி இருக்கத் தேவையில்லை.
சுதமதியும் மணிமேகலை போலவே இளமையானவள் என்று நினைக்கவும் தோன்றும். அப்படி இருக்கத் தேவையில்லை.
சுதமதி அறிமுகம்
மதுரையில் கோவலன் கொலைக்குப் பிறகு பூம்புகாரில் நடந்த இந்திர விழாவிற்கு மாதவி தன் மகள் மணிமேகலையுடன் வரவில்லை. அது பற்றிப் பூம்புகார் நகரத்து மக்கள் பேசுகிறார்கள். மக்களின் பேச்சைப் பற்றி மாதவியின் தாய் சித்திராபதிக்கு வருத்தம். மக்கள் சொல்வதை மாதவிக்குத் தெரிவிக்க வேண்டி, தாய் சித்திராபதி மாதவியின் தோழி வயந்தமாலை என்பவளை மாதவி இப்போது தங்கி இருக்கும் இடத்திற்கு அனுப்புகிறாள்.
மாதவி இப்போது இருக்கும் இடம் ஒரு "மாதவர் உறைவிடம்." அதாவது அறவண அடிகள் போன்ற தவசிகள் இருக்கும் இடம்.
வயந்தமாலை மாதவியிடம் பேசும்போது .. அங்கே மலர் தொடுத்துக்கொண்டிருக்கும் மணிமேகலைக்கு ... கோவலன், கண்ணகி, மாதவி இவர்களைப் பற்றிய பழைய கதை தெரியவருகிறது.
மணிமேகலையின் கண்களில் பெருகும் வருத்தக்கண்ணீர் அவள் தொடுத்துக்கொண்டிருந்த மலர்களின் தூய்மையைக் கெடுக்கிறது.
பெற்ற தாய் ஆகிய மாதவி, மகள் மணிமேகலையின் கண்ணீரைத் தன் அழகிய செங்கையால் துடைத்து ... தூய்மை இழந்துபோன இந்த மலர்களுக்கு நிகரான தூய மலர்களை நீயே பறித்துக் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறாள்.
அந்த நேரத்தில்தான் ... மணிமேகலையுடன் மலர் தொடுத்துக்கொண்டிருந்த சுதமதி முன்வந்து பேசுகிறாள்.
"மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்
சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும் ..."
என்ன சொல்கிறாள் சுதமதி?
"மணிமேகலையின் கண்களில் வடியும் கண்ணீரைக் கண்டால் காமனும் நடுங்குவான். இவளைக் கண்டால் ஆடவர் அகன்று போவார்களோ? தங்கள் இயற்கைத் தன்மையிலிருந்து மாறி, இவளை விரும்பாமல் அவர்கள் நின்றால் அவர்கள் பேடிகள், இல்லையா?"
சுதமதி ஏன் இப்படிச் சொல்லுகிறாள்? அவளுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியே அதற்குக் காரணம்.
சண்பை (== சீர்காழி) என்ற ஊரில் கௌசிகன் என்ற அந்தணனின் மகளாகப் பிறந்தவள் சுதமதி. தனியாக எங்கும் போய்வருவதில் அச்சமில்லாமல் ஒரு முறை ஒரு மலர்வனத்தில் ("ஆராமத்தில்") மலர் பறிக்கப் போனாள். இந்திரவிழாவைக் காண வந்த விஞ்சையன் ஒருவன் அங்கே வந்து சுதமதியைக் கவர்ந்துகொண்டு வான்வழியே போனபோது அவள் அவனுக்கு இணங்கினாள். பிறகு அந்த மாருதவேகன் சுதமதியை இந்தப் புகார் நகரில் விட்டுவிட்டுப் போய்விட்டான். அந்த நாளிலிருந்து சுதமதி இங்கே இருக்கிறாள்.
(அவள் கதை இன்னும் இருக்கிறது. அதைச் சுதமதியே பிறகு சொல்லுவாள்.)
இப்படித் தன் கதையை ஓரளவு சொன்ன சுதமதி அழகிய மணிமேகலை தனியாக எங்கும் போகக்கூடாது என்ற கருத்துடன் இருப்பதில் வியப்பில்லை.
அதனால் ... மணிமேகலையே போய்ப் புதுமலர் பறித்துக் கொண்டுவரவேண்டும் என்று மாதவி சொன்னதும் சுதமதி அஞ்சுகிறாள். மணிமேகலை தனியாக மலர் பறிக்கப் போகக்கூடாது என்று சொல்கிறாள்.
பிறகு, அந்தப் பூம்புகார் நகரத்தின் பல இடங்களைப் பற்றி விளக்குகிறாள். இலவந்திகையின் எயிற்புறம், உய்யானம், சம்பாதிவனம், கவேரவனம் ... இப்படிப் பல இடங்களில் உள்ள கடுமைகளை விளக்குகிறாள். பிறகு, பகவனது ஆணையால் பல மலர்கள் பூக்கும் உவவனம் என்ற இடத்திற்கு மட்டுமே மணிமேகலை போகலாம் என்றும் மணிமேகலையுடன் தானும் (துணைக்குப்) போவதாகவும் சொல்கிறாள்.
மலர்வனத்தில் சுதமதியும் மணிமேகலையும்
சுதமதி மணிமேகலையை உவவனத்துக்கு அழைத்துக்கொண்டு போகும்போது ஊரார் மணிமேகலையைச் சுற்றி வந்து பார்த்து அவளைக் கடுமையான தவவழியில் செலுத்தியதற்காக மாதவியைக் கடிந்து பேசுகிறார்கள்.
இதையெல்லாம் கடந்து, சுதமதி மணிமேகலையைக் கூட்டிக்கொண்டு போய் மலர்வனத்தின் ஒவ்வோர் இடத்தையும் சிறு குழந்தைக்குச் சொல்வதுபோல விளக்கிக் காட்டுகிறாள்.
அப்போது உதயகுமரன் மணிமேகலையைத் தேடி அங்கே வருகிறான். அவனுடைய தேர் வரும் ஒலி கேட்டு மணிமேகலை பதறுகிறாள். சுதமதியிடம் சொல்லுகிறாள்:
"சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என்மேல் வைத்த உள்ளத்தான் என
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆயிழை
ஈங்கு என் செவிமுதல் இசைத்தது என் செய்கு-என"
[சுருக்கமான பொருள்: சித்திராபதியோடு சேர்ந்து நினைத்து, உதயகுமரன் என்மேல் உள்ளம் வைத்திருக்கிறான் என்று வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள் சொன்னதைக் கேட்டேன். அதனால் அவன் இப்போது இங்கே (என்னைத் தேடி) வருகிறான்போல. அவனுடைய தேர் வருவதுபோல ஒலி கேட்கிறதே, நான் என்ன செய்ய?]
முதல் முறையாக ... காப்பியத் தலைவி மணிமேகலை பேசிய இடம் இது! பெற்ற தாய் மாதவியிடம்கூட அவள் பேசியதில்லை. சுதமதியிடம் வாய் திறந்து பேசுகிறாள்.
மணிமேகலையின் அச்சம் மிகுந்த உரை கேட்ட சுதமதி ஒரு நடுங்கிய மயிலுக்குப் புகலிடம் கொடுப்பதுபோல மணிமேகலையை அங்கே இருக்கும் பளிங்கு மண்டபத்திற்குள் போகவைத்து, அந்த அறையைப் பூட்டி, வெளியே தள்ளி நிற்கிறாள்.
"சுதமதி கேட்டுத் துளக்குறு மயில் போல்
பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுக என்று
ஒளித்து அறை தாழ் கோத்து உள் அகத்து இரீஇ
ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை
நீங்காது நின்ற நேரிழை ..."
[சுருக்கமான பொருள்: மணிமேகலை சொன்னதைக் கேட்ட சுதமதி நடுங்கும் மயில் ஒரு புகலிடம் தேடிப் புகுவதைப் போல ... பளிங்கு மண்டபத்துக்குள் போ என்று மணிமேகலையை அங்கே போகவைத்து, அந்த மண்டபத்தின் அறைக் கதவைத் தாழிட்டு, அந்த மண்டபத்திலிருந்து ஐந்து வில் கிடக்கும் அளவிற்கு விலகி அங்கேயிருந்து வேறு எங்கும் போகாமல் நின்ற நேரிழை ...]
சுதமதிக்கு எவ்வளவு பாதுகாப்பு உணர்வு, பாருங்கள்! முதலில், மணிமேகலைக்கு உதயகுமரனைப் பற்றிய அச்சத்தைப் புரிந்துகொள்கிறாள். உடனே ஒரு பாதுகாப்பான இடத்தில் அந்த இளம்பெண்ணை இருக்கவைக்கிறாள். அதன்பின் ... முறைப்படி அந்த இடத்தைவிட்டு விலகியும் நிற்கிறாள். அப்படி அவள் விலகி நிற்பதுதான் முறை என்பதோடு நுண்ணிய அறிவு என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
உதயகுமரன் அதற்குச் சற்று முன்புதான் "காலவேகம்" என்ற மதயானையை அடக்கிவிட்டு வரும்வழியில் அவனுடைய நண்பன் எட்டிகுமரன் மூலம் மணிமேகலை உவவனத்துக்குப் போனதைக் கேள்விப்பட்டிருக்கிறான்.
சுதமதி - உதயகுமரன் உரையாடல்
மணிமேகலையைத் தேடி அங்கே வந்த உதயகுமரன் சுதமதியைப் பார்க்கிறான்; அவளிடம் மணிமேகலையைப் பற்றிக் கேட்கிறான்.
"... யாருமில் ஒரு சிறை
ஒரு தனி நின்றாய், உன் திறம் அறிந்தேன்"
[சுருக்கமான பொருள்: யாரும் இல்லாத இந்த இடத்தில் நீ தனியாக நிற்கிறாய். உன்னைப்பற்றி எனக்குத் தெரியும்.]
(குறிப்பு: மாருதவேகனையும் சுதமதியையும் பற்றி உதயகுமரனுக்குத் தெரிந்திருக்கிறது. அதைப் பிறகு சொல்லுவான். சுதமதியைப் பற்றி ஒரு தாழ்வான எண்ணம் அவனுக்கு இருந்திருக்கலாம்.)
ஆனால், மணிமேகலை ஏன் இங்கு வந்தாள் என்பது அவனுக்குத் தெரியவேண்டும். மணிமேகலை தக்க பருவம் அடைந்துவிட்டாளா? துறவிகள் இருக்கும் இடத்தை விட்டு இங்கே ஏன் அவள் தனியாக வந்தாள்? என்பது அவனுடைய அடிப்படைக் கேள்வி.
மணிமேகலையின் உடல் உறுப்புக்களைக் குறித்துப் பேசி, அவன் இப்படிக் கேட்டது சுதமதியை வருத்துகிறது. வெளியேறுவதற்குத் திறப்பிடம் எதுவும் இல்லாத ஓர் அறையில் அடைக்கப்பட்டதுபோன்று தவிக்கிறாள்.
ஆயினும், கேட்டவன் அரச குமரன் அல்லவா? அவனிடம் தகுந்த மரியாதையோடு பேசவேண்டுமே.
சோழ அரசரின் பரம்பரையைப் புகழ்கிறாள். அந்தப் பரம்பரையில் வந்தவனே என்று தொடங்கி ... அவன் நினைப்பை ஆட்கொண்டிருக்கும் மனித உடம்பின் உண்மைத் தன்மையை எடுத்துச் சொல்லுகிறாள்.
"வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது;
புனைவன நீங்கின் புலால் புறத்து இடுவது;
மூப்பு விளிவு உடையது; தீப்பிணி இருக்கை;
பற்றின் பற்றிடம்; குற்றக் கொள்கலம்;
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை;
அவலக் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இது, என உணர்ந்து,
மிக்கோய், இதைப் புறமறிப் பாராய்!"
[சுருக்கமான பொருள்: மனித உடம்பு என்பது முன் செய்த வினைப் பயனால் உருவாகி வந்தது. அதுவே மீண்டும் பிற வினைகளுக்கும் இடம் ஆகிறது. மேலே புனைந்துகொண்டிருக்கும் பொருள்களை நீக்கிவிட்டால் வெளியே தெரிவது புலால். மூத்துப் போவதையும் முடிந்துபோவதையும் தன்மையாக உடையது இந்த உடம்பு. கொடிய பிணிகளுக்கு இருப்பிடம் இது. ஆசைகள் தங்கும் இடம் இது. இது குற்றங்களைச் சேர்த்துவைக்கும் கலம். புற்றுக்குள் அடங்கி ஒடுங்கும் பாம்பு போல அழிவை உண்டாக்கும் சீற்றம் சேர்ந்த இடம் இது. இது, தாழவைக்கும் கவலை, தனிமை, அழுங்கிப்போதல் ... இந்த உணர்வுகள் நீங்காத உள்ளத்தைத் தன்னுள்ளே கொண்டது. இதுதான் மக்கள் உடம்பின் தன்மை என்று இதை நன்றாக உணர்ந்து பார், சிறந்தவனே! இதை உணர்ந்து ... இதை (== மனித உடலை) இதனுடைய உட்புறம் வெளியே காணும்படி மாற்றிப் போட்டுப் பார்.]
அடடா! மதயானையை அடக்கி வென்ற கையோடு, காம எழுச்சியோடு மணிமேகலையைத் தேடிவந்து, அவள் தக்க பருவம் அடைந்துவிட்டாளா, தனக்குக் கிடைப்பாளா என்று தெரிந்துகொள்ளத் துடித்த உதயகுமரனின் தவிப்புக்குக் கொடுக்கும் பரிசா இது!
ஆனாலும், நாட்டை ஆளும் அரசனின் மகனுக்கு இப்படி அறவுரை சொல்லும் துணிவு யாருக்கு இருக்கும்? துணிவு நிறைந்த அந்த உரிமையைச் சுதமதி, மணிமேகலை ஆகிய இருவரைத் தவிர வேறு யாருக்கும் காப்பிய ஆசிரியர் தரவில்லை!
மணிமேகலைக் காப்பியத்தில் சோழ இளவரசன் உதயகுமரனுடன் உரையாடுகிறவர்கள் மிகச் சிலரே -- அவனுடைய நண்பன் எட்டிகுமரன், சுதமதி, சித்திராபதி, மணிமேகலா தெய்வம், மணிமேகலை. அவனுடைய பெற்றோர் ஆகிய சோழ அரசனும் அரசியும்கூட அவனுடன் உரையாடவில்லை.
சரி.
சுதமதி இப்படி மனித உடலின் உண்மைத் தன்மையை விளக்கிச் சொன்ன சொற்கள் இளங்கோனின் மனதில் போய்ப் படிவதற்குமுன் ... பளிக்கறையின் உட்புறத்திலிருந்து பவளப் பாவை ஒன்று வெளியே தெரிவதுபோல மணிமேகலையின் உருவம் தெரிகிறது!
உதயகுமரன் அந்த உருவம் ஓர் ஓவியம் என்று முதலில் நினைக்கிறான்; பிறகு அது மணிமேகலை என்று உணர்கிறான். அந்தப் பளிங்கு மண்டபத்தைத் தடவிப் பார்க்கிறான். உள்ளே போக முடியவில்லை. சுதமதியிடம் கேட்கிறான்: "இவள் எப்படிப்பட்டவள்?"
சுதமதி சொல்கிறாள்.
"குருகு பெயர்க் குன்றம் கொன்றோன் அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாளாயின் பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள்; சாப சரத்தி;
காமற்கடந்த வாய்மையள் ..."
[சுருக்கமான பொருள்: குருகு (== 'கிரௌஞ்சம்') என்ற பெயருடைய மலையைப் பிளந்த முருகன் போன்ற உன் இளமையழகைத் தன் கண்ணால் இவள் பருகவில்லையென்றால் ... அரும்பிக்கொண்டிருக்கும் தவசி இவள்; சாபக் கணை தொடுக்க வல்லவள்; காமனைக் கடந்த நிலையில் உள்ளவள்.]
அதற்கு உதயகுமரன் சொல்லும் மறுமொழியைப் பாருங்கள்.
"சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆகென"
[சுருக்கமான பொருள்: "வெள்ளம் மிகுந்தால் அதைத் தடுக்கும் அணை உண்டோ? காமம் ஆழ்ந்து திண்மைப்பட்டால் அதை நிறுத்த முடியுமோ? அவள் தகுந்த நிலையை (== 'பருவத்தை') அடைந்திருந்தால் எனக்குத் தகுந்தவள் ஆகட்டும்.]
இப்படிச் சொல்லிவிட்டு, குமுறும் நெஞ்சத்தோடு அங்கேயிருந்து புறப்படுகிறவன் நின்று சுதமதியிடம் கேட்கிறான்: "அராந்தாணத்தில் (== 'அருகன் பள்ளி'யில்) ஒரு விஞ்சையனால் விடப்பட்டவள் என்று உன்னைப் பற்றி இந்த ஊரில் பலரும் பேசுகிறார்களே. அங்கேயிருந்து இங்கே இவளோடு நீ வந்தது ஏன்?"
சுதமதியும் மணிமேகலையும் வந்த மலர்வனம் புத்த பீடிகை உள்ள இடம். அதனால் உதயகுமரனுக்குச் சுதமதியைப் பற்றி வியப்பு.
அப்போதுதான் சுதமதி தன் முழுக் கதையையும் சொல்கிறாள்.
சுதமதியும் அவள் தந்தையும்
சுதமதியின் வயது முதிர்ந்த பார்ப்பனத் தந்தை அவளுடைய அன்னை இறந்த பிறகு, குமரித் துறையில் நீராடப் போகிறவர்களோடு சுதமதியைத் தேடிப்போகிறான். காவிரித் துறையில் நீராடிவரும்போது சுதமதியைப் பார்க்கிறான்.
"பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய
எற்கெடுத்து இரங்கித் தன் தகவு உடைமையின்
குரங்குசெய் கடற்குமரியம் பெருந்துறைப்
பரந்துசெல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெரும் துறைக் காவிரி ஆடிய
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ..."
[சுருக்கமான பொருள்: பழவினையின் பயனால் பிழையான மணம் அமைந்த நான் காணாமல் போனதற்காக இரக்கப்பட்டு, தன் சிறப்பின் காரணமாக, குமரிக் கடலில் நீராடச் செல்லும் பல மக்களோடு சேர்ந்து என்னைத் தேடி வந்து, காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் நீராடிவரும் வடமொழியாளர்களோடு வருகிறவன் (என்னைக்) கண்டு ...]
காவிரியில் நீராடி வந்த தந்தை சுதமதி எப்படி அங்கே வந்துசேர்ந்தாள் என்று கேட்டுத் தெரிந்துகொள்கிறான். அவள் இனிமேல் அந்தணருக்கு ஏற்றவள் இல்லை என்று தெரிந்தும், அன்புடைய தந்தை ஆதலால் அவளைக் கைவிடாமல் பிச்சையெடுத்து அவளைக் காப்பாற்றுகிறான்.
"ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடல் ஈயான்;
இரந்தூண் தலைக்கொண்டு இந்நகர் மருங்கில்
பரந்துபடு மனைதொறும் திரிவோன்"
[சுருக்கமான பொருள்: மறை ஓதும் அந்தணர்களுக்கு நான் ஏற்றவள் இல்லை என்று ஆனபிறகும், அன்புடையவன் ஆதலால் என்னைக் கைவிடவில்லை. இரந்து உண்ணுவதை மேற்கொண்டு இந்த நகரத்தில் எல்லா வீடுகளுக்கும் போய் வந்துகொண்டிருந்தான்.]
ஒரு நாள், அப்போதுதான் ஈன்ற பசு ஒன்று அவனைக் குத்திவிட, அவன் பெருங்குடல் வெளியேற, அதைக் கையில் ஏந்திக்கொண்டு, சுதமதி முன்பு இருந்த இடம் என்ற நம்பிக்கையில் சமணர்களின் இடத்துக்கு வருகிறான்.
" ... ஒரு நாள்
புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்,
கணவிர மாலை கைக்கொண்டென்ன
நிண நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி,
என்மகள் இருந்த இடம் என்று எண்ணி,
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர் காணும் சரண்"
[சுருக்கமான பொருள்: ஒரு நாள் ஈன்ற பசு பாய்ந்ததால் அவன் வயிறு புண்ணாக, கணவிர மலர் மாலைபோல அவன் பெருங்குடல் வெளியே வர, அதைக் கையில் பிடித்தவாறே, தாங்கமுடியாத துன்பத்துடன், தன் மகள் (== சுதமதி) முன்பு இருந்த இடம் என்றதனால் சமணர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து, "சமணர்களே, சரண் அடைகிறேன்" என்று அடைக்கலம் கேட்க ...]
சமணர்கள் மறுத்துவிடுகிறார்கள். சுதமதியின்மேல் கோபம் கொண்டு, இங்கே இருக்க உங்களுக்குத் தகுதியில்லை என்று சொல்லிக் கையை உதறிவிடுகிறார்கள்.
கண்ணீருடன் சுதமதியும் அவள் தந்தையும் தெருக்களில் திரிந்து "அறவோர் இருக்கிறீர்களா? எங்களுக்கு வேறு யாரும் இல்லை" என்று வீடுதோறும் போய்க்கேட்டுப் புலம்புகிறார்கள்.
நல்ல வெயில் நேரம். அப்போது, கையில் பிச்சைப் பாத்திரம், குளிர்ந்த நிலவு போன்ற முகம், பொன்னிற ஆடை ... இவற்றோடு ஒருவன் அவர்களை நோக்கி வருகிறான்.
அவன் யார்? அவன் பெயர் சங்க தருமன்.
அந்தச் சங்க தருமன், சுதமதியையும் அவள் தந்தையையும் பார்த்து, "என்ன ஆயிற்று" என்று கேட்டு, தன் கையிலிருந்த பாத்திரத்தைச் சுதமதியிடம் கொடுத்துவிட்டு, அவள் தந்தையைத் தலைமேல் தூக்கி எடுத்துக்கொண்டு, இரண்டுபேரையும் மாதவர் உறைவிடத்துக்கு அழைத்துப்போகிறான். போய், புத்த தேவனின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறான்.
அந்த மாதவர் உறைவிடத்தில்தான் சுதமதி இன்றும் இருக்கிறாள். மாதவியும் மணிமேகலையும் அங்கேதான் இருக்கிறார்கள்.
அங்கே போனதிலிருந்து சுதமதி புத்த தேவனைத் தவிர வேறு யாரையும் புகழுவதில்லை.
"எங்கோன் இயல்குணன் ஏதம்-இல் குணப்பொருள்
உலக நோன்பில் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
இன்பச் செவ்வி மன்பதைக்கு எய்த
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்
அறக்கதிராழி திறப்பட உருட்டி,
காமற் கடந்த வாமன் பாதம்
தகை பாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன்; வேந்தே வாழ்க!"
[சுருக்கமான பொருள்: எமக்குத் தலைவன்; இயல்பாக அமைந்த குணங்களை உடையவன்; குற்றம் இல்லாத குணம் உடையவன்; உலக வாழ்வில் பல நிலைகளை உணர்ந்ததால் தனக்கு என்று வாழாமல் பிறர்க்காக இருப்பவன்; மன்பதைக்கு இன்பம் உண்டாகவேண்டி, அருளாகிய அறம் பூண்டு, அறத்தைப் பரப்பி வருகிறவன்; காமனைக் கடந்த அந்த வாமனுடைய அடிகளின் பண்புகளைப் பாராட்டுவதைத் தவிர வேறு எதையும் சொல்வதில்லை. வேந்தனே, வாழ்க!]
உதயகுமரனுக்கு இப்படித் தன் கதையைச் சுதமதி சொல்ல, உதயகுமரன் மலர்வனத்தைவிட்டுப் புறப்படுகிறான். ஆனால், போகுமுன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.
"அஞ்சொல் ஆயிழை, நின் திறம் அறிந்தேன்
வஞ்சி நுண்ணிடை மணிமேகலைதனைச்
சித்திராபதியால் சேர்தலும் உண்டு"
[சுருக்கமான பொருள்: அழகிய சொற்களைப் பேசுபவளே! உன்னைப் பற்றித் தெரிந்துகொண்டேன். வஞ்சிக்கொடிபோன்ற மெல்லிய இடையை உடைய அந்த மணிமேகலையைச் சித்திராபதி மூலமாக நான் சேர முடியும்.]
பாவம், எவ்வளவு தவிப்பும் அதே நேரத்தில் திண்ணமான மன உறுதியும் ... அந்த உதயகுமரனுக்கு!
உதயகுமரன் பற்றி மணிமேகலையின் உணர்வு
உதயகுமரன் அந்த இடத்தைவிட்டுப் போனது தெரிந்து மணிமேகலை பளிக்கறையிலிருந்து வெளியே வருகிறாள்.
வந்தவள் சுதமதியிடம் மனம் திறந்து தன் உணர்ச்சிகளைக் கொட்டுகிறாள்! உதயகுமரன்மேல் தன் மனம் போனது என்று வெளிப்படையாகச் சொல்கிறாள்.
"கற்புத்தான் இலள்; நற்றவ உணர்விலள்;
வருணக் காப்பு இலள்; பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்;
இதுவோ அன்னாய், காமத்து இயற்கை?
இதுவே ஆயின் கெடுக தன் திறம்"
[சுருக்கமான பொருள்: 'கற்பு இல்லாதவள், நல்ல தவ உணர்ச்சி இல்லாதவள், வருணம் தரும் காப்பு இல்லாதவள், பொருளுக்கு விலைகொடுத்து வாங்கக்கூடியவள்' என்றெல்லாம் என்னைத் தாழ்வாக நினைத்து விரும்பினான் அவன். அந்தத் தாழ்வை நினைத்துப் பார்க்காமல் எனக்கு அறிமுகமில்லாத அவன்பின்னால் என் நெஞ்சம் போனதே! அன்னையே, இதுதான் காமத்தின் இயற்கையா? அப்படியானால் ... இந்தக் காமத்தின் வலிமை கெட்டுப்போகட்டும்.]
தன்னைப் பெற்றவளாகிய மாதவியிடம்கூட மணிமேகலை பேசியதில்லை. சுதமதியிடம்தான், அதுவும் ... தன் இளமை உணர்ச்சியை மறைக்காமல் இப்படி வெளிப்படுத்துகிறாள். மணிமேகலையின் அந்த உணர்ச்சி வெளிப்பாட்டை அறிந்துகொள்ளும் வாய்ப்பு சுதமதிக்கு மட்டுமே அமைகிறது.
அப்போது அங்கே மணிமேகலாதெய்வம் வருகிறாள். சுதமதியும் மணிமேகலையும் ஏன் அங்கே இருக்கிறார்கள் என்று கேட்டு விவரம் தெரிந்துகொண்டு, அவர்கள் எப்படி அந்த இடத்தைவிட்டு மீண்டும் அவர்கள் இருப்பிடத்துக்குப் (== மாதவர் உறைவிடத்துக்குப்) போகவேண்டும் என்று சொல்கிறாள்.
அப்படி மணிமேகலாதெய்வம் அவர்கள் போகவேண்டிய வழியில் இருக்கும் சக்கரவாளக் கோட்டம் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுதமதி தூங்கிவழிகிறாள்! அதுதான் சமயம் (!) என்று மணிமேகலாதெய்வம் மணிமேகலையை எடுத்துக்கொண்டு வான்வழியே போய் மணிபல்லவத்தீவில் வைத்துவிட்டுத் திரும்பிவந்து சுதமதியை எழுப்பி நடந்ததைச் சொல்லி மாதவியிடம்போய் அவள் மகள் இன்னும் ஏழு நாட்களில் திரும்புவாள் என்று தெரிவிக்கச் சொல்கிறாள். சுதமதியும் அவ்வாறே செய்கிறாள்.
சுதமதியின் கதை முடிவு
இந்த மலர்வன நிகழ்ச்சிக்குப் பிறகு சுதமதி பின்னிலையில் அமைகிறாள். அறவண அடிகள் போகும் இடத்துக்கெல்லாம் மாதவியுடன் சேர்ந்து தானும் போய்வருகிறாள்.
சுதமதி வாழ்வு எப்படி முடிகிறது?
பிற்காலத்தில் இவள், மாதவி, மணிமேகலை மூவரும் "ஓங்குயர் போதி உரவோன் திருந்தடி தொழுது வலம் கொண்டு தொடர்வினை நீங்கி நன்னெறிப் படர்குவர்" என்று அறவண அடிகள் மூலம் தெரிகிறது.
இந்தக் காப்பியத்தில், மணிமேகலையைப் பெற்ற தாய் மாதவிக்கும் இல்லாத பங்கு சுதமதிக்குத் தரப்பட்டிருக்கிறது.
பெற்ற தாயாகிய மாதவி தன் மகள் மணிமேகலையைக் கணிகையர் கூட்டத்திலிருந்து விலக்கி, தன்னுடன் அறவோர் பள்ளியில் தங்கவைத்துக்கொண்டாள். ஆனால், மேற்கொண்டு, மணிமேகலையை அறவழியில் நடத்த, சுதமதிதான் ஒரு கருவியாக அமைகிறாள்.
அறவோர் பள்ளியிலிருந்து மலர்வனத்தை நோக்கிப் புறப்பட்ட மணிமேகலைக்கு வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் காத்திருப்பது யாருக்கும் தெரியாது.
மணிமேகலையின் இளமைக்காலக் காம உணர்ச்சி வெளிப்படுவது சில நொடிகளே. அதை அவள் வாய்திறந்து சொல்ல ஒரு வாயிலாக அமைந்தவள் சுதமதி.
மணிமேகலையை நகரத்துத் தெருக்களின்வழியே மக்கள் கூட்டத்துக்கு நடுவே அழைத்துப்போய், மலர்வனத்தின் அழகை விளக்கிக் காட்டி, உதயகுமரனிடமிருந்து அவளைக் காப்பாற்றி, மணிமேகலா தெய்வம் அங்கே வந்து சேரும்வரை சுதமதி விழிப்புடன் நடந்துகொள்கிறாள். மணிமேகலா தெய்வம் வந்தவுடன் மணிமேகலையைப் பற்றிய பொறுப்பு சுதமதிக்கு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிகிறது.
சண்பையிலிருந்து மாருதவேகனால் கவர்ந்து வந்து புகாரில் விடப்பட்ட சுதமதி அந்த ஊர் முழுவதும் அலைந்திருக்கிறாள் என்று தெரிகிறது.
சுதமதி கதையின் மூலம் அந்தக் கால இடங்கள், வேத, சமண, பவுத்த சமயத்தவர் நிலை இன்ன பிறவும் தெரிகின்றன.
ஆராமம் என்பது உவவனம், அராந்தாணம் என்பது அருகன் பள்ளி, சம்பாதி இருந்ததால் ஓரிடம் சம்பாதிவனம் என்ற பெயர் பெற்றது, காவிரியின் தந்தையாகிய கவேரன் இருந்ததால் ஓரிடம் கவேர வனம் என்ற பெயர் பெற்றது, உவவனத்தில் புத்த பகவனது ஆணையால் பல மலர்கள் மலர்வது, அங்கே தாமரைப் பீடிகை இருந்தது, ஒரு தெய்வத்தை நினைத்துக்கொண்டு அந்தப் பீடிகையில் மலரை இட்டால் அந்தத் தெய்வத்துக்கு அந்த மலர் போய்ச் சேரும் என்ற நம்பிக்கை, பழவினையால் தனக்குப் பிழைமணம் ஏற்பட்டதாகச் சுதமதி நினைத்தல், சங்கதருமனின் அமைதியான முகப் பொலிவு, அவனுடைய பொன்னிற ஆடை, குமரிக்கு மக்கள் நீராடப் போதல், வடமொழியாளர் காவிரியாடல், ... இன்ன பிற.
குறிப்பாக ஒன்றை நோக்கவேண்டும் -- விஞ்சையன் ஒருவனுடன் தொடர்பு ஏற்பட்டதால் சுதமதி வேத சமயத்தவருக்கு ("ஓதல் அந்தணர்க்கு") ஏற்றவளாக இல்லாமல் போதல், சமண சமயத்தவரும் அவளைக் கைவிடல், பவுத்த சமய சங்க தருமன் அவளையும் அவளுடைய தந்தையையும் ஏற்றுக்கொள்ளுதல்.
மாதவி கதையையும் சுதமதி கதையையும் பார்க்கும்போது இன்னொன்று புலனாகிறது. அந்தக் காலத்தில் ... பிறர் ஆதரவு இல்லாத, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குப் பவுத்த துறவோர் இருந்த இடம் புகலிடம் கொடுத்திருக்கிறது. கணிகை குலத்தவள் என்று மாதவியைப் புறக்கணிக்கவில்லை, அந்தண குலத்தில் பிறந்து ஒரு விஞ்சையன் வசப்பட்டவள் என்று சுதமதியைப் புறக்கணிக்கவில்லை. இது மிகவும் பாராட்டத்தக்கதே!
அன்புடன்,
ராஜம்
--Ksubashini 18:25, 26 நவம்பர் 2011 (UTC)