சிவகுருத்துவம்

மரபு விக்கி இருந்து

Ulagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:43, 8 செப்டெம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

Siva Guruttuvam

சிவகுருத்துவம்

முனைவர் கி. லோகநாதான் 1989

முதற் படலம் : காட்சி இயல்

1.1

காண்பான் எனும் வினைமுதலும், காணல் எனும் வினையும், காட்சி எனும் அதனால் ஆகும் விளைவும், காட்சிப் பொருள் எனும் அதன் மூலமும் இன்றி அறிவுத் தோன்றாது. இங்கு காட்சியே சிவஞானம் முடிவில் உதிப்பதற்கு காரணமாக அமைகின்றது.

1.1.1

காட்சிப் படுபொருள் யாதோர் வகையில் இருப்பதாலேயே அது காட்சியாகின்றது. காணுதல் செய்வதனாலேயே காட்சி உளதாகின்றது.

1.1.2

காணலைச் செய்து அதனை உளதாக்குவானே காண்பான் ஆவன். காணலைச் செய்து காட்சியை உளதாக்கும் வழி, தன்னையும் உளதாம் ஓர் பொருள் ஆக்குகின்றான்.

1.2
காட்சிப் படு பொருள் காட்டப்படு பொருளாம். ஏன் எனில் அது அறிவிற்குத் தோன்றி நின்று மறைவதால் , மூவினைப் படும் தன்மையால். அதனை உளதாக்கி இருப்பதாக்கி பின் இலாதாக்கும் வகையில் உலகத்து சலனங்கள் இருப்பதால், காட்சிப் படு பொருள் காட்டப்படு பொருள் ஆகின்றது.

1.2.1
யாது தோற்றுவிக்கப்பட்டு இருத்தப்பட்டு பின் இலதாக்கப்படுகின்றதோ அது காண்பான் ஆட்சிக்கு அப்பாலாக நின்று காட்டப்படு மாத்திரையால் அறியப்படும் ஒன்றாகி நிற்கின்றது.

1.3

அனைத்து காட்சிப் பொருளும் காட்டபப்டு பொருள் என்பது உண்மையாக. அவற்றைக் காட்டுமோர் பேரறிவு காண்பானுக்கு அயலாக நிற்பதாகவும் தனைக் காட்டாது காட்டிக்கொள்கின்றது.

1.3.1

எல்லா காட்சிப் பொருளும் காட்டப்படு பொருளாகக் காணுங்காலே, காட்டுவோன் என்ற உணர்வு முகிழ்ந்து, இறைவனை உளதாம் பொருளாக காணுதல் கூடிவரும், இறை நம்பிக்கை பிறக்கும்.

1.3.2

இறைவனை இவ்வாறு உளதாம் பொருளாக ஊய்த்துணர ஏதுவாகும் பொருட்களே இலிங்கங்கள் ஆகும். அனைத்துக் காட்சிப் பொருளும் காட்டப்படு பொருளே என்று காணுகையில், அவை இறைவனை உணர்த்தும் இலிங்கங்களாக மாறுகின்றன.

1.4
காட்டுதல் ஓர் செயல் என்பதாலும், ஓர் நோக்கின்றி செயல் இல்லை என்பதாலும், இலிங்கமெனும் பொருளுணர்வு, எங்கும் யாண்டும் பரந்துள்ள ஓர் நோக்கவறிவைத் தந்து அதன் வழி அந்த நோக்கினை தனதாய்க் கொண்டுள்ள இறைவனை உணர்த்துகின்றது.

தொடரும்

சிவகுருத்துவம்-2

இரண்டாம் படலம்: ஞானபோதக இறைவன்

2.1

காட்சிக்காகும் பொருள்கள் அனைத்தும் ஒர் நோக்கத்திற்காக இறைவன் எடுத்து படைத்து இருத்தி அழித்து பிறகு வேறொன்றினைக் காட்டுவதாக விளையாடிச் செல்கிறான்.இங்காகும் இறைவனது திருநோக்கம் போதனை. போதிக்க வேண்டும் எனும் நோக்கிலையேல், எடுத்து படைத்து இருப்பதாக உணர்த்தவேண்டும் என்ற சிறுநோக்கம் உளதாகாது.

2.2

இதனால் காண்பான் எனும் ஓரியல்போடு தனை உளதாக்கும் உயிர்கள்,போதிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்ற உயிர்கள் என்பது உண்மையாகின்றது.

2.2.1

போதகம் வேண்டி நிற்பவையாக இவ்வுயிர்கள் இருப்பதால், இவை அறியாமையோடு கிடக்கின்றன என்பதும் உண்மையாகின்றது.

2.3

இதனால் போதிக்கும் பேருயிரும் போதிக்கப்படும் சிற்றுயிர்களும் ஒன்றன்றி. பேருயிரின் பிரதிபலிப்பாக பிரதிபிம்பகளாக சிற்றுயிர்கள் இன்றியும், சிற்றுயிர்களின் மாயக் கற்பனையாக பேருயிர் இன்றியும் தனித்த வெவ்வேறு பொருட்களாக இவை இருக்கின்றன என்பது உணமையாகின்றது

2.4

காணும் உயிர்கள் அறியாமையோடு இலங்குவதாலேயே, காண வேண்டும் என்ற வேட்கைபால் படுகின்றன. அறியாமை சகசமாய் செறிந்தில்லை எனின் காணவேண்டும் அறிய வேண்டும் எனும் முனைப்பு எழாது போம்

2.5

போதிக்கும் பேருயிர் யாண்டும் போதகனாகவே இலங்குவதால், அறியாமை எனும் குறை அப்பேருயிர் மாட்டு இருக்க முடியாது. இதனன காணுதல் வேண்டும் என்பது யாண்டும் அதற்கு சித்தியாது போக, அப்பேருயிர் முற்றறிவு உடைய பரிபூரணமானது, அனைத்தையும் காணாது கண்டு கொண்டே இருப்பது என்றும் அறிய வருகின்றோம், அஃதோர் குறையற்ற நிறைவின் அதுவெனும் சுட்டின்றி அனைத்தும் அந்நியமின்றி அவையே தானாக நின்று அறியாது அறிந்து செயல்படக்கூடிய ஓர் சித்துப் பொருளாம்.

2.6

போதித்து சிற்றறிவுகள் மாட்டு விளங்கும் அறியாமையை ஞான இருளை நீக்க வேண்டும் எனும் திருநோக்கு, அந்த முற்றறிவின் பேருயிரின் அருட்பாடு, அருளின் வெளிப்பாடு, தன் குறையை நீக்குவதற்கு செய்யப்படு செயல் அல்ல என்பதின், இறைவனின் குறைவற்ற நிறைவான தன்மைக்கு இழுக்கில்லை.

2.6.1

ஆக இங்கு நோக்கு என்பது சிற்றுயிர்கள் மாட்டு , பிறவற்றை ஒதுக்கி ஒன்றினையேக் குறித்து சுட்டறிவின் அதனையே அடைய வேண்டும் என்ற முனைப்பின்றி பரங்கருணை மேம்பாட்டால் எழும் சுட்டு கடந்து நோக்காது நோக்குவதால், போதகமும் போதியாது போதிப்பதாம்-- கதிரவனின் உலகத்து செய்தியினைப் போன்று,

தொடரும்

சிவகுருத்துவம்-3

மூன்றாம் படலம்: அநாதி மலம்

3.1

சிற்றுயிர்கள் மாட்டு விளங்கும் அறியாமையை, அவையோ அல்லது அவற்றை நீக்க திருவுள்ளம் பற்றிய இறைவனோ உளதாக்கி இருக்க முடியாது. சிற்றுயிர்கள் தாம் அறியாமையில் கிடக்கின்றோம் என்பதை அறியாதே இருக்கின்றன. இறைவனால் போதிக்கப்பட்ட பிறகே, போதனை வந்த பிறகே தாம் முன்பு அறியாமையில் இருந்தோம் என்று வரலாற்றுப் போக்கில் தம்மை அறியும்போதே , தமது பண்டைய அறியாமையை உணருகின்றன.

3.1.1

அறியாமையை நீக்க திருவுள்ளம் பற்றும் இறைவன், அதனை ஆங்கு இருத்த நினையான். இதனால சிற்றுயிர்கள் அநாதியே அறியாமையொடு கிடப்பன என்பது உண்மையாகின்றது,

3.2

போதம் இல்லையேல் அறியாமைத் தொடரும். ஆகவே அது ஞானவிருள் நிலையே யாகும். இந்த ஞானவிருள் போதனையால் அகற்றப்படுவதால், சிற்றுயிர்கட்கும் இறைவனுக்கும் வேறாய் இருக்கும் ஒன்றினாலேயே அது உளதாக்கப்படுகின்றது என்று துணிதல் ஒவ்வும்.

3.3

ஞானவிருளை உளதாகுவதே ஆணவ மலம் என்று ஆணவத்தின் உண்மையை உணரும் அதேபொழுது, அது இறைவனால் படைப்படாது அநாதியே ஆன்மாக்களை பந்தித்திருக்கின்ற ஓர் பொருள் என்றும் அறிய வருகின்றோம்.

3.4

ஆணவ மலத் தொந்தனையால் தான் ஆன்மாக்களுக்கு அணுமை(finitude) வந்தமைகின்றது. பரனின் போதனையின் முடிவாக வெளிப்படும் சிவஞானமே, இந்த தீராத துயராக இருக்கும் ஆணவ மல பந்தத்தை அறுத்து அறியாமை இருளை போக்குகின்றது.

3.5
ஆணவ மலங் கழன்ற வான்மா அணுத்துவம் போக்கி பரத்துவம் எய்திய ஒன்றாம். பரத்துவ நிலை என்பது அணுத்துவம் போக்கிய திறத்தாலே போதகம் இனி வேண்டா நிலை; கற்றல் விழைச்சு தீர்ந்த நிலை; கற்றல் ஓர் முடிவிற்கு வந்த நிலை.

3.6

அணுத்துவம் தரும் ஆணவ மலமும், பரத்துவம் தரும் இறைவனும் இருளும் ஒளியும் போன்று இணங்கி இராத எதிரெதிர் நிற்கும் பொருட்களாம். இறைவன் இலங்க இருள் தோன்றா; இருள் இலங்க இறைவன் தோன்றான்.

தொடரும்

சிவகுருத்துவம்-4

3.7

ஒளியைக் கண்டு தன்னுள் அவ்வொளியால் அகற்றப்பட்ட இருளையும் காணும் பொருளே, பதிக்கும் ஆணவ இருளிற்கும் வேறாகிய உயிர்களாகிய பசுக்கள். இருளோடு ஒளியாய் இலங்குவன பசுக்களாம்.

3.8

ஒளியேயாய் யாண்டும் இலங்குவன் இறைவன். ஒளியே பராபரை. அந்த பராபரையோடு நீக்கமின்றி நின்றிலங்கி, போதியாது போதிக்கும் பொருளே சிவப்பரம்பொருளாம்.

3.9

ஆணவ மலம் முற்றிலும் நீங்கிய நிலையில், இறை போதகம் திரிபின்றி காணும் பேறு கிட்டும் என்பதால், அங்கு அருட்பெருஞ் சோதி வடிவத்து பாரபரை தரிசனம்; விஞ்ஞானக் காட்சிக்கு மேற்பட்ட சிவஞானக் காட்சி.

3.10

ஒளி வடிவ இறைவனை தரிசித்து அது தானாக உயர, அருட்பெருஞ்சோதியோடு இரண்டறக் கலந்து அது தானாக நிற்கும் நிலையில் பரத்துவத்திற்குப் பின் மெய்யாகும் சிவத்துவம் ஆங்கு.

3.10.1

இந்த சிவத்துவம் போதகத்தின் முடிவான நிலை. இந்த சிவத்துவம் தானேயாய் , நீங்கா இயல்பினோடு காலவுணர்வின்றிய சத்தாய் நிற்பதால், இறைவன் சிவபெருமான் ஆகின்றான்.

3.10.2

பராபரை தரிசனத்தால், ஆன்மாக்களும் அருட்பெருஞ்சோதியாய் தானும் ஆகுவதால், அவற்றிற்கும் சிவத்துவம் சித்திக்கின்றது. சிவபரம் பொருளொடு சிவத்துவ நிலையில் வேறு படுத்த முடியாத வகையில் ஒன்றாகின்றது.

3.11

சிவத்துவம் கிட்டிய முத்தான்மாக்கள் சிவன் ஆகா. பராபரையின் ஒளிப் பிரகாசத்தில் அடங்கும் ஆன்மாக்கள் அந்த தரிசனத்தை பெற்றுய்யுமாறு தன் போதகத்தால் பிறப்பித்த சிவபிரான் தான் ஆகா.

3.12

பராபரை தரிசனத்திற்குப் பிறகே, ஆன்மாக்கள் ஆங்கெழும் மேலான போதகத்தால் திரோபவ நீக்கத்தால் பரசிவனின் தற்சொரூபத்தை உணரும்.

3.12.1

அணுத்துவம் போக்கி பரத்துவம் எய்தி பிறகு எஞ்சி நிற்கின்ற திரோதகம் போக்கி சிவத்துவம் மகிழும் ஆன்மாக்களுக்கே பரசிவன் தன் தற்சொரூபத்தை உணர்த்தி அருளுவன்.

3.13

முத்தான்மாக்கள் மகிழும் சிவத்துவம் சித்தித்திருப்பது பரசிவனின் கருணையால் என்பதாலும், இந்த சிவத்துவத்தை போக்கிடும் வல்லமை யாண்டும் பரசிவனோடு இருப்பதாலும் சிவத்துவத்தில் வேறற நிற்கும் முத்தான்மாக்கள் இறைவனுக்கு அந்நிலையிலும் தொழும்பே, பொருள் வகையில் வெவ்வேறே.

தொடரும்

சிவகுருத்துவம்-5

நாங்காம் படலம்: மெய்க்காட்சி விளக்கம்

4.1

காட்சிப்படு பொருளும் காண்பானும் (நையாயிகர் கூறுவது போல) தொடக்குற்று ஒருங்கே கிடந்தாலும் காட்சி சித்திப்பதில்லை. காணுதல் உளதாகவேதான் காட்சி என்பதால், காணுதல் எனும் செயலைச் செய்யும் நோக்கமின்றி செயலும் இல்லை என்பதால், நோக்கின்றி காட்சி இல்லையாம்.

4.1.1

இனி யாதவதோர் வேட்கையின்றி செயலை மெய்யாக்கும் வினைமுனைப்பாகிய நோக்கமும் இல்லை என்பதால், விழைவின்றி காட்சி கூடி வராது.

4.2

பற்பல விழைச்சுகள் இச்சைகள் வேட்கைகள் ஆர்வங்கள் அவாக்கள் ஆசைகள் போன்றவை ஊந்த, இதனைச் செய்து இதனை அடைவோம் என்ற செயல் முனைப்பு பிறக்க, அதன்கண் காணுதல் செயலும் உளதாகும். ஆகவே காட்சியும் இவ்விடத்து உளதாகும் என்றவாறு.

4.2.1

வெறும் சாட்சி மாத்திரையாய் நிற்புழியும் காட்சி உதிப்பதில்லை

4.3

இதனைச் செய்து இதனை அடைவோம் என்ற செயற்றுணிவோடு விளைவதே நோக்க மாகும்(intention). பிறவேட்கைகள் செய்நிலை பிறப்பதற்கு காரணமாக இருக்கின்றதேத் தவிற, இன்ன செயல் என்ற துணிவோடு இருப்பதில்லை.

4.3.1

ஒன்று செயல்படுங்கால், இன்ன வகை செயல் இஃது எனும் செயலியல்பு அறிவினைத் தருவது அச்செயல நிறுத்தி அதனோடு ஊர்ந்து வரும் இந் நோக்கமே யாம்.

4.4

காட்டப்படு பொருளை உயிர்கள் கண்டு அது அவர்கட்கு காட்சியாமாறு, இறைவனே அதனை பிறப்பிக்கக்கூடிய நோக்கினையும் பதிவித்தும் அருளியும், அதனைச் செயலாக மாற்றுதற்குரிய கரணங்களையும் தந்து உதவுகின்றான்.

4.5

இறைவன் எழுப்பும் நோக்குகளோடு உயிர்கள்பால் எழும் நோக்குகள் ஒன்றியும் ஒன்றாதும் வேறுபட்டும் நிலவும். ஒன்றிய பொழுது உளதாகும் செயல்கள் புண்ணியங்கள்; ஒன்றாத பொழுது உளதாகுபவை பாவங்கள. உள் அவிழும் இதவகித உணர்வுகள் வழி, இறைவன் தன் நோக்கொடு உயிர்கள் தம் நோக்கு ஒன்றிச் செல்கின்றதா அல்லையா என்பதை உணர்த்துகின்றான்.

4.6

இறை நோக்கொடு ஒன்றிய நோக்கின் வழி உருவாகும் செயல்கள், இறையருள் பதிவதற்கு --- சத்திநிபாததிற்கு--- ஏதுவாகி, போதம் புகட்டி அஞ்ஞானவிருள் கடியும். ஒன்றாதவை இறையருள் பதிவை தடை செய்வதோடு அல்லாது, அஞ்ஞானவிருளை ஆணவத்தில் வீழ்த்துவதின் வழி மிகுக்கும். ஆணவ இருளை அதிகரிக்கும் வழி பாவம் எனும் உணர்வின் தோற்றமாம்

தொடரும்

சிவகுருத்துவம்-6

4.7

இறைவன் ஓர் நோக்கொடு ஒன்றினைக் காட்ட, அந்நோக்கை அறிந்தோ அறியாதோ தன் நோக்காய் ஆக்கியக்காலே, இறைவன் காட்டுவதைத் தான் காணமுடியும். இத்தகைய காட்சியாலேயே திரிபின்றிய மெய்யறிவு சித்திக்கின்றது. இறைநோக்கை தன் நோக்காக ஆக்காது, தற்போத கற்பனா வயப்பட்டு பிறநோக்குத் தேற்றி காட்சிகளைப் பெறுங்கால், ஐயமும் மருட்கையும் போக்கா திரிபு காட்சிகள், பிழையறிவுகள் சித்திக்கின்றன.

4.7.1

நீங்கா நிற்கும் ஐயமும் உடன் தோன்றும் மருட்கையும் உளவாகும் அவதியும் கலக்கமும் இன்னும் இதுபோன்றவை வழி பிழைத்து செல்லும் போக்கு அவ்வாறு செல்லும் ஆன்மாவிற்கு உணர்த்தப்படுகின்றது.

4.8

இறை நோக்கினைத் தவிர்த்து வேறு நோக்குகள் தோற்றாது காணுதல் செய்து காட்சிகளைப் பெற்று மகிழும் உயிர்கள் மாட்டே உண்மையறிவு மெய்யாகும். இத்தகையோரே தொல்காப்பியர் பகர்ந்தவாறு ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவர்’ ஆவர்.

4.8.1

இவ்வாறு கண்டு காட்சிகள் பெற்று சிந்தித்துத் தெளிந்து கூறுவதனைத்தும் உண்மையாகவே இருக்கும் என்பதால், இவர்கள் யாக்கும் நூல்கள் முதல் நூல்கள் ஆகின்றன.

4.8.2

இவை கூறுவதனைத்தும் உண்மைகளாகவே இருக்க, அதனைப் பற்றிக் கொண்டு இன்னும் ஆழம் செல்ல முதலாக மூலமாக இவை இருப்பதால், வழி நூற்களும் சார்பு நூற்களும் தோன்றுதற்குக் காரணமாக இருப்பதால், இவை முதல் நூல்கள் ஆகின்றன. பொய் நூற்களுக்கு இப்பண்பு இல்லையாம்

4.9

இறைநோக்கொடு தன் நோக்கினை ஒன்றாக்கி தற்போதம் இழந்து சிவபோதம் மேலோங்கி நிற்க, இந்த முதல் நூல்கள் எழுவதால், இவற்றை ஆகமங்கள் என கூறத் தகும்.

4.10

தன்நோக்குத் தோற்றும் தற்போத செருக்கு உயிர்கட்கு எவ்வாறெனின், பசுக்களின் அறிவு முற்றிலும் பிரகாசமானதாகவும், முற்றிலும் இருளானதாகவும் இல்லாது, இருளொடு கலந்த ஒளியாய் இருப்பதால் என்க. இருளின் ஈர்ப்பும் ஆன்மாக்கள அதில் அடங்கி நிற்றலும், தற்போத முனைப்பு எழுதற்குக் காரணமாகின்றன. இதனால் இறை நோக்கு தெளியப்படாத ஒன்றாய் அல்லது தெளிந்தும் குறைபாடு உடையதாய் மதித்திடும் போக்கும் சித்திக்க, பிறழ்ச்சி அறிவுகள் தோன்றும் அகச் சூழ்நிலைகள் பிறக்கின்றன.

4.10.1

இருளின் ஈர்ப்பிற்கு விழாது அகத்தில் போராடி அதனை வென்று சிவப்பிரகாசத்தில் அடங்கிடும்போது, தற்போத முனைப்பு எழாது போகின்றது. அதனால் இறைநோக்கொடு அறிந்தோ அறியாதோ ஒத்துப்போய் ஒன்றாகும் நிலை பிறக்கின்றது.

தொடரும்

சிவகுருத்துவம்-7

ஐந்தாம் படலம் : முத்தி விளக்கம்

5.1

இறைநோக்கினோடு ஒன்றாவது தவிர்த்து வேறு இருப்பு நிலைகள் தோன்றா பக்குவத்தில், செய்யப்படும் அனைத்தும் சிவச் செயலன்றி, வேறலவாம். உன்னதம் உத்தமம் ஒவ்வுவது நல்லது உயர்ந்தது என்பனபோன்ற நந்நயங்கள் தோன்றுதற்கு இடனாக இவை இலங்கும்.

5.2

செய்வதனைத்தும் சிவச் செயலன்றி வேறு இலாமையால், இத்தகையோர் தன் பண்பாலும் குணத்தாலும் சிவனையே ஓர் வகையில் உணர்த்தி நிற்கின்றனர். சிவனை தன் இயல்பால், தன் செயல்களால் உணர்த்தும் பண்பால் இவர்கள் சிவஞானிகள் ஆகின்றனர்.

5.3

சிவன் நோக்கொடு முற்றிலும் ஒத்தலும் ஒடுங்கலும், பரத்துவம் அதன் பின் சிவத்துவம் எய்திய பிறகே வந்தமையும். சிவநோக்கொருமை அடைதலே முத்தி. இஃது அனைத்தையும் துறந்து கடந்து பரசிவத்துடன் முற்றிலும் ஒடுங்க வந்தமையும் ஒன்று.

5.4

பரசிவத்துடன் ஒடுங்கல், பரசிவம் தானாதல் அல்ல. தனது என்பதை தான் எனும் அகந்தையை முற்றிலும் கெடுத்து தற்போதம் எழாதே கிடப்பதாம்.

5.4.1

பரசிவம் தானேயாய் இருப்பது, என்றும் நிற்கும் ஆணையாய் அனைத்தையும் செலுத்தும் பரநோக்கொடு தான் முற்றிலும் ஒடுங்கி, தான் எனும் நினைப்பும் அற, பரசிவச் செயலைத் தவிர்த்து வேறு செயல் யாதும் கிஞித்தும் தோன்றா நிலையில் இருப்பதாம்

5.4.2

இதுவே நித்தியத்தோடு ஒன்றாகி மீண்டும் பிறந்துழா வகையில் பிறப்பறுத்து தான் நித்தியமாய் சத்தியமாய் இருப்பதுமாகும்.

5.5

இவ்விருப்பு நிலையில் போதகம் வேண்டாது போக, காண்பான் காணல் காட்சி என்பனபோன்ற அறிவாவத்தைகளும் நிகழ்ச்சியாகாது கழன்று விழும். அறியாதிருப்பது இன்னும் உண்டு என்ற நிலை எழாது போக குறித்து நிற்கும் நிலையும் கழன்று குறிப்புக் கால உணர்வும் ஆகவே சுட்டுக்கால உணர்வும் இன்றி எவ்வித வேட்கையும் எழா நிலை மெய்யாகும். காலவுணர்வு அற்ற நிலையில் அனுபவிக்கப்படும் ஞானமே சிவஞானம் என்பது.

தொடரும்

சிவகுருத்துவம்-8

ஆறாம் படலம்: ஆதிமூல இறைவன்

6.1
இறைவனின் அமலத் திரு எல்லா உயிர்களையும் சகசமாய் அவன் பால் ஈர்க்கின்றது. எல்லாத் திருவும் இவ் அமலத்திருவின் வெவ்வேறு வெளிப்பாடுகள் என்பதால், இவை அனைத்தும் உயிர்கள் தத்தம் உயர்வு தாழ்வு என்ற நிலைக்கேற்ப தன்பால் ஈர்க்கின்றன. இந்த ஈர்ப்பே, மேலான நிலையில் புண்ணிய விழைச்சுக்கள் தோன்றும் நிலைக்கலம், ஆதாரத் தலம்.

6.2

இந்த ஈர்ப்பின் வெளிப்பாடுகள் படிப்படியாக உலகிலும் ஒருவனது வாழ்க்கையிலும் உளதாகும் ஒன்றாம். ஓர் ஈர்ப்பின் வழி ஓருயிர் விழைச்சுத் தேற்றி செயல்பட்டு, வேண்டியது அடைந்து வேட்கையைத் தீர்க்க, இன்னொரு வேட்கை முன்னிதின் வேறாய் சற்று உயர்ந்ததாய் உதிக்கும். இவ்வாறு தோன்றி நின்று இல்லாது போய் பிறகு இன்னொரு வடிவில் தோன்றி மெய்யாகும் வேட்கைகள் படிப்படியாக உயர்ந்து உயர்ந்து சென்று கூர்ந்து முடிவில் சிவஞான வேட்கையாய், இறைவனோடு ஒன்றித்து நிற்க வேண்டும் என்ற முத்தி வேட்கையாய் மலர்கின்றது,

6.2.1

இவ்வேட்கைத் தீரும்போது பிற வேட்கைகள் தோன்றாதொழிவதின், இது முத்திவேட்கையாகின்றது. இறை நோக்கொடு முற்றிலும் ஒன்றிய நிலையில், பரசிவத்தொடு முற்றிலும் ஒடுங்கிய நிலையிலே இந்த வேட்கை அறுகின்றது. இதன் வழி எல்லா வேட்கைகளும் அறுகின்றன. வேட்கையற்ற நிலையே இருப்பு நிலையாகின்றது.

6.3
இவர்கட்கு மறு பிறப்பு இல்லை--- பிறப்பிற்குக் காரணமாகிய வேட்கைகள் எழாது போவதாலும் இதன் மூலமாகிய அறியாமை இருள் முற்றிலும் கடியப் படுவதாலும்

முற்றும்

Satygraha: Why it succeeds?

Since I began my studies of Sacred Tamil I have been fascinated by the political method of Appar who battled with the great Jain Emperor and finally defeated him and who became a Saivite. The Method of War is what is called satyagraha now, recovered by Gandhi and used successfully to regain independence of India. Now we have Anna Hazare who may turn out to be another Mahatma ready to fight bitterly but nonviolently for the elimination corruption that has become a disease in India

My question has been : why such individuals succeed so greatly and against political forces that are immensely powerful ?.

It suggested to me a Political Philosophy implicit in the metaphysics of Saiva Siddhanta that I called AruLarusu or Deiocracy.

I think as noted by Punitavatiyar: atuLee ulkalellam aaLvippatu: it is Divine Grace that rules the world whatever political system. In the face of Deiocrazy such as that of Appar Gandhi and possibly Anna Hazare, all the political systems fall off and all because such individuals posses a spiritual magnetism that appeals to all and in the face of which they are also prepared to sacrifice immensely for the cause;

The following is the final chapter of my book Siva Gurutttuvam( Tamil) that I wrote in the nineties and which is uploaded now at:

https://sites.google.com/site/ulagansbooks/civakuruttuvam

I have translated this brief chapter as my first input into Deiocracy, the Tamil AruLarusu

Loga

The Sixth Chapter: the Primordial BEING

6.1

The natural inner and eternal purity of BEING(amalat tiru) attracts all jivas unto Himself. All aesthetically appealing beauties are manifestation of this Inner Purity- a state of being devoid of the Malam – the primordial pollutant or defiler. There are various differences in these inner and natural spiritual beauties and the souls are attracted to them according to their developmental stages. At the very high stages these magnetic pulls unto the Pure BEING result in desires for social actions that are meritorious (puNNiyam)

6.2


Such magnetic pulls unto the divine become also manifest in stages in the life of the various human beings. There is desire because of a certain pull unto BEING which sustains some desires leading to some actions. Once the sought desires are attained, there is the emergence of another and which is normally higher. These desires which originate thus get sustained in social actions only to be displaced by higher motivations finally leading to metaphysical desire of seeking the Njaanam, the Absolute Understanding. This is also the desire for Moksa

6.2.1

When the desire for Moksa is sustained all other desires fall off as quite irrelevant and because of which it becomes the Final Desire. The existential intention fuses with that of BEING(Siva) and which dissolves all other desires making the soul absolutely Pure

6.3
For such individuals there is no rebirth- existential repetition as they become absolutely Pure, devoid of Malam and hence freed from all desires:

Note: I suspect the Mahatmas who are politically successful and through nonviolence are individuals who desire nothing else but Moksa and who in their behaviour disclose the presence of BEING(Sivam) and because of which they appeal immensely to ordinary people also in a way quite spiritual








பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=சிவகுருத்துவம்&oldid=8163" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 8 செப்டெம்பர் 2011, 06:43 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,751 முறைகள் அணுகப்பட்டது.