உணவும் அனுபவமும் மருந்தாகும் - பகுதி - 1

மரபு விக்கி இருந்து

Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:01, 27 ஆகஸ்ட் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தமிழ்த்தேனீ


 


உணவே மருந்து,மருந்தே உணவு "மிகினும் குறையினும் நோய்செய்யும்."


 

”உணவு இடைவேளை ”என்பது ஒரு முறை உண்பதற்கும் அடுத்த முறை உண்பதற்கும் உள்ள இடைவேளை நேரக் கணக்குதான்.

 

குறைந்த அளவு ஐந்து மணி நேரத்துக்கு இடைவேளை விடுவது நல்லது. ஆகவே காலை எழுந்தவுடன் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு ஐந்து மணி நேரம் இடைவேலைவிட்டு மதிய உணவை உண்பது ஆரோக்கியமாகும்.

 

காலையில் சிற்றுண்டி ,மதியம் வயிறு நிறைய உணவு இரவு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய பழம், பால், அல்லது எளிமையான உணவுகளை சற்றே குறைவாக உண்டுவிட்டு சற்று நேரம் காலார நடந்துவிட்டு அதன் பிறகு படுத்தல் நிம்மதியான தூக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

 


”தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன்
தலைவா உன் வருகைக்கு தவமிருந்தேன் ” என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது

 

நம் முன்னோர்கள் தலைவாழை இலையை சுத்தமான நீரினால் கழுவி அந்த இலையின் நுனிப்பக்கம் உணவு உண்ண உட்கார்ந்திருப்பவரின் இடது கைக்கு நேரே இலையின் நுனிப்பக்கமும், வலது கைக்கு நேரே இலையின் விரிந்த பகுதியும் வருமாறு இலையைப் போடுவர்.


இதற்கு முக்கியமான காரணம் பெரும்பான்மையோர் வலது கையால் உண்ணும் பழக்கம் உள்ளவர்கள்.

 

அது மட்டுமல்லாது நம் கைக்கு வாகாக இலையின் நுனிப்பக்கம் சர்க்கரை கலந்த வாழைப்பழமும், தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்றவைகளையும் பறிமாறுவர். இலையின் விரிந்த பக்கத்தில் காய்கறிகள், கூட்டு வகைகள், பச்சடி வகைகளைப் பறிமாறுவர்.

 

பொறித்த அப்பளம் வற்றல், வறுவல் போன்றவைகளை இரு பிரிவாக இருக்கும் இலையில் நம்பக்கமாக பறிமாறுவர்.

 

நம் முன்னோர்கள் இலையை தரையில் விரித்து உணவு வகைகளைப் பறிமாறிவிட்டு மணைப்பலகை போட்டு அதில் உட்கார்ந்து உண்ணுவர்.

 

இதன் ப்ரதான காரணம் நம் வயிறு கொள்ளும் அளவு நாம் குனிந்து உண்ணும் போது சரியான அளவைக் கொள்ளும்.

 

அதேபோல நீர் அருந்தும் போது நம் உதடுகள் பாத்திரத்தில் படாதவாறு மேலே தூக்கி கழுத்தைப் பின்பக்கமாக சாய்த்து அருந்துவர். கழுத்தை பின்பக்கமாக சாய்த்து நாம் நீர் அருந்தும்போது உணவுக் குழல் மடங்காமல் சீராக நீரை உள்ளே அனுப்பும் வகையில் சமனமாக தடையில்லாமல் இருக்கும்.

 

தலைவாழை இலயைப் போட்டு அந்த இலையைச் சுற்றிலும் நீரால் வட்டம் போடும் பழக்கம் இருந்தது. இதற்கு என்ன காரணம் என்றால் தரையில் ஊறும் பூச்சிகள் இலைக்கு வராமல் தடுக்கவே இந்த நீர்வட்டம்.

 

அதன் பிறகு இலையில் சூடான அன்னத்தைப் பரிமாறுவர். அந்த சாதத்தின் மேல் நெய்யை சிறிதளவு சேர்ப்பர். உண்ணத் தொடங்கும் போது நம் முன்னோர் அந்த அன்னத்தை நெய்யுடன் கலந்து சற்றே குறைவான அன்னத்தை வாயில் படாமல் நேரிடையாக உணவுக் குழல் மூலமாக இரைப்பைக்குள் அனுப்புவர்.

 

இந்த நெய்யுடன் கலந்த அன்னம் நம் தொண்டைக் குழாயை சுத்தம் செய்து வழுவழுப்பாக அன்னம் தடையின்றி உள்ளே செல்லத் தக்கதாக மாற்றும். ஆமாம் நம் உடலும் இயந்திரமே
அவ்வப்போது இது போன்ற (Lubrication) எண்ணையிடுதல் தேவைப்படுகிறது.

 

அதன் பிறகு அன்னத்தை நன்றாக நொறுக்கிப் பிசைந்து அந்த அன்னத்தின் நடுவில் சற்றே குழிவாக ஆக்கி குழம்பை ஊற்றிக்கொள்வர். குழம்பு இலையைவிட்டு ஓடாமல் இருக்க இந்த அமைப்பு உதவும். சிறிது சிறிதாக அன்னத்தை அந்தக் குழம்புடன் கலந்து கவலம் கவளமாக உணபர். அவ்வப்போது கறி ,கூட்டு இவைகளைக் கலந்து ருசியான உணவாக மாற்றி உண்பர்.
’நொறுங்கத் தின்றால் நூறு வயது ” என்றொரு சொல்வழக்கு உண்டு. வாயில் அன்னத்தை இட்டு பற்களால் நன்றாகக் கடித்து நொறுக்கும் போது நாவிலிருந்து சுரக்கும் உமிழ்நீருடன் கலந்து நன்றாக அறைபட்டு உணவு இரைப்பைக்கு செல்லும்போது ,மீண்டும் உணவை அரைக்கும் இயந்திரமான இரைப்பைக் எந்தவித கடினமும் இல்லாமல் இப்படி உணவை அரைத்து உண்பதால் இரைப்பை நெடுங்காலம் சீராக வேலைசெய்ய தடையில்லாமல் இருக்கும் என்பதே நோக்கம்.





என்று நம் ஆன்றோர்கள் மிக அழகாக திட்டமிட்டு
அறுசுவையையும் சேர்த்து அளித்தனர்
சாதாரணமாக நாம் உண்ணும் உணவில்
நம்முடைய பெரியவர்கள் எல்லாவித மருந்துகளையும் ,
அதாவது இயற்கையாக நமக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அளிக்கக்கூடிய அத்துணை காய் கறிகள், பழங்கள்,இலைகள்,
அனைத்தையும் நம் உணவோடு இரண்டற கலந்து அவைகளையே உண்டு வந்தனர்
தலை வாழை இலையில் உணவு உண்ணும்போது
அதில் பறிமாறப்படும் சூடான சாதம், காய்கறிகள்,கூட்டுகள்
ஆகிய உணவு வகைகள் இயற்கையாகவே தங்களுடைய சூட்டினால் வாழை இலையில் இருக்கும் வாழைச் சாறை க்ரகித்துக் கொண்டு அதுவே நமக்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருக்கும் விஷத்தன்மையை நீக்கிவிடும்.

 

மற்றும் நம்முடைய உணவு வகைகளில் நமக்குத் தேவையான அத்துணை சக்தியையும் அளிக்குமாறு சமைத்தனர்.


1.பொங்கலில் பாசிப்பருப்பு குளிர்ச்சியையும், நெய் கொழுப்பையும் அரிசி மாவின் ஊட்டச் சத்தையும், அளிக்கும் ,அவைகள் நமக்குத் தேவையான புரதச் சத்துக்களை அளிக்க வல்லவை ஆனால் மிகைப்பாடாக நம் உடலில் சேரும் கொழுப்பு போன்றவைகளைக் கரைக்க அந்த உணவிலேயே இஞ்ஜி, மிளகு, கருவேப்பிலை போன்றவற்றை அதில் போட்டு நம் புரதச் சத்துக்களை நமக்குத் தேவையான அளவுக்கு கிடைக்கும்படி செய்தனர்.


2. அனைத்துக் காய்கறிகளையும் போட்டு செய்யும் கூட்டுகளில் நமக்குத்தேவையான அத்துணை புரதச் சத்துக்களும் கிடைக்கும்.


3.குழம்பு,அல்லது சாம்பார் என்று சொல்லப்படும் வகைகளில் மிளகு, சீரகம் வெந்தயம், போன்றவை கலக்கப் படுவதால் அவைகளும் நமக்கு நல்லதே செய்யும்.


4.ரசம்என்று எடுத்துக் கொண்டால் ரசம்,அதில் பலவகை ரசங்கள் உள்ளன, மிளகு ரசம் ,வேப்பம்பூ ரசம், தேசாவர ரசம், சீரகரசம் ,திப்பிலி ரசம் ,பூண்டு ரசம், போன்றவை நமக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. அதேபோல் நம் காய் கறிகளில், ,வாழைத்தண்டு,வாழைப்பூ போன்றவை மருந்தாகவே உபயோகமாகிறது. வாழை மரப் பட்டையிலிருந்து எடுக்கப் படும் சாறு பாம்புக்கடிக்கும் மருந்தாக உபயோகப்பட்டிருக்கிறது.பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்ய முன்பெல்லாம் பாம்புக்கடி பட்டவரை வாழைப்பட்டையில் படுக்கவைத்து, வாயில் வாழைச் சாற்றை செலுத்துவர்.


மரம் செடி கொடிகளிலிருந்துதான் அனைத்து மருந்துகளும் மூலிகை என்னும் பெயரில் கண்டு பிடிக்கப்பட்டன. மரம் என்னும் வார்த்தையிலிருந்து மருந்து என்னும் சொல் ஏற்பட்டிருக்கலாம். வேப்பிலையை மஞ்சளுடன் அரைத்து தோல்வியாதிகளைத் தீர்ப்பர். வில்வ இலையை பலவிதமான நோய்களுக்கு மருந்தாக உபயோகித்தனர். துளசி இலையை தேனில் அரைத்துக் கொடுத்து கபம் ,சளி போன்றவைகளுக்கு மருந்தாக உபயோகித்தனர். அதேபோல சர்ப்பகந்தி என்னும் செடி பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 

சுக்கு மிளகு, சீரகம்,கருவேப்பிலை, கடுகு,வெந்தயம், பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, போன்றவைகளும் , வாழைக்காய், அவரைக்காய், வாழைத் தண்டு, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், போன்ற பழ வகைகளும், அதி மதுரம் என்னும் ஒரு மரப்பட்டை தொண்டைப் புண் போன்றவைகளை குணப்படுத்தும் மூலிகை,மற்றும் தூதுவளை
போன்ற செடியின் இலைகள், துளசிச் சாறும் தேனும் கலந்து குழந்தைகளுக்கு ஏற்படும் சளி போன்றவைகளை கொடுத்து குணப்படுத்தி இருக்கிறார்கள்.

 

வேப்பிலை ,மஞ்ஜள், இவைகளை அரைத்து உஷ்ணத்தால் ஏற்படும் தோல் வியாதிகளுக்கும் பயன் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள்.

 

கொழுந்து வேப்பிலையை அறைத்துக் கொடுத்து குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் தேவை இல்லாத பூச்சிகளைக் கொன்று ஆரோக்கியத்தை மீட்டிருக்கிறார்கள்.

 

அதுவும் தவிர பண்டிகைக் காலங்களில் நமக்குத்தேவையான அளவைவிட அதிகமாக நம் உடலில் சேரும் தேவைஇல்லாத கொழுப்புகள்,போன்றவற்றைக் கரைக்க உபவாசங்கள்,  பத்திய உணவு வகைகள், தகுந்த காலத்தில் எள்ளிலிருந்து எடுக்கும் நல்லெண்ணைக் குளியல், போன்றவற்றைக் கண்டு பிடித்து, நம் உடல் ஆரோக்கியத்தை சமநிலையாக வைத்திருந்தார்கள். மிக முக்கியமாக நாம் உணவு உண்ணும்போது நம் கவனம் உணவில் மட்டுமே இருக்கவேண்டும். தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே உண்ணுவது, நடந்து கொண்டே உண்ணுவது. மேசையின் மீது அமர்ந்து உண்ணுவது போன்றவை நிச்சயமாக தீமையைத்தான் செய்யும்.

 

காலப்போக்கில், நாம் அனைத்தையும் மறந்து விட்டு வைத்தியரிடம் ஓடிக்கொண்டிருக்கிறோம். மறந்தும் வைத்தியரிடம் போகாமல் மரம் செடி கொடி களில் கிடைக்கும் உணவை உண்டு ஆரோக்கியம் காப்போம்.

 

நம் உடலில் எதையும் மிகவிடாமலும், குறையவிடாமலும் சமநிலையில் நம்மை வைத்திருக்க உதவும் காரணிகளை நம் முன்னோர் உணவு வகைகளிலேயே வைத்திருந்தனர்.

மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்."
- மாகவி பாரதியார்


என்று பாரதியார் சொன்னதன் பொருள் நம்மிடம் இருக்கும் திறமைகளை அயல்நாட்டாரும் மதிக்கும் வண்ணம் அவைகளை நாம் முறைப்படுத்த வேண்டும் என்பதே. ஆனால் நாம் அதைத் தவறாக அர்த்தம் கற்பித்துக் கொள்கிறோம். அயல்நாட்டார் மதித்தால்தான் நாமும் மதிக்க வேண்டுமென்று.

 

நமக்கு எப்போதுமே நம் நாட்டவர் சொன்னால் மதிக்காத குணமும் ,அதையே வெளிநாட்டவர் சொன்னால் மதிக்கும் குணமும் உண்டு.

 

ஒரு பழமொழி உண்டு ”தோட்டத்துப் பச்சிலை
மூலிகையாகாது’ என்று.


நம் தோட்டத்தில் இருப்பதே தகுதிக் குறைவாய்ப் போகிறது. நம் தோட்டத்தில் இருக்கும் பச்சிலையை எதேச்சையாக பார்த்த வெளி நாட்டார் சொன்னால் உடனே அந்தப் பச்சிலைக்கு வேலி போடுவது நம் வழக்கம்.

 

மஞ்சள் நம் முன்னோர்களால் கண்டு பிடிக்கப்பட்ட கிருமி நாசினி, இங்கு அதை நாம் அதை உபயோகிக்கிறோமே தவிர ,அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு ஆராய்வதில்லை. ஆனால் அமெரிக்கா அதற்கு உரிமை கொண்டாடினால் மட்டும் நமக்கு கோவம் வரும், அப்போதுதான் அந்த மஞ்சளின் மகிமையே நமக்கு தெரியும்.


விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாதே என்று நம் முன்னோர்கள் அக்காலத்தில் மெய்ஞானம் என்றும், மூலிகை வைத்தியம் என்று சொல்லிச் சென்றார்கள்.

 

நாக்கிற்கு சுவையூட்டக்கூடிய சமையல் எதுவாயினும் அவை எல்லாமே வயிற்றுக்கும், நம் உடலுக்கும் ஏற்றதாக இருக்கும் என்று சொல்லிவிடமுடியாது. அப்படி அஜீரணம் அல்லது ஒவ்வாமை என்னும் நிலை வந்து அவதிப்படாமல் இருக்க ஒரு வழி சொல்லுகிறேன்.

 

இதுவும் முக்கியமாக சமையல் குறிப்பில் சேர்க்கப்படவேண்டியதே.

 




மற்றும் நம்முடைய உணவு வகைகளில் நமக்குத் தேவையான அத்துணை சக்தியையும் அளிக்குமாறு சமைத்தனர்
1.பொங்கலில் பாசிப்பருப்பு குளிர்ச்சியையும், நெய் கொழுப்பையும் அரிசி மாவின் ஊட்டச் சத்தையும், அளிக்கும் ,அவைகள் நமக்குத் தேவையான புரதச் சத்துக்களை அளிக்க வல்லவை ஆனால் மிகைப்பாடாக நம் உடலில் சேரும் கொழுப்பு போன்றவைகளைக் கரைக்க அந்த உணவிலேயே இஞ்ஜி, மிளகு, கருவேப்பிலை போன்றவற்றை அதில் போட்டு நம் புரதச் சத்துக்களை நமக்குத் தேவையான அளவுக்கு கிடைக்கும்படி செய்தனர்.

 

2. அனைத்துக் காய்கறிகளையும் போட்டு செய்யும் கூட்டுகளில் நமக்குத்தேவையான அத்துணை புரதச் சத்துக்களும் கிடைக்கும்,
அதுவும் தவிர பண்டிகைக் காலங்களில் நமக்குத்தேவையான அளவைவிட அதிகமாக நம் உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்புகள், போன்றவற்றைக் கரைக்க உபவாசங்கள்,பத்திய உணவு வகைகள், தகுந்த காலத்தில் எள்ளிலிருந்து எடுக்கும் நல்லெண்ணைக் குளியல், போன்றவற்றைக் கண்டு பிடித்து, நம் உடல் ஆரோக்கியத்தை சமநிலையாக வைத்திருந்தார்கள். காலப்போக்கில், நாம் அனைத்தையும் மறந்து விட்டு வைத்தியரிடம் ஓடிக்கொண்டிருக்கிறோம். மறந்தும் வைத்தியரிடம் போகாமல் மரம் செடி கொடிகளில் கிடைக்கும் உணவை உண்டு ஆரோக்கியம் காப்போம்.

 

நம் முன்னோர்கள் விக்ஞானம் என்று சொன்னால் புரியாத அக்காலத்திலேயே மெய்ஞானம் என்றும் , மூலிகை வைத்தியம்,பத்தியம், உண்ணா நோன்பு என்றும் பலவகைகள் ஏற்படுத்தி சென்றிருக்கிறார்கள்நமக்கெல்லாம் சில சமையம் நாம் சாப்பிடற உணவுப் பொருட்கள் ஒத்துக்காமலோ, அல்லது அதிகமா சாப்ட்டதுனாலே ஜீரணம் ஆகாம அஜீரணத்தாலேயோ காய்ச்சல் வரும் , அப்பிடிக் காய்ச்சல் வந்தால் பெரியவர்கள் சொல்லுவர் ஒரு வேளை வயிற்றை காயப் போடு நிறைய தண்ணீர் குடி அப்பிடீன்னு. அதுதான் ”லங்கணம் பரம ஔஷதம்” லங்கணம் அப்பிடீன்னா வெறும் வயிறு, ஒன்றும் சாப்பிடாமல் வயிற்றைக் காலியாக வைத்திருத்தல் அப்பிடின்னு பொருள்.

 

பரம ஔஷதம் அப்பிடீன்னா நல்ல மருந்து அப்பிடீன்னு பொருள். மாசத்துக்கு ஒரு வேளை சாப்பிடாம இருந்து வயித்துக்கு உணவை செரிக்கிற ஜீரண உறுப்புகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தா காய்ச்சல் சரியாயிடும்னு சொல்லுவாங்க. இதை மனசிலெ வெச்சுண்டுதான் பெரியவங்க நமக்கு ஒரு சரியான வழியைக் காமிச்சிருக்காங்க, அது என்ன தெரியுமா ”விரதம்” . அப்பிடீன்னா உண்ணா விரதம். ஆமாம் மாசத்துலெ ஒரு நாள் எதுவும் சாப்பிடாம விரதம் இருக்கறது,அதுக்குதான் சிவராத்திரி அன்னிக்கு , சூரிய கிரகணம் சந்திர கிரகணம், ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி,பௌர்ணமி, அமாவாசை இப்பிடீ ஒவ்வொரு மாசத்துக்கு ஒருநாள் எப்பிடியாவது ஒருநாள் எதுவும் சாப்புடாம இருந்துட்டு மறுநாள் நல்ல சாப்பாடு சாப்படலாம்,இப்பிடீ மாசத்துக்கு ஒருநாள் சாப்பிடாம இருந்தா நமக்கு வர நோய்கள்ளேருந்து ஓரளவு தப்பிக்கலாம்னு பெரியவங்க சொல்வாங்க. . அப்பிடி விரதம் இருக்கும் போது மனசைக் கட்டுப்படுத்தி ஒரு மாசம் பூரா நமக்கு சாப்பிடறதுக்கு எல்லாம் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லும்படியாக அந்த நேரத்திலே நமக்குத் தெரிஞ்ச நல்ல ஸ்லோகங்களை உச்சரித்தால் மனமும் உடலும் ஒருமைப்படும்


என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன்:-

ஒருமுறை என் தாயாருக்கு தென்னைமரத்து தேள் கொட்டிவிட்டது. நட்டுவாக்களி என்று சொல்வார்கள், அது கொட்டினால் பிழைப்பதரிது. வயது அவருக்கு 60 க்குமேல், மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு சென்று ,ஆங்கில முறைப்படி வைத்தியம் செய்தும் கடைசியில் மருத்துவர் சொன்னார் .உறுதியாக எதுவும் சொல்ல முடியாது, உடல் முழுவதும் விஷம் பரவி இருக்கிறது. பிழைத்தால் அதிசயம் என்று .கவலையோடு உட்கார்ந்திருந்தோம் செய்வதறியாமல்.

 

வாசலில் ஒருவர் வந்து பசிக்கிறது ஏதாவது இருந்தால் உண்ணக் கொடுங்கள் என்றார். நானோ கவலையில் இருந்ததால் போய் பிறகு வாருங்கள் என்றேன். உடனே என் தாயார் அப்போதிருந்த நிலையிலும்  அப்படிச் சொல்லாதே உள்ளே சென்று அவருக்கு ஏதேனும் உண்ணக் கொடு என்றார்கள். நான் வேண்டா வெறுப்பாக ஒரு இலையில் அவருக்கு என் வீட்டில் இருந்ததை அளித்தேன். அவரும் உண்டார், கை கழிவி விட்டு என்னிடம் இந்த அம்மாவுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார். நடந்ததை சொன்னேன், அவர் தம்பீ ”ஏழை சொல் அம்பலம் ஏறாது”
நான் சொல்வதைக் கேட்கிறாயா என்றார். நானும் சரி என்றேன். அவர் உடனே ஓடிப்போய் படிகாரம் பெரிய கட்டியாய் வாங்கி வா என்றார்,வாங்கி வந்தேன்.

 

பத்து பெரிய பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார், அதையும் கொண்டு வந்தேன் என் தாயாரின் கையில் தேள் கொட்டிய இடத்தில் படிகாரத்தை வைத்து தண்ணீர் ஊற்றிக்கொண்டே கொண்டே இருக்கச் சொன்னார்.  அரைமணி நேரத்தில் என் தாயாரின் உடலில் நீலம் குறையத் துடங்கியது, என் தாயார் பிழைத்தார்-

மருத்துவரால் கைவிடப்பட்ட என் தாயார் பிழைத்தார்!

 

இப்போது சொல்லுங்கள் நம் முன்னோர்கள் நிறைய நுணுக்கங்கள் தெரிந்தவராக இருந்தனர் அவர்கள் செய்த ஒரே தவறு நுணுக்கங்களை அடுத்த தலைமுறைக்கு சொல்லாமல் சென்றதுதான்.

 

நாமும் நம் பெரியோர்கள் சொன்ன எளிய வைத்திய முறைகளை ஆராய்ந்து பரிசோதனைக்குட்படுத்தி பிறகு நிறைய மருந்துகள் இயற்கையாகவே பக்க விளைவில்லாத மருந்துகள் செய்யலாம் என்பதே என் கருத்து.

 

இப்போது என் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அனுபவத் தொகுப்பை இங்கே அளிக்கிறேன். ஆனால் நான் சித்தர் அல்ல!

 

1. எங்கள் தெருவில் இருந்த ஒரு வாலிபன் ஓட்டிவந்த ஹீரோ ஹோண்டா திடீரென்று சறுக்கியது கீழே விழுந்து தேய்த்துக்கொண்டே சென்றது, நெற்றியில் காயம் ,ரத்தம் வழிந்தது அந்த வாலிபன் கையால் நெற்றியை அழுத்தியபடி இருந்தார். அதைக் கண்ட நான் எதிரே இருந்த வெற்றிலைபாக்கு கடைக்கு சென்று தீக்ககுச்சியை உரசி கைக்குட்டையின் ஒரு ஓரத்தை பற்றவைத்து கரியாக்கி, அதில் கொஞ்சம் வெல்லம், சுண்ணாம்பு இரண்டையும் கலந்து உள்ளங்கையில் வைத்து நன்றாக சூடு பறக்க தேய்த்துக் குழைத்து நெற்றியிலிட்டேன், ரத்தம் வருவது நின்றது, ரெண்டு நாளைக்கு தண்ணி படாமே பாத்துக்கோங்க என்றேன் , இரண்டே நாளில் அந்தப் பற்று உதிர்ந்தது, காயமும் ஆறியது, அது மட்டுமல்ல காயம் பட்ட வடுவும் குறுகிய நாட்களிலே மறைந்தது.


2. அந்த குளிர்சாதன பேருந்தில் ஒருவர் இருமிக்கொண்டே வந்தார், பேருந்து ஓரிடத்தில் நின்றது, யாரெல்லாம் காப்பி சாப்படறீங்களோ சாப்டுட்டு சீக்கிறம் வாங்க என்றார் ஓட்டுனர். ஒரு மளிகைக் கடையில் கொஞ்சம் சீரகம் வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறி இருமிக்கொண்டிருந்தாரே அவரிடம் கொடுத்து வாயிலே அடக்கிக்கோங்க, அப்பிடியே கடிச்சி அந்த சாற்றை மட்டும் முழுங்குங்க என்றேன், சென்னை வந்து சேரும் வரையில் இருமல் சத்தம் கேட்கவே இல்லை. சென்னைக்கு வந்து இறங்கும்போது அந்த இருமல்காரர் என்னிடம் வந்து சார் நீங்க சொன்ன மருந்து அமிர்தம் சார்,உடனே என் இருமல் நின்னு போச்சு என்றார்.


3. வில்லிவாக்கத்திலே இருக்கும்போது எங்கள் பக்கத்து குடித்தனக்காரரின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அழுகையை நிறுத்தவே இல்லை. அந்தக் குழந்தையை வாங்கி அதன் காதை தொட்டேன், வீறிட்டு அலறியது. ஒரு தடிமனான படுக்கை விரிப்பை எடுத்து அதில் அந்தக் குழந்தையை நடுவிலே விட்டு விட்டு அந்த படுக்கை விரிப்பின் ஒரு பக்க இரு முனைகளையும் கெட்டியாக ஒருவரைப் பிடிக்கச் சொல்லி மரு பக்கத்தின் இரு முனைகளையும் நான் பிடித்துக்கொண்டு மூன்று முறை குழந்தையை இரு ஓரத்துக்கும் உருளுவது போல படுக்கை விரிப்பை தாழ்த்தியும் ,உயர்த்தியும் செய்தேன், குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு சிரித்தது.

 

ஆமாம் குழந்தைக்கு உரம் விழுதல் என்று ஒன்று உண்டு, அப்படி உரம் விழுந்தால் அதைக் கண்டு பிடிக்க காதைத் தொட்டால் போதும் ,குழந்தை இன்னமும் அதிகமாக வீறிடும், அப்படிக் கண்டு பிடித்தால் இப்படி படுக்கை விரிப்பை உபயோகித்து செய்தால் குழந்தைக்கு உரம் விழுந்திருப்பது நீங்கும்.

 

4. ஒரு முறை என் நண்பர் உணவு விடுதியில் அவருக்குப் பிடித்தமான பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு செரிமானம் ஆகாமல் அவதிப்பட்டார்.  அவரிடம் கொஞ்சம் புளி, கொஞ்சம் சீரகம் இரண்டையும் கலந்து வாயில் போட்டு மெல்லும்படி சொன்னேன் சில நிமிடங்களில் அவர் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற்றார்.

5. ஒரு முறை ஒரு பெண்மணி திடீரென்று ஏதோ பூச்சி கடித்துவிட்டது அதனால் உடம்பெல்லாம் தடிமனாக ஆங்காங்கே வீங்கிவிட்டது என்றார். அவருக்கு ஒரு மலைவாழைப் பழத்தின் உள்ளே பெருங்காயம் வைத்து உண்ணச் சொன்னேன். சில மணித்துளிகளில் அவருடைய வீக்கங்கள் வடிந்தன.


6. சில நேரங்களில் குழந்தைகள் எதற்காக அழுகிறது என்றே தெரியாமல் அழுது கொண்டே இருக்கும், எதையோ பார்த்து பயந்தது போல் மிரண்டு மிரண்டு அழும்.அப்படிப்பட்ட நேரங்களில் கொஞ்சம் திரு நீற்றை எடுத்து மன சுத்தியுடன், “ஓம் ஹரீம் ஸ்ரீம் க்லீம் ஜம் மனசா தேவ்யை நமஹ: ” என்னும் ஸ்லோகத்தை ஜரத்காரு தேவியியை நினைத்து ஜபித்துவிட்டு குழந்தையின் நெற்றியில் பூசினால் உடனே குழந்தை அழுகையை நிறுத்தும். 


அல்லது வயிற்று வலியால் அழுதால் ஒரு வெற்றிலையில் கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி அதை அடுப்பிலே காட்டி இளஞ்சூடாக வயிற்றில் போட்டு போட்டு எடுத்தால் வயிற்று வலி நீங்கி புன்னகை பூக்கும் குழந்தை.


7. முகத்திலோ மற்ற ஏதேனும் உடல் அவயவங்களில் காயம் ஏற்பட்டு அந்தக் காயத்தின் விளைவாக கரும் வடு ஏற்பட்டால் மஞ்சளையும் தேங்காய் எண்ணையையும் கலந்து பூசி வந்தால் அந்த கரும் வடு மறைந்து மீண்டும் சருமம் பளிச்சிடும்.


8. பொதுவாக மாம்பழக் காலங்களில் மாம்பழம் சாப்பிட்டதன் விளைவாக வரும் வயிற்றுப் போக்கை நிறுத்த அந்த மாம்பழத்தின் கொட்டையில் இருக்கும் மாம்பருப்பை எடுத்து அடுப்பிலே சுட்டு அந்தப் பருப்பை உண்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.


9. நம் உடல் உஷ்ணத்தினால் பாதிக்கப்பட்டு வரும் வயிற்று வலியை நீக்க ஒரு கைப்பிடி வெந்தயத்தை எடுத்துக்கொண்டு அதை அப்பிடியே வாயில் போட்டு கடிக்காமல் முழுங்கி விட்டு அதை முழுங்க உதவியாக ஒரு டம்ளர் மோரை குடித்தால் உஷ்ணம் குறைந்து உடனே வயிற்று வலி நிற்கும்.

 

10. ப்ரயாண காலங்களில் வெய்யிலில் ப்ரயாணம் செய்யும்போது வெய்யிலின் பாதிப்பு இல்லாமல் இருக்க எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது அதைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரையை,அல்லது சிறிதளவு உப்பை கலந்து நீரும் கலந்து குடித்துக்கொண்டே இருந்தால் ப்ரயாணக் களைப்பும் தீரும், உடல் சூடும் சமனப்படும்

11.குளிர் ப்ரதேசங்களில் பயணப்படும்போது சற்றே இஞ்சி கலந்த சீரகத்தையும் , சில மிளகுகளையும் கலந்து இடித்து வைத்துக்கொண்டால் அதனுடன் வெல்லம் கலந்தோ,அல்லது சர்க்கரை கலந்தோ பானம் தயாரித்து குடித்தால் குளிர் நிற்கும்.

12.ஜலதோஷத்தினாலோ, அல்லது தொண்டைப் புண் ஏற்பட்டு தொண்டைக் கரகரப்பு ஏற்பட்டால் கொஞ்சம் சுண்ணாம்பை தேங்காய் என்ண்ணையுடன் கலந்து தொண்டைப் பகுதியில் தடவினால் விரைவில் குணமாகும்.

 

13. ஒரு முறை நாங்கள் குடியிருந்த வீட்டில் இரவில் நல்ல தூக்கத்தில் விரலில் ஏதோ கடித்ததைப் போன்ற உணர்வு, சிறிது நேரத்தில் கடுக்கத் தொடங்கியது, தூக்கம் கலைந்து விளக்கை எரியவிட்டுப் பார்த்தேன், கொசு வலையின் ஓரத்திலே சாதுவாக உட்கார்ந்திருந்தது ஒரு தேள்.

 

அந்த வலியையும் பொறுத்துக்கொண்டு சமையலறைக்கு சென்று கிடுக்கியை எடுத்து வந்து அந்தத் தேளை கிடுக்கியால் பிடித்து அடித்துப் போட்டுவிட்டு அந்தத் தேள் கொட்டிய விரலைப் பார்த்தேன், அந்தத் தேள் கொட்டிய கொட்டுவாயில் இருந்த தேளின் கொடுக்கு முனையை ஒரு ஊசியால் நீக்கிவிட்டு சமையலறைக்கு சென்று ஒரு வெங்காயம், சிறிது பெருங்காயம், இரண்டையும் அரைத்து அந்தக் கொட்டுவாயில் தடவிக் கொண்டு ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி அந்தக் கொட்டு வாயை சூடு படுவது போல் பலமுறைகள் காட்டி பிறகு கையின் மேற்புறத்தில் ஒரு துணியை இறுக்கிக் கட்டிக்கொண்டு படுத்தேன் . சிறிது நேரத்தில் தேள்கடியின் வீரியம் குறைந்து கடுப்பு நின்றது, தூங்க ஆரம்பித்தேன்
மறுநாள் வலி போயே போச், வலி போயிந்தி.


14. மார்பில் கபம் கட்டிக்கொண்டு மூச்சு விடமுடியாமல் அவதிப்படும்போது நான்கைந்து வெற்றிலைகளை எடுத்து அவற்றை லேசாக சூடு காட்டி எலுமிச்சை பிழியும் கருவியில் போட்டு நசுக்கி சாறு பிழிந்து,அத்துடன் ஓரிரு மிளகையும் பொடி செய்து சிறிது தேனையும் கலந்து குடித்தால் கபம் பறந்துவிடும், மூச்சு சீராக விடமுடியும்.

 

15. தூது வளை இலை கிடைத்தால் அதைப் பொடியாக செய்து வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பொடியுடன் சற்றே பொடி உப்பு ,அல்லது தேன், அல்லது சர்க்கரை கலந்து மூன்று வேளை சாப்பிட்டாலே மார்புச் சளி கரைந்து சுவாசம் சீராகும்.


16. மிளகு, சீரகம் சற்றே வறுத்து அதைப் பொடி செய்து சுடச்சுட சாதம் போட்டுக்கொண்டு அந்தப் பொடியை அந்த சாதத்தின் மேல் அப்படியே போட்டு நெய் காய்ச்சி சுடச்சுட அதன் மேல் ஊற்றி தேவையான் உப்பு போட்டு கலந்து சாப்பிட்டால் அன்னத்வேஷம் அகலும், உணவு உண்ண ஆர்வம் வரும்.


17. ஒரு நல்ல வாழை இலையை நன்றாகக் கழுவி அந்த வாழை இலையில் ஆங்காங்கே ஒரு கரண்டி சூடான சாதத்தைப் போட்டு, சற்று நேரம் வைத்திருங்கள், அந்த சாதத்தை எடுத்துப் பார்த்தால், அந்த சாதம் இருந்த இடங்கள் பசுமை நிறம் மாறி இருக்கும். அந்த சாதங்கள் வாழை இலையிலுள்ள சத்தை உரிஞ்சிக்கொண்டது என்று பொருள்.

 

அந்த சாதத்தை உங்கள் விருப்பப்படி எதில்வேண்டுமானாலும் கலந்து உண்ணுங்கள்.  இது போல் வாரம் ஒரு முறை செய்யுங்கள், உங்கள் ரத்தத்தில் இருக்கும் அத்துணை விஷப்பொருட்களும் நீங்கும். இதனால்தான் நம் முன்னோர் வாழை இலையில் உணவு உண்ணும் முறையை வைத்திருந்தனர்.


18. குழந்தைக்கு அடிக்கடி ஜுரம் வந்தால், வயிறு உப்புசமாக ஆனால், அதை மாந்தம் என்று சொல்வார்கள். அந்தக் குழந்தையின் வயிற்றில் அடிக்கடி வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி சூடாக்கி போடுங்கள்,மாந்தம் நீங்கும்.


19. சில குழந்தைகள் பிறக்கும் போதே குளிர்ச்சி அதிகம் தாக்கியதாலும் , அல்லது குறைமாதப் ப்ரசவம் என்றாலும் உடலில் நீலம் காணப்படும், மிகவும் இளைத்து பலகீனமாக காணப்படும், அது போன்ற குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறையாவது கழுதைப் பால் அளித்தால் அந்த நீலமும் மறையும், குழந்தையும் வலுப்படும்.


20. மாமரத்தில் இலைகள் துளிர் விட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள், என்றாவது அந்த துளிர் இலைகளை சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது போன்ற துளிர் இலைகளை பறித்து, அத்துடன் சற்றே மிளகாய், புளி, இவற்றை அரைத்து சுவையான துவையல் செய்து உண்ணுங்கள். ரத்தம் சுத்தியாகும், நன்றாகப் பசி எடுக்கும்.

21.வாழைப் பூவில் இருக்கும் சிறு சிறு பூக்களை அரிந்து துவரம் பருப்பை அரைத்து வேகவைத்து கலந்து வாழைப்பூ பருப்பு உசிலி என்று செய்வார்கள், இது உடலுக்கு மிகவும் நல்லது.இதில் இன்னமும் விசேஷமான செய்தி என்னவென்றால் இந்தப் பூவை கடைசீ வரையில் ஆய்ந்து சிறும் பூக்களை தனிதனியாகப் பிரித்து அந்தப் பூக்களில் இருக்கும் மொட்டு போன்ற பகுதியை கள்ளன் என்று சொல்லி ஆய்ந்து விடுவார்கள்,அதன் பிறகுதான் சமைப்பார்கள்.  கடைசீயாக இருக்கும் பகுதியில் உள்ளே அந்த வாழைப்பூவின் சிறு பகுதி வாழைப்பூ போலவே உருவத்தில் சிறுத்து இருக்கும் வெள்ளையாக, அந்த பகுதியை உண்டால் தேங்காய் சாப்பிடுவது போல் ருசி இருக்கும். முக்கியமாக இந்தப் பகுதி வயிற்றுப் புண், போன்றவைகளை ஆற்றும் தன்மை கொண்டது.


22. பலாப்பழம் போன்ற இனிப்பான பழத்தை அதிகம் விரும்புவோர் கவனிக்கவும் :

பலாப்பழத்தை சாப்பிட்டால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வயிறு கெட்டுப்போய் அவதிப்படுபவர்களுக்கு முக்கியமான மருந்து ஒன்று உண்டு, அது என்ன தெரியுமா? அந்தப் பலாப்பழத்தின் உள்ளே இருக்கும் பலாக் கொட்டைதான் மருந்து! ஆமாம் இது இறைவனின் இயற்கை விந்தை! அந்தப் பலாப்பழக் கொட்டையை அடுப்பில் வேக வைத்து தேனில் குழைத்து உண்டால் பலாப்பழத்தினால் வந்த ஒவ்வாமை நீங்கிவிடும்.


23. வாழைப்பழத்தை உரித்து அதன் சதைப்பகுதியை சற்றே நெய் போட்டு பிசைந்து அந்தக் கலவையை உண்டால் வயிறு உப்புசம், மந்தம் போன்றவை அடியோடு விலகும்.


24. வரட்டு இருமல் என்று சொல்வார்களே அதுபோல் மிதமிஞ்சிய குளிராலோ,அல்லது அதிக வெப்பத்தினாலோ ஏற்படும் வரட்டு இருமலைப் போக்க நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ”அதி மதுரம்“ சிறு மரக் பட்டைகள் போல் இருக்கும். அதை வாயில் அடக்கிக்கொண்டு அதன் சாற்றை விழுங்கிக் கொண்டே இருந்தால் நின்றுவிடும் வரட்டு இருமல்.

 

25. அடாத ஜலதோஷமா?
தேங்காய் எண்ணையில் சிறிது பூங்கற்பூரம் போட்டுக் காய்ச்சி அதை மார்பில் தடவுங்கள்.ஜலதோஷம் குறையும், மூச்சு விட எளிதாக இருக்கும்.


26. உடலில் சிறங்கு, சொறி, தேமல் போன்றவை இருந்தால் சீய்க்காய்ப் பொடி போட்டு நன்றாக தேய்த்துக் குளித்துவிட்டு மஞ்சளையும் தேங்காய் எண்ணையையும் கலந்து பூசுங்கள். சீக்கிரமே அவை காணாமல் போகும், அப்படியும் போகவில்லையென்றால் உத்தாமணி என்னும் வேலிப் பருத்தி இலையின் பாலை தடவி வந்தால் நிரந்தரமாக நோய் தீரும்.


27. சாதாரண ஜலதோஷத்துக்கு நல்ல வரளி மஞ்சளை எடுத்து நெருப்பில் தீய்த்து அதன் மணத்தை முகருங்கள். ஜலதோஷம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும்.


28. நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தால் படுக்கைப் புண் உண்டாகும் அப்படி படுக்கைப் புண் வராமல் இருக்கவும் ,அப்படி வந்துவிட்டால் விரைவில் குணமாகவும் சுத்தமான துணியினால் துடைத்துவிட்டு கற்பூரத்தையும் ஆலிவ் எண்ணையையும் கலந்து பூசுங்கள்.

 

29.என்னதான் பல் தேய்த்தாலும் வாய் நாற்றம் வருகிறதா?

ஆலம் விழுதுகளை பொடி செய்து, கடுக்காய் பொடி செய்து,வேப்பம் பட்டையை பொடி செய்து மூன்றையும் கலந்து வைத்துக்கொண்டு ஒரு வாரம் பல் துலக்குங்கள் வாய் துர்நாற்றம் அண்டாது.


30. ஒரு நற் செய்தி: கற்பூரம் அதிக அளவில் சாராயம் தயாரிக்கப்படும்போது கலக்கப்படுகிறது, நாம் உபயோகிக்கும் பல ரசாயனங்களில் கலக்கப்படுகிறது,அப்படி கற்பூரத்தினால் ஒவ்வாமை வந்தால் பித்தம் அதிகமாகும் , தலை சுற்றல் ஏற்படும். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு காப்பி குடித்தால் சரியாகிவிடும் தலை சுற்றல்.


31. அன்றாடம் நாம் பல் துலக்கும் வழக்கத்தை ஏற்படுத்தித் தந்த முன்னோர்களுக்கு நன்றி சொல்வோம். தூங்கி எழுந்தவுடன் பல்லை நன்றாக நம் விரல்களால் உள்ளும் புறமும் பிடித்து அழுத்தி துலக்குங்கள்.  நன்றாக உணரலாம் தூக்கக் கலக்கம் தெளிவதை,, ஏனென்றால் நம் பற்களுக்கும் நம் மூளைக்கும் தொடர்பு உண்டு. நம் பற்கள் அழுத்தப்படுவதால் மூளை சுறுசுறுப்படைகிறது. அதன் பிறகு இருக்கவே இருக்கிறது பல் துலக்கும் ப்ரஷ். அதனால்தான் பல் பிடுங்கும் போது அதன் வேர்கள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு பிடுங்குவார்கள், அப்படி வேர்களில் பாதிப்பு ஏற்பட்டால் மூளை பாதிப்படையும்.


32. சொத்தைப் பற்கள் இருந்து ஆரம்பத்திலேயே அவை கண்டு பிடிக்கப்பட்டால் மிகவும் நல்ல மருந்து ஒன்று உண்டு.  ஆமாம்,  கிராம்பு எனும் லவங்கம்.அல்லது கிராம்புத் தைலம் கலப்படமில்லாதது, அதை அந்த சொத்தைப் பற்களில் வைத்து அழுத்திக் கடித்து சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு வாய் கொப்பளித்தால் சொத்தை தானாக மறையும் . இல்லையென்றால் பல் வைத்தியர் நம் பல் சொத்தையைப் பிடுங்க நம் சொத்தையே பிடுங்கிக்கொள்வர்.


33. கண்ணில் வரும் கண் நோய், கண் சிவப்பு, போன்றவைகளுக்கு மிகவும் சிறந்த மருந்து தாய்ப்பால் ஆனால் இது எல்லோருக்கும் எப்போதும் கிடைக்காது, ஆகையால் அதற்கு ஈடான மருந்தே இல்லையென்றாலும் சுத்தமான பன்னீரை உபயோகித்தால் ஓரளவு பலன் கிடைக்கும்.


34.அடிக்கடி காய்ச்சல் வரும் குழந்தைகளுக்கு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நிலவேம்பு என்னும் வேரை வாங்கி வந்து அதை கொதி நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி அந்தக் கஷாயத்தை தேனில் கலந்து கொடுத்தால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.


35. வயிற்றுப் புண் பல விதமான காரணங்களால் வரலாம், அதிக காரம் உண்பவர்கள், அதிகாரம் செய்ய தைரியமில்லாததால் சோம பானம் சுறாபானம் போன்றவற்றைக் குடித்துவிட்டு தைரியம் வரவழைத்துக்கொண்டு அதிகாரம் செய்பவர்கள். அடுத்தவர் வாழும் வாழ்க்கையைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுபவர்கள் போன்றோருக்கு உண்டாகும் வயிற்றுப் புண்
குணமாக நல்ல பச்சை சுண்டைக் காயை வாங்கி வந்து வதக்கி உண்ணலாம், அல்லது காய்ந்த சுண்டைக்காயை வாங்கி வறுத்து பொடி செய்து சாதத்தில் போட்டுக்கொண்டு சற்றே உப்பும் போட்டுக்கொண்டு நெய்யை ஊற்றி கலந்து உண்ணலாம், வயிற்றுப் புண், வயிற்றெரிச்சல் காணாமல் போகும்.


36. பாம்புக்கடி பட்டவர்க்கு உடனடி விஷ முறிவு வைத்தியம் , வாழைப் பட்டையில் படுக்க வைத்து அவரைத் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்வது, மற்றும் அவருக்கு வாய் மூலமாக வழைப்பட்டைச் சாற்றினை ஊட்டுவது.  வாழைப்பட்டைச் சாறுக்கு அவ்வளவு விஷ முறிவு சக்தி உண்டு.


37. சில குழந்தைகள் உடம்பு எப்போதும் சூடாக இருக்கும், கணச் சூடு என்பர். இப்படிப்பட்ட குழந்தைகள் மெலிந்தே இருப்பர். இதுவும் ஒரு வகை நோய்தான், இந்த நோயை அகற்றி ஆரோக்கியமான குழந்தையாக மாற்ற, ஓரிரு முறை கழுதைப் பாலை கொடுத்துவிட்டு, அதன் பிறகு ஆட்டுப் பால் வாரம் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தை நன்றாக வளரும்,
இதற்குதான் ”அழுத பிள்ளை சிரிச்சுதான் கழுதைப் பாலைக் குடிச்சுதான்” என்பர் பெரியோர்.


38. அகத்திக் கீரை, கீழா நெல்லி, ஆலம் விழுதின் துளிர், முருங்கைக் கீரை, போன்றவை மிகவும் அருமையான ஔடதங்கள். இவைகளை நாள் ஒரு கீரை வீதம் அரைத்து வேகவைத்து பாலுடன் கலந்து பருகிவர , கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் அமிருதமாகிய தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க, ப்ரசவம் ஆன சில நாட்களிலேயே நம் முன்னோர்கள் இவைகளை வேகவைத்து உணவுடன் சேர்த்தும் கொடுப்பார்கள்.

 

39. முருங்கைக் கீரை போல ஒரு அரு மருந்து கிடையவே கிடையாது! நம்முடைய ரத்தக் கொதிப்புக்கு ,அதாவது அதிக உணர்ச்சி வயப்பட்டு உடலும் மனமும் பரபரக்கும் வேளைகளில் நம்முடைய ரத்த ஓட்டத்தை சீராக வைக்க தினமும் முருங்கைக் கீரைச் சாற்றை ஒரு அவுன்ஸ் வீதம் பருகினால் ரத்தக் கொதிப்பு நோய் முற்றிலும் சீராகும்.


40. ரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் ,பக்கவாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் பச்சை வெங்காயம் போன்ற சஞ்சீவினி உலகத்திலேயே இல்லை எனலாம். அப்படிப்பட்ட வெங்காயத்தை தினமும் பச்சையாக உண்டு வருவதால் பலவிதமான நோய்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தலாம். ஆனால் வெங்காயத்தை நறுக்கி வைத்துவிட்டு வெகு நேரம் கழித்து உண்டால் வியாதிகள் பரவும் அபாயம் உண்டு.ஏனென்றால் வெங்காயத்துக்கு கிருமிகளை வசீகரிக்கும் குணம் உண்டு. ஆகவே வெங்காயத்தை நறுக்கி உடனடியாக உண்ணவேண்டும்.


41. பச்சைப் பட்டாணியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் இதய சம்பந்தமான நோய்கள் தடுக்கப்படும், இதயத்திலிருந்து எல்லாஉறுப்புகளுக்கும் ப்ரயாணம் செய்யும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க எப்போதும் பச்சைப் பட்டாணிகளை உபயோகிக்க வேண்டும்.


43. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை, கருஞ்சீரகம், நிலவேம்பு போன்றவைகளை வாங்கி பொடி செய்து வைத்துக்கொண்டால் அந்தப் பொடியை தேனுடன் கலந்து உண்ண எப்படிப்பட்ட வாதமும் , காய்ச்சலும், கபமும் தீரும்.


44.வெற்றிலை போடும் பழக்கம் இல்லாத பெண்மணிகளைக் கூட பெரியவர்கள் ப்ரசவம் ஆன கையோடு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மூன்றையும் சரியான விகிதத்தில் உண்ணச் செய்வர், இந்த வெற்றிலை ,பாக்கு சுண்ணாம்பு மூன்றின் கலவையை மென்று சுவைப்பதால் நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரும் சேர்ந்து வயிற்றினுள் செல்லும்போது ஜீரண சக்தியையும், அளிக்கிறது.


45. நல்ல சீரகத்தை கொஞ்சம் எடுத்து நல்லெண்ணையில் போட்டு காய்ச்சுங்கள், அந்த சீரகங்கள் நன்கு பொரிந்து உடையும் பக்குவத்தில் வரும்போது தரமான சாம்பிராணி அதில் சேர்த்து
அந்த எண்ணெய் ஆறியவுடன் அதை வடிகட்டி மாதம் ஒரு முறை தலைக்கு தேய்த்து எண்ணெய்க் குளியல் போட்டால் பித்தத்தினால் வரும் கண்ணோய்கள், வாந்தி மயக்கம் அனைத்தும் தீரும்.



46. ”போன கண்ணைக் கொடுக்கும் பொன்னாங்கண்ணி ” என்று ஒரு சொல்வழக்கு உண்டு. அது பொய்யல்ல! பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து காயவைத்து அதை நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி மாதம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் போடும் வழக்கம் கண்களைக் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் , பார்வை தீட்ஷண்யத்தை அதிகரிக்க வழியும் செய்யும்.

 

47. வல்லாரை என்றொரு கீரை உண்டு கீரை விற்பவர்களிடம் சொன்னால் கொண்டு வந்து தருவார்கள்.அந்த வல்லாரைக் கீரையை அவ்வப்போது வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

 

48. துளசியைப் போல் ஒரு தூய மூலிகை உண்டோ.  அதனால்தானே ஸ்ரீமன் நாராயணனுக்கு துளசியால் அர்ச்சனையும், ஆஞ்சநேயருக்கு துளசி மாலையும், அணிவிக்கிறோம். அதனால்தானே ஆண்டாளும் துளசி மாடத்தின் கீழே இருந்தாள்.  அப்பேற்பட்ட துளசியை சாதாரணமாக ஓரிரு இலைகள் உண்டு வந்தாலே மார்ச்சளி கரையும், கபம் நீங்கும்,ரத்தம் சுத்தியாகும். துளசியை நன்கு அரைத்து அதை வடிகட்டி அதில் சிறிதளவு தேனைக் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவாருங்கள், வேண்டாத காய்ச்சலும், இருமலும் வராமலே போகும்.


49. அமுக்கனாங்கிழங்கு என்றொரு வகை உண்டு, அந்தக் கிழங்கை வேகவைத்து உண்டு வர ரத்த சோகை, இரும்புச் சத்துக் குறைவு போன்றவை நீங்கும், இளம் தம்பதியருக்கு இந்த அமுக்கனாங்கிழங்கு சூரணம் மிகவும் பயன் அளிக்க வல்லது.


50. காய்ச்சல் காரணமாகவோ , அஜீரணம் காரணமாகவோ உணவு பிடிக்காமல் போகும் போதுஅந்த உணவு பிடிக்காமை தீர்ந்து உணவு உண்ண ஆர்வம் அதிகரிக்க உடனடியான மருத்துவம் ஒன்று உண்டு. கருவேப்பிலை, கொத்துமல்லி, சற்றே மிளகு, புளி, தேவையான உப்பு சேர்த்து அரைத்து சுடும் சாதத்தில் அதைப் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து ஒரு வாய் உண்ணுங்கள் அதன் பிறகு விருந்தே உண்ணலாம் போல் ஆர்வம் வரும்.


51. நாட்டு மருந்துக் கடையில் சென்று ” விஷ்ணுக் கரந்தை “ என்று கேட்டு வாங்கி அதைப் பொடி செய்து மூன்று சிட்டிகை ஒரு அவுன்ஸ் மாதுளம்பழச் சாறுடன் கலந்து பருகி வர கருப்பைக் கோளாறுகள் நீங்கி கருத்தரித்து மழலைச் செல்வத்தைக் கொஞ்சி மகிழும் பாக்கியம் கிடைக்கும்.


”உணவு மட்டும் மருந்தல்ல நம் அனுபவமும் நல்ல மருந்துதான்”


அன்புடன்
தமிழ்த்தேனீ


--Ksubashini 12:01, 27 ஆகஸ்ட் 2011 (UTC)



 

பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Coralsri.blogspot.com