வைகாசி விசாகம்

மரபு விக்கி இருந்து

Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:46, 6 ஆகஸ்ட் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 திவாகர் ( venkdhivakar@gmail.com )



இந்த வைகாசி விசாகம் என்றாலே ஒரு காலத்தில் நாக்கில் நீர் ஊறும் நாள்.


வைகாசி விசாகம் முருகனுக்கும், சுவாமி நம்மாழ்வாருக்கும் பொருத்தமான தினம் என்று அடியேனுக்குப் புரிய ஆரம்பித்த முற்காலக் கட்டத்தில்தான் இந்த நாக்கு நீர் ஊறும் சமாசாரம் சொல்கிறேன்.


திருநகரியில் - திருவாலி திருநகரி (சீர்காழி தாலுகா) - உள்ள திருமங்கை மன்னன் திருக்கோயில் உற்சவ காலங்களில் திருமங்கை மன்னனுக்கும், பெருமாளுக்கும் எப்படியெல்லாம் சீராக, அலங்காரமாக நடத்துவார்களோ, அத்தனை அலங்காரத்துடன் உற்சாகமாகவும், உத்வேகமாகவும், வைகாசி விசாகமும் கூட நடத்தப்படும். சுவாமி சிலைகள், குறிப்பாக ஆழ்வார் சிலைகள் ஏறத்தாழ ஒன்றோடு ஒன்று பொருத்தமாகவே வடிக்கப்படுவதாலும், நம் திருமங்கை மன்னனுக்கும், நம்மாழ்வாருக்கும் அங்கு இருக்கும் அர்ச்சா ரூபமும் ஒன்று போலவே தோன்றும். திருநகரி கோயிலில் உடைவர் சன்னிதி மிகவும் பெரிய இடம். இங்குதான் உறசவமூர்த்தி சிலகள் கொண்டுவரப்பட்டு அலங்காரங்கள், தீபாராதனைகள் எல்லாம் நடக்கும். நம்மாழ்வார் அர்ச்சா மூர்த்தியும் அங்கு கொண்டுவரப்பட்டு திராவிட வேதமான ஆயிரம் பாசுரங்களும் காலையிலிருந்து மதியம் வரை ஓதப்பட்டு, பிறகு இத்யாதி, இத்யாதி (என்றால் அங்கு ஆச்சாரியர்களுக்கு நடத்தப்படும் விசேஷ மரியாதைகள்) முடிந்தவுடன் நாம் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் காரிக்கிரமம் நடைபெற ஆரம்பிக்கும்.


நாக்கில் நீர் ஊறும் சமாச்சாரம்தான். பிரசாத வினியோகத்தைத்தான் சொல்கிறேன்.


திருநகரி கோயில் மடைப்பள்ளி நாதமுனிமாமா புளியோதரைக்கு உலக ஃபேமஸ். அப்படி என்னதான் கைவண்ணமோ.. அதுவும் உற்சவ காலங்களில் மிக ஏராளமான அளவில் செய்யப்படும் புளியோதரை எனும் போது, அத்தனை பேரும் அங்கே பெருமாள் நாமம் சொல்கிறார்களோ இல்லையோ, நாதமுனியின் பெருமையைக் கண்டிப்பாகக் கூறிக்கொண்டு கொஞ்சம் எக்ஸ்ட்ரா புளியோதரையுடன் செல்லும் காட்சிகள் அநேகம். நாதமுனி மாமாவின் இன்னொரு படு டேஸ்ட் பிரசாதம் கதம்பம் தான். அத்தனைக் காய்கறிகளுடன் கலந்த பருப்பா அல்லது சாம்பாரா என்பதே தெரியாமல் நெய் ஒழுக அந்த கதம்பசாதம் கிடைப்பது இந்த வைகாசி விசாகம் வரும்போதுதான்.


அந்த ஒருநாள்தான் கதம்பம் படையல் செய்வார் அவர். இந்த கதம்பம் ஒன்றுக்காகவே அத்தனை வயிற்று ஜன்மங்களும் காத்திருக்கும் ஒரு திருநாளாக வைகாசி விசாகத்தை மாற்றிக் காட்டி விட்டார் நாதமுனி மாமா.


நாதமுனி மாமாவைப் பற்றி சில விஷயங்கள் சொல்லிவிடவேண்டும். நமக்கு சின்ன வயதில் வேண்டப்பட்டவராக, கொஞ்சம் நெருக்கம் உள்ளவராகத்தான் என் கண்களில் பட்டிருக்கிறார். எப்போது பார்த்தாலும் வெற்றிலை, பாக்கு, புகையிலையுடன் மென்று கொண்டே இருக்கும் நாதமுனி மாமா, மடைப் பள்ளியில் உள்ளே மட்டும் அந்தவெற்றிலை பாக்கு இத்தியாதிகளைத் தொடமாட்டார். ஆனால் அடிக்கடி கோபம் வரும் வேளையும் அதுதான். மற்ற நேரங்களிலும், சீட்டாடும் நேரங்களிலும் படு ஜாலியாகக் காணப்படும் மனிதர் மடைப்பள்ளியில் இப்படி நேரெதிராகக் காணப்படுவதற்கு இந்த வெற்றிலை பாக்கு சமாசாரமும் ஒரு காரணம் என்று சந்தேகம் எனக்கு உண்டு.


அப்படிப்பட்ட வேளையில், அதுவும் ஒரு வைகாசி விசாக சுபயோக சுபதினத்தில் அவரை மடைப்பள்ளியில் ஒரு சுபகாரியத்துக்காக கண்டிப்பாக சந்தித்தே ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. மத்தியானம் கொஞ்சம் (வெளியூரிலிருந்து) வரத் தாமதமாகும் ஆதலால் அன்றைய ஸ்பெஷல் கதம்பசாதம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எடுத்துவைக்கச் சொல்லி என்னுடைய தாத்தாவின் கோரிக்கையை முதலிலேயே நாதமுனியிடம் சொல்ல வேண்டுமென எனக்குக் கட்டளை. வெற்றிலைப் பாக்கு போடாத நாதமுனி மாமா, அதுவும் மிகப்பெரிய அண்டாவில் பிரசாதங்கள் செய்து கொண்டு வெய்யிலில் வேர்த்துக் கொண்டிருக்கும் நாதமுனி மாமா அன்று பார்த்துக் கடும் கோபத்தில் இருந்ததாக பட்டாலும் வேறு வழியில்லாமல் தாத்தா சொல்வதாகச் சொல்லவேண்டுமே.


நாமுனி மாமா (நாதமுனி நாமுனி என்று எப்போதோ மாறிப்போய்விட்டது)

என்னடா..


தாத்தா..


தாத்தாவுமாச்சு, நீயுமாச்சு.. இங்கே எதுவும் தொடப்படாது.. போ அந்தாண்ட


அது இல்ல மாமா..


எதுவும் இல்ல..தான்.. நீயெல்லாம் இங்க வரப்படாது..


அது இல்ல மாமா..


போடா போ.. நிக்காதே.. நின்னியோ..அவ்வளவுதான்.. வேளை கெட்ட வேளைல வந்து..


மாமா.. அது இல்ல.. தாத்தா பட்டணத்துலேர்ந்து பன்னீர் பொகையிலையை


பன்னீர் புகையிலையா.. அட.. ஆஹா.. எங்கடா, கொண்டுவந்திருக்கியா.. சித்த இரு.. வர்ரேன்..


உங்களுக்காக அனுப்பி வெச்சுருக்கார். எடுத்துப் பத்திரமா வெச்சிருகேன். நீங்க இப்ப தொடமாட்டிங்க இல்ல..சாயங்காலமா கொண்டாந்து தர்ரேன்.. அப்படியே இந்த கதம்பசாதம் கூட கொஞ்சம் எக்ஸ்ட்ரா எடுத்து வெச்சுடுங்கோ.. தாத்தா எடுத்து வெக்கச் சொன்னார்.


”பேஷா.”


(அன்று எங்களுக்கு கதம்பசாதம் கிடைக்கவேண்டியது ஏராளமாகவே கிடைத்தது.. ஆனால் நாதமுனி மாமாவின் பன்னீர் புகையிலை விஷயத்தைப் பற்றி மட்டும் யாரும் கேட்கவேண்டாம். இரண்டு நாட்களாக நாதமுனி மாமாவின் கண்ணுக்குத் தென்படவே இல்லை. மூன்றாம் நாள் தாத்தாவின் திட்டுப் பிராதம் ஏராளமாகக் கிடைத்தது. எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான். நான் அன்று பொய் சொல்லாவிட்டால் இந்த தாத்தாவுக்கு கதம்பசாதம் கிடைத்திருக்காது என்பது ஏன் இந்தப் பெரிசுக்குப் புரியவில்லை, எல்லோரும் என் பொய்யையே பெரிதாகப் பார்க்கிறார்களே..)

--Ksubashini 15:45, 6 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=வைகாசி_விசாகம்&oldid=7741" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 6 ஆகஸ்ட் 2011, 15:46 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,351 முறைகள் அணுகப்பட்டது.