இக்கட்டுரைகள் சீதாலட்சுமி அவர்களால் மின்தமிழ் மடலாடர் குழுவில் எழுதப்பட்டவை. இவற்றில் சில எழுத்துப் பிழைகளை திருத்தி அனுப்பி உதவிய்ர் திரு.தேவ் அவர்கள்.
சீதாலட்சுமி: மின்னஞ்சல்:
முன்னுரை
இது ஒரு சமுதாய வரலாறு. சுதந்திரம் கிடைத்த பின்னர் அரசு, அரசியல், மற்றும் மக்கள் இணைந்து ஆற்றிய செயல்கள், காலத்தின் போக்கிலே ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் இவைகளைக் காணலாம். இத்தொடர் சென்னை ஆன் லயனில் வந்து கொண்டிருக்கின்றது. மின் தமிழில் வந்த எண்ணங்கள் ஊர்வலத்தின் தொடர் என்றும் கூறலாம். ஒரு முறையாவது இத் தொடரை வாசிக்க வேண்டிக் கொள்கின்றேன். பல பயிற்சிகள் பெற்றுப் பல பிரிவுகளில் பணியாற்றியவள் நான். எனக்குச் சில வாய்ப்புகள் அதிகமாகவே கிடைத்தன. எனவே என் அனுபவங்கள் பல தகவல்களைச் சுமந்து வரும் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பகுதி 1
தண்ணீர்விட்டோ வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
சுதந்திரப்பயிர் நினைத்து பாரதி பாடியவை, இக்காலச் சூழலுக்கும் பொருந்துமன்றோ?
வரலாற்றுச் சுவடுகளைப் பார்த்தால் மனிதன் ஓடி ஓடி அலைந்து, புலம் பெயர்ந்து , விலங்கு வாழ்க்கையை வெறுத்து , அமைதி வாழ்க்கைக்கு ஒரு கோட்பாடு கண்டான். குடும்பமும், கூட்டமாக வாழும் சமுதாயமும் பிரச்சனைகளின்றி வாழத் தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு வாழத் தொடங்கினான். இலக்கிய வாழ்க்கை கிடைத்தது.
காலச் சக்கரத்தின் ஓட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது. சூழ்நிலையின் தாக்கங்கள் அவனை, அவன் வாழ்க்கையை அசைக்க ஆரம்பித்துவிட்டது.
காலத்திற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் மனிதன் இருக்கின்றான். வாழும் முறைகளின் இடைவெளி மிரட்டுகின்றது; பாரதியின் ஊர்க்காரியான எனக்கும் ஓர் ஆதங்கம் உண்டு
உருண்டோடும் காலத்திலே உயிர்பிழைக்க ஓடியவன்
மருண்டோடும் வாழ்வொதுக்கி மகிழ்வில்லம் கண்டுகொண்டான்
அருள் கண்டான்! அன்பு கண்டான்! அமைதிகாக்கும் குடில்கண்டான்!
கருகத்தான் விடலாமோ? காத்திடுதல் கடமையன்றோ !
என் நினைவலைகள் உங்களை வருடும் பொழுது உங்களுக்குப் புரியாதவளாக இருக்க விரும்பவில்லை. என் பிள்ளைப் பருவ நிகழ்வுகளை எங்கோ கொட்டிவிட்டேன். உங்களிடம் சின்ன அறிமுகம் செய்து கொள்ள நினைக்கின்றேன். நினைவலைகள்
நீண்டதொரு பயணம். அதற்குரிய சக்தி எனக்கு எங்கிருந்து கிடைத்தது? கரிசல் மண் எட்டயபுரம் செதுக்கிய ஒரு பெண் நான்..
என் தந்தை சுதந்திரப் போராட்டத்தில் மும்முறை சிறை சென்றவர். சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்த்தார். தேவைக்கு மேல் எது வைத்திருப்பினும் அவன் திருடன் என்பார். எளிய வாழ்க்கையில் பழக்கினார்.
எங்கு சென்றாலும் என்னைஅழைத்துச் செல்வார். முதன் முதலில் பார்த்த அரசியல்வாதி இராஜாஜி அவர்கள். நான் பார்த்த முதல் எழுத்தாளர் கல்கி அவர்கள். ஆரம்பமே எனக்கு உச்சம். பாரதி மண்டபம் எழுப்ப ஆலோசனை செய்ய வந்தவர்கள். அவர்களைப் பார்க்க என் தந்தை கூட்டிச் சென்று வணங்கி ஆசி பெறச் சொன்னார். எழுதும் பொழுது பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. நானோ இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து விட்டுத்தான் எழுத ஆரம்பிப்பேன்.
கல்கியின் தரிசனம் பத்திரிகைகள் படிக்கத் தூண்டியது. அதிலிருந்து படிக்கும் பழக்கம் என்னை விடவில்லை.
நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் பிறந்தவள். ஒரு வயது கூட ஆகவில்லை. சுதந்திரப் போராட்டத்திற்குச் சென்ற தந்தை ஐந்து வருடங்களுக்குப் பின்னரே வீட்டிற்கு வந்தார். பின்னரும் காந்திக் கட்சியில் தொடர்பு வைத்திருந்தார். குழந்தைப்
பருவத்தில், காக்கா கதை , நரிக்கதை சொல்லிக் கேட்டிருப்போம். எனக்கு நாட்டுக் கதை, காந்திக் கதை சொல்லி வளர்த்தார்கள். கவுன் போட்டுக் கொண்டு கையில் காங்கிரஸ் கொடி ஏந்தி அப்பாவுடன் ஊர்வலங்களுக்குச் சென்றிருக்கின்றேன். இராட்டை நூற்று, கதர்ச் சிட்டம் கடையில் போட்டுக் கதர்த் துணி வாங்கி உடுத்தியவள் நான். கதர்த் துணி பார்த்தால் எனக்கு காந்தி நினைப்புத்தான் வரும். அந்தச் சூழலில் ஏற்பட்ட உணர்வுகளே வேறு. பாட்டு வாத்தியார் கூட கீர்த்தனைகள் சொல்லிக் கொடுப்பதுடன், வைஷ்ணவ ஜனதோ, வந்தே மாதரம், சாந்தி நிலவ வேண்டும்
பாட்டுக்களைச் சொல்லிக் கொடுப்பார்.. சுதந்திர தாகம் பட்டிகளிலும் இருந்தது. ஒவ்வொருவரின் துடிப்பிலும் நாட்டு நினைவு கலந்திருந்தது.
எனது சமுதாய அக்கறைக்கு அடித்தளம் அமைத்தது என்பிள்ளைப் பருவ வாழ்க்கைதான். என் பயணம் எட்டயபுரத்தை விட்டுப் புறப்படப் போகின்றது.
( அலைகள் மீண்டும் வரும்)
பகுதி 2
( தாமதம் காரணமாகச் சில வரிகள் எழுத நேர்ந்துவிட்டது. இது ஒரு சமுதாய வரலாறு. 100 ஆண்டுகள் செய்திதர நினைத்து ஆரம்பித்தேன். ஆனால் காலச் சக்கரத்தில் மனிதன் தோன்றிய காலம் வரை போய் வர நேர்கிறது. மரபுச் செய்திகள் வரும்.
மனித வாழ்வின் மாற்றங்கள் பல கோணங்களில் காட்டப்படுகின்றன. தனி மனிதச் சாடல் கிடையாது. ஆனால் குறைகளைச் சுட்டிக் காட்டி இருக்கின்றேன். சாதனை புரிந்தவர்களின் பெயர்களை எழுதியுள்ளேன். இதிலும் நாயகி நானே. வரலாற்றுக்கு சான்றாக, சாட்சியாக வருகின்றேன். ஒரு முறையாவது எல்லோரும் படிக்க வேண்டுகின்றேன். வரிகளுக்கு மத்தியில் உண்மைகள் புதைந்திருக்கும். என் கடமையாய் நினைத்து எழுதியுள்ளேன். சமுதாயத்திற்கு நான் தரும் காணிக்கை )
என் பயணம் புதிய பாதையில் செல்லப்போகும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. என் தந்தைக்கு,அவர் தலைவர் கர்மவீரர் காமராஜரைப் பார்க்கும் ஆவல் பிறந்துவிட்டது. சென்னைக்குப் போகும் பொழுது என்னையும் கூட்டிப் போனார். பெரியவரிடம் தன் மகள் பி.ஏ பட்டம் வாங்கியதையும், வாத்தியார் வேலைக்குப் போயிருப்பதையும் கூறினார் உடனே நடந்த உரையாடல்தான் என் பயணத்தை மாற்றியது –
“வாத்தியார் வேலைக்கு யாரும் வருவாங்க. கிராமத்துக்குப் போய் வேலை பாக்கச் சொல்லு .” என்று என் தந்தையிடம் கூறிய பெரியவர் என்னை நோக்கி, “ நிறைய கிராமத்துலே பள்ளிக்கூடம் இல்லே. இருந்தாலும் புள்ளங்களே சரியா அனுப்பறதில்லே. இன்னும் அப்பாவித்தனமா இருக்காங்க. படிச்சாத்தானே உலகம்போற போக்குப் புரியும். நீ போய் இதெல்லாம் சொல்லணும்.சரியான ரோடு கிடையாது. லைட்டு இல்லே(மின் இணைப்பு), ஆஸ்பத்திரிகூட இல்லை. கிராமம் முன்னுக்கு வந்தாதான் நாடும் நல்லா இருக்கும். போவியா ?” என்று என்னைக் கேட்டார் . நான் சரியென்று தலையாட்டினேன். அது அவருக்குத் திருப்தி தரவில்லை போலிருக்கின்றது. “என்ன தலையாட்டறே, கிராமத்துக்கு நடந்துதான் போகணும். நிறைய ஊருக்கு பஸ் கிடையாது. வெள்ளைத் துணி அழுக்காகுமேன்னு நினைக்கிறியா?” அவர் கேள்வியில் கொஞ்சம் கோபம் தொனித்தது. நான் வாய் திறந்து பேசினேன்.“ நிச்சயமா போவேன். நீங்க சொன்னபடி அவங்க நல்லதுக்காக வேலை செய்வேன் “ அவர் முகத்தில் சிறு புன்னகை ! “கெட்டிக்காரி. புளச்சுப்பே “ என்றார் பெரியவர். அவர் ஆசிகளுடன் புறப்பட்டேன்.
சிலர்முன் சென்றால் பேச்சு வருவதில்லை. சிலரைப் ர்த்தவுடன் அர்த்தமில்லாமல் ஒதுங்க நினைக்கின்றோம். ஏதோ ஓர் காந்த அலைவரிசைமனிதர்களிடையே விருப்பு வெறுப்புகளைத் தோற்றுவிக்கும் போல் இருக்கின்றது. இந்த அனுபவம் பலமுறை எனக்குக் கிடைத்தது. என் தந்தையைப் பார்த்தேன். அவருக்குத்தான் மகள் பட்டம் வாங்கியதில் எவ்வளவு பெருமை ! அக்காலத்தில் ஒரு பெண் பட்டம் வாங்குவ்து வியப்புக்குரியதாக இருந்தது தன் மகள் படித்த மகிழ்ச்சியைத் தன் தலைவனிடம் கூற ஒரு தொண்டன் நினைக்கின்றான். தலைவனும் அக்கறையுடன் கேட்டு , எதிர்கால நடவடிக்கைக்கும் அறிவுரை கூறுகின்றான்.
இங்கே மதிப்பு மட்டுமன்று, தலைவன் தொண்டனுக்கிடையில் ஒரு பந்தமே இருக்கின்றது. அதனால்தான் அவர் ”பெருந்தலைவர்” என்று அழைக்கப் படுகின்றார். நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வலிமை பெற்றதும் இந்தக் குணத்தாலேதான். கண்டிப்பு மிக்கவர். கோபக்காரர். ஆனால் கருணை காட்ட வேண்டிய நேரத்தில் அரவணைப்பவர். கிராமங்களை உயிராய் நேசித்தவர். நான் அரசியல்வாதியில்லை. தொண்டன் தலைவனைப் புகழ்வது பெரிதில்லை. எக்கட்சியையும் சாராதவர்களும் ஒருவரை மதிக்க வேண்டும்; அவர்களிடமிருந்து புகழுரைகள் வரவேண்டும்.
ஊருக்கு வந்த பின் நாங்கள் யோசிக்க ஆரம்பித்தோம். எந்த வேலையைக் குறிப்பிட்டார் என்று அப்பொழுது தெரியவில்லை. ஆனால் சில நாட்களில் விடை கிடைத்தது. என் மாணவன் சுப்பையா செய்தித்தாள் ஒன்றை எடுத்து வந்தான். அதில் ஒரு விளம்பரம் - வட்டார வளர்ச்சிப் பணிகளில் வேலை செய்ய பெண் ஊழியர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கிராமங்களில் செய்யும் பணி. பெரியவர் கூறியது இதுவாகத்தான் இருக்கும் என்று புரிந்து கொண்டோம். உடனே நான் இந்த வேலைக்கு மனுச் செய்தேன். பதிலும் சீக்கிரம் வந்தது. காந்தி கிராமத்தில் தேர்வு நடத்தப்படும். மூன்று நாட்கள் அங்கே இருக்க வேண்டும். தேர்வுக்குச் சென்றேன்.தேர்வுக்குச் செல்லும் முன் சோம சுந்தர பாரதியாரின் தம்பி ராஜாராம் அவர்களிடம் சிபாரிசுக் கடிதம் பெற்றுக் கொண்டேன்.
காந்தி கிராமச் சூழலே அமைதியாக இருந்தது. எங்களுக்குச் சில வேலைகள் கொடுத்துச் செய்யச் சொன்னார்கள். எங்கள் ஆர்வத்தையும், செய்யும் தொழிலில் எங்கள் பங்களிப்பையும் மதிப்பிட்டார்கள். எனக்குப் பிடித்தமாக இருந்தது. மறு நாள் ஒரு தலைப்பைக் கொடுத்து பேசச் சொன்னார்கள். நான் பேச்சிலே கெட்டி. கைதட்டு வாங்கினேன். ஒரு கருத்தைக் கூறி அதைப் பாட்டாக எழுதிப் பாடச் சொன்னார்கள். சிறு வயதில் கவிதை எழுதியவள்; சங்கீதம் முறைப்படி கற்றவள்; ஆனாலும் சினிமா மெட்டில் பாட்டிசைத்து மீண்டும் கைதட்டுப் பெற்றேன்.
அடுத்து நாடகம் - முதல் நாள் மாலையே சொல்லி இருந்தார்கள். கல்லூரி நாட்களில் விளையாட்டுகளுக்குக் கூடப் போகாமல் பாட்டு எழுதுவதும், நாடகம் கதை வசனம் எழுதுவதும், நான் எழுதிய நாடகத்திலே நடித்ததும இப்பொழுது பயன்பட்டது. இப்பொழுது மட்டுமா? கலைவாணர் அரங்கில் கலைஞர் தலைமையில் நாடகம் போடும் வாய்ப்பே கிடைத்தது. கல்லூரியில் நான் எழுதிய ஓரங்க நாடகத்தில் கண்ணகியாக நடித்தேன். அதிலிருந்து எங்கள் பிஷப் மேன்மைதகு ஆண்டவர் ரோச் அவர்கள் என்னைக் கண்ணகி என்றுதான் கூப்பிடுவார்.காந்தி கிராமத்தில் என் நடிப்புப் பாராட்டப் பட்டது.
மூன்றாவது நேர்காணல் - அங்கும் என்னால் அச்சமின்றி, தயக்கமின்றி பதில் சொல்ல முடிந்தது. என் தந்தையுடன் பல பெரியவர்களை என் பிள்ளைப் பருவத்தில் பார்த்ததும் பேசியதும்தான் என்னிடம் இப்படி ஒரு தன்னம்பிக்கையைத் தோற்றுவித்திருக்க வேண்டும். பிஞ்சிலே வளையாதது பின் வளைத்துப் பயனில்லை. சின்னப் பிள்ளைகளை அரவணைத்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அம்மாக்கள் தொலைக் காட்சிக்கு முன் உட்கார்ந்திருப்பது குழந்தைகளைத் தனிமைப் படுத்திவிட்டது. இப்பொழுது வளரும் சூழல், ஊடகத்தாக்கம் இவற்றால் மனிதன் உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றான்.
என் தேர்வு முடியவும் நான் கொண்டு சென்றிருந்த சிபாரிசுக் கடிதம் கொடுத்தேன். அவர்கள் அதனைப் பிரித்துக் கூடப் பார்க்காமல் சொன்னது - “நாங்கள் இந்த வேலைக்கு எதிர்பார்க்கும் தகுதி உன்னிடம் இருக்கின்றது. சிபாரிசு பார்த்துத் திறமை இல்லாதவர்களை வேலைக்கு எடுத்தால் கிராமம் உருப்படுமா? நீ கடிதம் கொண்டுவந்ததே தப்பு. கெட்டிக்காரப் பெண்ணாய் இருப்பதால் உனக்கு வேலை தருகின்றோம். இனி இப்படிச் செய்யதே” அப்பொழுது ஊரக வளர்ச்சித் துறைக்குத் மேலதிகாரியாக இருந்தவர் காந்தீயவாதி திரு வெங்கடாசலபதி அவர்கள். சரியான தலைமை. சிபாரிசும் குறுக்கு வழிதான். அதிகார வர்க்கங்கள் உண்டாக்கிய சலுகைகளில் ஒன்றுதான் சிபாரிசும். வரலாற்றில் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவர்களால் தீமைகள் ஒவ்வொன்றாகத் தோன்ற ஆரம்பித்தது; கால ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்து விட்டது. இப்பொழுது ஒழிக்க இயலாத அளவு பரவி விட்டது.
இப்பொழுது என்ன நடக்கின்றது? வேலைக்கு வேண்டிய முக்கியமான தகுதி காசும், சிபாரிசுகளும். திறமையானவர்கள் ஒதுக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சி எந்த அளவு பாதிக்கப்படும் என்று வருங்கால சந்ததிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அறுவை சிகிச்சையின் பொழுது கத்திகூடச் சரியாகப் பிடிக்கத் தெரியாதவனுக்கு, சிபாரிசால் வெற்றி கொடுத்தால் மனித உயிர்களுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா? உதரணத்திற்காக இன்னொன்றும் கூற விரும்புகின்றேன்.சில காரணங்களால் சில சலுகைகள் தருகின்றோம். அதிலும் தேர்ந்தெடுக்க குறைந்தது 70 மதிப்பெண் பெற வேண்டுமென்று ஒரு நடுநிலை நிர்ணயம் செய்தால் அந்த மதிப்பெண் பெற முயல்வான். அதைவிடுத்து 40 மதிப்பெண் போதும் என்று சிபாரிசு செய்தால் அவனுக்கும் படிப்பில் அக்கறை ஏற்படாது. எதிர்காலத்தில் கல்வித்தரம் உயர அக்காலத்திற்கேற்பப் பல கோணங்களில் சிந்தித்துச் செயல் படவேண்டும். வேகமாக மாறிக் கொண்டுவரும் சூழ்நிலைகளில், பிள்ளைகள் அத்தனையும் தாண்டி சிறப்பாகப் படிக்கின்றார்கள். அமெரிக்காவில் புஷ் அவர்களும், ஒபாமா அவர்களும் கூட்த் தங்கள் நாட்டுப் பிள்ளைகளை நோக்கி இந்தியக் குழந்தைகளைப் போல் படியுங்கள் என்று சொல்கின்றார்கள். இந்தியா பெரிய நாடு. நம் நாட்டின் வளர்ச்சிக்குத் தரமான மனிதர்களை உருவாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. படிப்பில் மட்டுமல்ல, நாட்டுக்கென்று இருக்கின்ற சில கலாசாரங்களையாவது அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்.. குடும்ப அமைதிக்குத் தேவையான சில கட்டுக் கோப்பை , நாகரிகப் போக்கில் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். எதிர்கால சந்ததிக்கு இதனைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அறிவுரைகள் யாருக்கும் பிடிக்காது. வழிகாட்டுகின்ற பெரியவர்களும் தங்களை அதற்குத் தகுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
என் நினைவலைகளின் பயணத்தில் பல காட்சிகள் காணலாம். காலச்சக்கரத்தின் சுவடுகளை ஒதுக்கித் தள்ளக் கூடாது. நான் ஏற்கனவே சொன்னதுபோல் என் பயணம் ஒரு த்ரில்லர் பயணம். அடுத்துவரும் காட்சியிலேயே சில அதிர்ச்சிக் காட்சிகளைப் பார்க்கலாம்.
( அடுத்து சந்திப்போம் )
பகுதி 3
நினைப்பதெல்லாம் நடப்பதுவும் தெய்வத்தின் அருள்.
என் வேலைக்கு அரசு ஆணை கிடைக்கவும் எங்கள் குடும்பமே
மகிழ்ந்தது. வெளியூரில் வேலை என்றாலும் வீட்டில் கலக்கம் இல்லை.
அக்காலத்தில் ஓர் பெண்ணை வெளியூருக்கு அனுப்பி, தனியாக வசிக்க
அனுமதி தருவது அபூர்வம்.
என் பயணம் தொடங்கும் முன்னர் சில விஷயங்களை முதலிலேயே
கூறிவிட விரும்புகின்றேன். எழுதும் பொழுது சிலரின் பெயர்கள், சில
ஊர்களின் பெயர்கள் எழுதுவதைத் தவிர்த்திருக்கின்றேன். செய்திகள்
முக்கியமே தவிர , அங்கே பெயர்கள் தேவையில்லை. நான் யாருடைய மனத்தையும் காயப்படுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் தேவையான உண்மைகளும் புரிய வேண்டும். என் அனுபவங்களைத் தெரிவிப்பதை சமுதாயத்திற்கு நான் செய்யும் கடமையாக நினைக்கின்றேன்.
அடுத்தும் இன்னொரு தகவல். கூறப்படும் சம்பவங்கள், அவை நிகழும்
காலத்தைத் தயவு செய்து கவனத்தில் கொள்ள வேண்டும். அக்காலத்தில்
நடந்தவற்றை இக்கால நடப்புகளுடன் ஒப்பு நோக்கி விமர்சனம் செய்வது
பொருந்தாது. படிப்படியாக நேரும் மாற்றங்ளையும் சொல்லிக் கொண்டு வருவேன்.
இப்பொழுது பயணத்தைத் தொடங்குகின்றேன்.
என் தந்தையுடன் ஊராட்சி அலுவலகம் சென்று பணி நியமனக் கடிதத்தை
அலுவலகத்தில் அளித்தேன். அதன் பின் ஓர் ஊழியர் என்னை அழைத்துக் கொண்டு ஓர் அறைக்குச் சென்று, அங்கிருந்த ஒரு நாற்காலியையும் காட்டி “ இதுதான் உங்கள் இடம் “ என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். அந்த இடத்தில்
ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து நின்று “ இதுதான் உங்கள் இடம்.
என் பெயர் பரமசிவம். சமூகக் கல்வியாளர் “ என்று கூறிவிட்டு, அந்த அறையில் இருந்த எல்லோரையும்
அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் அலுவலத்தின் பணியாளர்களின்
அமைப்பையும் விளக்கினார். ஊரக வளர்ச்சி அதிகாரியின் கீழ், ஒவ்வொரு
துறைக்கும் ஒரு விரிவாக்க அலுவலர் உண்டு. சமூகக் கல்விக்கு மட்டும் ஆண், பெண் என்ற இரு அலுவலகர்கள் .நான் சேர்ந்த பணியின் பெயர் சமூகக்கல்வி விரிவாக்க அலுவலர் (பெண்).
பரமசிவம் என்னிடம் நான் செய்ய வேண்டிய பணிகளைப்பற்றிக் கூறிக்
கொண்டிருக்கும் பொழுது என் தந்தை மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பரமசிவம் அகன்றவுடன் என் தந்தை அருகில் வந்து வெளியில் சென்று மாலையில் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார். அவருடன் கால்நடை அலுவலர் சரவணனும் சென்றார்.
சில நிமிடங்கள் கழிந்தன. பரமசிவமும், கூட்டுறவு அலுவலர்
நடராஜனும் என் எதிரில் இரு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு
உட்கார்ந்தனர்.ஏனோ அவர்கள் முகங்களைப் பார்க்கவும் நல்ல அபிப்பிராயம்
தோன்றவில்லை;அவர்கள் மெதுவாகப் பேச ஆரம்பித்தனர்.
“உங்களிடம் ஒரு முக்கிய செய்தி கூற வேண்டும். உங்கள் அப்பா போகட்டும்
என்று காத்திருந்தோம். உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நம்
வட்டார வளர்ச்சி அதிகாரி பெண்கள் விஷயத்தில் மகா மோசம் --- “என்று இழுத்தார் நடராஜன். எனக்கு அச்சம் வரவில்லை. ஏனோ செய்தியை நம்பத் தோன்றவில்லை.என் மவுனத்தைக் கண்ட பரமசிவம் பேச்சைத் தொடர்ந்தார்
“ உங்களுக்கு முன்னால் பத்மாவதி இருந்தார்கள். இந்த அதிகாரி எப்படியோ
அவளைக் கெடுத்துவிட்டார். ஊர்க்காரங்க நோட்டீஸ் அடிச்சு
கேவலப் படுத்திட்டாங்க. சுவத்திலும் அசிங்கமா எழுதிட்டாங்க. அது நம்
பெரிய ஆபீஸ் வரை போய்த்தான் பத்மாவைத் தூக்கிவிட்டார்கள். அந்த
இடத்தில்தான் நீங்கள் வந்திருக்கின்றீர்கள். நம் ஆபீஸரிடம் கொஞ்சம்
ஜாக்கிரதையாக இருங்க. “
பரமசிவம் பேசப் பேச எனக்குள் நெருப்பு புகைய ஆரம்பித்தது. பயம்
வருவதற்குப் பதிலாக எதிரில் அமர்ந்திருந்த இருவரையும் கெட்ட
நோய்க்காரர்கள் போல் உணர்ந்தேன். பெண்ணைப் பழிக்கின்றார்கள் பாவிகள்
என்றுதான் நினைப்பு வந்தது.
என்னிடம் ஒரு குறையுண்டு. பெண் விஷயத்தில் ஆண்கள் கெட்டவர்கள் என்ற
எண்ணம். அப்படி எண்ண வைத்தது பிள்ளைப் பருவத்து அனுபவங்கள், நான்
கிராமத்தில் கண்ட காட்சிகளே. குடும்பச் சண்டை தெருவில் நடக்கும்.
பெண்டாட்டி தலைமயிரைப் பிடித்து இழுத்து உதைப்பான். அவளோ ஓங்கிக் குரல் எழுப்பிக் கத்துவாள். அவனோ அவளை மிதிப்பான். தெருவில் அவள் துடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் திட்டிக் கொண்டே சென்று விடுவான். இவள் தெருவில் புரண்டு அழுவாள். ஒன்றா,இரண்டா பல முறை தெருக்காட்சிகள் கண்டிருக்கின்றேன். விசாரித்ததில், அவனுக்கு ஒரு வப்பாட்டி (இப்பொழுது அது சின்ன வீடு) இருக்கிறாள். குடும்பத்தைக் கவனிப்பதில்லை. குடித்துவிட்டு எப்பொழுதாவது வருவான்; இவளோ
பொறுக்கமாட்டாமல் கத்துவாள். அவனோ அடிப்பான். பெண்டாட்டி அடித்து நான் பார்த்ததில்லை. அதனால் என் மனத்தில் ஆண்கள் பொல்லாதவர்கள் என்ற எண்னம் பதிந்துவிட்டது. நிறையக் கதைகள் படித்த அனுபவத்தில் வம்பு பற்றியும் தெரியும். என்முன் உட்கார்ந்திருந்தவர்கள் வம்பர்கள் என்று நினைத்தேன். அத்துடன் பணியாற்றும் பொழுது பெண்ணின் மேல் எப்படிப்பட்ட சேற்றைவாரி வீசுவார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். என் மவுனத்தைப் பார்த்த பரமசிவம் “பயப்படாதீர்கள், நாங்கள் இருக்கின்றோம். உங்களுக்குக் கஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வோம் “ என்றனர். அடிப்பதற்குக் கை பரபரவென ஊறியது. அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்தேன். அவர்கள் அறைக்கு வெளியில் போய்விட்டார்கள்.
அவர்கள் போனவுடன் விவசாய அலுவலகர் மாணிக்கம் வந்தார்.
“மேடம், இவர்கள் மோசமானவர்கள். பயப்படாதீர்கள். நம் அதிகாரி நல்லவர்.
இவர்களால்தான் கதைகட்டி விடப்பட்டது. ஊர்க்காரனைச் சுவத்திலே எழுத
வைத்ததும் நோட்டீஸ் அடிக்க வைத்ததும் இவங்கதான். மெட்ராஸ் ஆபீஸுக்கும் எழுதிப் போடவைத்தவங்க இவங்க தான். இவங்க கிட்டேதான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். “ என்று மெதுவாக மாணிக்கம் பேசினார்.
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. பெண்மேல் எந்தப் பழியும்
சுமத்துவார்கள், கேவலப் படுத்தப்படுவார்கள் என்பதை
உணர்ந்தேன். இக்காலத்திலும் அரசியலில் வரும் பெண்கள் மேல் பழி
சுமத்தப்படுவதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் பழிப்பவர்களின்
வாழ்க்கையைப் பார்த்தால் பரிசுத்தமாக இல்லை.
முதல் நாள் அனுபவம் ஓர் அவல முழக்கம்.இச்சூழ்நிலை எனக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. என்னால் பொறுமையாக இருக்க முடியுமா? இல்லை விலகி ஓடக் கூடாது, ஒருகை பார்க்கவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.
பிற்பகல் மூன்று மணிக்கு இரு பெண்கள் வந்தார்கள். ஒருத்தி கிராம சேவிகா,பெயர் மீனாட்சி. இன்னொருத்தி இராட்டை கற்றுக் கொடுப்பவர். பெயர் லட்சுமி.இருவரும் வேலைகளைப் பற்றிப் பேசிவிட்டு மறுநாள் உள்ளூர் மாதர் சங்கம் போகலாம் என்றார்கள். திரும்பி வந்த என் தந்தை ஒரு செய்தியுடன் வந்திருந்தார். வெளியில் சென்றவர் வாடகைக்கு ஒரு வீடு பார்த்துவிட்டதாகவும் , சில சாமான்கள் வாங்கி வைத்துவிட்டதாவும் கூறினார். எவ்வளவு சீக்கிரமாகத் தன் மகள் தனித்து வாழ, வேண்டிய வசதிகளைச் செய்துவிட்டார்!
மாலையில் என் தந்தை, சரவணன், மீனாட்சி, லட்சுமி எல்லோருடனும் புது வீட்டிற்குப் போனோம். சரவணன் வீடு இருந்த அதே தெருவில் என் வீடும். நீளமாக அமந்திருந்தது. கழிவறை கொல்லைப்புறத்தில் கோடியில் இருந்தது.கிணற்றுத் தண்ணீர்தான். வீட்டில் மின்னிணைப்பு கிடையாது (மனக் குரல் பெரியவர் பேசியதை நினைவுபடுத்தியது ). ஒரு ஹரிக்கேன் விளக்கு. சரவணன் மனைவி வந்து அடுப்பு மூட்டிப்பால் காய்ச்சினார்கள்.
விறகுடன், அல்லது விறகு இல்லாமல் இந்தச் சுள்ளிகளை வைத்து அடுப்பு மூட்டுவது கிராமத்து வழக்கம். சுள்ளிகள் பொறுக்கி கட்டாகக் கட்டி விற்பது ஒரு சிறு தொழில். அதுவும் வயலுக்கு அல்லது காட்டிற்கு வேலைக்குப் போய்விட்டு வரும் பொழுது பெண்கள் தலையில் சுள்ளிக் கட்டைச் சுமந்து கொண்டு வரிசையாய் வருவதைப் பார்க்கவே அழகு.
பால் காய்ச்சி முடியவும் மற்ற சின்னச் சடங்குகளையும் முடித்து வீட்டை விட்டுப் புறப்பட்டோம். என் தந்தை வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்தார்.
குஞ்சுகள் இறக்கை வளர்ந்தவுடன் பறக்கச் சொல்லிக் கொடுத்து விண்ணிற்கு அனுப்பும் தாய்ப் பறவைபோல் என் தந்தை இருந்தார்.
இனி நான் உலகில் தனியாக வலம் வர வேண்டும்;பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கியது.கட்டுப்பாடுகளுடன் சுதந்திர வாழ்க்கை. ஒரு பெண்ணுக்கு உரிய வீடு கணவர் வீடு. ஆனால் அங்கே அவளுக்குக் கிடைப்பது கட்டுப்பாடுடன் கூடிய உரிமை . இஷ்டம் போல் சுதந்திரத்தைக் கையாண்டால் சுதந்திரம் பாழ்பட்டுவிடும். எதற்கும் ஒரு ஒழுங்கு வேண்டும். விண்ணிலே இருக்கும் கோள்களும் , நட்சத்திரங்களும் கட்டுப்பாட்டை இழந்தால், பரந்து விரிந்து கிடக்கும் கடல் கட்டுப்பாடற்ற சுதந்திரம் விரும்பினால் என்ன நடக்கும்? சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உரிமையைக் காக்கக் கடமையில் அக்கறை வேண்டும்.
முதல் நாள் கிடைத்த கசப்பு அனுபவம் என் உணர்வுகளைக் கொஞ்சம் பாதித்தாலும் சமாளித்துவிட்டேன்; என் துணிவிற்கு பாதிப்பில்லை;
மீண்டும் சந்திப்போம்