மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 8மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:34, 7 ஜூலை 2011 அன்றிருந்தவாரான திருத்தம் எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?= எலேய் னு அழைப்பது இப்போவும் உண்டு. ஆனால் ஆண்குழந்தைகளையும், நெருங்கிய ஆண் சிநேகிதர்களை மற்ற ஆண் சிநேகிதர்களும் மட்டுமே அழைக்கின்றனர். ஆண்டாளின் காலத்தில் பெண்பிள்ளைகளைக் கூட அழைத்திருக்கின்றனர். அதுவும் இந்தப் பெண் சின்னக் குழந்தையாய் இருக்கவேண்டுமோ? கிளியே என அழைத்திருக்கிறாள். குழந்தைகளையும், சின்னக் குழந்தைகளையும் செல்லமாய்க் கிளி எனக் கூப்பிடுவது உண்டு. அல்லது இந்தப் பெண்ணின் பேச்சுக் கிளியின் மழலை மாதிரி மிழற்றலாய் இருக்கவேண்டும். கிளி கொஞ்சுகிறது என்பார்கள் அல்லவா?? அப்படி!
சின்னஞ்சிறு கிளி போன்ற அழகிய பெண்ணே, இன்னுமுமா நீ உறங்குகிறாய்? என்று கேட்கின்றனர் இந்தப் பெண்ணை அழைக்கவந்த தோழிகளும், ஆண்டாளும்.
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்= உள்ளே அந்தப்பெண் என்ன செய்யறாளோ தெரியலை, ஒருவேளை சீக்கிரம் எழுந்து குளிக்கச் செல்லத்தயாராகிக்கொண்டிருக்கலாமோ? அல்லது ஏற்கெனவே கண்ணனின் நாமாக்களை நினைந்து நினைந்து பரவசம் அடைந்து கொண்டிருக்கும் வேளையில், இவர்கள் சப்தம் அவளுக்கு இடஞ்சலாய் இருந்ததோ?? தெரியலை, உள்ளே இருந்து உடனே பதில் வருகிறது. கொஞ்சம் மெல்லத்தான் அழையுங்கள், பெண்களா? நான் வந்துகொண்டே இருக்கிறேன். ஒண்ணும் தூங்கவில்லை என்கிறாள். இதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்= அவள் அப்படிச் சொல்ல வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே அவள் ஏதோ நொண்டிச்சாக்குச் சொல்கிறாள் எனத் தோன்ற, அடி, நீ ரொம்பக் கெட்டிக்காரிதான், உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? அப்படித்தான் சொல்லுவாய், வரேன் வரேன்னு, ஆனால் நீ இதுக்கு முன்னாடியெல்லாம் இப்படிச் சொல்லிவிட்டு என்ன செய்தாய்? எங்களுக்குத் தெரியாதா என்ன உன்னைப் பத்தி? என்று கேலி பேசுகிறார்கள்.
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.= உள்ளே அவளுக்குக் கோபம் அதிகம் ஆக, ஆமாம், ஆமாம், நானே பொல்லாதவளாய் இருந்துட்டுப் போறேனே, நீங்களெல்லாம் நல்லவங்களாவே இருங்க என்று கூறுகிறாள்.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை= சரி, சரி, சீக்கிரமாய்க் கிளம்பு, உனக்குன்னு தனியாவா பாவை நோன்பு நூற்க முடியும், எல்லாரும் சேர்ந்து தானே செய்யணும்னு கூப்பிடுகிறார்கள்.
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்= உள்ளே உள்ள பெண்ணோ விடாமல் எல்லாரும் வந்துட்டாங்களா என்று கேட்க, நீ முதல்லே வெளியே வா, வந்து நீயே எண்ணிப் பார்த்துக்கோ என்கிறார்கள். மேலும்,
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்= வல்லவன் ஆன மாயக்கிருஷ்ணனைப் பாடி ஆடலாம் வா பெண்ணே.
இங்கே பகவானின் நினைவில் ஒரு கோபி அமிழ்ந்து இருப்பதையும், அவளை மற்றக் கோபிகள் வழிபாட்டுக்குக் கூப்பிடுவதைக் கூட இடைஞ்சலாக எண்ணுவதையும் மேல்பார்வைக்குக் கண்டாலும் உள்ளே இருந்த கோபியின் பணிவான பதிலில் அவள் கண்ணனின் அடியார்கள் அனைவரையும் தன் மனதுக்கு உகந்தவர்களாய்க் கண்டாள் என்பதும் புரியவருகிறது.
நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே!= நந்தனுடைய கொடிக்கம்பத்தில் கொடி கட்டப்பட்டுத் தெரிகிறது. வாயிலில் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கேயும் ஒரு வாயில் காப்போன். அவனையும் இறைஞ்சுகிறாள் ஆண்டாள்.
மணிக்கதவம் தாள் திறவாய்= மணிகள் பொருந்திய அழகிய கதவின் தாளைத் திறக்க மாட்டாயா? என்று கெஞ்சுகிறாள். கண்ணன் உள்ளே இருக்கிறான். நம் மனமாகிய கோயிலுக்குள்ளே. அங்கே சென்று அவனை அடையத் தான் எத்தனை தடை! நம் செயல்களே நம்மைத் தடுக்கின்றன அன்றோ!
அந்த வாயிற்காப்போர்கள் கண்ணனுக்குத் தெரியுமா நீங்க வரதுனு கேட்கிறாங்க போல
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்= அட, கண்ணன் அறியாதவனா? எங்களை அவனுக்கு நன்கு தெரியுமே! நாங்கள் ஆயர்பாடிச்சிறுமிகள் தாம் என்று ஆண்டாள் சொல்ல, சிறுமிகளாய் இருந்தாலும் ஏன் இப்போது வந்தீர்கள் என்று கேட்க, அவர்கள் எங்களுக்குப் பாவை நோன்புக்கான சாதனங்களைத் தருவதாய்க் கண்ணன் வாக்களித்திருந்தான். அதைப் பெற்றுச் செல்ல வந்தோம். வேறு ஒன்றும் இல்லை என்கிறாள். அவன் கருணா கடாக்ஷம், அவன் கடைக்கண் கடாக்ஷம் ஒன்றே இங்கே சுட்டப் பட்டிருக்கிறது. கண்ணனின் கருணைப் பார்வை ஒன்றே போதும் என்கிறாள் ஆண்டாள்.
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.= இந்த மாபெரும் தடையாகிய கதவுகளை நீக்கிவிட்டு உள்ளே சென்று கண்ணனைச் சந்திக்க எங்களை அநுமதிப்பாய். இப்பிறவியில் செய்யும் புண்ணியங்களே, நற்செயல்களே நம்மை ஈசன் பால் கொண்டுவிடும். முன்வினைகளோ நாம் ஈசன் பால் செல்லமுடியாமல் தடுக்கும். ஆகவே நாம் தூயமனத்தவராய் எந்நேரமும் கண்ணன் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு வேறு சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் இருந்தால் கண்ணன் நம்மை ஆட்கொள்வான். --Geetha Sambasivam 09:43, 6 ஜூலை 2011 (UTC) |
