பினாங்கின் கதை 7

மரபு விக்கி இருந்து

Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:27, 4 ஜனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பழங்கலத்தில் பழங்கள் - 7
ரெ.கார்த்திகேசு

எந்தத் தியேட்டரில் தமிழ்ப் படம்?

கு.சோணைமுத்துவின் கையெழுத்துப் பிரதியிலிருந்து பெறப்படும் "பினாங்குத் தமிழர் கதைகள்" தொடரில் இன்று "பட அரங்குப் போராட்டம்". (இந்தப் போராட்டம் எந்த ஆண்டில் நிகழ்ந்தது என்று அவர் குறிக்கவில்லை. ஆனால் 1960கள் என அனுமானிக்கலாம்.) கதை பெரும்பாலும் அவரின் வார்த்தைகளிலேயே!:

பினாங்கில் பல திரையரங்குகள் இருந்தன. ரெக்ஸ், கத்தே, ஓடியன் ஆகிய அரங்குகளில் ஆங்கிலப் படமும்; மெஜஸ்டிக், சன் ஆகியவற்றில் சீனப்படங்களும்; விண்ட்சரில் தமிழ், இந்திப் படங்கள் என்றும் ஒதுக்கப்பட்டிருந்தன. இவை தவிர நியூ வோர்ல்ட் பார்க், கிரேட் வோர்ல்ட் பார்க், வெம்ப்லி பார்க் என்னும் பொழுதுபோக்கு மையங்களில் சிறிய திரையரங்குகள் இருந்தன. இவற்றில் பழைய படங்கள் காட்டப்பட்டன.

விண்ட்சர் பினாங்கு ரோட்டில் இருந்தது. அது புதுப்பிக்கப்பட்டு கேப்பிட்டல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டவுடன் அதில் ஆங்கிலப் படங்களே திரையிடப்பட்டன. விண்ட்சருக்குப் பக்கத்தில் ரோயல் என்ற அரங்கை அமைத்து அதில் தமிழ், இந்தித் திரைப்படங்கள் திரையிட ஆரம்பித்தார்கள். விரைவில் ரோயலுக்குப் பக்கத்தில் பாரமவுண்ட் கட்டப்பட்டு இரண்டிலும் தமிழ், இந்திப் படங்கள் காட்டப்பட்டன. ரோயல் ஷா பிரதர்ஸ் நிறுவனத்துக்கும் பாரமவுண்ட் கத்தே நிறுவனத்துக்கும் உரியவை.

சாதாரணக் காட்சிகளோடு சனிக் கிழமைகளில் நள்ளிரவுக் காட்சிகளும் ஞாயிற்றுக் கிழமைகளில் மலிவுக் காலைக் காட்சிகளும் காண்பிக்கப்படும். ஆகவே அந்தப் பகுதியில் இந்தியர் கூட்டத்தை சதா காணலாம்.

தீபாவளி, தைப்பூசம் போன்ற பண்டிகைகளின்போது ரோயலிலும் பாரமவுண்டிலும் (இன்னும் சில அரங்குகளிலும்) வாழைமரம், தென்னங்கீற்றுத் தோரணங்கள், வரவேற்பு வளைவுகள் அமைத்து அழகுபடுத்தப் பட்டிருக்கும். வெளியூர்களிலிருந்தும் தோட்டப்புறங்களிலிருந்தும் படம் பார்க்க வரும் தமிழர் கூட்டத்தைப் பார்த்து பிற இன மக்கள் மலைத்துப் போவார்கள்.

இதற்கிடையே ஷா பிரதர்ஸ் நிறுவனம் கிரேட் வோர்ல்ட் பார்க்கில் ஈஸ்டர்ன் என்னும் புதிய திரையரங்கை ஏற்படுத்தி அதில் தமிழ், இந்தித் திரைப்படங்கள் காட்ட ஏற்பாடுகள் செய்தனர். ரோயலைப் பார்க்கிலும் இந்தப் புதிய அரங்கு சிறியது, வசதிக் குறைவானது. இந்தப் புதிய திரை அரங்கை டாக்டர் என்.கே.மேனன் திறந்து வைப்பார் என்றும் அறிவுப்புச் செய்யப்பட்டது.

படம் பார்ப்பதென்றால் தமிழர்கள் எந்த நிலையிலும் படம் பார்ப்பார்கள்; படம்தான் முக்கியமே தவிர வசதி பற்றிக் கவலை கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணமே புதிய அரங்கை அமைத்தவர்களின் மனதில் இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழர் சமூகத்தில் இதற்குப் பரவலான எதிர்ப்புக் கிளம்பிற்று. வழக்கமாக உள்ளதைப் போல ரோயலில்தான் தமிழ், இந்தித் திரைப்படங்கள் திரையிடப்படவேண்டும் என்ற கோரிக்கை அரங்க நிர்வாகிகளிடம் வைக்கப்பட்டது. தொடர்ந்து டாக்டர் மேனன் அந்தத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால் அரங்க நிர்வாகிகளும் டாக்டர் மேனனும் அந்தக் கோரிக்கைகளை நிராகரித்தார்கள்.
ம.இ.கா., மலாயா தமிழர் சங்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம், பினாங்கு மருத்துவர் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து நிர்வாகத்தின் போக்கைக் கடுமையாகச் சாடி கண்டனம் தெரிவித்தன. ஆனால் நிர்வாகம் கோரிக்கைளைத் தொடர்ந்து அலட்சியப் படுத்திப் பிடிவாதமாக இருந்தது. ஈஸ்ட்டர்ன் தியேட்டரில் முதல் தமிழ்ப் படமாக "கவிதா" என்னும் படமும், ரோயலில் "Guns of Navarone" என்னும் ஆங்கிலப் படமும் அரங்கேற நாள் குறிக்கப் பட்டது.

டாக்டர் மேனனிடம் தமிழர்களின் உணர்வு எடுத்துக் கூறப்பட்டும் அவர் தான் திறப்பு விழாவுக்குக் கண்டிப்பாகப் போகப் போவதாகக் கூறிவிட்டார்.

எதிர்ப்பு உணர்வைக் காட்ட இந்த இயக்கத்தினர் ஒன்று கூடி அரங்கின் முன் மறியல் செய்வது எனத் தீர்மானித்தார்கள். குறிப்பிட்ட நாளில் அரங்கின் முன் மறியல் செய்யப்பட்டது. டிக்கெட் வாங்க வரும் அனைவரிடமும் நிலைமையை எடுத்துக் கூறி அவர்கள் அனைவரையும் திரும்ப்பிப் போகச் செய்தார்கள். பெரும் தமிழர் கூட்டம் அந்தப் பகுதியை முற்றுகையிட்டிருந்தது. ஆனால் எந்த ஓர் அசம்பாவிதமும் நிகழாமல் மிக அமைதியாகவும் நாகரிகமாகவும் மறியல் நடந்தது.

காவல் துறையினர் ஏராளமானோரும் அங்கு கூடியிருந்து நிலைமையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஓரிருவரைப் பிடித்துப் போய் கொஞ்ச நேரத்தில் விடுவிக்கவும் செய்தார்கள்.

பினாங்குத் தமிழர்கள் வரலாற்றில் இதுபோன்றதொரு ஒற்றுமையான உணர்வு பூர்வமான நிகழ்ச்சி இதற்கு முன் நடைபெற்றதில்லை என்று சொல்லும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

டாக்டர் மேனனின் செல்வாக்கு அதன்பின் இந்தியர்களிடையே குறையத் தொடங்கியது.

இங்கு சோணைமுத்து கதையை முடித்திருக்கிறார். ஆனால் இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதா என்பதைப் பற்றி ஒரு செய்தியையும் அவர் சொல்லவில்லை. அவரிடம் கேட்கும் நிலையிலும் நாம் இல்லை. பினாங்கில் வாழ்பவர்கள் யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் மக்கள் ஓசைக்கு எழுதித் தெரிவியுங்கள்.

இப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க ஈஸ்ட்ரன், ரோயல், பாரமவுண்ட், விண்ட்சர், கேப்பிட்டல் மற்றும் நியூ வோர்ல்ட் பார்க், கிரேட் வோர்ல்ட் பார்க், வெம்ப்லி பார்க் ஆகிய அரங்குகள் இடிக்கப் பட்டுவிட்டன. அவற்றின் சாம்பலில்தான் கொம்தார் இன்று நிற்கிறது. பழைய ஓடியன் இப்போது வீணை-ஓடியன் என்ற பெயரில் தமிழர்களுக்குச் சொந்தமாக இருப்பது மட்டுமே ஒரு ஆறுதல்.


(பகுதி - 8 தொடரும்)

பங்களிப்பாளர்கள்

Karthi, Vinodh மற்றும் Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=பினாங்கின்_கதை_7&oldid=637" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 4 ஜனவரி 2010, 20:27 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,525 முறைகள் அணுகப்பட்டது.