பினாங்கின் கதை 3

மரபு விக்கி இருந்து

Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:24, 4 ஜனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பழங்கலத்தில் பழங்கள் - 3
ரெ.கார்த்திகேசு

பினாங்கில் "ஏழு முச்சந்தி" என்ற பெயரில் ஒரு சந்திப்பு தமிழர் வாயில் புழங்கி வந்தது. இப்போதுள்ள மெகசின் சாலையின் (கொம்தார் பக்கத்தில்) தொடக்கத்தில் இது அமைந்திருக்கிறது. ஏழு சாலைகள் சந்திக்கும் இடமாக இருந்தால் அது "ஏழுசந்தி" என்றல்லவா பெயர் பெற்றிருக்க வேண்டும்?

இது பற்றி பினாங்கு இந்து மகாஜன சங்கம் எழுதியிருக்கும் ஓர் ஆவணத்தில் உள்ள விவரப்படி, இது "ஏழு முச்சந்தி" அல்ல, ஆனால் "ஏல முச்சந்தி" என்று தெரிய வந்தது. பினாங்கின் மொத்தக் கொள்முதல் மார்க்கெட் இங்குதான் அமைந்திருந்தது என்று நினைவு படுத்திக் கொண்டால், சந்தை வியாபாரிகள் ஏலம் கூறி சரக்கு விற்கும் இடம் இது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தியத் துறைமுகத் தொழிலாளர்கள் அப்போது குஜராத்தி மற்றும் இந்திய முஸ்லிம் வர்த்தகர்களிடம் (இவர்கள் பற்றிப் பின்னர் எழுதுகிறேன்) வேலை பார்த்து வந்தார்கள். இந்த வர்த்தகர்கள் பெரும்பாலும் பாக்கு, வாசனைப் பொருட்கள், ரப்பர் பேல்கள் ஆகியவற்றை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்து அவற்றை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மறு ஏற்றுமதி செய்து வந்தார்கள். ஓர் எடுத்துக்காட்டுக்கு இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாக்கு பினாங்கில் கட்டுப் பிரிக்கப்பட்டு ஊறவைக்கப்பட்டு, காயவைக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதற்கு இந்தியாவில் ஏகப்பட்ட கிராக்கி அந்தக் காலத்தில்.

பாக்கு பற்றி நம் அறிஞர் ஜெயபாரதி தமது அகத்தியர் செய்திக்குழுமத்தில் சுவையான தகவல் ஒன்று எழுதியிருந்தார். (இப்படிச் சின்ன, பெரிய தகவல்களாக நூற்றுக் கணக்கில் தந்து உலகத் தமிழர்களை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.) அதை இங்கே தருகிறேன்"

"பாக்கு மரங்களிலிருந்து முற்றிய பாக்கைப் பறித்து இறக்குவார்கள். அவற்றைப் பெரிய பெரிய தோம்புகளில் ஊறவைப்பார்கள். ஊறியபின்னர் இளநீரின் மட்டையை உரிப்பதுபோல பாக்கைச்சுற்றியிருக்கும் மட்டையை அகற்றுவார்கள். அதன்பின்னரே காயவைப்பது.
இவ்வாறு காயவைப்பது கொட்டைப்பாக்கு.

பாக்கை அவித்து, அதை ஆறவைத்து, அதை ஸ்லைஸ் ஸ்லைஸாக வெட்டி, அதன்பின் காயவைப்பார்கள். இதைக் 'களிப்பாக்கு' என்று குறிப்பிடுவார்கள். இது 'மொறுகுமொறுகு'வென்று இருக்கும். இதன் சுவையும் வித்தியாசமானதுதான்.

பாக்குகளை மெல்லிய இழைகளாகச் சீவிவைப்பதும் உண்டு. இதைச் சீவல் பாக்கு என்பார்கள். சீவலை நெய்யில் முந்திரிப்பருப்பு, பிஸ்தாப் பருப்பு, தேங்காய்ப்பூ, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றுடன் நெய்யில் வறுத்து வைப்பதும் உண்டு. சிறிய துணுக்குகளாகப் பாக்கைவெட்டி அந்தத் துணுக்குகளையும் பிஸ்தா, குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றைச் சேர்த்து நெய்யில் வறுத்துவைப்பதும் ஒருவகை." (நன்றி: ஜெய்பி மற்றும் அகத்தியர்)

ஒரு பீக்கல் (100 கட்டி) சாக்குகள் கட்டப்பட்டு அவற்றைத் தொழிலாளர்கள் கிடங்குகளிலிருந்து லோரிகளுக்குத் தூக்கிச் செல்வார்கள். வெல்ட் கீயில் வத்தைகள் (lighters) துறை உண்டு. அங்கு சீனர்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் சொந்தமான படகுகளும், பெரிய 'தொங்காங்'களும் (tongkangs) அணைந்திருக்கும். அவற்றில் ஏற்றுவார்கள். அவை ஆழ்கடலில் நிற்கும் கப்பல்களில் கொண்டு சேர்க்கப்படும்.

பினேங் ஸ்ட்ரீட், கிங் ஸ்ட்ரீட், விக்டோரியா ஸ்ட்ரீட் ஆகியவற்றில் இந்த பாக்கு காயவைக்கும் இடங்கள் இருந்தன. இதே தொழிலாளர்கள் இறக்குமதிப் பொருள்களான சீனி, அரிசி மூட்டைகள் தூக்கவும், வெங்காயம், மற்றும் மசாலைப் பொருட்கள் தூக்கவும் பயன் படுத்தப் பட்டனர்.

இந்தத் துறைமுகத் தொழிலாளர் சமூகம்தான் தண்ணீர்மலை மலை அடிவாரத்தில் கணேசர் கோயிலுக்கு அருகே உள்ள மடத்தை போருக்கு முன் 1930இல் கட்டியது. மலாயாவை ஜப்பானியர் ஆண்டபோது இந்த மண்டபத்தை அவர்களின் படைகள் ஒரு பட்டறையாகப் பயன் படுத்தினார்கள். அப்போது இது பெரிதும் சேதப்பட்டது. பின்னர் பிரிட்டிஷ் யுத்த சேத இழப்பீட்டுக் கழகம் (War Claims Commission) சிறிய இழப்பீடு கொடுத்தாலும் அதன் உறுப்பினர்களே நிதி சேர்த்து இதனைச் சீர்படுத்தினார்கள்.

பின்னர் 1948இல் மகாத்மா காந்தி இறந்ததன் நினைவைக் கொண்டாட இது காந்தி மண்டபம் எனப் பெயர் சூட்டப் பட்டது. வெகுகாலமாக தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் தங்கவும், சாப்பாடு போடும் இடமாகவும் இது விளங்கி வருகிறது.

இந்தக் கட்டடத்தை இப்போது பராமரித்து வரும் இந்து மகாஜன சங்கம் இந்தக் கட்டடம் "துறைமுகத் தொழிலாளர்களான எங்கள் முன்னோரின் ஆன்மா; பினாங்கு இந்திய சமூகத்தின் இதயம்" என வருணித்துள்ளது.

இந்தத் துறைமுகத் தொழிலாளர்கள் 1833இலேயே குயின் ஸ்ட்ரீட் மாரியம்மன் கோயில் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். நூறாண்டுகளுக்குப் பிறகு 1933இல் இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்ற பொழுது இந்த சமூகத்தினரைப் பிரதிநிதித்து கே.வி.கருப்பையாத் தண்டல், பி.காளிமுத்து வாண்டையார் ஆகியோர் உழைத்திருக்கிறார்கள்.

இந்து மகாஜன சங்கம் 1935இல் அமைக்கப் பட்டது. குறிப்பாக இந்துக்களின் சமயத் திருவிழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடுவதே இதன் நோக்கம். ஆனால் பிற சமூகப் பண்பாட்டுப் பணிகளிலும் அது ஈடுபட்டு வந்தது. தொழிலாளர்களுக்கான ஒரு தொழிற்சங்கம் போலவும் இது செயல்பட்டது. சங்கத்தின் கட்டடம் இப்போதும் 40 சர்ச் ஸ்ட்ரீட் என்ற முகவரியில் இருக்கிறது.
(பகுதி 4 தொடரும்)

பங்களிப்பாளர்கள்

Karthi மற்றும் Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=பினாங்கின்_கதை_3&oldid=635" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 4 ஜனவரி 2010, 20:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,115 முறைகள் அணுகப்பட்டது.