காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 -( 3)மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:15, 13 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
கயாசுரனின் மெய்யான தவத்தை மெச்சிய காத்தல் கடவுளான விஷ்ணு பகவான், வேண்டிய வரம் அருள்வதாய் உறுதி கொடுத்ததைப் பார்த்த தேவர்கள் அஞ்சி நடுங்கினர். கயாசுரன் அப்படி என்னதான் வரம் கேட்டான்....? இவ்வரத்தின் பயனாய், நரகம் என்ற ஒன்றே செயலற்றுப் போய், தூய்மை வரம் சுவர்கத்திலேயே, இட நெருக்கடியை உண்டு பண்ணியதாம். ’குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்பர் பெரியோர். பிறவியால் சாதியா? செயலால் சாதியா? இன்றளவும் விவாதத்திற்குரிய பிரச்சனை இது. வேதியர் குலத்தில் உதித்த இராவணன் தன் செய்கைகளினால் அசுர குலத்தவன் ஆனான்.அசுரர் குலத்தவரான பிரகலாதனோ, தேவர் உலகத்தினராகும் தகுதி பெற்றான். சத்திரிய குலத்தில் அவதரித்த விசுவாமித்திரரோ, பிரம்ம ரிஷியானாரே. அப்படித்தான் கயாசுரனும் தம் வரத்தால் மட்டுமன்றி, விஷ்ணு பகவான் தானமாக கேட்ட தன் உடலையே, நல்ல காரியம் என்பதனால் துளியும் யோசிக்காமல் மிக மகிழ்ச்சியுடன், தன் உடலைக் கீழே கிடத்தினான். அவன் படுத்த அந்த இடம்தான் மகத தேசத்தைச் சேர்ந்த சம்ப காரண்யம் என்ற மதுவனம், கோலாகலம் என்ற மலையைத் தலைக்கு உயரமாகக் கொண்டு, அவன் வேள்விக்குத் தன்னை அர்ப்பித்த இடமே கயை என்னும் சுதார சேத்திரமாகியது.இந்த வேள்வியில் பங்கு கொள்ள தேவர் உலகமே கூடியதாம்.
‘உயிர் ஒடுங்குவதற்கு இறை அனுமதி வேண்டும்’ என்பதும் உயிர் ஒடுங்கிய பின்னும் உடல் ஒடுங்கச் சிறிது நேரம் பிடிக்கும் என்பதையும் அவன் செயல்கள் உணர்த்தும். அந்த நேரத்தில் தேவர்கள் அவன் வேண்டும் வரம் கேட்கச் சொன்ன போதும் அவன் முக்தி வேண்டாமல், உலக நன்மைக்காக,வரம் கேட்டான்.
“ சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும் பூவுலகமும் இருக்கும் வரை எல்லாத் தெய்வங்களும், உருவமாகவோ, அருவமாகவோ இங்கேயே என்னில் உறைய வேண்டும். இந்த, தலம் தன் பெயரில் கயை என்று காலம் முழுவதும் விளங்க வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிரார்த்தம் செய்பவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் பிரம்ம லோகம் சித்திக்க வேண்டும். அவர்களை எந்த பாவமும் தீண்டக் கூடாது.” என்ற வரம் கேட்டான். அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார் கல்லால் என்னும் ஐயனின் குறளுக்கு இலக்கணமாய் கயையில் விஷ்ணு பதம் அமைந்துள்ளது. நம் முன்னோர்களுக்கு நாம் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையையும், நன்றியுணர்வையும் தெரிவிக்கும் வகையிலேயே, சிரார்த்தம் செய்யப்படுகிறது. நமது முந்தைய மூன்று தலைமுறைகளையும் நினைவு கூர்கிறோம். நம் முன்னோர்கள் நம் வம்சத்தில் யாராவது ஒருவராவது கயைக்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று காத்திருப்பார்களாம்.கயைக்குச் சென்று பிண்டம் போட்டு,நன்றிக் கடன் செலுத்துவது,நம் கடமையாகும்.என்று பெரியவர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.
கயையிலே, தங்கள் முன்னோருக்கு மட்டுமன்றி, உற்றார், உறவினர், நண்பர், பகைவர் என்று எல்லோருக்குமே பிண்டம் போட்டு அவர்களுக்கு நற்கதியை கிடைக்கச் செய்யலாம்.தனக்கும், ‘ஆத்ம பிண்டம்’ போட்டு விஷ்ணு பதத்தில் ஒப்படைக்கலாமாம். இதனால்தான் கயைக்கு இத்துனை மகத்துவம் என்கின்றனர். பிராமணர்களைக் கொண்டு சிரார்த்தம் செய்வதற்கும் ஒரு புராணக்கதை நிலவுகிறது.
தொடரும்.
பவள சங்கரி திருநாவுக்கரசு தேதி - 13/04/2011. --
--
|