சித்தர் வழியில் குரு நமசிவாயர் 22 Bமரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:20, 25 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் "கோபுரங்கள் நான்கினையும் கண்டமட்டில் குற்றமெலாம்
தீ பரந்த பஞ்சது போல் சென்றதே-நூபுரங்கள் ஆர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம் பார்க்கின்றார்க்கென்ன பலன்.....
என்ற இவ்வெண்பாவைக் கூறிக்கொண்டே சிதம்பரம் சென்று திருக்கோயிலுட் புகுந்து, சிவகங்கையில் நீராடி,
"கண்ட மட்டில் கண்ட வினை காதம்போம்
என்ற வெண்பாவினைச் சொல்லிக்கொண்டே கனக சபைக்கு முன் சென்று பெருமானை வணங்கும்போது,கூத்த பெருமான், அண்ணாமலையில் குகைக்கண் அமர்ந்திருக்கும் குகை நமச்சிவாயரைப் போலவே காட்சி கொடுத்தார். அப்போது வாழ்த்தி வணங்கி நின்று,
"திருவண்ணாமலையிற் குகை நமசிவாய பொன்னம்பலவனே பரமாசிரியனே!"
அந்நாளில், தில்லை மூவாயிரவருள், சீவன் முத்தர், சடாமுத்தர், மகா முத்தர் என்ற மூவர் மட்டும் பல்லக்கேறும் தனிச்சிறப்புடையவர்களாக இருந்தனர். அவர்கள் கனவில் ஆடல் அழகராகிய அம்பலவாணப் பெருமான் தோன்றி, "திருவண்ணாமலையில் இருந்து ஞானி நம் திருநகரில் வந்து தங்கி இருக்கிறார்; அவர் சிவயோகத்தில் மிகுதியாக ஈடுபட்டிருப்பவர். அவருக்குத் தனிமையான இடத்தினைத் தருதல் வேண்டும். அவரால் நமக்குப் பற்பல பணிகள் நடைபெற இருக்கின்றன. அவருக்குத் தகுதியான இடத்தினைத் தருதல் வேண்டும். நாம் இருமுறை திருவடி வைத்திருக்கின்றோம். அவ்விடத்தில் குரு நமச்சிவாயரைக் கொண்டு போய் விடுவீராக." என்ரு திருவாய் மலர்ந்தருளினார். அவ்வாறே அர்ச்சகர் மூவரும் குரு நமச்சிவாயரை அவ்விடத்தில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பினார்கள். அங்கே யோகத்தில் இருக்கும்போது நமச்சிவாயருக்குப் பசி உண்டாயிற்று. அப்போது,
"ஊன்பயிலும் காயம் உலராமல் உன்றனது
என்ற வெண்பாவினைச் சொன்னார். உடனே சிவகாமி அம்மையார் அமுது கொண்டு வந்து நின்று,
"கொண்டு வந்தேன் சோறு, குகை நமச்சிவாயரது
என்ற வெண்பாவினைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறாகவே, சிவகாமசுந்தரி தேவியார் குரு நமச்சிவாயருக்கு ஒவ்வொரு நாளும் அன்னம் அளிக்க குரு நமச்சிவாயர் யோகத்தில் இருந்து வந்தார்.
இவ்வாறாக இவர் சிவயோகத்தில் இருக்கிற காலங்களில் இவரைக் காண வரும் அன்பர்கள் பொன்னையும், பொருளையும் எதிரில் வைத்துவிட்டுச் சென்றார்கள். அவற்றைக் கண்ட குரு நமச்சிவாயர், "இவை இவ்விடத்திற்கு ஏன் வந்தன? இவை ஆட்கொல்லி, இங்கு இது வேண்டாம்!" என்று அந்த நேரத்தில் இருந்தவர்களை எடுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டு விடுவார். இவற்றைக் கண்ட தில்லை மூவாயிரவர், "இவ்வளவு செல்வமும் வீணாகிறதே! " என்று தம்முடன் கூடிப் பேசிக் குரு நமச்சிவாயர் இடம் சென்று, "சுவாமி, நீர் இவ்விடத்தில் இருப்பதனால், அன்பர்கள் தரும் பொருட்கள் வீணாகின்றன. திருக்கோயிலின் உள்ளே வந்து தங்கினால், எல்லாப் பொருட்களும் பல்வேறு வகையான திருப்பணிகள் செய்வதற்குப் பயன்படும். பல கட்டளைகள் நடைபெற வழியுண்டாகும்." என்று வேண்டிக்கொண்டனர்.
அப்போது குரு நமச்சிவாய தேவர், அர்ச்சகர்களை நோக்கி, "நாம் நமது குருவின் ஆணைப்படி இவ்விடத்தில் வந்திருக்கிறோம். ஆதலால் யாம் அங்கு வர இயலாது." என்று மறுத்துவிட்டார். உடனே தில்லை மூவாயிரவருள் சிறப்புற்றிருந்த சீவன் முத்தர், சடா முத்தர், மகாமுத்தர் ஆகிய மூவரும் அம்பலத்தாரிடம் சென்று,"பெருமானே, குரு நமச்சிவாய மூர்த்தி கோயிலுக்குள்ளே வந்தால் பல திருப்பணிகள் நடைபெறவும், பல அறக்கட்டளைகள் தொடர்ந்து நடைபெறவும் வழியுண்டாகும்." என்று சொன்னார்கள். "நன்று! நீவீர் சென்று அழைத்தால் வாரார்! யாமே சென்று அழைப்போம்." என்று கூறி, மூப்பு நிறைந்த அடியவராய்த் தண்டு கமண்டலம், பிடித்துக்கொண்டு திருப்பாற்கடல் என்னும் இடத்திற்கு வந்து குரு நமச்சிவாய மூர்த்தியின் எதிரே நின்றார். குரு நமச்சிவாயர் யோகம் தெளிந்து முன் நிற்பவரைப் பார்த்தார். கண்ணுற்றவுடனே, "ஐயனே! போற்றி, " என்றார். வந்தவரும் , "போற்றி,போற்றி!" என்றார். குரு நமச்சிவாயர், வந்து நின்ற முதுமை நிறைந்த அடியாரைப் பார்த்து, "ஐயா, தாங்கள் இருப்பது எந்த ஊர்?" என்றார். அவர், "நாம் இருப்பது தில்லைவனம்" என்றார், "உம்முடைய பெயர் என்ன?" என, " எம் பெயர் அம்பலத்தாடுவார்." என்றார்.
"நீர் என்ன அலுவலாக இங்கு வந்தீர்?" என்று கேட்க , "எனக்கு அன்னம் தேவையாக இருக்கிறது; இவ்வூர் எங்கும் சுற்றினேன், அன்னம் கிடைக்கவில்லை, இவ்விடத்தில் உம்மிடம் அன்னம் கிடைக்கும் என்று சொல்லினர். ஆகவே உம்மிடம் வந்துள்ளேன்." என்றார் முதியராய் வந்து நின்ற அடியவர். அப்பொழுது குரு நமசிவாய மூர்த்தி, "ஐயா, என்னிடம் அன்னம் இல்லை. எனக்குச் சிவகாம சுந்தரி அம்மையார் உணவளித்து வருகிறார். எம்மிடம் பாத்திரம் கூட இல்லை." என்று சொல்லினர். அப்போது அந்த முதியவர் , "சுவாமி, என்னிடம் பாத்திரம் இருக்கிறது." என்று சொல்லிச் சந்திரனைப் பாத்திரமாக வைத்தார். அப்போது குரு நமச்சிவாயர் அன்னை சிவகாம சுந்தரியைச் சிந்தனை செய்தார். அன்னம் வந்தது! முதிய அடியவரை நோக்கி, "இதனை ஏற்றுக்கொள்ளும்." என்றார்.
அப்போது அம்பலத்தாடுவார், "நாம் இதனை ஏற்றுக்கொள்ளோம்." என்றார். குரு நமசிவாயர் ,"காரணம் என்ன? " என்ரு வினாவ, அடியவர், "ஐயா, இவ்வாறே ஒவ்வொரு நாளும் உணவளிப்பதாக உறுதி கூறினால் ஏற்றுக்கொள்வோம், இன்றேல் ஏற்றுக்கொள்ளோம்," என்றார். அது கேட்ட குரு நமச்சிவாயர், "நீர் மிகவும் மூப்படைந்திருக்கின்றீர்! யானோ, இன்று இவ்வூரில் இருக்கிறேன், நாளை, காசியோ, இராமேசுவரமோ அறியேன்; அவ்வாறு இருப்ப உமக்கு நித்தியம் அன்னம் கொடுக்கிறோம் என்று எவ்வாறு கூற இயலும்?" என்றார். அப்போது அம்பலத்தாடுவார், "ஐயா, நீர் செல்லும் திசைகளில் யாம் உமக்கு முன்னே நடந்தால் அன்னம் கொடும். உமக்குப் பின்னால் நடந்தால் அன்னம் வேண்டாம்." என்றார். அப்போது, குரு நமச்சிவாயர், "நீர் முன்னே நின்றால் அன்னம் கொடுக்கிறேன். இன்றேல் இயலாது!" என்றார். அம்பலத்தாடுவாரும் அதற்கு இசைந்தார். ஆகவே குரு நமச்சிவாயர் சுவாமியைப் பார்த்து, "உணவு கொள்ளும்." என்றார். அதற்கு அவர், "திருநீற்றுக் கோயிலையும், உருத்திராக்கத்தையும் தொட்டு உறுதி கூறிக் கொடுத்தால் பெற்றுக் கொள்வோம்." என்றார். குரு நமச்சிவாயர் அவ்வாறே செய்ய, வந்த அடியவர் கொடுத்த அமுதைக் கொள்வது போல் காட்டி, " நீர் வேட்கை தணியுமாறு தண்ணீர் தரவேண்டும்." என்றார். குரு நமச்சிவாயர் அருகிலிருந்த திருப்பாற்கடல் எனப்படும் நீர் நிலையைக் காட்டி, "அதன் கண் நீர் அருந்துக!" என்றார். அவ்வாறே நீர் அருந்தச் செல்பவர் போல் காட்டி மறைந்தருளினார்.
மறைந்தருளிய அம்பலத்தாடுவார் தில்லை மூவாயிரவரிடம், "நாம் சென்று குரு நமச்சிவாயன் கோயிலுக்குள் வருவதற்குரிய வழியை வகுத்துவிட்டோம். நீவீர் அனைவரும் கூடி விருதுகளுடனும், நாம் ஏறும் பல்லக்குடனும் சென்று, வீதிவலமாக நம்மிடம் அழைத்து வருக!" என்றார். அவ்வாறே தில்லை மூவாயிரவரும் சென்று வணங்கிப் பல்லக்கில் ஏறுமாறு வேண்டினர். குரு நமச்சிவாயரை நோக்கி, "சுவாமி! இது பல்லக்கன்று, சூரிய சிங்காசனம்!" என்றனர். அப்போதும் குரு நமச்சிவாயர், மறுத்து விட்டார்.
எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்
--Geetha Sambasivam 12:07, 24 மார்ச் 2011 (UTC)
|

