பாடல் ஐம்பத்தொன்று.
அரணம் பொருள் என்று அருள் ஒன்றும் இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே
விளக்கம் :
தாங்கள் கட்டிய முப்புரங்களை நிலையான செல்வம் என்று நினைத்து அருளென்பதே இல்லாத அசுரர்களின் பகையை அழித்திட சினங்கொண்டெழுந்த சிவபெருமானும், முகுந்தனான திருமாலும் சரணம் சரணம் என்று வணங்கும்படி நின்ற அம்மையின் அடியார்கள் இந்த உலகத்தில் மரணம், பிறவி இரண்டையும் அடையமாட்டார்கள்..மரணமில்லாப் பெருவாழ்வு அடைவது எங்ஙனம்? சாத்தியமற்ற ஒன்று... ஆனால் இதை அம்மையின் அடியார்கள் அடைவார்கள் என்று அபிராமி பட்டர் உரைக்கின்றாரே... ! சிந்திப்போம்... இதையே வள்ளுவன் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்" என்றுரைத்தான்.. அபிராமி பட்டர் இன்றையதினம் நம்மிடையே இல்லை... ஆயினும் அவர் தந்த அழகிய பாடல்களால், தமது பக்தி எனும் பெருந்தொண்டால், தமிழ் உள்ளளவும், தமிழ்நாடு உள்ளளவும் என்றென்றும் இருப்பார் இல்லையா?? அதுதான் மரணமில்லாப் பெருவாழ்வு.. அதைப்பற்றித்தான் அபிராமிப் பட்டர் இவ்விடத்து உரைக்கின்றார்...
"அரணம் பொருள் என்று " தாங்கள் கட்டிய கோட்டைகளையே நிலையான செல்வம் என்று நினைத்து... முப்புரங்களைக் கட்டிய அசுரர்களுக்கு அதுவே நிலையானது என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. பின்னர் அதுவே அவர் தம் அழிவுக்கும் வித்தாகி விடுகின்றது.. "அருள் ஒன்றும் இலாத" அருளே இல்லாத... கருணையே இல்லாத...தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் புரிந்த.... கவனிக்க வேண்டிய
செய்தி நமக்கும் இவ்வரிகளில் உள்ளது... பொருட்செல்வத்தை நிலையானது என்று நாம் நினைக்கத் துவங்கும் வேளை நம் மனத்திலிருந்து அருளானது தானாகவே வெளியேறிவிடுகின்றது... எனவேதான் வள்ளுவனும் "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கோர்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு" என்று பகர்ந்தான்.. திருமகள் நம் இல்லத்தைத் தன் அருளால் நிரப்புவது, நம் மனந்தனில் குடிகொண்ட அருளை வெளியேற்றுவதற்கு அல்ல.. தகுதியுடையோர்க்கு உதவி செய்வதற்காகத்தான்.. எனவே பொருள் வரும் வேளை, அதை நிலையென்று நினைத்தால் அருள் போய்விடும்... அதையே நிலையானதன்று என எண்ணித் தருமங்கள் செய்து வந்தால் நீக்கமில்லா நிலையான வாழ்வு
பெறலாம்..
"அசுரர் தங்கள் முரண் " தங்கள் கோட்டைகளே நிலையானது என்று நினைத்த அசுரர்களின் பகைமை.... "அன்று அழிய முனிந்த பெம்மானும் " அழிய வேண்டும் என்று சினங்கொண்டு எழுந்த சிவபெருமானும், "முகுந்தனுமே"திருமாலுமே.. "சரணம் சரணம் என நின்ற நாயகி " சரணம் சரணம் என்று வணங்கும்படி நின்ற அம்மை...முப்புர அசுரர்களை அழித்து மாந்தரைக் காத்தவர் ஈசனென்றால், தசாவதாரங்களை எடுத்து தீமைகளினின்று மாந்தரைக் காத்தவர் திருமால்... இவர்கள் இருவருமே அம்மை ஆதிபராசக்தியிடம் சரணம் சரணம் என்று வந்து வணங்கி நின்றார்கள்.. ஏனெனில் அவர்களைப் படைத்தவளே அந்த பராசக்திதான்... "தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே" அன்னையின் அடியார்கள்... அவளையே சரண்புகுபவர்கள் மரணம், பிறப்பு என்ற சுழற்சி வாழ்க்கையை மீண்டும் எய்த மாட்டார்கள்.
பிறப்பறுக்கப் படவேண்டும் என்று அன்னையை வேண்டிய அபிராமிப் பட்டர்...மரணம் எய்தும் வேளை என் அருகே வந்து நில்லம்மா என வேண்டிய அபிராமிப் பட்டர்... இவ்விடத்து அன்னையின் அடியார்கள் மரணமெய்த மாட்டார்கள் என்று சொல்வதன் காரணம் என்ன?? மரணம் என்புதோல் போர்த்திய இந்த உடம்புக்குத்தானேயன்றி, நமது ஆன்மாவுக்கல்ல... அன்னையை நம்பினார், அவளடியே சரணமென்று தஞ்சமடைந்தோருக்கு மீண்டும் பிறப்பில்லை... அவர்களது ஆன்மாவுக்கு மரணமேயில்லை... அது மீண்டும் ஒரு உடலைத் தனக்கு வேண்டுமென்று தேடிச் செல்லாது... செல்லவேண்டிய அவசியத்தையும் அது தாண்டி முக்தி பெற்று விடுகின்றது.. அது பிறப்பறுப்பினைக் குறிக்கின்றது... மரணமில்லாப் பெருவாழ்வு என்பது அன்னையின் அடியார்களுக்குக் கிடைத்த வரம். அன்னையையே தஞ்சமென்று நம்பி விழுந்தோர், புண்ணியங்களை மட்டுமே புரிவாரன்றி, பாவங்களைச் சுமப்பதில்லை... அவர்தம் புண்ணியங்களே அவர்களது பெயர்களை
இவ்வுலகத்தில் நிலைநிறுத்திவிடுகின்றது...
பாடல் ஐம்பத்திரண்டு
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே
விளக்கம் :
பிறை நிலவைத் தன் தலைமேல் அணிந்த சிவபெருமானின் திருமனையாளான அன்னை அபிராமியின் திருவடித்தாமரைகள் மேல் அன்பு செய்து அவளை எண்ணித் தவமியற்றுபவருக்கு கிடைக்கும் சின்னங்களாவன... வையகம், குதிரை, ஆனை, மாமகுடம், பல்லக்கு, கொட்டும் பொன், விலையுயர்ந்த முத்து மாலைகள்...அன்னையை எண்ணித் துதிப்போர்க்கு இம்மையில் கிட்டும் செல்வங்களை இப்பாடல்
பட்டியலிடுகிறது. இப்பட்டியலில் இடம்பெற்றவையெல்லாம் பெற்றிருப்போர் பெரும் செல்வந்தர்களாக இருப்பார்கள்.. நாமும் இப்பாடலைப் பாடிப் பெருஞ்செல்வமடைவோம்... (செல்வம் சேருங்காலை முந்தைய பாடலையும் பாடிடுவோம். அப்போதுதான் பொருளோடு அருளும் கூடியிருக்கும்).
"பிறை முடித்த ஐயன் திருமனையாள் " பிறை நிலவைத் தன் சடையிலே அணிந்த சிவபெருமானின் மனையாட்டியின்... அன்னை அபிராமியின்...."அடித் தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு " திருவடித்தாமரைகள் மேல் அன்பு செய்யும்பொருட்டு முன்னர் தவமியற்றியவர்களுக்கு... "உளவாகிய சின்னங்களே "கிடைக்கும் சின்னங்களாவன.... "வையம" இந்த வையகம்... இந்த வையகமே அவர்தம்
வசமாகும்... "துரகம்" குதிரைகள் கிடைக்கும்... "மதகரி" மதம் நிறைந்த பெரிய ஆனைகள் கிடைக்கும்.. "மாமகுடம்" பெரிய மணிமகுடம் கிடைக்கும். "சிவிகை" அவர்களைச் சுமந்து செல்ல அழகிய பல்லக்குகள் கிடைக்கும். "பெய்யும் கனகம்.." கொட்டும் பொன் கிடைக்கும். தங்க மழை பெய்யும்...சங்கரர் தேவியை வேண்டி கனக நெல்லிகளை மழையெனப் பெய்யச் செய்த வரலாறு நினைவுக்கு வருகின்றது.. "பெருவிலை ஆரம்" அதிக விலைபடைத்த முத்து மாலைகள், மாணிக்க மாலைகள் கிடைக்கும்...
அன்னையின் திருவடிகளை மட்டுமே எண்ணித் தவமியற்றுபவர்களுக்கு இதெல்லாம் கிடைக்கும்... பின்னரும் அவர் அவள்தம் அன்பிலே நீடித்திருந்தால் அருள் கிடைக்கும்... இந்த பாடலினை முதலிலும், முந்தைய பாடலை அடுத்தும் வரிசை மாற்றி வாசித்துப் பாருங்கள்... அழகிய பொருள் (இவ்விடத்து அர்த்தம் என்று அர்த்தமாகின்றது) கிடைக்கும்.. அன்னையை எண்ணித் தவமியற்றுபவர்களுக்கு பொருட்செல்வம் மிகுதியாகக் கிடைக்கும்.. பொருட்செல்வத்தில் திளைப்போர் அருள் மறந்து போனால் அழிவார்கள்... அவளிடம் அன்பு செய்து அவள்
அடியார்களாக இருப்பவர்கள் மரணம், பிறப்பற்ற நிலை எய்துவார்கள்..
பாடல் ஐம்பத்து மூன்று
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே
விளக்கம் :
அபிராமி அன்னையே... உனது சின்னஞ்சிறு இடையினில் அணிந்த சிவந்த பட்டாடையையும், உனது பருத்த திருமுலைகளையும், அதன் மேல் அணிந்துள்ள முத்தாரத்தையும், பிச்சிப்பூக்களை அணிந்த உனது அழகிய கருங்கூந்தலையும், உனது மூன்று கண்களையும் மனத்தில் நிறுத்தி வேறெந்த நினைவுகளும் இன்றி தியானித்திருப்பதைத் தவிர சிறந்த தவம் ஏதுமில்லை...கடந்த பாடலில் அன்னையின் திருவடிகளை எண்ணித் தவமியற்றும் அன்பர்களுக்குக் கிடைக்கும் செல்வங்களைப் பட்டியலிட்ட அபிராமிப் பட்டர், இப்பாடலில் எது சிறந்த தவம் என்று பகர்கின்றார். "சின்னஞ்சிறிய மருங்கினில்.." மருங்கு எனும் பதம் இடையினைக் குறிக்கின்றது. அன்னையின் இடை சின்னஞ்சிறியது...அச்சின்னஞ்சிறு இடையினில்... "சாத்திய செய்யபட்டும் " அணிந்த சிவந்த நிறப் பட்டாடையையும், "பென்னம்பெரிய முலையும் " மிகப்பெரிதான திரு
முலைகளையும், "முத்தாரமும்.." அதன் மேல் அவள் அணிந்த முத்து மாலையையும்.... "பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும்.." பிச்சிப்பூ சூடிய உனது கருமை நிறக் கூந்தலையும், "கண் மூன்றும்" உனது மூன்று கண்களையும் "கருத்தில் வைத்துத் தன்னந்தனியிருப்பார்க்கு.." தமது மனத்தில் நிலை நிறுத்தி வேறெந்த நினைவுகளும் இன்றி தனித்திருப்பாருக்கு...
இப்பாடலைப் பாடும்போது அன்னையின் அழகிய திருவுருவம் கண்ணில் தோன்றுவதை உணர்கின்றீர்களா... ? அழகிய சின்னஞ்சிறு இடைதனில், சிங்காரமாய்ச் செந்நிறப் பட்டுடுத்தி, உலகைக் காப்பதற்காகத் தோன்றிய பெரிய திருமுலைகள் மீது முத்தாரத்தை அணிந்து, மணம் வீசும் பிச்சிப் பூக்களைத் தன் கன்னங்கரிய கூந்தலில் அணிந்த முக்கண்ணையுடைய அபிராமியானவள் கண்முன் தோன்றுகின்றாள்.
எத்தனை அழகிய தோற்றம்...! இத்தோற்றம் மனத்தில் தோன்றிய பின்னர் வேறெந்த நினைவுகள் எழும்?? தவமியற்ற யாருமற்ற வனத்துக்குச் செல்ல வேண்டுமா? இல்லவே இல்லை... கோடிக்கணக்கான மாந்தர் கூடியிருந்த போதும், வேறெந்த நினைவுகளுமின்றி அன்னையின் திருவுருவத்தை மனத்தில் தியானித்திருந்தால் அதுவே சிறந்த தவம்.. "இது போலும் தவமில்லையே" இதைப்போன்ற சிறந்த தவம்
இல்லவே இல்லை...
எனவே மூன்று பாடல்களையும் இறங்குவரிசையில் பாடிப்பாருங்கள்... இப்பாடல் சிறந்த தவம் என்ன என்பதையும், முந்தைய பாடல், அத்தவமியற்றினால் என்ன கிட்டும், என்பதையும், அதற்கும் முந்தைய பாடல், தவத்தால் கிட்டிய பொருளோடு அருளிருந்தால் பிறப்பு இறப்பற்ற பெருவாழ்வு, அருளற்றுப் போனால் அழிவு...அழகாய் இருக்கின்றது அல்லவா?
பாடல் ஐம்பத்து நான்கு
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
விளக்கம் :
வறுமையில் துன்பப் படுபவர்களே... நீங்கள் உங்கள் வறுமையின் பொருட்டு ஒருவரிடம் சென்று உதவி கேட்டு, பின்னர் அவரால் அவமானப்
படுத்தப்படும் நிலை இல்லாதிருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றினால், தவம் செய்யாத கயவர்களிடத்தில் உதவி கேட்டுச் செல்லும் நிலைமையை எந்தக் காலத்திலும் எனக்கு ஏற்படாது காத்த திரிபுரசுந்தரி அன்னை அபிராமியின் திருப்பாதங்களைச் சேருங்கள்... அவளையே தொழுங்கள்..வறுமையைப் போக்கும் பாடல் இது... வறுமையால் துன்பப்படுவோருக்கு அன்னையின் அன்பால் ஆறுதல் சொல்லி அவளிடத்துச் சேர்க்க அபிராமிப் பட்டர் இப்பாடலைப் பாடுகின்றார்..
"இல்லாமை சொல்லி " எம்மிடம் இப்பொருள் இல்லை என்று சொல்லி... "ஒருவர் தம்பால் சென்று " இன்னொருவரிடம் சென்று கையேந்தி... "இழிவுபட்டு நில்லாமை" அவர்களால் இழிவுபடுத்தப் படும் நிலைக்குத் தள்ளப்படாமல் இருக்கும் நிலை ... "நினைகுவிரேல்" எண்ணம் தோன்றினால்... வறுமை மிகக் கொடியது... வறுமையில் வாடுபவர்களைப் பற்றிச் சற்றே எண்ணிப் பாருங்கள்..வறுமை வந்திடில்... வறுமையில் பசி வந்திடில்... எந்த உறவுகளும் துணைக்கு வருவதில்லை... எந்த அன்பும் நினைவுக்கு வருவதில்லை... ஒரு சம்பவத்தை
இவ்விடம் பகிர்ந்து கொள்கின்றேன்.. அதை நான் கண்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன.. ஆயினும் இன்னமும் அக்காட்சி என் கண்களை விட்டு அகலாது நிற்கின்றது..
அதை எண்ணும்போதெல்லாம் மனம் துடிப்பதைத் தடுக்கவே இயலாது..நான் பெங்களூருக்கு வந்த புதிதில், ஒருமுறை ஊருக்குச் சென்று
கொண்டிருந்தேன். திருவிழாக்காலம்.. நேரடியாக நெல்லைக்குச் செல்லும் பேருந்து கிட்டவில்லை. எனவே மாறி மாறி சென்று கொண்டிருந்தேன்.. கரூரில் பேருந்து நின்று கொண்டிருந்த போது பேருந்து நிலையத்தில் கண்ட காட்சிதான் இது..வயதான தம்பதியர் அப்பேருந்து நிலையத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர்..அம்முதியவர் படுத்திருந்தார். அவரால் எழுவதற்கும் இயலவில்லை.. அவர்
அருகில் இரு குடங்கள்.. சில சாமான்கள்... சில மூட்டைகள்.. மூதாட்டியோ அருகிலிருந்த உணவகத்தில் சென்று இரந்து கொண்டிருந்தார். அக்கடைக்காரனோ அவரை மிகவும் கேவலமான சொற்களால் திட்டிக் கொண்டிருந்தான்.. என்னால் அவ்விடத்து இறங்கவும் இயலவில்லை.. பேருந்து மெதுவாக நகர்ந்து கொண்டுதான் இருந்தது..
என்ன காரணத்தால் இவர்கள் இவ்விடம் வந்திருப்பார்கள்..? கடன் தொல்லையால் யாராவது வீட்டை விட்டு விரட்டியடித்திருப்பார்களோ?? அவர்களது புதல்வர்கள் என்ன காரணத்தாலோ அவர்களைத் துரத்தி விட்டிருப்பார்களோ??? என்ற பல எண்ணங்கள் என் மனத்தில் தோன்றின.. கடைக்காரனும் இரக்கப்பட்டு இரு இட்லிகளை அம்மூதாட்டிக்குக் கொடுத்தான். நானும் இரண்டில் ஒன்றைத் தனக்கும், மற்றொன்றைத் தன் கணவருக்கும் கொடுப்பார் என எண்ணிக் கொண்டிருந்தேன்.. ஆனால் அவரோ முதியவர் அருகில் வந்து அமர்ந்து கொண்டு தானே இரு இட்லிகளையும் தின்னத் தொடங்கினார். முதியவரோ "பசி.. பசி..." என அரற்ற... "சும்மா கிடயும்யா...." என்ற படி தானே தின்று கொண்டிருந்தார்..
தின்றும் விட்டார்... முதியவர் மெல்ல எழுந்து அமர்ந்து குடத்தின் நீரையாவது குடிக்கலாம் என்று அதைத் தொட்ட பொழுது அவைக்
காலிக்குடங்களாதலால் உருண்டு விழுந்தன... இந்த சமயத்தில் நம் பேருந்தும் அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டது..தனது வாலிப வயதில் தன் மனைவியை எப்படியெல்லாம் நேசித்திருப்பார் அவர்? தினமும் அவருக்கு என்னென்ன இனிப்புகள் வாங்கிக் கொடுத்திருப்பார்? ஆனால் வறுமை... பசி...
இன்று அந்த அன்பு நிறைந்த கணவருக்குக் கொடுக்காமல் தானே தின்னும்படி செய்து விட்டதே... இறைவா இதென்ன கொடுமை என்று அழுது கொண்டே பயணம் செய்தேன்... ஆக வறுமை கொடிது... இந்த உலகில் வறுமை நிறைந்தோருக்கு எல்லாவிடத்தும் இழிவுதான் கிடைக்கின்றது... ஆக உங்கள் வறுமை போக வேண்டுமா?? உங்கள் வறுமையின் பெயரால் இன்னொருவரிடம் சென்று கையேந்தி, அவரால் இழிவுபடுத்தப் படும் நிலை உங்களுக்கு வரவேண்டாம் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுமானால்.... "நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால் "சொற்களின் விளையாட்டைப் பாருங்கள்..ஒரு முரண்தொடை... தினமும் தவம் செய்யும் செய்யாமல் இருப்பது எப்படி என்று கற்ற கயவர்களிடத்தில்... தவம் செய்யாமல் இருப்பது எப்படி என்றும் கற்பார்களோ??? முரண் வாக்கியத்தை அமைத்துப் பாடலைச் சொற்சுவை மிகுந்ததாக்குகின்றார்.. தவம் செய்வோர் தம்மிடத்து வருவோருக்கு ஈயவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள்..
மாற்றாரிடத்துச் செல்லும்போது அவர் தருவாரோ தர மாட்டாரோ என்ற எண்ணத்தோடேயே செல்ல வேண்டியுள்ளது.. அவரும் கைவிரித்து, நம்மை இழிவுபடுத்தி விடில், கேவலமான நிலைக்குத் தள்ளப் பட்டு விடுகின்றோம்..எனவே தவமற்ற அல்லது தவம் செய்யக்கூடாது என்ற விதியைக் கற்ற கயவர்களிடத்தில்..."ஒரு காலத்தும் செல்லாமை வைத்த திரிபுரை.." எந்த காலத்திலும் உதவி கேட்டு நான் செல்லும்படியான நிலைக்கு நான் ஆளாகாமல் வைத்த திரிபுர சுந்தரியான அன்னை அபிராமியின்.. "பாதங்கள் சேர்மின்களே "திருப்பாதங்களைச் சென்றடையுங்கள்..அவளைத் தொழுங்கள்..மீண்டும் ஒரு அழகிய இறங்கு வரிசை... வறியவர்களை நோக்கி, உங்கள் வறுமை விலகுவதற்காக அன்னை அபிராமியைத் தஞ்சமடையுங்கள் என்று சொல்வது இப்பாடல்.
முந்தைய பாடல் அவளை எண்ணுவதே பெருந்தவம் என்று சொல்லும் பாடல்.. அதற்கும் முந்தையது... தவமுடையாருக்குக் கிடைக்கும் செல்வங்கள்.. எனவே வறுமையால் வாடுவோர் செல்வத்தில் திளைக்கின்றார்... செல்வம் மிகுதியால் வரும் கேடும், அத்தோடு அருள் இணைந்திருந்தால் அன்னையைத் தொழுதிருந்தால் கிட்டும் பிறப்பு இறப்பற்ற பெருவாழ்வையும் அதற்கும் முந்தைய பாடல்
சொல்கின்றது.. அழகியதோர் இறங்குவரிசை...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி...
எழுதித் தயாரித்தது திரு மு.கந்தசாமி நாகராஜன்
--Geetha Sambasivam 15:52, 16 மார்ச் 2011 (UTC)