சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச்சென்றோம், அஹோபிலம் 5மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:28, 10 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் மறுநாள் காலை எழுந்து இன்று சீக்கிரமே எழுந்து மலை ஏறவேண்டும் என முன்னேற்பாடு செய்து கொண்டதால் விடிகாலை 4 மணிக்கே எழுப்பி வெந்நீர் கொடுத்துக் குளித்துத் தயாராகச் சொல்லி இருந்தனர். ஆகவே நாங்களும் சீக்கிரமே தயார் ஆனோம். எனினும் இன்று மேல் அஹோபிலம் வரையில் பேருந்திலேயே செல்ல ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன் பின்னரே ஜ்வாலா நரசிம்மர், உக்ர ஸ்தம்பம், பார்கவ நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர் போன்றவர்களைத் தரிசனம் செய்து கொண்டு திரும்ப வேண்டும். மாலை கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு சரியாக எட்டு மணிக்குச் சென்னை திரும்பவேண்டும் எனப் பயணத் திட்டம் அறிவிக்கப் பட்டது. காலை ஆகாரம் சற்றே தாமதம் ஆனதால் கிளம்பும்போதே கொஞ்சம் தாமதமும் ஆனது. என்றாலும் அனைவரும் கிளம்பி சென்னையில் இருந்து வரும்போது எந்த இருக்கையில் அமர்ந்தோமே அதே இருக்கைகளில் அமர்ந்து வருமாறு அறிவுறுத்தப் பட்டோம். அவ்வாறே அனைவரும் அமர்ந்ததும், வழிகாட்டியான சுப்பராயுடு, ஒருங்கிணைப்பாளரும், அமைப்பாளரும் ஆன திரு சுரேஷ் ஆகியோரும் ஏறிக் கொண்டனர். வண்டி கிளம்பியது. கருடாத்ரி, வேதாத்ரி இரு மலைகளுக்கிடையே அமைந்துள்ள பவநாசினிக் கரையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பவநாசினி நதிக்கரையில் கீழ் அஹோபிலத்தில் இருந்து எட்டு முதல் பத்து கிமீ தூரத்தில் அமைந்துள்ளது மேல் அஹோபிலம் கோயில். மலைப்பயணம் தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,000 அடிக்கு மேல் உயரத்தில் இருப்பதாய்ச் சொல்கின்றனர். கீழ் அஹோபிலம் கோயிலையும், இந்த மேல் அஹோபிலம் கோயிலையும் தான் நவ நரசிம்மர்களிலேயே அதிகச் சிரமம் இல்லாமல் தரிசிக்க முடியும். ஆலயம் சம தளத்தில் அமையவில்லை. மலையில் இருப்பதால் குன்றுகளின் ஏற்ற இறக்கத்திற்கேற்றவகையிலேயே பரந்து அமைந்துள்ளது. மூலவர் சந்நிதி குகையின் அமைப்பில் உள்ளது. உக்ர நரசிம்மர். ஆனால் மூர்த்தி சிறியவர். மூர்த்தி சிறிதானாலும் இவரின் கீர்த்தி மட்டுமின்றி உக்ரமும் பெரியதாகவே உள்ளது. மூலவருக்கு அருகே உற்சவர் மஹாலட்சுமி சமேதராய் உள்ளார். மூலவரின் உக்கிரத்தைத் தணிக்கும் விதமாய் அருமைச் சீடன் பிரஹலாதன் நேரெதிரே கூப்பிய திருக்கரங்களுடன் காட்சி அளிக்கின்றான். இந்த உக்ர நரசிம்மரைச் சுயம்பு மூர்த்தி எனச் சொல்கின்றனர். ஹிரண்ய வதம் முடிந்ததும், இந்தக் குகையில் வந்து ஆக்ரோஷம் தணியாமல் இருக்கும்போதே அமர்ந்ததாயும், தேவாதி தேவர்களும், கருடனும் இங்கே வந்து தரிசித்ததாயும் சொல்கின்றனர். ஸ்ரீராமர் சீதையைத் தேடி அலைந்த போது இந்தச் சிங்கவேள் குன்றத்துக்கும் வந்ததாயும், நரசிம்மரை வழிபட்டதாயும் சொல்கின்றனர். மூலவர் இருக்கும் குகையிலேயே நாம் நுழையும் முன்னரே இடது பக்கமாய் ஒரு புறத்தில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் ஒரு சிவலிங்கம். பக்கத்திலேயே ஸ்ரீராமர். ஆதிசங்கரர் காபாலிகர்களிடம் தன் கரத்தை இழந்து கராவலம்ப ஸ்தோத்திரம் இயற்றிய இடம் இதுவே எனப் படுகின்றது. தன் இழந்த கரத்தை அவர் மீட்டுக் கொண்டதும் இவரின் அருளாலேயே எனச் சொல்கின்றனர். ஆதிசங்கரர் தான் இங்கே வந்ததின் அடையாளமாய் சிவலிங்கத்தையும், நரசிம்ம சுதர்சன சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளதாயும் சொல்கின்றார்கள். தாயார் ஆன செஞ்சுலக்ஷ்மியின் சந்நிதி தனியாய் அமைந்துள்ளது. இந்தச் சந்நிதிக்கு வெளியே, உள்ளது ஒரு தடுப்புப் பகுதி. உள்ளே நுழையும் முன்னரே இந்தத் தடுப்புப் பகுதியைத் தாண்டிக் கொண்டே செல்ல வேண்டும். அந்தப் பகுதியில் யாரும் தங்கள் பாதங்களை வைக்க வேண்டாம் என்பதற்காகவே வட்டமான ஒரு தடுப்பு. முன்னர் குகை போன்ற அமைப்பில் இருந்திருக்க வேண்டும்.உள்ளே பாதாளத்தில் இதே போன்ற ஒரு கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர். பதினாறாம் நூற்றாண்டில் அஹோபிலம் மடத்தைச் சேர்ந்த ஆறாம் ஜீயர் ஸ்ரீசெஷ்ட பராங்குச யதீந்திர மஹா தேசிக ஸ்வாமிகள் வழிபாடு நடத்த இந்தக் குகைக்குள்ளே இறங்கிச் சென்றதாயும், அங்கே வைகுந்தனைத் தரிசித்துவிட்டுப் பின்னர் அவர் வெளியே வரவே இல்லை எனவும், குகை பின்னர் மூடப்பட்டு இப்போது அவரின் அதிஷ்டானம் போல் சந்நிதிக்கே நேர் எதிரே இருப்பதாயும், அனைவராலும் வழிபாடுகள் நடத்தப் படுவதாயும் சொல்கின்றார்கள்.ஆலயத்தின் உள்ளே மிகக் குளுமையாகவே இருக்கின்றது. அங்கே அமைந்துள்ள ஒரு மண்டபத்தின் மேல் தளத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பதினாறு கால் மண்டபம். அந்த மண்டபத்தில் இருந்து சுற்றுப் புறக் காட்சிகளையும் மலைக்குன்றங்களையும் காண முடிகின்றது. கோபுர தரிசனமும் கிடைக்கின்றது. மனிதன் வந்து, வந்து போய்க் கொண்டிருந்தாலும் இயற்கையை இன்னும் இங்கே அழிக்கத் துணியவில்லை. இன்னமும் தனக்குள்ளே சில அதிசயங்களையும், ரகசியங்களையும் பொத்தி வைத்துள்ளது இந்த மலை. இதைப் பற்றி எங்களுக்குள் ஒரு சிறு விவாதம் நடந்தது. மலை ஏறவும், நடந்து ஏறிச் செல்லவும் நல்ல பாதை போடவேண்டும் என ஒரு கட்சியினரும், கூடாது என எங்களில் சிலரும் சொல்லிக் கொண்டே இருந்தோம். நாங்க என்ன சொல்லி இருப்போம் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகின்றேன். அதுக்குள்ளே ஒருங்கிணைப்பாளர் வந்து மலை ஏற வேண்டும் எனவும், நடைப்பயணம் தான் எனவும் கிட்டத் தட்ட 10 முதல் 15 கிமீட்டருக்கு மேல் நடக்க வேண்டும் எனவும், கடினமான, செங்குத்தான மலைப்பாதை ஆகவே முடியாதவ்ர்கள் இங்கேயே தங்கி விடலாம் எனவும் அறிவுறுத்தினார். திரும்பிச் செல்லவோ, அங்கேயே தங்கவோ யாருக்கும் இஷ்டமில்லை. அனைவரும் மலை ஏறவே விரும்பினோம். குடி நீர் பாட்டில்கள் தவிர, கைப்பைகள், சாப்பிட ஏதானும் என்று எடை குறைவாய் வைத்துக் கொள்ளும்படியும், பெண்கள் கூடியவரையில் புடவையை மேலே தூக்கிச் செருகிக் கொண்டு நடக்குமாறும் அறிவுறுத்தினார்கள். மலை ஏற்றத்தின் போது புடவை தடுக்கிக் கீழே விழுந்தால் பாறைகளில் காயம் படுவதோடு அல்லாமல், உயிரிழப்பும் ஏற்படலாம் என்பதால் திரும்பத் திரும்ப அறிவுறுத்துகின்றனர். அங்கேயே தடிக் கம்புகள் கொடுக்கின்றனர். அவற்றை வாங்கி அனைவருக்கும் கொடுக்கின்றார் வழிகாட்டி. தடிக் கம்புகளை மலையில் இருந்து கீழே இறங்கியதும் திரும்பிக் கொடுக்க வேண்டும். மலை ஏற்றத்தின் போது அந்தத் தடிக்கம்பு எவ்வளவு வசதியாக இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம். அடுத்து ஜ்வாலா நரசிம்மர்.
மழைக்காலம் என்றால் நீரில் இறங்கியே செல்லவேண்டும். இப்போது நீரின் ஓட்டம் கணுக்காலுக்கும் கீழே இருக்கிறது. ஆகையால் செல்லலாம், என்றாலும் வழுக்கும் பாறைகள். நதியைக் கடந்து மேலே ஏற வேண்டுமே! நதி பள்ள்ள்ள்ள்ளம், மேஏஏஏஏஏஏலே ஏறணும். ஒரு பக்கம் சுப்பராயுடு, இன்னொரு பக்கம் சுரேஷ், வேறொரு இடத்தில் கூட வந்தவர்களில் ஒரு இளைஞர் நின்று கொண்டு ஏற முடியாதவங்களை ஏற வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓம் நமோ நாராயணாய! என்ற நாம ஜபத்தை இடைவிடாமல் அனைவரும் உரத்து ஒலித்து, ஜபிக்க ஒவ்வொருவராய் ஒரு வழியாய் மேலே ஏறுகின்றோம். சுப்பராயுடு, "யாரும் அவரவர் வலப்பக்கம் திரும்பவேண்டாம். நேரே பாதையைப் பாருங்க!" என எச்சரிக்கைக் குரல் கொடுக்கின்றார். ஆவல் மீதூற வலப்பக்கம் பார்த்தேன் நான். கடவுளே! கிடு கிடு பாதாளம். நல்லவேளையாய்த் தலை சுற்றவில்லை. மலைகள் ஏறி, ஏறி ஒரு மாதிரியாய்ப் பழக்கம் ஆகி விட்டிருக்கு போல! என்றாலும் சுப்பராயுடுவும், என் கணவரும் கொஞ்சம் பயப்பட, நான் சமாளித்துக் கொண்டு அடுத்த பாறையின் மேலே ஏறிக் கொஞ்சம் ஒத்தையடிப் பாதை எனப்படும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது தான் கைத்தடியின் உதவியும் புரிய வருகின்றது. என்றாலும் செங்குத்துப் பாறைகளில் ஏறும்போதெல்லாம் கைத்தடி உதவவில்லைதான். மேலே ஒருத்தர் நின்று கொண்டு நம்மை ஏற்றியே விடவேண்டி இருந்தது. பாறைகளின் உயரமும் அதிகம் இருப்பதால் கொஞ்சம் கஷ்டமாவே இருக்கு. ஆனால் "பொதிகை" தொலைக்காட்சியின் வேளுக்குடி கடந்த ஒரு வாரமாய் தினமும் இப்போ ரொம்ப செளகரியம் பண்ணி இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போ நம் முன்னோர்கள் போகும்போது எவ்வளவு கஷ்டமாய் இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே முடியலை. மேலும் "நவ அஹோபிலம்" என்னும் ஊரும் ஒன்று புதியதாய் நிர்மாணிக்கப் படுவதாயும், ஸ்ரீமந்நாராயணனின் பனிரண்டு திருநாமங்களின் பெயரால் குடி இருப்புகள் கட்டப் படுவதாயும், குறைந்த பட்சமாய் 2,000/- நபர்களுக்குக் குறையாமல் அதில் தங்க முடியும் எனவும் தெரிவிக்கின்றார். அது முடிய அடுத்த வருஷம் ஆகலாம் என்றும் சொல்கின்றார். இது அவர் சொல்லியே ஒரு வருஷம் ஆயாச்சு. நிகழ்ச்சி மறு ஒளிப்பதிவு. ஆகையால் இன்னமும் நிறைவேறவில்லை என்றே நினைக்கின்றேன். உக்ரஸ்தம்பத்தின் உச்சிக்குப் போய்வருவது என்பது பிரம்மப் பிரயத்தனம் எனவும், நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து இன்னும் மூன்று மணி நேரம் நடைப்பயணம் இருக்கின்றது எனவும் வழிகாட்டி சொன்னார். மேலும் இப்போதே மணி மதியம் பனிரண்டு ஆகி விட்டதால் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டு மேலே ஏறிக் கீழே இறங்க குறைந்தது ஆறு மணி நேரத்தில் இருந்து ஆகும் எனவும் கூறினார். மேலும் பாதை மிகவும் செங்குத்தாக அமைந்திருப்பதோடல்லாமல் , காட்டு மிருகங்களும் நடமாடும் என்றும் சொல்லவே பெரும்பாலோருக்கு அங்கே செல்லத் தயக்கமாகவே இருந்தது. கிட்டத் தட்ட 5 கிமீ தூரம் இருந்தது. என்பதால் உக்ரஸ்தம்பம் ஓரளவுக்கு நன்றாகவே கண்ணுக்குத் தெரிந்தாலும் அங்கே ஆடி அசைந்த காவிக் கொடியைப் பார்த்தால் நம்மை வா, வா, என அழைப்பது போலவே இருக்கின்றது. ஆனால் ஒரு சிலரை மட்டும் அழைத்துச் செல்லமுடியாது எனத் திட்டவட்டமாய்க் கூறவே. அங்கிருந்தே பகுதி, பகுதியாக உக்ரஸ்தம்பம் தரிசனம் செய்தோம். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். இத்தனைக்கும் அவ்வளவு பேரும் எனக்கு முன்னாலேயே சென்று கொண்டிருந்தனர். எங்கள் குழுவிலேயே மிகவும் மெதுவாய்ச் சென்றது நான் மட்டுமே. அதனாலேயே எனக்குக் களைப்பும் ஏற்படவில்லை என நினைத்தேன். ஆனால் என் கணவரோ என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்து கொண்டே வந்தார். இமயமலையில் கயிலை யாத்திரையில் திணறிய அவர் இப்போது வேகமாய் நடக்க, அங்கே சமாளித்த நான் இங்கே திணறினேன் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. சுயபுராணம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நம் பிரயாணம் தொடர்கின்றது. மலைப்பாறை இரண்டாய்ப் பிளந்து இரு வேறு பகுதிகளாய்க் காட்சி அளிக்கின்றது நன்றாய்க் கண்ணுக்குத் தெரிகிறது. பாறையில் நடுவில் பிளவும் தெரிகின்றது. உற்றுப் பார்த்தால் பிளவின் அமைப்பு சிங்க முகமாயும் தெரிய வருகின்றது. இந்தத் தூணைத் தான் இரண்டாய்ப் பிளந்து நரசிம்மர் வெளியே வந்தார் எனவும், அந்தச் சமயம் இந்தப் பிரதேசமே பூகம்பம் ஏற்பட்டாற்போல் குலுங்கி, நடுங்கி இருக்கும் எனவும் தோன்றுகின்றது. எங்களில் சிலரின் ஏமாற்றத்தைக் கவனித்த வழிகாட்டி, மிகச் சிலரால் மட்டுமே உக்ரஸ்தம்பம் வரை போக முடிந்திருக்கின்றது எனவும், காலை சீக்கிரமாய் மலை ஏற ஆரம்பித்தால் ஒழிய அங்கே சென்று திரும்ப முடியாது எனவும் எங்களைச் சமாதானப் படுத்தினார். எப்படியோ எங்கே போனாலும் நமக்கு ஒரு குறை மனதில் இருக்கணும் போல என நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் பெரும்பாலும் எல்லாருமே உக்ரஸ்தம்பம் பார்க்க ஏறாமல் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டுத் திரும்பி கொண்டே இருந்தனர். அதையும் காண முடிந்தது. மனதை வேறு வழியில்லாமல் சமாதானம் செய்து கொள்ளவும் வேண்டி இருந்தது. அடுத்து இப்போது நாம் போய்க் கொண்டிருப்பது ஜ்வாலா நரசிம்மரின் சந்நிதி. தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மர் எங்கே வைத்து இரண்யனை சம்ஹாரம் செய்தாரோ அந்தக் குகைக்கு இப்போது நாம் போகின்றோம். பயணம் கடினமானதே. இந்தப் பாதையிலே தொடர்கின்றோம். நாம் நம்முடைய பயணத்தை. கருடாத்திரி, வேங்கடாத்திரி இரு மலைகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் அசல சாயா மேரு என அழைக்கப் படும் மலைக்குன்றத்தில் அமைந்துள்ளது ஜ்வாலா நரசிம்மர் சந்நிதி. பாறைகளைத் தாண்டிக் கொண்டும், மலையின் மீதிருந்து பொழியும் நீர்வீழ்ச்சியான பவநாசினி ஆற்றின் நீரிலும் நனைந்து கொண்டே செல்லவேண்டும். இப்போது மழைக்காலம் இல்லை என்பதால் நீரின் வேகம் குறைந்தே உள்ளது. மழைக்காலத்தில் அருவி மேலிருந்து பொழியும் பவநாசினி ஆறு வேகம் தாங்காமல் செல்லுவது கஷ்டம் என்பதால் பாறையில் ஆங்காங்கே பெரிய பெரிய சங்கிலிகள் பதிக்கப் பட்டிருக்கின்றன. இப்போதும் அவற்றைப் பிடித்துக் கொண்டே செல்வதே பாதுகாப்பு. பவநாசினி ஆறு மேலிருந்து கீழே விழ, அனைவரும் கொண்டு வந்த தண்ணீர்க் குடுவைகளில் அவற்றைப் பிடித்துக் கொள்கின்றோம். சீக்கிரமாய் தரிசனம் செய்து கொண்டு வரும்படி வழிகாட்டி அவசரப் படுத்துகின்றார். அடுத்து இன்னும் இரு கோயில்களுக்கு நாங்கள் செல்லவேண்டும் என்பதோடு இவ்வளவு உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் பட்டாசாரியாரும் சீக்கிரமாய் வீடு திரும்பவேண்டும் என்பதாலும். தண்ணீரின் சுவை திரும்பத் திரும்பக் குடிக்கச் சொல்லுகின்றது. அரை மனதோடு நீரை விட்டுப் பிரிந்தோம் நரசிம்மரைத் தரிசிக்க. கீழே கிடு கிடு பள்ளம். அதில் விழாமல் செல்லவேண்டும் அவற்றில் முன்னால் தள்ளி அமைந்திருக்கும் ஒரு பாறையில் இயற்கையாய் ஏற்பட்டிருக்கும் ஒரு குகையில் கோயில். சந்நிதியில் முக்கியமாய் மூன்று விக்கிரஹங்கள். நடுவில் உக்ர நரசிம்மர். மஹா கோபத்துடன் இரண்ய கசிபுவை மடியில் கிடத்தித் தன் இரு கை நகங்களாலே கிழித்துக் கொண்டு இருக்கும் கோலம். இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டு மடியில் இரண்ய கசிபு. இடக்கைகளில் ஒரு கை இரண்ய கசிபுவை அசைய விடாமல் பிடித்துக் கொண்டிருக்க, மற்ற இரு கரங்கள் குடலை வெளியே எடுக்கின்றன. குடல் மாலையாகச் சூட்டப் பட்டிருக்கின்றது. மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரம். இரு கை கூப்பித் தொழுதவண்ணம் அருகே சற்றும் பயமின்றி பிரஹலாதன் காட்சி அளிக்கின்றான். குகை அந்த ஜனவரி மாசமும் நரசிம்மரின் உக்கிரத்தாலேயோ என்னமோ சூடாய் இருப்பதாய்த் தோன்றியது. உண்மையில் இந்த உக்கிரம் தாங்காமல் குகை வெகுகாலம் நெருப்பாய்க் கனன்று கொண்டிருந்ததாயும் பச்சைப் புல்லே பற்றிக் கொள்ளும் என்பதாகவும் சொல்கின்றனர். இந்தச் சிற்பங்களின் வலப்பக்கம் நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வெளியே வரும் அவதாரத் தருணம் மிக அருமையாய்ச் செதுக்கப் பட்டிருக்கின்றது. ஒரே இருட்டு. கவனித்துப் பார்க்கவேண்டும். இடப்பக்கம் இருவரும் சண்டைஇடும் கோலம். திரும்பும்போது படிகள் இருந்தாலும் அவற்றின் கீழேயும் கிடுகிடு பள்ளம் இருப்பதால் படிகளில் கவனமாய்க் கால்வைத்து இறங்கவேண்டும். குகைக் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி நாம் வந்த வழியிலேயே நதி அருவியாய்ப் பொழியும் இடத்துக்கு அருகே ரக்த குண்டம் என்ற இடம் உள்ளது. இங்கே நரசிம்மர் ஹிரண்யனைக் கிழித்தபோது பெருகிய ரத்தம் ஆறாய் ஓடி அங்கே தேங்கியதாம். அங்கே தண்ணீர் இப்போது சிவந்த நிறத்திலேயே குண்டத்தில் காணப் படுகின்றது. கையில் எடுத்தால் தெளிவாய் உள்ளது. நரசிம்மர் குருதி தோய்ந்த தம் கரங்களை இங்கேதான் கழுவிக் கொண்டதாயும் ஐதீகம். மேல் அஹோபிலம் ஸ்வயம்பு நரசிம்மர் சுக்கிரதோஷத்தைப் போக்கும் வல்லமை கொண்டவர் என்கின்றனர். ஜ்வாலா நரசிம்மர் சனியினால் வரும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர் என்கின்றார்கள். ஸ்ரீமாதா ம்ருத்யுஞ்சயர் எனவும் இவரை அழைக்கின்றனர். தீராத கடன்கள், தீராத நோய்கள், பகைவர்களின் தொல்லைகளில் இருந்து காத்தருளும் இவர் தொழிலதிபர்களையும் உருவாக்குவதாய்ச் சொல்கின்றனர். |